சூடான நரகில் சேர்க்கும் சுப்ஹான மவ்லித்

இஸ்லாம் என்ற பெயரில் தமிழ், மற்றும் மலையாளம் பேசும் முஸ்லிம்களில் கணிசமானோருக்கு மத்தியில் வேரூன்றியுள்ள வழிகேடுகளில் ஒன்று சுப்ஹான மவ்லித் எனும் அரபிப் பாடல்களாகும். ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் நபிகள் நாயகத்திற்குப் பிறந்த நாள் விழா (மீலாத் விழா) கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வீதிகள் தோறும், வீடுகள் தோறும் இந்த அரபுப் பாடல்களை ஆலிம்களை அழைத்துப் பாடவைக்கின்றனர். மேலும் புதுவீடு புகுதல் நிகழ்ச்சியிலும், இன்னும் சில நிகழ்ச்சிகளிலும் இந்த மவ்லிதுப் பாடல்களைப் பாடுகின்றனர்.

இன்றைக்கு இறையருளால் தவ்ஹீதுவாதிகளின் அழைப்புப் பணியின் காரணமாக இந்த இணைவைப்புக் கலாச்சாரம் பெருமளவு குறைந்திருந்தாலும் இன்றைக்கும் இதுபோன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபடக் கூடிய முஸ்லிம்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்த மவ்லிதுப் பாடல்களைப் பாடக்கூடியவர்கள் இதனால் தங்களுக்கு இறையருள் கிடைக்கும் என நினைக்கின்றனர். ஆனால் உண்மை நிலை அவ்வாறல்ல. மாநபி வழிமுறைகளை அறிந்த எவருமே இதுபோன்ற மார்க்கத்திற்கு எதிரான மவ்லிதுப் பாடல்களைப் பாடுவதற்கு முன்வரமாட்டார்கள். ஏனெனில் மீலாது விழா என்பதும், மவ்லிது ஓதுதல் என்பதும் நபியவர்களின் வழிமுறைக்கு எதிரானதாகும்.  நபியவர்களின் காலத்தில் மீலாது என்ற பெயரிலோ, மவ்லித் என்ற பெயரிலோ எந்த ஒரு வழிபாடும் இருக்கவில்லை. எனவே நபியவர்களால் வழிகாட்டப்படாத ஒன்றை மார்க்கம் என்ற பெயரில் அரங்கேற்றுவது நரகத்தில் சேர்க்கக்கூடிய வழிகேடாகும்.

இந்த மவ்லிதுப் பாடல்களை மார்க்கமாகக் கருதி ஓதக் கூடியவர்கள் இதுபோன்ற பாடல்களை நபியவர்கள் பாடியதில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் இதைச் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் மிகவும் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்”

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி­)

நூல்: நஸயீ 1560

எனவே இந்நபிமொழியின் அடிப்படையில் மவ்லித் என்பது நவீன வழிகேடு என்பதையும், அது இறைத்தூதரலால் மார்க்கமாகக் கற்றுத் தரப்படவில்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல் இஸ்லாத்தின் அடிப்படையாகிய ஓரிறைக் கொள்கையை குழிதோண்டிப் புதைத்து இணைவைப்புக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே இந்த மவ்லிதுகள் என்பதை அதன் கவிதை வரிகளின் பொருளை சிந்தனை செய்வோர் சிறிதும் சந்தேகமின்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இந்த மவ்லிதுகளில் எப்படியெல்லாம் இணைவைப்புக் கருத்துக்கள் நிறைந்துள்ளன என்பதற்குக் குறைவான சான்றுகளையே இக்கட்டுரையில் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். இதுவல்லாத ஏராளமான இணைவைப்புக் கருத்துக்களும், கட்டுக்கதைகளும். மார்க்கத்திற்கு எதிரான பல கருத்துக்களும் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.

நாம் எடுத்துக் காட்டும் இணைவைப்புக் கவிதைகளுக்கு இம்மவ்லிதை ஆதரிப்போர் வெளியிட்ட நூலில் அவர்கள் செய்த மொழிபெயர்ப்பையே நாம் குறிப்பிட்டுள்ளோம். இதன் மூலம் நாம் தவறாக மொழிபெயர்ப்புச் செய்துள்ளோம் என்ற பொய்யான குற்றச்சாட்டை நம்மீது அவர்கள் சுமத்த இயலாது.

