சிரித்துக் கொண்டே பேசினால் வன்முறையாகாதாமே?

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் (2020ஆம் ஆண்டு) அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாஜகவின் முக்கிய புள்ளிகள் பலரும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினர்.
கபில் மிஸ்ரா, பர்வேஸ் ஷர்மா, அனுராக் தாக்கூர் போன்றோர் அத்தகைய வெறுப்புப் பேச்சை பேசிய நபர்களில் முக்கியமானோர். இவர்களது பேச்சே டெல்லி கலவரத்திற்கு வித்திட்டது.
இது தொடர்பாக இவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டன. எனினும் அவை முறையான எப்.ஐ.ஆர்களாக பதிவு செய்யப்படவில்லை.
குறிப்பாக அனுராக் தாக்கூர் மீதும் வெறுப்புப் பேச்சை பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில் தான் தற்போது டெல்லி உயர்நீதிமன்றம் இப்படியொரு விசித்திரமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அனுராக் தாக்கூர் பேசியதில் எந்த வகுப்புவாதமும் இல்லை என்பதுடன் சிரித்துக் கொண்டே கூறினால் அது வன்முறைப் பேச்சாகாது என்றும் கூறியுள்ளது.
உன்னை கொல்லப் போகிறேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னால் அது வன்முறைப் பேச்சாகாதா?
சிரித்துக் கொண்டே கொலை செய்தால் கொலையாளிகளை விடுவித்து விடுவார்களா?
ஏன் நீதிமன்றங்களின் தீர்ப்பு இப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இது போன்ற தீர்ப்பு மக்களிடையே எத்தகைய எதிர்விளைவுகளை உண்டாக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இதற்கு முன்பு அனுராக் தாக்கூர் உள்ளிட்ட மூவர் தொடர்பான வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், காவல்துறை ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட வீடியோவை பார்க்கவில்லை என்று டெல்லி காவல்துறை சமாளித்த போது இத்தனை தொலைக்காட்சிகள் வைத்திருக்கிறீர்கள்? இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லையா? காவல்துறையின் இந்தப் பதில் தனக்கு அதிர்ச்சி அளிக்கின்றது என்றார்.
நீதிமன்றத்திலேயே மூவரின் பேச்சுகளை ஒலிபரப்பி அனைவரையும் கேட்கச் செய்தார்.
இப்படி நியாயமான விசாரணையை மேற்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்களை அவசர அவசரமாக, இரவோடு இரவாக டெல்லியிலிருந்து பஞ்சாபிற்கு பணி மாற்றலுக்கு உத்தரவிட்டது பாஜக அரசு.
அரசியல் அழுத்தமின்றி துணிச்சலுடன் வழக்கை கையாளும் நீதிபதிகளை பந்தாட துணிந்து விட்ட அணுகுமுறையே அனுராக் தாக்கூரின் வழக்கு எந்த திசையில் பயணிக்கும் என்பதை கை காட்டி விட்டது.
இப்போது அது தான் நடந்துள்ளது.
சாமானிய மக்கள் என்றால் வெறுப்பு பேச்சுக்களுக்காக உடனடி வழக்குகள் பாய்வதும் துரித கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அதுவே அதிகாரமிக்கவர்கள் என்றால் சிரித்துக் கொண்டே பேசினால் வன்முறையாகாது என்று மழுப்பலான விளக்கத்தை அளிப்பதும் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை கேள்விக்குறியாக்குகின்றது.
எளியவர் வலியவர் பாகுபாடின்றி சட்டத்தை நிலைநிறுத்த கடமைப்பட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளே இத்தகை வேறுபாடுகளை வெளிப்படுத்துவது வேதனையானது.