பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்றஉயர்நீதிமன்றம் கூறியுள்ளதே?

சிலைகள் நிறுவப்படுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
எனவே பொதுவாகவே சிலைகள் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
எனினும் தாங்கள் குறிப்பிடும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன.
வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையொன்று அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது என்று கூறி அகற்ற உத்தரவிடப்பட்டது.
அது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த போது தான் தமிழகம் முழுவதுமே பொது இடங்களிலும் சாலைகளிலும் மக்களுக்கு இடையூறாக பல்வேறு சிலைகள் நிறுவப்படுகின்றன.
இவற்றை எல்லாம் இனங்கண்டு மூன்று மாதத்தில் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அது மட்டுமின்றி தலைவர்களின் சிலைகளை நிறுவுவோர் அதைத் தங்கள் செலவில் பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் பராமரிப்பு தொகை செலுத்தாதவர்களிடம் சட்டப்படி வசூல் செய்ய வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளும் சாதிய அமைப்புகளும் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல ஆங்காங்கே சிலைகளை நிறுவி விடுகிறார்கள்.
அதன் பிறகு சிலைகள் தாக்கப்பட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுகிறது.
பிறந்த நாள், இறந்த நாள் போன்ற நாள்களிலும் சிலைகளுக்கு மாலை போடுவதாகக் கூறி பொது மக்களுக்கு இடையூறு அளிக்கின்றனர்.
தனியார் இடங்களில் சிலைகள் வைப்பது அவர்கள் விருப்பம். ஆனால் பொது இடங்களிலும் சாலைகளிலும் மக்களுக்கு இடையூறாக சிலைகள் நிறுவப்படுவதைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
இவற்றை எல்லாம் கவனித்துச் சீர் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். நீதிபதியின் இத்தீர்ப்பு வரவேற்புக்குரியது.
சிலைகள் நிறுவப்படுவதால் பொது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கண்டறிந்து வழங்கப்பட்ட தீர்ப்பாக இது அமைந்துள்ளது.
இத்தீர்ப்பு வெறும் தீர்ப்பாக இல்லாமல் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டால் சிலை வைப்பு எனும் பெயரில் ஏற்படும் பெரும்பாலான வன்முறை, பிரச்சனை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.