இறைவனுக்கு மட்டுமே உரிய ஆற்றல், பண்புகள் இறைவன் அல்லாதவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை இறைவன் அல்லாதவர்களுக்குச் செய்வதும் நிரந்தர நரகில் தள்ளக்கூடிய மாபெரும் இணைவைப்புக் காரியமாகும். இந்த மவ்லிதை ஓதக் கூடியவர்கள் எப்படியெல்லாம் இணைவைப்பில் வீழ்கிறார்கள் என்பதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

 

“துஆ” எனும் வணக்கத்தில் இணைவைப்பு

இறைவன் மட்டும்தான் நமது பிரார்த்தனைகளைச் செவியுறுபவன். இறைவன் எவ்வாறு செவியேற்று, அறிந்து, பதிலளிப்பானோ அதுபோன்ற ஆற்றல் இறைவன் அல்லாதவர்களுக்கு உள்ளது என்று நம்பி அவர்களை அழைப்பதும், இறைவன் மட்டுமே நிறைவேற்றுவதற்கு ஆற்றல் பெற்ற விசயங்களை இறைவனல்லாதவர்களிடம் வேண்டுவதும் “துஆ” என்ற வணக்கத்தில் செய்கின்ற இணைவைப்பாகும். சுப்ஹான மவ்லித் என்று சொல்லப்படக்கூடிய இந்தப் புத்தகத்தின் பெரும்பகுதி பாடல்கள் இறைவனிடம் பிரார்த்திப்பதைப்  போன்று  நபி (ஸல்) அவர்களிடம் பிரார்த்திப்பதாகவே அமைந்துள்ளன.

நபி (ஸல்) பிரார்த்தனைக்குப் பதிலளிப்பார்கள் என்றும், நாம் அவர்களிடமே பிரார்த்திக்க வேண்டும் என்று நேரடியாகவே மவ்லிதுப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ

அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.

إِنَّا بِهِ نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ

நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பார்கள் என்றும், ஒவ்வொரு தண்டனையைத் தடுப்பதற்கும் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம் என்று குறிப்பிடுவதின் மூலம் தெளிவான இணைவைப்புக் கருத்துக்களை இந்த வரிகள் தாங்கி நிற்கின்றன என்பதை யாரும் மறுக்கவியலாது.

இதோ இஸ்லாம் போதிக்கும் அடிப்படையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: துஆ செய்வதுதான் வணக்கமாகும். பிறகு “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.  (அல்குர்ஆன் 40:60) என்ற வசனத்தை ஓதினார்கள்

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)  

நூல்:  திர்மிதி (891)

உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம்.

(அல்குர்ஆன் 1:5)

அவனே உங்கள் இறைவனான அல்லாஹ். அவனுக்கே அதிகாரம் உரியது. அவனையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் சிறிதளவு கூட அதிகாரம் பெற மாட்டார்கள். நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனையை அவர்கள் செவியுற மாட்டார்கள். (ஒரு வாதத்திற்கு) அவர்கள் செவியுறுவதாக இருந்தாலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். நீங்கள் இணை வைத்ததை மறுமை நாளில் அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போன்று உமக்கு யாரும் அறிவிக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 35:13, 14)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். அப்போது நபியவர்கள், “சிறுவனே! நான் உனக்கு சில வார்த்தைக்களை கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டு “நீ அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வை. அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வை. அவனை உனக்கு முன்பாக பெற்றுக் கொள்வாய். நீ (எதைக்) கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! நீ அறிந்து கொள்! ஒட்டுமொத்த சமுதாயமும் உனக்கு ஏதாவது ஒன்றில் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக ஒன்றுபட்டாலும் அல்லாஹ் உனக்கு விதித்த ஒன்றிலேயே தவிர அவர்கள் உனக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. அவர்கள் உனக்கு ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு விதித்த ஒன்றை தவிர வேறு எந்த பாதிப்பும் அவர்களால் உனக்கு ஏற்படுத்த முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டுவிட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  

நூல்: திர்மிதி (2440)

