ஷவர்மாவிற்கு தமிழக அரசு தடை விதிக்கப்போகிறதா?

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து அங்கு ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சேலம் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஷவர்மா உணவை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அப்போது பத்திரிகையாளர் குறுக்கிட்டு கேரளாவை போல தமிழகத்திலும் தடை வருமா என்று கேள்வியெழுப்பிய போது அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி இல்லாத கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம் என்று பதிலளித்துள்ளார் அமைச்சர் மா.சு.
மக்கள் உண்ணும் உணவுகளின் தரத்தையும் தூய்மையையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதற்காக அரசு அவ்வப்போது ஆய்வுகள் நடத்துவதையும் விதிமுறைகள் வகுப்பதையும் குறை கூற முடியாது.
ஆனால் எங்கோ நடக்குற ஓரிரு நிகழ்வுகளுக்காக ஒட்டு மொத்த உணவையும் தடை செய்யப் போகிறோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
பரோட்டா சாப்பிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் என்று செய்திகள் படித்துள்ளோம். அதனால் பரோட்டாவிற்கு தமிழக அரசு தடை விதிக்கப் போகிறதா?
பள்ளிக்கூட சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் என்று அவ்வப்போது நடைபெற்றுள்ளது. அதனால் சத்துணவு திட்டத்தை அடியோடு இழுத்து மூட வேண்டுமா?
குளிர்பானங்கள் அருந்தி மயக்கமுற்ற நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்துள்ளன. இப்போது தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? குளிர்பானங்களுக்கும் தடை தான் தீர்வா?
மக்கள் பயன்படுத்தும் சாதாரண உணவுகள் கெட்டுப் போய் விட்டதாலோ, காலாவதியாகி விட்டதோலோ சில நேரங்களில் புட் பாய்ஸன் ஆகி வாந்தி மயக்கம் ஏற்படலாம். சில நேரங்களில் அது மரணம் வரைக்கும் கூட இட்டுச் செல்லலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அறிவுறுத்தல், அபராதம் விதித்தல், வியாபாரிகளின் அலட்சியத்திற்கு தக்க சீல் வைப்பது இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம்.
இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டு விட்டு ஒரு சில நிகழ்வுகள் நடப்பதால் மட்டுமே அந்த உணவுக்கு தடை விதிக்க முற்படுவது ஒரு போதும் ஏற்புடையது அல்ல.
பீடி, சிகெரட் போன்றவற்றால் கேன்சர் போன்ற பெரும் உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன.
சினிமாவின் தாக்கத்தால் கற்பழிப்பு, கொலை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன.
எண்ணற்ற குடும்பங்களின் சீரழிவிற்கு மது அரக்கனாக திகழ்கிறது.
மக்கள் நலனில் அக்கறை இருப்பதாக நிலைநிறுத்திக் கொள்ள அரசு நினைத்தால் மக்களுக்கு உண்மையிலேயே கெடுதியை ஏற்படுத்தும் இதுபோன்றவற்றை தடை செய்ய முன்வர வேண்டும்.
அதை விடுத்து சாதாரண உணவுகளுக்கு தடை விதிக்க முற்படுவது சாமானிய வியாபாரிகளை நசுக்கும் செயலாகவே மக்கள் பார்ப்பார்கள்.