சமீபத்தில் வெளியிடப்பட்ட Unparliamentary Word – ன் புதிய பட்டியலை எப்படி பார்க்கிறீர்கள்?

மக்களவை செயலர் வெளியிட்டுள்ள நீக்கப்பட்ட வார்த்தைகளின் பட்டியலை பார்க்கும் போது இதற்கு எம்.பிக்களை எதுவும் பேசக்கூடாது என்றே சொல்லியிருக்கலாம் என தோன்றுகிறது.
ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் என்னவெல்லாம் சொல்லி விமர்சனம் செய்வார்களோ அந்த அனைத்து வார்த்தைகளையும் மக்களவையில் பேசக் கூடாத வார்த்தைகளாக்கி விட்டார்கள்.
அவர்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் செய்து வெளியிட்டுள்ள வார்த்தைகள் சிலவற்றைப் பாருங்கள்.
பொய் வாக்குறுதி அளிப்பவர் என்று சொல்லக் கூடாதாம். பொய் வாக்குறுதிகள் அளித்து தானே பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
கருப்பு பணத்தை மீட்பேன் என்றும் அவற்றை மீட்டால் ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது?
இதெல்லாம் பொய் வாக்குறுதிகள் தானே? இதை எம்.பிக்கள் தட்டிக் கேட்க கூடாதா? இனி இது பற்றி யாரும் வாய் திறக்க கூடாது என்பதற்கு தான் இந்த வார்த்தையை நீக்கம் செய்துள்ளார்கள்.
வாய்ஜாலம் என்று சொல்லக் கூடாதாம்.
ஆண்டொன்றுக்கு 2 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொன்னது எந்த வகையிலானது?
தனக்கு 56 இன்ச் பரந்த மார்பு உண்டு என்று ஒரு புறம் கூறிவிட்டு மறுபுறம் சீனாவின் அத்துமீறலை சகித்துக் கொள்வது எந்த வகையிலானது?
இவற்றை வாய்ஜாலம் என்று விமர்சிக்காமல் இருக்க முடியுமா?
முதலைக் கண்ணீர் என்ற வார்த்தையும் அந்தப் பட்டியலில் உள்ளது.
முதலைக் கண்ணீர் என்ற சொற்றொடர் இவர்களை என்ன செய்தது?
கொரோனா பேரிடர் காலத்தில் ஆளும் பாஜகவின் மோசமான நிர்வாக முறையால் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்பட்டனர். கால்நடையாகவே பல ஆயிரம் மைல்களை கடந்து சென்றனர். அதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
லாக்டவுன் காரணத்தால் வருமானமின்றி, உண்ண உணவின்றி கடும் வேதனையை மக்கள் அனுபவித்தனர்.
விஜய் மல்லையாக்களுக்கும் நீரவ் மோடிக்களுக்கும் இன்ன பிற தனியார் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் வாரி இறைத்த பாஜக அரசுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மனமில்லை.
வெறும் கண்ணீரை மட்டுமே மோடி சிந்தினார்.
மக்களின் அடிப்படை தேவைகளை சரி செய்ய அதிகாரமிருந்தும் அவற்றை செய்யாமல் வெறும் கண்ணீரை மட்டுமே சிந்தினார் பிரதமர் மோடி. அதை முதலைக் கண்ணீர் என்று சொல்லாமல் வேறெப்படி அழைக்க முடியும்?
கொரோனா கால கசப்பான நிகழ்வுகளையும் மோடி வடித்த கண்ணீரையும் யாரும் நினைவுபடுத்தி விடக்கூடாது என்பதற்கு தான் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தைக்கு தடை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற அவையில் சொல்லக்கூடாத வார்த்தைகளின் பட்டியலில் ஒட்டுக் கேட்பும் உள்ளது.
ஒட்டுக் கேட்பு பற்றி பேசக்கூடாது என்கிறார்கள். ஏன்?
பெகாசஸ் விவகாரம் இந்தியாவில் பெரும் விவாத அலையை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.
எதிர்க்கட்சி தலைவர்கள், பல மாநில முதல்வர்கள், பிரபல பத்திரிக்கையாளர்கள் என்று பலரும் மத்திய அரசால் பெகாசஸ் செயலி மூலம் உளவுபார்க்கப் படுகிறார்கள் என்றும் அவர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் புலனாய்வு நிறுவனங்கள் செய்தி வெளியிட்டதே? இன்றும் அதற்கு உரிய தீர்வு எட்டப்படவில்லை.
இதைப்பற்றி இனி யாரும் வாய் திறந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒட்டுக் கேட்பு என்று பேசாதீர்கள் என்கிறார்கள்.
சகுனி என்று சொல்லக் கூடாதாம். தனது சொந்த கட்சியிலும் நாட்டிலும் எத்தனைப் பேருக்கு குழி தோண்டியிருப்பார்கள்.
சர்வாதிகாரம், சர்வாதிகாரி என்ற வார்த்தையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கம் பெறுமாம்.
எவரிடத்திலும் கலந்து ஆலோசிக்காமல் தான் நினைத்ததை எல்லாம் செய்ய முற்படுவோரை சர்வாதிகாரி என்று சொல்லாமல் ஜனநாயகவாதி என்றா அழைப்பார்கள்?
ஒரே இரவில் 500,- 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது ஜனநாயகமா?
பாராளுமன்ற அவையில் எந்த விவாதமும் இன்றி பல்வேறு கருப்பு சட்டங்களை கொண்டு வந்தது எதை பிரதிபலிக்கின்றது.
ஏன்? இப்போது கூட தங்களையும் தங்களது மோசமான ஆட்சியையும் எதிர்த்து யாரும் குரல் எழுப்பிவிடக் கூடாது எனும் நோக்கில் வெளியிடப்பட்ட இந்த வார்த்தைப் பட்டியல் எதை உணர்த்துகிறது?
சர்வாதிகாரம் என்ற வார்த்தையையே சொல்லக் கூடாது என்று சொல்வதை விட வேறு என்ன சர்வாதிகாரம் இருக்க முடியும்?
நாடகம், கண் துடைப்பு, ஊழல், வெட்கக்கேடு இவையும் அந்தப் பட்டியலில் உள்ளன.
உலகளாவிய அளவில் இது போன்ற வார்த்தைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்ய பயன்படுத்துவதுண்டு.
வளர்ந்த நாடுகளில் கூட இந்த வார்த்தைகளை கூறி விமர்சனம் செய்ய தடை ஏதும் இல்லை. ஆனால் ஜனநாயக நாடுகளுக்கெல்லாம் முன்னோடி என்று மார்தட்டும் இந்திய பாராளுமன்றத்தில் இந்த வார்த்தைகளை சபை நாகரீகமற்றவை என்று கூறி தடை விதிப்பது மக்கள் குரலை நசுக்குவதாகும். பாராளுமன்றத்தை முடக்குவதாகும். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.