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஆதாரங்கள் தவிர இன்னும் ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் அல்லாஹ்விடம் மட்டும்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற தவ்ஹீதின் அடிப்படையைத் தெளிவாக எடுத்துரைக்கும்போது அந்த வணக்கத்தை நபிகள் நாயகத்திடம் செய்தால் மறுமையில் நாம் நிரந்தர நரகத்தில் இருந்து தப்பிக்க இயலுமா? என்பதை இதை ஓதக்கூடியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

பாவங்களை மன்னிக்கும் இறையதிகாரத்தில் இணைவைப்பு

இறைக்கட்டளைகளுக்கு நாம் மாறு செய்வதே பாவம் எனப்படும். எனவே இறைவனுக்கு நாம் மாறு செய்து பாவம் செய்வதால் இறைவன் மட்டும்தான் நமது பாவங்களை மன்னிப்பதற்கு அதிகாரம் பெற்றவன் என்பது தவ்ஹீதின் அடிப்படையாகும்.

இறைவன் பாவங்களை மன்னிப்பான் என்பதன் கருத்து, நாம் செய்த பாவங்களை அழித்து விடுவதுடன் அந்தப் பாவங்களுக்காக நம்மைத் தண்டிக்கமாட்டான் என்பதாகும்.

ஆனால் சுப்ஹான மவ்லிதில் ஏராளமான கவிதைகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை, பாவங்களை அழிப்பவர்கள் என்று கூறுவது மட்டுமின்றி, மவ்லித் ஓதுபவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு இறைத்தூதரிடம் பாவமன்னிப்புக் கோருவதாகவும் அமைந்துள்ளது. இதோ அந்த மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் இணைவைப்பு வரிகளைப் பாருங்கள்.

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும்மீது ஸலாம்!

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا   وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

தவறுகளை மன்னிப்பது தாங்களன்றோ!  அழிவேற்படுத்தும் பாவங்களை மன்னிப்பது தாங்களன்றோ!

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே! சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!

ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ

எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும்.

يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ   تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ   وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ   

பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக்கொள்! நபியின் கொடைத்தன்மையை எதிர்பார்த்துக்கொள்! புனிதம் மிக்க ஹரம் ஷரீபில் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக்கொள்!

اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ     مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன்.

وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ

என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.

اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ     وَمُقِيْلُ الْعَثَرَاتِ

எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.

மேற்கண்ட மவ்லித் வரிகள் அனைத்துமே இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான இணைவைப்பு வரிகள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பாவங்களை மன்னிக்கின்ற அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது என்பதைத் திருமறைக் குர்ஆனும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அல்லாஹ்வே எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான். அவனே மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன். (அல்குர்ஆன் 39:53)

(அவனே) பாவங்களை மன்னிப்பவன்; பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன்.  (அல்குர்ஆன் 40:3)

அவர்கள் மானக்கேடானதைச் செய்தாலோ, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டாலோ, அல்லாஹ்வை நினைத்துத் தமது பாவங்களுக்காக மன்னிப்புக் கோருவார்கள். பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார்? (அல்குர்ஆன் 3:135)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (யா அல்லாஹ்)  நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டேன். எனவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு! ஏனெனில் உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யாருமில்லை.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: முஸ்லிம் 1290

“இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய் என்று கூறுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ பக்ர் (ரலி)

நூல்: புகாரி (834)

மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதன் காரணமாகத்தான் எல்லா நபிமார்களும், நல்லடியார்களும் தங்களின் பாவங்களுக்கு இறைவனிடமே பிரார்த்தித்துப் பாவமன்னிப்புக் கோரியுள்ளனர் என்பதை ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் எடுத்துரைக்கின்றன.

நாம் பிற மனிதர்களுக்குச் செய்யும் அநீதிகளும் இறைக்கட்டளைக்கு மாற்றமாகச் செய்கின்ற பாவம்தான். எனவே நாம் பிற மனிதர்களுக்கு அநீதி இழைத்தால் நம்மால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை மன்னித்தால்தான் அல்லாஹ் நமது பாவங்களை அழித்து தண்டனையிலிருந்து நம்மைப் பாதுகாப்பான். பிற மனிதர்களிடம் மன்னிப்புக் கோருதல் என்பது அவர்களிடம் நேரடியாகச் சென்று கேட்பதுதான். இறைவனிடம் கேட்பதைப் போன்று அவர்களிடம் பிரார்த்தனை செய்து பாவமன்னிப்புக் கேட்பதல்ல.

