அத்தியாயம் : 38
வசனங்களின் எண்ணிக்கை: 88
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. ஸாத். அறிவுரையைக் கொண்ட இந்தக் குர்ஆன்மீது சத்தியமாக! (இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.)
2. எனினும் இறைமறுப்பாளர்கள் ஆணவத்திலும், பகைமையிலும் உள்ளனர்.
3. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அப்போது அவர்கள் அபயக் குரல் எழுப்பினார்கள். ஆனால், அது தப்புவதற்குரிய நேரமாக இருக்கவில்லை.
4, 5, தங்களிடமிருந்தே ஓர் எச்சரிக்கையாளர் தங்களிடம் வந்திருப்பதைப் பற்றி ஆச்சரியப்பட்டனர். “இவர் பெரும் பொய்யரான சூனியக்காரரே! பல கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது ஆச்சரியமான விஷயமே!” என்று இறைமறுப்பாளர்கள் கூறினர்.
6. “நீங்கள் செல்லுங்கள்! உங்கள் கடவுள்கள்மீது உறுதியாக இருங்கள்! இதில் ஏதோ (சுயநலம்) நாடப்படுகின்றது” என்று அவர்களில் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.
7, 8. “(இதற்குமுன்) இறுதியாக வந்த மார்க்கத்திலும் இதுபற்றி நாம் கேள்விப்பட்டதில்லை. இது இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர வேறில்லை. நம்மிடையே இவருக்குத்தான் இந்த அருளுரை அருளப்பட்டுள்ளதா?” (என்றும் கூறினர்.) அவ்வாறல்ல! எனது அருளுரை பற்றி அவர்கள் ஐயத்திலேயே உள்ளனர். ஆனால் அவர்கள் எனது தண்டனையை இன்னும் சுவைக்கவில்லை.
9. மிகைத்தவனும், கொடை வள்ளலுமாகிய உமது இறைவனின் அருட்கொடையின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா?
10. அல்லது வானங்கள், பூமி, அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றின் ஆட்சி அவர்களுக்குரியதா? அவ்வாறாயின் (வானில்) ஏறும் வழிகளில் அவர்கள் ஏறிச் செல்லட்டும்!
11. இங்கிருக்கும் இந்தச் சிறு படை, தோற்கடிக்கப்படும் படைகளில் உள்ளதாகும்.
12, 13. இவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், படைபலமிக்க ஃபிர்அவ்ன், ஸமூது சமுதாயம், லூத்தின் சமுதாயம், தோப்புவாசிகள் ஆகியோர் (நமது வசனங்களைப்) பொய்யெனக் கூறினர். இவர்களே (தோல்வியுற்ற) அந்தப் படையினர்.
14. (இவர்கள்) அனைவரும் தூதர்களைப் பொய்யரெனக் கூறினர். எனவே எனது தண்டனை உறுதியாகி விட்டது.
15. ஒரேயொரு பெரும் சப்தத்தையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்குச் சிறு அவகாசமும் இருக்காது.
16. “எங்கள் இறைவனே! விசாரணை நாளுக்கு முன்பாகவே எங்களின் பாகத்தை எங்களுக்கு விரைவாகத் தருவாயாக!” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
17. (நபியே!) அவர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக! வலிமைமிக்க நமது அடியாராகிய தாவூதை நினைவு கூர்வீராக! அவர் (நம்மை நோக்கியே) அதிகமாக மீண்டுவரக்கூடியவராக இருந்தார்.
18. மலைகளை (அவருக்கு) வசப்படுத்தினோம். அவை அவருடன் காலையிலும், மாலையிலும் (இறைவனைப்) போற்றிக் கொண்டிருந்தன.
19. ஒன்றுதிரட்டப்பட்ட நிலையில் பறவைகளையும் (அவருக்கு வசப்படுத்தினோம்.) அனைத்தும் அவனிடமே மீண்டுவரக் கூடியவையாக இருந்தன.
20. அவரது ஆட்சியை நாம் வலுப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும், தெளிவாகப் பேசும் ஆற்றலையும் வழங்கினோம்.
