இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடித்து அதன் அடிப்படையில் மனித நேய பணிகளினால் தமிழகத்தில் அறியப்பட்ட அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
இரத்த தான சேவையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக முதலிடம் வகித்து வருகிறோம்.
சுனாமி, வெள்ள நிவாரணம், புயல் போன்ற பேரிடர் நேரங்களில் முதலில் களத்தில் இறங்கி உதவி செய்யக்கூடியவர்களாக இருந்து வருகிறோம்.
கொரோனா நேரத்தில் சடலங்களை நெருங்க மக்கள் பயந்த நேரத்தில் மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து மக்கள் பணியாற்றினோம். ஆம்புலன்ஸ் மூலம் ஆக்ஸிஜன் உதவிகளை வழங்கினோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வருகிறது. அனைத்து அரசியல் தலைவர்களும் அறிந்த இஸ்லாமிய பேரியக்கம்.
சமுதாயம் சார்ந்த பல போராட்டங்களை தமிழகத்தில் நடத்தி இருக்கிறோம். கட்டு கோப்பான அமைப்பு என்று காவல் துறை பாராட்டக்கூடிய அளவிற்கு எங்கள் போராட்டங்கள் அமைதியாக நடைபெறும்.
இதுவரை நடந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது என்ற எந்த வரலாறும் இல்லை.
உணர்ச்சி வசப்படும் எத்தனையோ போராட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் தலைமையேற்று நடத்தியுள்ளது. மக்களை கட்டு கோப்பாக கொண்டு செல்லும் மாபெரும் கட்டுபாடு மிக்க இயக்கம்.
சிஏஏ என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக, முஹம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்திய கயவர்களுக்கு எதிராக, முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்த பாசிச அரசிற்கு எதிராக,
பாபர் மசூதி இடத்தை பறித்து கொடுக்கபட்ட அநியாய தீர்ப்பிற்கு எதிராக என்று பல நூறு போராட்டங்களை அமைதி வழியில் நடத்தி இருக்கிறோம்.
மக்களுக்கு இடையூறு என்பதால் சாலை மறியல் போராட்டங்களை கூட நடத்த கூடாது என்ற நிலைபாட்டில் இருக்கிறோம்.
கர்நாடக உயர்நீதி மன்றம் ஹிஜாப் குறித்து அரசியல் சாசனத்திற்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கியது. இஸ்லாம் முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் அணிய கட்டாயபடுத்த வில்லை என்றும் அதில் குறிப்பிடபட்டிருந்தது.
இது குறித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு சிலர் வன்முறை பேச்சுகளை பேசியதாக குற்றம் சுமத்தபட்டு காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது வன்முறையை ஏவி விடும் அமைப்பு என்ற முறையில் திட்டமிட்ட செய்திகள் பரப்பபடுகிறது.
கொரோனா ஜிகாத் என்று கடந்த காலங்களில் தப்லீக் ஜமாஅத் மீது இப்படி ஒரு வதந்தி கிளப்பி அது அனைத்து சமூக மக்களின் உள்ளங்களில் நஞ்சாக விதைக்க முற்பட்டனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தை தீவிர வாதிகளாக சித்தரித்து மக்களிடம் வெறுப்பு அரசியல் நடைபெறுகிறது. சங்பரிவாரங்களின் இந்த விஷமப் பிரச்சாரத்தை, மனித நேய பணிகள் மூலமும் ஜனநாயக வழிகளிலும் தவ்ஹீத் ஜமாஅத் எதிர்கொள்ளும்.