சிறுவர்கள் உரையாடல் – அம்மார், ஆமீர் தேடல்கள் (1)

அம்மார், ஆமிர் இருவரும் சுட்டிக் குழந்தைகள்; கெட்டிக்காரர்கள்.
யூசுஃப், ஸைனப் தம்பதியரின் செல்ல மகன்கள். அம்மார் ஐந்தாம் வகுப்பும், ஆமிர் நான்காம் வகுப்பும் படிக்கின்றனர்.
ஷஅபான் பிறை 29!
மாலை நேரம் நண்பன் முஹம்மது வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மஃக்ரிப் நேரத்தைத் தாண்டும் போது ரமலான் மாதம் துவங்கியதற்கு அடையாளமாக டமால்ல்ல்! என்று பெரும் குண்டு வெடித்தது போன்ற சப்தம் ஊரின் பெரிய பள்ளிவாசலிலிருந்து கேட்டது.
சிறுவர்கள் ஒரு நொடி அதிர்ந்து போனார்கள்.
அந்த அதிர்வு அடங்கும் முன் உய்ய்ய்ங்ங்ங்! என்ற சங்கு சத்தமும் ஒலித்தது.
இந்தச் சப்தங்கள் கேட்டவுடனே, அடுப்பறையில் வேலை செய்து கொண்டிருந்த முஹம்மதின் அம்மா சுமையா தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வீட்டின் வாசல் வராண்டாவிற்கு வந்து,
“அடேய் முஹம்மது வேகமா வா!” என்றழைத்து வானில் தெரியும் பிறையைப் பார்த்து துஆ செய்கிறார்.
என்னவென்று புரியாத முஹம்மதும் உம்மாவின் அருகில் கைகளை இணைத்து நின்றவனாக வானைப் பார்த்துக் கொண்டே ஓரக் கண்ணால் தன் நண்பர்களையும் பார்க்கிறான்.
இதை அம்மாரும் ஆமிரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஊரின் பெரிய பள்ளிவாசலிலிருந்து மைக்கில், “நவைத்து ஸவ்ம கதின் அன் அதாயி ஃபர்ளி ரமலான ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹி தஆலா” என்று மோதினார் கூறுகிறார்.
இதைக் கேட்டதும் முஹம்மதின் தாயார் சுமையாவும் திரும்பி அதையே சொல்கிறார்.
இதையெல்லாம் பார்த்து விட்டு விளையாட்டையும் முடித்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள் அம்மாரும் ஆமிரும்.
திரும்பும் போது பள்ளிவாசலுக்குச் சென்று மஃக்ரிப் தொழுதுவிட்டு வீட்டிற்குச் சென்றார்கள்.
“அஸ்ஸலாமு அலைக்கும்” என்று தாயார் ஸைனபுக்கு ஸலாம் கூறி, நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது காட்டித் தந்த சுன்னத்தை1 நடைமுறைப்படுத்தி வீட்டிற்குள் நுழைகிறார்கள்.

ஸைனப்: வஅலைக்கும் ஸலாம். முஹம்மது, சுமையா மாமி எல்லாம் நல்லா இருக்காங்களா?
அம்மார் & ஆமிர்: நல்லா இருக்காங்கம்மா… அல்ஹம்துலில்லாஹ்.
அம்மார்: அம்மா! அம்மா! நீங்க பிறைய பார்த்து துஆ செஞ்சீங்களா?
ஸைனப்: என்னப்பா என்ன சொல்ற?
ஆமிர்: ஆமாம்மா. நாங்க முஹம்மது வீட்டுல விளையாடிட்டு இருந்தோம்ல அப்போ முஹம்மது உம்மா சங்கு சத்தம் கேட்டவுடனே பிறைய பார்த்து துஆ செய்தாங்க. முஹம்மதும் அவங்க பக்கத்துல போய் நின்னுக்குட்டான்.
ஸைனப்: ஓ! அதுவா…. அப்படிலாம் செய்யக்கூடாதுமா!
அம்மார் & ஆமிர்: ஏன்ம்மா?
ஸைனப்: தங்கங்களா! இஸ்லாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமான மார்க்கம்2. அவன வணங்குறதுக்காகத்தான் நாமெல்லாம் படைக்கப்பட்டோம்.
அம்மார் & ஆமிர்: ம்ம்ம்.. ஆமா!
ஸைனப்: அப்டின்னா அல்லாஹ்வ நாம எப்படி வணங்கனும்னு அவன்தானே சொல்லித் தரனும்?
