அத்தியாயம் : 34
வசனங்களின் எண்ணிக்கை: 54
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவை. மறுமையிலும் அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்.
2. பூமிக்குள் நுழைபவை, அதிலிருந்து வெளிப்படுபவை, வானிலிருந்து இறங்குபவை, அதன்மீது ஏறிச் செல்பவை ஆகியவைகளை அவன் அறிவான். அவன் நிகரிலா அன்பாளன்; மன்னிப்புமிக்கவன்.
3. “உலகம் அழியும் நேரம் நம்மிடம் வராது” என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறல்ல! மறைவானவற்றை அறியக்கூடிய என் இறைவன்மீது சத்தியமாக! அது உங்களிடம் வந்தே தீரும். வானங்களிலோ, பூமியிலோ உள்ளவற்றில் அணுவளவாயினும் அவனை விட்டும் மறையாது. அதைவிடச் சிறிதோ, பெரிதோ தெளிவான பதிவேட்டில் உள்ளது.
4. நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கு அவன் கூலி கொடுக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். அவர்களுக்கே மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
5. யார் நமது வசனங்களைத் தோற்கடிக்க முயல்கிறார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை, தண்டனையாக உண்டு.
6. உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டவை உண்மை என்பதையும், அது புகழுக்குரிய மிகைத்தவனின் பாதைக்கு வழிகாட்டுகிறது என்பதையும் கல்வியறிவு வழங்கப்பட்டோர் அறிகிறார்கள்.
7. “நீங்கள் முழுமையாகச் சிதைக்கப்பட்டாலும் புதிய படைப்பாக ஆவீர்கள்’ என்று உங்களுக்கு எடுத்துக் கூறும் ஒரு மனிதரை நாங்கள் அறிவிக்கட்டுமா?” என்று இறைமறுப்பாளர்கள் கேட்கின்றனர்.
8. “அல்லாஹ்வின்மீது அவர் பொய்யைப் புனைந்து கூறுகிறாரா? அல்லது அவருக்குப் பைத்தியமா?” (என்றும் கேட்கின்றனர்.)அவ்வாறல்ல! மறுமையை நம்பாதோர் வேதனையிலும், தூரமான வழிகேட்டிலும் உள்ளனர்.
9. அவர்கள் வானத்திலும், பூமியிலும் தமக்கு முன்னுள்ளவற்றையும், பின்னுள்ளவற்றையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களைப் பூமிக்குள் புதைத்திருப்போம் அல்லது வானத்தைத் துண்டு துண்டாக்கி அவர்கள்மீது விழச் செய்திருப்போம். (நம்மை நோக்கி) மீளும் ஒவ்வொரு அடியாருக்கும் இதில் சான்றுள்ளது.
10. தாவூதுக்கு நமது அருளைக் கொடுத்தோம். “மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் (இறைவனைப்) போற்றுங்கள்!” (என்றோம்.) அவருக்காக இரும்பை மிருதுவாக்கினோம்.
11. “பாதுகாப்புக் கவசங்களைத் தயாரிப்பீராக! (அதன்) வளையங்களைச் சரியான அளவில் அமைப்பீராக! நீங்கள் நற்செயல் செய்யுங்கள்! நீங்கள் செய்பவற்றை நான் பார்ப்பவன்” (என்று இறைவன் கூறினான்.)
12. சுலைமானுக்குக் காற்றினை (வசப்படுத்தினோம்.) அதன் காலைப் பயணம் ஒரு மாத காலமும், மாலைப் பயணம் ஒரு மாத காலமும் ஆகும். அவருக்காகச் செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தன் இறைவனின் அனுமதியுடன் அவருக்கு முன்னால் வேலை செய்யும் ஜின்களையும் (வசப்படுத்தினோம்.) அவர்களில் யார் நமது ஆணையிலிருந்து விலகிச் செல்கிறாரோ அவருக்குக் கொழுந்து விட்டெரியும் நரக வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
13. கோட்டைகள், சிற்பங்கள், தடாகங்களைப் போன்ற பெரிய கொப்பரைகள், அசைக்க முடியாத பாத்திரங்கள் ஆகியவற்றில் அவர் விரும்பியவற்றை (அந்த ஜின்கள்) அவருக்காகச் செய்து கொடுத்தன. “தாவூதின் குடும்பத்தாரே! நன்றி செலுத்துங்கள்! என் அடியார்களில் குறைவானவர்களே நன்றி செலுத்தக் கூடியவர்கள்” (என்று கூறினோம்.)