ஆனால் மேற்கண்ட மவ்லித் வாசகங்களைப் படித்துப் பார்த்தால் மவ்லிது ஓதுபவர்கள் தாம் இறைவனுக்குச் செய்த பாவங்களுக்கே நபிகள் நாயகத்தை அழைத்துப் பிரார்த்தித்து பாவமன்னிப்புக் கோருகின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இது எவ்வளவு பெரிய இணைவைப்புக் காரியம் என்பதை இதைச் செய்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

கவலை, துன்பம், நோய்களை நீக்கும் இறையதிகாரத்தில் இணைவைத்தல்

எந்த ஒரு செயலுக்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே ஆற்றல் பெற்றுள்ளானோ அதுபோன்ற முறைகளில் இறைவன் அல்லாதவர்கள் நமது கவலை, துன்பம், நோய்களை நீக்குவார்கள் என்றோ உதவி செய்வார்கள் என்றோ நம்பிக்கை வைப்பது மாபெரும் இணைவைப்பாகும். கவலை, துன்பம், நோய்களை நீக்குவதற்கும், உதவி வேண்டியும் நாம் பிரார்த்தனை செய்தால் நமக்கு உதவி செய்யும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும். இது போன்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

ஆனால் சுப்ஹான மவ்லிதை ஓதக் கூடியவர்கள் கவலை, துன்பம், நோய்களை நீக்குவதற்காக நபிகள் நாயகத்திடம் பிரார்த்தனை செய்து உதவி வேண்டுகின்றனர். இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கத்தை இறைத்தூதருக்குச் செய்து மாபெரும் இணைவைப்பை அரங்கேற்றுகின்றனர்.

இதோ சுப்ஹான மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் இணைவைப்பு வரிகளைப் பாருங்கள்.

اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

கவலைகளை அகற்றுபவரே! நும்மீது ஸலாம்!

اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ      فَجِئْتُ هذَا الْبَابْ

اُقَبِّلُ اْلاَعْتَابْ        اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ

وَالسَّادَةُ اْلاَخْيَارِ

எனக்கு காரணங்கள் (உபாயங்கள்) நெருக்கடியாகி விட்டன. எனவே நபியே! தஙகளின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்

فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ

எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.

فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்

بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ           اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

என் வறுமை, என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ

மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க் காவல் தாங்கள் தான்

.اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ

நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.

وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا        لَدَيْهِ بُرْعُ  السَّقَامِ

நீ நோயாளியாக இருப்பதால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.

مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ  فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ

மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.

மனிதர்களுக்கு ஏற்படும் நோய், துன்பம், கவலை, அனைத்தையும் நீக்கும் அதிகாரமும், உதவி செய்யும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாகும். இதோ திருமறைக்குர்ஆன் எடுத்துரைக்கும் வசனங்களைப் பாருங்கள்.

உதவி என்பது மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர வேறில்லை.

(அல்குர்ஆன் 3:126, 8:10)

உங்களுக்கு அல்லாஹ் உதவினால் உங்களை வெல்பவர் யாருமில்லை. அவன் உங்களைக் கைவிட்டால் அதன் பிறகு உங்களுக்கு உதவுபவர் யார்? எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கை வைக்கட்டும்.

(அல்குர்ஆன் 3:160)

அளவிலா அருளாளனைத் தவிர உங்களுக்கு உதவும் உங்களுக்கான படையினர் யாரேனும் உள்ளனரா? இறைமறுப்பாளர்கள் ஏமாற்றத்திலேயே உள்ளனர்.

(அல்குர்ஆன் 67:20)

மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்தும், இன்னும் பல இறைவசனங்களும் உதவி செய்யும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

அது போன்று துன்பங்களிலிருந்து காப்பாற்றுபவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் என்ற அடிப்படையையும் திருமறையின் பல வசனங்கள் எடுத்துரைக்கின்றன.

“அல்லாஹ்வே உங்களை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகிறான். (இதன்)பின்னரும் நீங்கள் இணை வைக்கிறீர்கள்”

(அல்குர்ஆன் 6:64)

அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தை ஏற்படுத்தினால் அதை நீக்குபவன் அவனைத் தவிர யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தினால், ஒவ்வொரு பொருளின்மீதும் அவன் ஆற்றல் மிக்கவன்.