அம்மார் & ஆமிர்: ஆமா!
ஸைனப்: அல்லாஹ் ரமலான் மாசத்துல நோன்ப நமக்கு கடமையாக்கியிருக்கான்5. ரமலான் மாசமா இருந்தாலும் எந்த மாசமா இருந்தாலும் அது எப்போ ஆரம்பாகுதுனு தெரிஞ்சிக்கத்தான் பிறை பார்க்க அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் நமக்கு சொல்லிக் கொடுத்துருக்காங்க!
அம்மார் & ஆமிர்: ம்… சரி…
ஸைனப்: சூரியனா இருந்தாலும், பிறையா இருந்தாலும் ரெண்டும் நமக்கு நேரங்காலத்த காட்டுறதுக்குத்தான். சூரியன விட பிறைக்கோ பிறைய விட சூரியனுக்கோ எந்தச் சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லித் தரல! ரமலான் மாசம் மட்டுமில்ல! எந்த மாசத்துல பிறை தெரிஞ்சாலும் சில பேரு இப்படித்தான் அந்த பிறை பாத்துக்கிட்டே துஆ செய்றாங்க. பிறைய பாத்தவுடனே துஆ செய்றதா இருந்தா நபி(ஸல்) செஞ்சிருப்பாங்களா? மாட்டாங்களா?
அம்மார் & ஆமிர்: செஞ்சிருப்பாங்க!
ஸைனப்: ரசூலுல்லாஹ் செஞ்சிருந்தா ஹதீஸ்ல இருந்திருக்கும். ஆனா அப்படி பிறைய பார்த்த உடனே அத பாத்து துஆ செஞ்சாங்கன்னு எந்த ஹதீசும் இல்ல. அதனால நாம ஹதீஸ்ல இல்லாதத நாமலே செய்யக்கூடாது8. அப்படி செஞ்சா அது தான் பித்அத். அத செஞ்சா நரகந்நதான் கிடைக்கும்9.
அம்மார் & ஆமிர்: அப்படியா! அப்ப ஏன்மா சுமையா மாமி அப்படி செஞ்சாங்க?
ஸைனப்: அவங்களுக்கு தெரியாம செஞ்சு இருப்பாங்க. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு போனா அவங்களுக்கு சொல்லுங்க10 சரியா?
அம்மார் & ஆமிர்: சரிம்மா..
அம்மார்: ம்மா! அடுத்து பள்ளில ஏதோ துஆ ஓதுனாங்கல… நவைத்து… டேய் ஆமிர் அது எப்படி ஓதுனாங்க?
ஆமிர்: அதுவா? நவைத்து ஸவ்ம… அப்டினு ஆரம்பிச்சு ஓதுனாங்க.
அம்மார்: ஆமா கரெக்ட்… அந்த துஆ எதுக்கும்மா?
ஸைனப்: அத பத்தி உங்க வாப்பா சொல்லுவாங்க போய் கேளுங்க.
ஏங்க இவங்க கேட்குறத பத்தி கொஞ்சம் சொல்லிக் கொடுங்க. நான் இங்க கொஞ்சம் வேலையா இருக்கேன். முடிச்சிட்டு வந்துடுறன்.
யூசுஃப்: ம்ம்ம்ம்… சரி! அம்மார், ஆமிர் இங்க வாங்க என்ன கேக்கனும் கேளுங்க!
அம்மார்: இல்ல வாப்பா! நாங்க முஹம்மது வீட்டுல விளையாடிட்டு இருந்தப்போ முஹம்மது உம்மா பிறைய பாத்ததும் துஆ செஞ்சாங்க அத பத்தி உம்மாட்ட கேட்டோம். உம்மா அது பித்அத்னு சொன்னாங்க.
ஆமிர்: அதே மாதிரி அவங்க வீட்டுல நாங்க இருந்தப்ப பள்ளில நவைத்து ஸவ்ம… அப்டீனு ஒரு துஆவ ஓதுனாங்க. அந்த துஆ எதுக்கு? நாம ஏன் அது ஓதல?
யூசுஃப்: ரமலான் பிறை தெரிஞ்சிடுச்சுல. அதான் நோன்புக்கு நிய்யத் துஆ என்று அத ஓதுவாங்க.
அம்மார்: நாம ஏன் அத ஓதல?
யூசுஃப்: பிறைய பாத்து முஹம்மது உம்மா துஆ செஞ்சத பத்தி உங்கம்மா என்ன சொன்னாங்க?