14. அவருக்கு மரணத்தை நாம் விதித்தபோது, அவரது மரணத்தைப் பற்றி அவருடைய கைத்தடியை அரித்துக் கொண்டிருந்த கரையானைத் தவிர வேறெதுவும் (ஜின்களாகிய) அவர்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழுந்தபோது, தாங்கள் மறைவானதை அறிவோராக இருந்தால் இழிவான வேதனையில் நீடித்திருக்க வேண்டியதில்லை என்பதை ஜின்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டன.
15. ஸபா வாசிகளுக்கு அவர்களின் வசிப்பிடத்தில் சான்று இருந்தது. (அதன்) வலப் புறத்திலும், இடப் புறத்திலும் இரண்டு தோட்டங்கள் இருந்தன. “உங்கள் இறைவன் வழங்கியதிலிருந்து உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! தூய்மையான ஊர். மன்னிக்கும் இறைவன்” (என்று கூறப்பட்டது.)
16. ஆனால் அவர்கள் புறக்கணித்தனர். எனவே அவர்களுக்கு எதிராகப் பெரு வெள்ளத்தை அனுப்பினோம். அவர்களின் இரு தோட்டங்களைக் கசப்பும் புளிப்புமுள்ள பழ மரங்களும், சில இலந்தை மரங்களும் கொண்ட (வேறு) இரு தோட்டங்களாக மாற்றி விட்டோம்.
17. அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு நாம் வழங்கிய கூலியே இது! இறைமறுப்பாளர்களை தவிர வேறு எவரையும் நாம் தண்டிப்போமா?
18. அவர்களுக்கும், நாம் அருள்வளம் செய்த ஊர்களுக்குமிடையே வெளிப்படையாக அமைந்த பல ஊர்களை ஏற்படுத்தினோம். அவற்றில் (குறைந்த தொலைவில்) பயணத்தை நிர்ணயித்து, “இரவிலும், பகலிலும் பயமற்றவர்களாகப் பயணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்.)
19. “எங்கள் இறைவனே! எங்கள் பயணங்களுக்கிடையே தூரத்தை ஏற்படுத்துவாயாக!” என்று கூறி, தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டனர். எனவே அவர்களை (வெறும்) செய்திகளாக ஆக்கினோம். அவர்களை முழுமையாகச் சிதறடித்தோம். நன்றி செலுத்தும் பொறுமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இதில் சான்றுகள் உள்ளன.419
20. அவர்களைப் பற்றிய தனது எண்ணத்தை இப்லீஸ் உண்மையாக்கிக் கொண்டான். ஒரு இறைநம்பிக்கையாளர்களின் கூட்டத்தைத் தவிர மற்றவர்கள் அவனையே பின்பற்றினார்கள்.
21. அவர்கள்மீது இப்லீஸுக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை. ஆயினும் அவர்களில் மறுமையைப் பற்றிச் சந்தேகம் கொண்டோரிலிருந்து, அதை நம்புவோரை நாம் வெளிப்படுத்திக் காட்டுவதற்காகவே (இவ்வாறு செய்தோம்.) ஒவ்வொரு பொருளையும் உமது இறைவன் கண்காணிப்பவன்.
22. “அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை நம்புகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! வானங்களிலும் பூமியிலும் அணுவளவு கூட அவர்கள் அதிகாரம் பெறமாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு உதவியாளர் யாருமில்லை” என்று (நபியே!) கூறுவீராக!
23. அவன் யாருக்கு அனுமதித்தானோ அவருக்கே தவிர (மற்றவருக்கு) அவனிடம் பரிந்துரை பயனளிக்காது. முடிவாக அவர்களின் மனநடுக்கம் நீக்கப்பட்டதும், “உங்கள் இறைவன் என்ன கூறினான்?” என்று கேட்பார்கள். “உண்மையைத் தான் (கூறினான்.) அவன் உயர்ந்தவன்; மிகப் பெரியவன்” என்று (மற்றவர்கள்) கூறுவர்.420
24. “உங்களுக்கு வானங்களிலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்?” என்று கேட்பீராக! “அல்லாஹ்வே!” என்று கூறுவீராக! “நாங்களோ அல்லது நீங்களோ (இரு தரப்பில் ஒருசாரார்) நேர்வழியில் அல்லது பகிரங்க வழிகேட்டில் இருக்கிறோம்” (என்றும் கூறுவீராக!)