21, 22. (நபியே!) அந்த வழக்காளிகளின் செய்தி உம்மிடம் வந்ததா? அவர்கள் சுவரைத் தாண்டி தொழுமிடத்திற்குள் தாவூதை நெருங்கியபோது, அவர்களைப் பற்றி அவர் திடுக்கிட்டார். “அஞ்சாதீர்! (நாங்கள்) இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்துள்ளார். எனவே எங்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர்! எங்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவீராக!” என்று கூறினர்.
23. “இவர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்று ஒன்பது பெட்டை ஆடுகள் இருக்கின்றன. என்னிடம் ஒரேயொரு பெட்டை ஆடுதான் இருக்கிறது. ‘அதையும் என்னிடம் கொடுத்துவிடு’ என்று இவர் கூறுகிறார். இவர் வாதத்தில் என்னை வென்று விட்டார்” (என்று அவர்களில் ஒருவர் கூறினார்)
24. “தனது ஆடுகளுடன் சேர்த்து உனது ஆட்டையும் கேட்டதன் மூலம் அவர் உனக்கு அநியாயம் செய்துவிட்டார். கூட்டாளிகளில் பெரும்பாலோர், ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்கின்றனர். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோரைத் தவிர. அவர்கள் மிகவும் குறைவானர்களே!” என்று (தாவூத்) கூறினார். நாம் அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் உணர்ந்து கொண்டார். எனவே, தமது இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோரி, பணிந்து விழுந்தார். அவர் (அவனை நோக்கி) மீண்டார்.436
25. எனவே, அ(ப்பாவத்)தை அவருக்கு மன்னித்தோம். நம்மிடம் அவருக்கு நெருக்கமும், சிறந்த தங்குமிடமும் உண்டு.
26. தாவூதே! பூமியில் உம்மை ஓர் ஆட்சியாளராக ஆக்கியுள்ளோம். எனவே மக்களுக்கிடையே நீதியாகத் தீர்ப்பளிப்பீராக! சுயவிருப்பத்தைப் பின்பற்றாதீர். அப்படிச் செய்தால், அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்துவிடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறிச் செல்வோர், விசாரணை நாளை மறந்ததால் அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
27. வானம், பூமி, அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவற்றை நாம் வீணாகப் படைக்கவில்லை. இது (வீண் என்பது) இறைமறுப்பாளர்களின் எண்ணமாகும். இறைமறுப்பாளர்களுக்கு நரகத்தின் கேடுதான் உள்ளது.
28. இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோரை, பூமியில் குழப்பம் விளைவிப்போரைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? இறை அச்சமுடையோரைக் குற்றவாளிகளைப் போல் ஆக்கி விடுவோமோ?
29. (இது) பாக்கியம் நிறைந்த வேதமாகும். அவர்கள் இதன் வசனங்களைச் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் இதை உமக்கு அருளியுள்ளோம்.
30. தாவூதுக்குச் சுலைமானைப் பரிசாக அளித்தோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மை நோக்கியே) அதிகமாக மீண்டுவரக்கூடியவர்.
31, 32. ஒரு மாலை நேரத்தில் அவரிடம், பாய்ந்து செல்லும் உயர்ரகக் குதிரைகள் கொண்டு வரப்பட்டபோது, “இவை திரைக்குள் மறையும் வரையிலும் என் இறைவனை நினைவுகூர்வதைத் தவிர்த்து, இச்செல்வத்தை மிகவும் நேசித்து விட்டேனே” என்று கூறினார்.
33. “என்னிடம் அவற்றை மீண்டும் கொண்டு வாருங்கள்!” என்று (கூறி அவற்றின்) கால்களையும், கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.
34. நாம் சுலைமானைச் சோதித்தோம். (அவரை நோயுற்ற) உடலாக அவரது இருக்கையில் போட்டோம். பின்னர் (நம் பக்கம்) திரும்பினார்.