(அல்குர்ஆன் 6:17)

“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு நானே எந்த நன்மையோ, தீமையோ செய்வதற்கு நான் சக்தி பெற மாட்டேன்” என்று (நபியே) கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:49)

(அவர்கள் இணையாக்குபவை சிறந்தவையா?) அல்லது துன்பத்திற்கு உள்ளானவன் பிரார்த்திக்கும்போது அவனுக்குப் பதிலளித்து, அத்துன்பத்தை நீக்கி, பூமியில் உங்களைத் தலைமுறைகளாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருக்கிறானா? நீங்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.

(அல்குர்ஆன் 27:62)

“அவனையன்றி நீங்கள் யாரை நம்புகிறீர்களோ அவர்களிடம் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் துன்பத்தை நீக்கவோ, திருப்பவோ அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:56)

அவனே உங்கள் இறைவனான அல்லாஹ். அவனுக்கே அதிகாரம் உரியது. அவனையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் சிறிதளவு கூட அதிகாரம் பெற மாட்டார்கள். நீங்கள் அவர்களைப் பிரார்த்தித்தால் உங்கள் பிரார்த்தனையை அவர்கள் செவியுற மாட்டார்கள். (ஒரு வாதத்திற்கு) அவர்கள் செவியுறுவதாக இருந்தாலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். நீங்கள் இணை வைத்ததை மறுமை நாளில் அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போன்று உமக்கு யாரும் அறிவிக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 35:13, 14)

“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! வானங்களிலும் பூமியிலும் அணுவளவு கூட அவர்கள் அதிகாரம் பெறமாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு உதவியாளர் யாருமில்லை” என்று (நபியே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 34:22)

இவ்வாறு ஏராளமான வசனங்கள் எல்லாத் துன்பங்களிலும் நமக்கு உதவி செய்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான் என்ற தவ்ஹீதின் அடிப்படையைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

துன்பங்களை நீக்குதல் என்பதில் நோய்களும் உள்ளடங்கிவிடும் என்றாலும் நோய்களை நீக்கும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்று குறிப்பிட்டுக் கூறும் வசனங்களும் உள்ளன. இதோ இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக திருமறைக் குர்ஆன் எடுத்துரைப்பதைப் பாருங்கள்.

நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான். (அல்குர்ஆன் 26:80)

பின்வரும் நபிமொழியும் நோய் நீக்கும் அதிகாரம் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே என்பதை எடுத்துரைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை”

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (5675)

“நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை“ என்ற வாசகம் நோய் நீக்கும் அதிகாரம் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைகள் தெள்ளத் தெளிவாக திருமறைக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் போது அந்த தவ்ஹீதின் அடிப்படைகளுக்கு எதிரான இந்த மவ்லிதை ஒரு உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆதரிக்க முடியுமா? என்பதை இதை ஓதக் கூடியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

மறைவான ஞானம் எனும் இறையதிகாரத்தில் இணைவைத்தல்

மறைவானவற்றை அறியக்கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். இந்த ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. ஆனால் மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் வரிகள் இந்த தவ்ஹீதின் அடிப்படைக்கு எதிராக, மாபெரும் இணைவைப்பில் தள்ளக்கூடியவையாக அமைந்துள்ளன. இதோ சுப்ஹான மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் வரியைப் பாருங்கள்!

عَالِمُ سِرٍّ وَأَخْفى  

அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே,

இதேபோன்று மவ்லிதுக்கு நிகராக பரேலவிகளால் மதிக்கப்படும் கவிதைகளில் ஒன்று புர்தாஹ் எனும் கவிதை நூல் ஆகும், இந்த நூலிலும் ஏராளமான இணைவைப்பு வரிகள் நிறைந்துள்ளன. அதில் இடம் பெற்றும் இரு வரிகைளைப் பாருங்கள்.

