அண்மைக்காலமாகவே அப்படி ஒரு கருத்து சில முஸ்லிம்களிடம் நிலவி வருகிறது.
ஆடல், பாடல், சண்டைக்காட்சி உள்ள சினிமாக்கள் தான் தவிர்க்கப்பட வேண்டும். அவையல்லாத, நல்ல கருத்துகளை தாங்கி நிற்கும் சினிமாக்களை வரவேற்க வேண்டும் எனும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
தி மெசேஜ் எனும் தமிழ் மொழியாக்க பட வெளியீட்டின் போது சினிமா ஹராம் அல்ல. இது போன்ற ஊடகங்களை பயன்படுத்தாமல் இருப்பது தான் ஹராம் என்று மறைந்த கவிக்கோ அப்துர் ரஹ்மான் கூறியது நினைவுகூறத்தக்கது.
இவ்வாறு சினிமாவை நோக்கி முஸ்லிம்களின் கவனத்தை திருப்பும் செயல் இன்றளவும் நடைபெறுகிறது.
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்
சினிமாத்தனம் இல்லாத சினிமா என்பது சர்க்கரை இல்லாத கரும்பு எனும் கூற்றைப் போன்றது. உண்மையில் அப்படி ஒன்றே கிடையாது.
பாட்டு, பைட் இல்லை என்பதால் அது சினிமா இல்லை என்றோ, சினிமாவில் நல்ல கருத்துகள் கூறப்பட்டுள்ளது என்பதாலேயே இஸ்லாத்தின் பார்வையில் அந்த சினிமா வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகவோ ஆகி விடாது.
இதை உணர்ச்சி வயப்பட்ட நிலையில் அணுகாமல் இஸ்லாத்தின் பார்வையில் நின்று அணுக வேண்டும்.
இஸ்லாம் சினிமாவை கூடாது என்பதற்கு ஆபாசம், ஆடல், பாடல் போன்றவை மட்டுமே காரணமல்ல. அவை சினிமா கூடாது என்பதற்கான முக்கிய காரணங்கள் என்பதை போலவே இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இசையும் ஓர் முக்கிய காரணம்.
இசை ஹராம் என்பதை நபிகள் நாயகம் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்.
அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல் : புகாரி 5590
இப்போது நீங்கள் கூறும் நல்ல கருத்துள்ள சினிமாவை எடுத்துக் கொள்வோம்.
அதில் ஆடல், பாடல், அடிதடி சண்டைக் காட்சிகள் இவையெல்லாம் இல்லை என்றே வைத்துக் கொள்வோம்.
இசை இல்லாமல் இருக்குமா? பின்னணி இசையின்றி எந்தச் சினிமாவும் எடுக்கப்படுவதில்லை.
பல்வேறு இசைக் கருவிகளை கொண்டு பின்னணி இசை கோர்த்து, சேர்க்கப்பட்ட சினிமாவை இஸ்லாத்தின் பார்வையில் இது நல்ல சினிமா என்று எவ்வாறு வரவேற்க இயலும்?
அவ்வாறு வரவேற்பது மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட இசையை ஹலாலாக்கியது போலாகாதா?
ஒருவன் இசையைக் கேட்கிறான் என்றால் அது அவனது பலவீன நிலையை குறிக்கும்.
தவிர்க்க இயலாத சூழலில் இசையை கேட்கும் சூழல் ஏற்படுவது தனி விஷயம்.
ஆனால் நல்ல கருத்து கூறப்பட்டுள்ளது எனும் பெயரில் சினிமாவை வரவேற்கத்தக்கதாக அடையாளப்படுத்தினால் மேலும் மேலும் சினிமா மோகத்தில் முஸ்லிம்களை தள்ளுவதாகவே அது அமையும்.
சினிமாவில் கூறப்படும் ஒரு கருத்திற்காக இசையை ஆகுமாக்கினால் நாளை இன்னொருவர் பாடல் பிரச்சனை இல்லை அதன் கருத்தை பாருங்கள் என்பார். அரைகுறை ஆடை பிரச்சனை இல்லை சினிமாவின் கருத்தை பாருங்கள் என்பார். இதற்கு முற்றுப்புள்ளி இருக்காது.
இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு சினிமா ஒட்டு மொத்த சமூகத்தையும் மாற்றி விடும் என்று நினைப்பது கண் மூடினால் உலகமே இருண்டு விடும் என்ற கருத்திற்கு ஒப்பானது.
பாதிக்கப்பட்ட மக்களின் வேதனை சினிமாவில் சொல்லப்படுவதாலேயே அவர்களின் துயர் துடைக்கப்பட்டு விடும் என்பெதல்லாம் போலியானது. அந்த ஒரு சினிமாவிற்கு அதன் கருத்து பேசு பொருளாக இருக்கும். அதன் பிறகு அதன் சுவடு எதுவும் தெரியாமல் மறைந்து விடும்.
லஞ்சம், ஊழல் குறித்து எண்ணற்ற சினிமாக்கள் பேசித் தீர்த்து விட்டன. அதனால் லஞ்சமோ ஊழலோ ஒழிந்து விட்டதா?
ஏழைகள் படும் இன்னல்கள் பற்றி எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி எத்தனையோ சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஏழைகள் எல்லாம் செல்வந்தர்களாகி விட்டார்களா?
சாதி வெறியை கண்டித்து பல சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தச் சினிமாக்களை கொண்டே சாதியப் பெருமைகள் பேசுவதைக் காண முடிகின்றது.
எனவே சினிமாவில் கூறப்படும் நல்ல கருத்துகள் முழு வீச்சுடன் மக்களை சென்றடையாது. அதற்கான ஆயுளும் குறைவு. அதற்கு நேர் மாறாக சினிமாவில் கூறப்பட்டுள்ள தீய விஷயங்கள் விரைவாக மக்களை சென்றடையும். அதற்கான ஆயுளும் அதிகம்.
எனவே நல்ல கருத்து எனும் பெயரில் சினிமாவை வரவேற்கத் துவங்கினால் மக்களை சினிமா மோகத்திலிருந்து விடுவிக்க உதவாது.