35. “என் இறைவனே! என்னை மன்னிப்பாயாக! எனக்குப் பின் எவருக்குமே கிடைக்காத ஆட்சியை எனக்கு அளிப்பாயாக! நீயே கொடை வள்ளல்” என்று இறைஞ்சினார்.437
36. அவருக்குக் காற்றை, அவரது ஆணைப்படி அவர் விரும்பிய பகுதியில் இதமாக வீசுமாறு வசப்படுத்திக் கொடுத்தோம்.
37, 38. ஷைத்தான்களிலிருந்து கட்டடம் கட்டுவோர், முத்துக் குளிப்போர் அனைவரையும், சங்கிலிகளால் விலங்கிடப்பட்ட மற்றும் சிலரையும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.)
39. “இது நாம் கணக்கின்றி வழங்கிய அருட்கொடையாகும். (இதைப் பிறருக்கு) நீர் கொடுப்பீராக! அல்லது உம்மிடமே வைத்துக் கொள்வீராக!” (என்று கூறினோம்.)
40. நம்மிடம் அவருக்கு நெருக்கமும், சிறந்த தங்குமிடமும் உண்டு.
41, 42. நமது அடியார் அய்யூபையும் நினைத்துப் பார்ப்பீராக! “ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி விட்டான்” என்று அவர் தமது இறைவனிடம் இறைஞ்சியபோது “உமது காலால் (பூமியில்) அடிப்பீராக! குளிர்ச்சிமிக்க குளியலிடமும் குடிநீரும் இதோ இருக்கிறது” (என்று கூறினோம்.)
43. அவருக்கு நமது அருளாகவும், அறிவுடையோருக்குப் படிப்பினையாகவும், அவரது குடும்பத்தையும், அவர்களுடன் சேர்த்து அவர்களைப் போன்றோரையும் பரிசாக அளித்தோம்.
44. “ஒருபிடி புல்லை உமது கையில் எடுத்து, அதைக் கொண்டு அடிப்பீராக! சத்தியத்தை முறித்து விடாதீர்!” (என்று கூறினோம்.) அவரைப் பொறுமைமிக்கவராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார்; (நம்மை நோக்கி) மீண்டு வரக்கூடியவர்.
45. செயல்திறனும், அறிவாற்றலுமிக்க நமது அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரை நினைத்துப் பார்ப்பீராக!
46. மறுமையை நினைவூட்டுதல் என்ற தனித்தன்மைக்காக அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
47. நம்மிடம் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட நல்லோரில் உள்ளவர்கள்.
48. இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்லு ஆகியோரையும் நினைத்துப் பார்ப்பீராக! அனைவரும் நல்லோரில் உள்ளவர்கள்.
49, 50. இது அருளுரையாகும். இறையச்சமுடையோருக்கு நிலையான சொர்க்கங்கள் எனும் அழகிய தங்குமிடம் உண்டு. அவர்களுக்காக (அதன்) வாயில்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.438
51. அங்கு (கட்டில்களில்) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அங்கு ஏராளமான பழங்களையும் பானத்தையும் வரவழைப்பார்கள்.
52. அவர்களுடன் பார்வை தாழ்த்திய, சம வயதுடைய இளமங்கையர் இருப்பார்கள்.
53. இது, விசாரணை நாளில் உங்களுக்கு(த் தருவதாக) வாக்களிக்கப்பட்டதாகும்.
54. இதுவே நமது அருட்கொடையாகும். இதற்கு அழிவே இல்லை.
55, 56. இது (நல்லோருக்கான கூலி). வரம்பு மீறியோருக்கு நரகம் எனும் கெட்ட தங்குமிடம் உள்ளது. அதில் அவர்கள் நுழைவார்கள். அது தங்குமிடத்தில் மிகக் கெட்டது.
57. இது கொதி நீரும், சீழுமாகும். இதை அவர்கள் சுவைக்கட்டும்!
58. இதே வடிவில் வேறு பலவகை (வேதனை)களும் உண்டு.
