புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் எனும் பெயரில் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதே?

சமீபத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு ஓர் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதைப் பார்க்கின்ற பொழுது ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழக அரசு வேறு பெயரில் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்
அந்தச் சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ள விஷயம் இதுதான்…
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற வார்டுகள், கிராமங்கள், ஊரகப் பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ அமல்படுத்தப்பட உள்ளது. முழுவதும் தன்னார்வலர்களைக் கொண்டு இது செயல்படுத்தப்படும்.
முதல்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும்‌ 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க‌த் தெரியாத ‌5 இலட்சம்‌ பேருக்கு அடிப்படை எழுத்தறிவு‌ வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப் பட்டுள்ளன. அதைப் பின்பற்றி எழுத, படிக்கத் தெரியாதவர்களைக் கண்டறிந்து தன்னார்வலர்கள் மூலம் கற்போர் மையம் தொடங்கி அவர்களுக்குப் பயிற்சி தர வேண்டும். கற்போருக்குப்‌ பயிற்சி முடிவில் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தன்னார்வலர்களைக் கொண்டு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதும் எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதும் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் ஒரு அங்கமே.
தமிழக அரசு தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு அதன் ஒரு அங்கமாக இருக்கிற புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என சுற்றறிக்கையை அனுப்புவது ஏன்?
தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை தமிழகத்தில் உள்ள பலரும் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் அதில் ஒன்று தன்னார்வலர்கள் எனும் பெயரில் தவறானவர்களும் மதவாதத்தைக் கொண்டு மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி புத்தி கொண்ட ஆர்எஸ்எஸ் பேர்வழிகளும் இதில் இணைந்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
அத்தகைய தன்னார்வலர் எனும் முகமூடியில் உள்ள தீயோர் மாணவர்களுக்கு தவறானதைக் கற்றுக் கொடுத்து அவர்களின் சிந்தனையில் நச்சுக் கருத்தைப் பரப்பி விட வாய்ப்பு அளிக்கக்கூடாது என்பதும் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்க்க ஒரு முக்கிய காரணம்.
இப்படி இருக்கும்போது தன்னார்வலர்களைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புவது சரிதானா ?
அண்மையில் பத்திரிகை யாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் இருப்பதால் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுவதுமாக எதிர்க்கிறது என்று பேட்டி அளித்திருந்தார்.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டுக்கு என தனியான ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்றும் கூறினார்.
ஒருபுறம் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு மறுபுறம் அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு அம்சத்தையும் படிப்படியாக நடைமுறைப்படுத்த முயற்சிப்பது பள்ளி கல்வித்துறை அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் தெரியாமல் இது நடைபெறுகிறதா ?
எதுவாக இருப்பினும் புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வேறு பெயரில் நடைமுறைப்படுத்த முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.