25. “நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி உங்களிடம் விசாரிக்கப்பட மாட்டாது. நீங்கள் செய்பவற்றைப் பற்றி எங்களிடம் விசாரிக்கப்பட மாட்டாது” என்றும் கூறுவீராக!
26. “நமது இறைவன் நம்மை ஒன்று சேர்ப்பான். பின்னர் நமக்கிடையில் நியாயத் தீர்ப்பளிப்பான். அவன் மிகச் சிறந்த நீதிபதி; நன்கறிந்தவன்” என்றும் கூறுவீராக!
27. “நீங்கள் அவனுடன் கூட்டாக்கிய இணைக் கடவுள்களை என்னிடம் காட்டுங்கள்! அவ்வாறு (காட்ட) முடியாது. மாறாக, அவனே அல்லாஹ்! மிகைத்தவன், நுண்ணறிவாளன்” என்றும் கூறுவீராக!
28. (நபியே!) உம்மை மக்கள் அனைவருக்கும் நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்வதில்லை.421
29. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்போது (நிகழும்)?” என அவர்கள் கேட்கின்றனர்.
30. “உங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் இருக்கிறது. அதிலிருந்து சற்று நேரம் கூடப் பிந்தவும் மாட்டீர்கள்; முந்தவும் மாட்டீர்கள்” என்று கூறுவீராக!
31. “நாங்கள் இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளவற்றையும் நம்பவே மாட்டோம்” என்று இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர். இந்த அநியாயக்காரர்கள் தமது இறைவன் முன் நிறுத்தப்படும்போது நீர் காண்பீராயின், அவர்கள் ஒருவருக்கொருவர் பழித்துக் கொண்டிருப்பார்கள். (அப்போது) பலவீனர்கள் கர்வம் கொண்டோரிடம், “நீங்கள் இல்லையேல் நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாக ஆகியிருப்போம்” என்று கூறுவார்கள்.
32. “உங்களிடம் நேர்வழி வந்த பிறகு அதைவிட்டும் நாங்களா உங்களை தடுத்தோம்? அவ்வாறல்ல! நீங்கள்தான் குற்றவாளிகளாக இருந்தீர்கள்” என்று கர்வம் கொண்டவர்கள் பலவீனர்களிடம் கூறுவார்கள்.
33. அதற்குப் பலவீனர்கள், கர்வம் கொண்டோரிடம் “அவ்வாறல்ல! நாங்கள் அல்லாஹ்வை மறுப்பதற்கும் அவனுக்கு இணைக் கடவுள்களை ஏற்படுத்துவதற்கும் நீங்கள் எங்களை ஏவியபோது, இரவிலும், பகலிலும் செய்த சூழ்ச்சிதான் (இந்நிலைக்குக் காரணம்)” என்று கூறுவார்கள். அவர்கள் வேதனையைக் காணும்போது கவலையை மறைத்துக் கொள்வார்கள். இறைமறுப்பாளர்களின் கழுத்துகளில் விலங்குகளை ஏற்படுத்துவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா?
34. நாம் எந்த ஊருக்கு எச்சரிக்கையாளரை அனுப்பினாலும் அதிலுள்ள சுகவாசிகள், “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் மறுக்கக் கூடியவர்கள்!” என்று கூறினர்.
35. “எங்களுக்கு அதிக செல்வங்களும், பிள்ளைகளும் உள்ளன. நாங்கள் வேதனை செய்யப்படுவோர் அல்ல!” என்றும் அவர்கள் கூறினர்.
36. “என் இறைவன், தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். (நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று கூறுவீராக!
37. உங்கள் செல்வங்களோ, பிள்ளைகளோ உங்களை நம்மிடம் நெருக்கி வைப்பவையாக இல்லை. மாறாக, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்வோருக்கே அவர்கள் செய்தவற்றுக்கு இரு மடங்கு கூலி உண்டு. அவர்கள் மாளிகைகளில் நிம்மதியாக இருப்பார்கள்.
38. யார் நமது வசனங்களைத் தோற்கடிக்க முயல்கிறார்களோ அவர்கள் வேதனையின் முன் கொண்டு வரப்படுவார்கள்.
39. “என் இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை வாரி வழங்குகிறான். (தான் நாடியோருக்கு) அளவுடனும் கொடுக்கிறான். நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதற்கு ஈடானதை வழங்குவான். அவனே வழங்குவோரில் சிறந்தவன்” என்று கூறுவீராக!422
40. அந்நாளில் அவர்கள் அனைவரையும் அவன் ஒன்றுசேர்ப்பான். பின்னர், “இவர்கள் உங்களைத்தான் வணங்கிக் கொண்டிருந்தார்களா?” என்று வானவர்களிடம் கேட்பான்.