59. “இவர்கள் உங்களுடன் நுழையும் கூட்டத்தினர். இவர்களுக்கு எந்த வரவேற்பும் இல்லை. இவர்கள் நரகத்தில் எரிந்துபோகக் கூடியவர்களே!” (என நரகத்திலுள்ள தலைவர்கள் கூறுவார்கள்.)
60. “அவ்வாறல்ல! உங்களுக்கும்தான் எந்த வரவேற்பும் இல்லை. இதற்கு எங்களை வரச் செய்தது நீங்கள்தான். இது மோசமான தங்குமிடம்” என்று (பின்பற்றியோர்) கூறுவார்கள்.
61. “எங்கள் இறைவனே! எங்களை யார் இங்கு வரச் செய்தார்களோ அவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையை அதிகமாக்குவாயாக!” என்றும் கூறுவார்கள்.
62. “நமக்கு என்ன நேர்ந்தது? (உலகில்) தீயவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்த மனிதர்களை (நரகத்தில்) காணவில்லையே!” என்று கேட்பார்கள்.
63. “அவர்களை நாம்தான் கேலியாகக் கருதிக் கொண்டிருந்தோமோ? அல்லது அவர்களிடமிருந்து நமது பார்வைகள் திரும்பி விட்டனவா?” (என்றும் கேட்பார்கள்.)
64. இது உண்மைதான். (இது) நரகவாசிகளின் தர்க்கமாகும்.
65, 66. “நான் எச்சரிப்பவன்தான்! அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. (அவன்) வானங்கள், பூமி, அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன். (அவன்) மிகைத்தவன்; மன்னிப்புமிக்கவன்” என்று (நபியே!) கூறுவீராக!
67, 68, 69, 70. “இது மாபெரும் செய்தியாகும். நீங்களோ இதைப் புறக்கணிக்கிறீர்கள். உயர்ந்த (வானவர்) கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டபோது அவர்களைப் பற்றிய அறிவு எனக்கு இருக்கவில்லை. ‘நான் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்தான்’ என்றே எனக்கு அறிவிக்கப்படுகிறது” என்றும் (நபியே!) கூறுவீராக.
71, 72. உமது இறைவன், வானவர்களிடம் “நான் களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன். நான் அவரை முழுமைப்படுத்தி, என் உயிரை அவரில் ஊதியதும் நீங்கள் அவருக்குப் பணிந்து கட்டுப்படுங்கள்!” என்று கூறியதை நினைத்துப் பார்ப்பீராக!
73, 74. வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸைத் தவிர! அவன் கர்வம் கொண்டு, இறைமறுப்பாளர்களில் ஆகிவிட்டான்.
75. “இப்லீஸே! எனது இரு கரங்களால் நான் படைத்த ஒருவருக்கு பணியாமலிருக்குமாறு உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தோரில் ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.
76. “நான் அவரைவிட மேலானவன். என்னை நெருப்பால் படைத்தாய். அவரையோ களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
77, 78. “நீ இங்கிருந்து வெளியேறிவிடு! ஏனெனில் நீ விரட்டப்பட்டவன். உன்மீது தீர்ப்பு நாள்வரை எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான்
79. “என் இறைவனே! அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்று (இப்லீஸ்) கேட்டான்.
80, 81. “நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கொண்ட நாள் வரும்வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்” என (இறைவன்) கூறினான்.
82. “உன் மகத்துவத்தின்மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் நான் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
83. “அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர!” (என்றும் இப்லீஸ் கூறினான்.)
84, 85. “உண்மை! நான் உண்மையே கூறுகிறேன். உன்னையும், அவர்களில் யார் உன்னைப் பின்பற்றுகிறாரோ அவர்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்” என்று (இறைவன்) கூறினான்.
86. “உங்களிடம் இதற்காக எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. நான் பாசாங்கு செய்பவர்களில் உள்ளவனும் அல்ல!” என்று (நபியே!) கூறுவீராக!
87. இது அகிலத்தாருக்கு அருளுரையே தவிர வேறில்லை.
88. சிறிது காலத்திற்குப் பிறகு இதுபற்றிய செய்தியை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.