ஆமிர்: அது பித்அத். அத செஞ்சா நரகம். ஏன்னா ரசூலுல்லாஹ் அப்படி செய்யவே இல்ல. ரசூலுல்லாஹ் செய்யாதத நாம செய்யக்கூடாது அப்டீனு சொன்னாங்க.
யூசுஃப்: வேற என்னெல்லாம் சொன்னாங்க?
அம்மார்: அப்படி ரசூலுல்லாஹ் செஞ்சிருந்தா ஹதீஸ்ல வந்துருக்கும். ஹதீஸ்ல இல்லைனா நாமலா செய்யக்கூடாது அப்படீனும் சென்னாங்க.
யூசுஃப்: கரெக்ட். மாஷா அல்லாஹ்… அதே மாதிரிதான் இந்த துஆவும். நோன்பு நிய்யத் துஆனு நபி (ஸல்) எந்த துஆவையும் நமக்கு கற்றுத் தரல. அவங்க ஓதுனதா எந்த ஹதீசும் இல்ல. அப்படியிருக்கும் போது நாம செய்யலாமா?
ஆமிர்: செய்யக்கூடாது. செஞ்சா பித்அத்.
அம்மார்: பித்அத் செஞ்சா நரகம்தான் கிடைக்கும்.
யூசுஃப்: ஆமா… நாம எந்த நன்மைய செய்யறதா இருந்தாலும் அதுக்கு நிய்யத் அவசியம்னு ரசூலுல்லாஹ் சொல்லியிருக்காங்க11. நிய்யத் இருந்ததான் நாம் செய்றத அல்லாஹ் ஏத்துக்குட்டு நமக்கு நன்மைய தருவான். ஆனா அந்த நிய்யத் எப்படி இருக்கனும் தெரியுமா?
அம்மார் & ஆமிர்: எப்படி இருக்கனும்?
யூசுஃப்: நிய்யத்னாலே மனசுல நினைக்கிறது தான். நாம எந்த அமலை செய்றதா இருந்தாலும் மனசுல நான் இந்த காரியத்த அல்லாஹ்வுக்காக செய்யுறேன்ங்கிற நினைப்பு இருக்கனும். அதான் நிய்யத். உளு செஞ்சாலும், தொழுவுனாலும், நோன்பு வைச்சாலும், தர்மம் செஞ்சாலும்னு…. எத செஞ்சாலும் அத அல்லாஹ்வுக்காக நான செய்யிறன் அப்டீங்கிற கவனமும் எண்ணமும் வேணும். அதான் நிய்யத். நிய்யத்னாலே அதுக்கு அர்த்தம் மனசுல நினைக்கிறதுதான்.
அப்படியிருக்கும் போது அதுக்குன்னு ஒரு துஆ ரசூலுல்லாஹ் நமக்கு காட்டித் தரல. ஹஜ் செய்யும் போது மட்டும் அந்த நிய்யத் வைக்கும் போது ஒரு துஆவ ஓதுறதுக்கு சொல்லிக் கொடுத்துருக்காங்க. வேற எந்த துஆவும் நிய்யத்துக்குனு கிடையாது. நோன்புக்கும் கிடையாது. தொழுகைக்கும் கிடையாது. எதுக்கும் கிடையாது. புரியுதா?
அம்மார் & ஆமிர்: புரியுது வாப்பா! அப்ப இதுவும் பித்அத்தா?
யூசுஃப்: ஆமா!
அம்மார் & ஆமிர்: அப்போ ஏன் அத பள்ளில ஓதுறாங்க? அவங்களுக்குத் தெரியாதா?
ஸைனப்: அத பத்தி நாளைக்கு பேசலாம். இஷா பாங்கு சொல்லப் போறாங்க. இஷாவையும் இரவுத் தொழுகையும் தொழுதுட்டு சாப்பிட்டுட்டு சீக்கிரம் தூங்குங்க. ஸஹருக்கு எழுந்திருக்கனும். யார் நோன்பு வைக்க போறீங்க?
அம்மார் & ஆமிர்: நான்! நான்!
ஸைனப்: சரி! அப்படின்னா நான் சொன்ன மாதிரி தொழுதுட்டு சீக்கிரம் தூங்குனாதான் ஸஹருக்கு எழுந்திருக்க முடியும்.
அம்மார் & ஆமிர்: சரிம்மா!
இஷா தொழுதுவிட்டு சாப்பிட்டதும் இரவுத் தொழுகையையும் தொழுதுவிட்டு அனைவரும் தூங்கச் சென்றார்கள்.

அம்மார், ஆமிரின் தேடல் தொடரும்…