தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதே. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகமெங்கும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கேட்டிருந்தது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்துவது ஒரு புறம் வியப்பு என்றால் இன்னொரு புறம் பேரணியை நடத்துவதற்கு அது தேர்வு செய்து கொண்ட தேதி இன்னொரு வியப்பு.
காந்தியைக் கொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவன். கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும், கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர் என்றெல்லாம் காந்தியைக் கொலை செய்த கொலையாளி கோட்சே புகழ் பாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னை தமிழக மக்களிடையே பரிசுத்தவானாக காட்டிக் கொள்ள அக்டோபர் இரண்டாம் தேதியைத் தேர்வு செய்தது.
ஆர்எஸ்எஸ்ஸின் உண்மை முகத்தை அறிந்து கொண்ட தமிழக மக்கள் அது நடத்தும் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ்-இன் பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
துவக்கத்தில் காவல்துறை அனுமதி மறுத்த போது அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்ற அனுமதியையும் ஆர்.எஸ்.எஸ். பெற்றது.
அக்டோபர் இரண்டாம் தேதி பேரணி நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அதே அக்டோபர் இரண்டாம் தேதி மத நல்லிணக்க பேரணி நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அதன் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
விசிக அமைப்பு வெளியிட்ட அறிவிப்பிற்கு தமிழக கட்சிகள் பலவும் வரவேற்று மத நல்லிணக்கப் பேரணிக்கு ஆதரவும் அளித்தன.
பி.எப்.ஐ. அமைப்பிற்கான தடை மற்றும் தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் பங்கேற்கும் மதநல்லிணக்கப் பேரணி இவற்றை ஒட்டிய அசாதாரணமான சூழலைக் காரணம் காட்டி இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று குறிப்பிட்டு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு மீண்டும் தடை விதித்தது தமிழக அரசு.
பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியும் தமிழக அரசு அனுமதி மறுத்து நீதிமன்ற அவமதிப்பு செய்து விட்டதாக ஆர்.எஸ்.எஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது.
அதை அடுத்து வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு அனுமதி அளிக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பிற்குள்ளாக நேரிடும் என்றும் தமிழக அரசை எச்சரித்து உள்ளது.
நீதிமன்றம் சொல்லிவிட்டது என்பதற்காக நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கப்படுமேயானால் அதைவிட மிகப்பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது.
தமிழக அரசு அந்தத் தவறை ஒருபோதும் செய்து விடக்கூடாது.
ஏனெனில் இந்தியா முழுவதும் பல்வேறு குண்டு வெடிப்புகள் மதக்கலவரங்கள் உள்ளிட்டவற்றை இதுபோன்ற பேரணி நடத்துவதன் வாயிலாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்துள்ளது
மக்களிடையே நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத துவேஷ முழக்கங்களைப் பேரணியின் வாயிலாக வெளிப்படுத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சிக்கிறது அதற்கு அச்சாரம் இடக்கூடிய வகையில் ஆர்எஸ்எஸ் நடத்த திட்டமிட்டுள்ள இப்பேரணிக்கு ஒருபோதும் அனுமதி வழங்கி விடக்கூடாது.
சட்டம் ஒழுங்குப் பிரச்சனை இல் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பதற்கு பல்வேறு முன்னுதாரணங்கள் உள்ளன.
விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தணிக்கைத் துறை அனுமதி வழங்கியும் தமிழக அரசு படத்தை திரையிட அனுமதி மறுத்தது தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதையே தடைக்கு காரணம் காட்டியது.
இதுபோன்ற பல்வேறு மாநிலங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தினால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று சொல்லி நடைமுறைப்படுத்தாமல் தவிர்த்து உள்ளன.
இதைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும்
பேரணியின் மூலம் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்கத் துடிக்கும் கலவர பூமியாக மாற்ற துடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முயற்சியை தமிழக அரசு தவிடு பொடியாக்க வேண்டும்.