41. “(இறைவா!) நீ தூயவன். இவர்களன்றி நீயே எங்கள் பாதுகாவலன். எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களையே இவர்களில் பெரும்பாலோர் நம்பிக் கொண்டிருந்தனர்” என்று (வானவர்கள்) கூறுவர்.
42. “இந்நாளில் உங்களில் ஒருவர், மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்துகொள்ள சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் எதைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அந்த நரக வேதனையைச் சுவையுங்கள்!” என அநியாயக்காரர்களிடம் நாம் கூறுவோம்.
43. அவர்களுக்கு நமது வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால், “இவர் உங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுக்க விரும்பும் ஒரு மனிதரைத் தவிர வேறில்லை” என அவர்கள் கூறுகின்றனர். “இது புனைந்து கூறப்பட்ட பொய்தான்” என்றும் கூறுகின்றனர். அவர்களிடம் உண்மை வந்தபோது அதுகுறித்து இந்த இறைமறுப்பாளர்கள், ‘இது அப்பட்டமான சூனியத்தைத் தவிர வேறில்லை”என்றும் கூறுகின்றனர்.
44. அவர்கள் படித்தறியக்கூடிய வேதங்கள் எதையும் நாம் (இதற்கு முன்) அவர்களுக்கு வழங்கவில்லை. (நபியே!) உமக்கு முன்னர் அவர்களிடம் எந்த எச்சரிக்கையாளரையும் நாம் அனுப்பவுமில்லை.
45. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் பொய்யெனக் கூறினர். அவர்களுக்கு நாம் வழங்கியவற்றில் பத்தில் ஒரு பாகத்தைக் கூட இவர்கள் அடையவில்லை. எனினும் அவர்கள் எனது தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினர். எனவே எனது தண்டனை எப்படி இருந்தது?
46. “நீங்கள் அல்லாஹ்வுக்காக இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ முன்வந்து, பின்னர் நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தையே உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்” என (நபியே!) கூறுவீராக! (அவ்வாறு சிந்தித்தால்) உங்கள் தோழருக்கு எந்தப் பைத்தியமுமில்லை. அவர், கடும் வேதனைக்கு முன்பாக உங்களை எச்சரிப்பவர் தவிர வேறில்லை (என்பதை உணர்ந்து கொள்வீர்கள்).423
47. “நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. அது உங்களுக்கே உரியது. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. அவன் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்” என்று (நபியே!) கூறுவீராக!
48. “எனது இறைவன் சத்தியத்தைப் (பொய்யின்மீது) போடுகிறான். (அவன்) மறைவானவற்றை நன்கறிந்தவன்” என்று கூறுவீராக!
49. “சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் (எதையும்) உருவாக்காது; (அழிந்ததை) மீண்டும் கொண்டு வராது” என்று கூறுவீராக!424
50. “நான் வழிகெட்டு விட்டால், எனக்கு எதிராகத் தான் வழிகேட்டில் செல்கிறேன். நான் நேர்வழி நடந்தால், (அது) என் இறைவன் எனக்கு அறிவித்த இறைச்செய்தியின் காரணமாகத் தான். அவன் செவியுறுபவன்; அருகிலிருப்பவன்” என்று (நபியே!) கூறுவீராக!425
51. (மறுமையில்) அவர்கள் நடுங்கிக் கொண்டிருக்கும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின், (அவர்கள்) தப்பியோட வழியிருக்காது. அவர்கள் அருகிலிருந்தே பிடிக்கப்படுவார்கள்.
52. “நாங்கள் இதை நம்பிவிட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து அவர்களால் எவ்வாறு (இறைநம்பிக்கையை) அடைந்து கொள்ள முடியும்?
53. அவர்கள் இதற்கு முன்னர் இதை மறுத்து விட்டனர். தூரமான இடத்திலிருந்து மறைவானவை பற்றி (ஊகங்களை) வீசினர்.
54. இதற்கு முன்பு இவர்களைப் போன்றோர்க்குச் செய்யப்பட்டது போன்றே இவர்களுக்கும், இவர்கள் விரும்புவதற்குமிடையில் தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது. (ஏனெனில்) இவர்கள் பெரும் சந்தேகத்திலேயே இருந்தனர்.