فَاِنَّ مِنْ جُوْدِكَ الدُّنْيَا  وَضَرَّتَهَا  وَمِنْ عُلُوْمِكَ عِلْمُ اللَّوْحِ وَالْقَلَمِ

ஏனெனில் நிச்சயமாக இவ்வுலகும் அதன் சக்களத்தி(யான மறுமை)யும் உங்களது கொடைத்தன்மையில் இருந்து உள்ளவையாகும். லவ்ஹு(ல் மஹ்ஃபூழ்) எனும் ஏடு மற்றும் (அதில் பதிவு செய்யும்) எழுதுகோல் ஆகியவற்றினுடைய ஞானமாகிறது உங்களது ஞானங்களிலிருந்து உள்ளதாகும். (புர்தாஹ் 154வது பாட்டு)

பாதுகாக்கப்பட்ட ஏடான லவ்ஹுல் மஹ்ஃபூழில் உள்ள ஞானம் கூட இறைத்தூதரின் ஞானங்களில் சிறு பகுதிதான் என்றால் இதைவிடவும் இணைவைப்பு வேறு ஏதேனும் இருக்க முடியுமா? முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்துதான் அல்லாஹ்வே கல்வி பெற்றுள்ளான் என்று இந்த வழிகேடர்கள் துணிந்து கூறவருகிறார்களா? இது போன்றவற்றிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோமாக!

மறைவான ஞானம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதை ஏராளமான திருமறை வசனங்களும், நபிமொழிகளும் எடுத்துரைக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றைக் காண்போம்.

“அல்லாஹ்வையன்றி வானங்களிலும் பூமியிலும் உள்ள எவரும் மறைவானதை அறிய மாட்டார்கள்; தாம் எப்போது (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோம் என்பதையும் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 27:65)

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அவற்றை அறிய முடியாது. அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிகிறான். அவன் அறியாமல் ஓர் இலைகூட உதிர்வதில்லை. பூமியின் இருள்களிலுள்ள விதையும், பசுமையானதும், உலர்ந்ததும் தெளிவான ஏட்டில் இல்லாமலில்லை.

(அல்குர்ஆன் 6:59)

(நபியே!) “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருப்பதாக நான் உங்களிடம் கூற மாட்டேன். மறைவானதை நான் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர எதையும் நான் பின்பற்றுவதில்லை” என்று கூறுவீராக! “பார்வையற்றவனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 6:50)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்து. அல்லாஹ்வைத் தவிர அவற்றை வேறு யாரும் அறிய மாட்டார்கள். நாளை நடப்பதையும், கருவில் உள்ளவற்றையும், மழை எப்போது பொழியும் என்பதையும், ஒரு ஆத்மா எப்போது மரணிக்கும் என்பதையும் மறுமை நாள் எப்போது நிகழும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் ரலி 

நூல்: புகாரி 4697

நாங்கள் மதீனாவில் ஆசூரா நாளன்று இருந்தோம். அப்போது சில சிறுமிகள்                      கஞ்சிராக்களை அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ருபைய் பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். இது பற்றி அவர்களிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், எனது திருமணநாளன்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள், பத்ருப் போரில் கொல்லப்பட்ட அவர்களின் முன்னோர்களைப் பற்றி புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். அதில், ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்’ என்று அவ்விரு சிறுமிகளும் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறு கூறாதீர்கள். நாளை நடப்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹுஸைன்,

நூல்: இப்னுமாஜா (1897)

இச்செய்தி புகாரி 4001வது ஹதீஸாகவும் இடம் பெற்றுள்ளது.

மறைவானவற்றை அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்பதை மேற்கண்ட சான்றுகளிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். இத்தவ்ஹீதின் அடிப்படையைத் தகர்த்து, இணைவைப்பில் தள்ளக் கூடியதாகத்தான் மவ்லிதின் வாசகங்கள் அமைந்துள்ளன என்பதை அதை ஆதரிப்பவர்கள் சிந்தித்துப் பார்த்து இந்த இணைவைப்பு எனும் மாபாதகத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில் நாம் எடுத்துக்காட்டியிருப்பது மவ்லிதில் இடம் பெற்றிருக்கும் இணைவைப்பு வரிகளில் ஒரு சிறுபகுதியைத்தான். இதுவல்லாத இன்னும் ஏராளமான இணைவைப்பு வரிகளும், பொய்களும், பித்தலாட்டங்களும் இந்த மவ்லிதுகளில் நிறைந்து காணப்படுகின்றன.

இதுபோன்ற இணைவைப்புக் காரியங்களிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!