எஸ்.பி. வேலுமனி மீதான ரெய்டை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார்களே?

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க் கட்சிகளை ஒடுக்க வேண்டும் என்றே கருதுவார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் எதிர்க்கட்சி பிரமுகர்களின் மீது வழக்கைத் தொடுத்து சிறையில் தள்ள முனைவார்கள்.
திமுக ஆட்சியில் ஜெயலலிதா மீது வழக்குகள் பாய்வதும் அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்களை சிறையில் தள்ளுவதும் கடந்த காலத்தில் நாம் கண்ட காட்சிகளே.
எதிர்க்கட்சியினர் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இன்றி நீதியுடனும் நியாயத்துடனும் தான் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று அரசியல் வட்டாரத்திலுள்ள எந்தக் கட்சிக்கும் சான்றளிக்க முடியாது.
இதுதான் பொதுவான அரசியல் கட்சிகளின் நிலை.
அதிமுகவின் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வேலுமணியின் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டு என்பது அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் மற்றும் திமுகவின் ஆர்.எஸ் பாரதி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
கடந்த ஆட்சியின் போது டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதன் பின்னணியில் இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
எப்.ஐ.ஆர் எனும் நிலையில் உள்ள இந்த விவகாரம் அதன் இறுதிக் கட்டத்தை அடையும் போது தான் உண்மை விவகாரம் என்ன என்பது சாமானியர்களுக்கு தெரியவரும்.
அதுவரை ரெய்டு குறித்து நாம் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட முடியாது.ஆனால் வேறு சில பார்வைகளை முன்வைக்க முடியும்.
எஸ்.பி. வேலுமணி மீதான இந்த ரெய்டு விஷயமாக கண்டனம் தெரிவிக்கும் அதிமுகவிற்கு ஒரு நிகழ்வை நினைவூட்ட கடமைப் பட்டுள்ளோம்.
கடந்த 2016 இறுதியில் அதிமுக ஆட்சியின் போது தமிழக அரசின் தலைமைச் செயலகத்தின் உள்ளேயே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த சோதனைகள் யாவும் சேகர் ரெட்டி என்பவரின் வீட்டில் சோதனையிடப்பட்டு, கணக்கற்ற தங்கக் கட்டிகளும் கோடிக்கணக்கில் பணமும் பெறப்பட்டப் பிறகு நடைபெற்றவையாகும்.
பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரித்துறையின் சோதனைக்கு உள்ளானது அதுவே முதல்முறை. அதுமட்டுமின்றி தமிழக அரசின் மூளையான தலைமைச் செயலகத்தின் உள்ளேயே வரிமான வரித்துறையினரின் சோதனை செய்யப்பட்டது மொத்த மாநிலத்திற்குமே இழுக்கு சேர்க்கும் செயலாகும்.
அதனாலேயே அத்தனை கட்சிகளும் இந்நிகழ்வை கண்டித்து அறிக்கை வெளியிட்டன. ஆனால் அதிமுக மட்டும் வாய்திறக்கவில்லை.
இத்தனையும் அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற போதும் அதிமுக இதற்கு ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிராக ஒரு வார்த்தையைக் கூட வெளியிடவில்லை.
(அதன் பிறகு அச்செய்தி மக்களின் நினைவிலிருந்து மறக்கடிக்கப்பட்டது என்பது தனிக்கதை.)
அரசியல் சூழ்ச்சி, காழ்ப்புணர்ச்சி என இன்றைக்கு என்னவெல்லாம் கூறுகிறதோ இவற்றில் எந்த ஒன்றையும் பாஜகவிற்கு எதிராக அதிமுக கூறவில்லை.
தமிழகத்திற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தின் உள்ளேயே பாஜக ரெய்டு நடத்திய போது வாய் மூடி அமைதி காத்து விட்டு இப்போது அறிக்கைகள், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று ஆர்ப்பரிப்பது முதுகெலும்பு உள்ள அரசியல்வாதிகளின் செயலல்ல.
அது போல திமுக ஆட்சியில் ரெய்டு நடத்தப்பட்டதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பவர்கள் பாமக கூறிய குற்றச்சாட்டிற்கு இதுவரை வாய்திறக்கவில்லை.
கடந்த 2015 ன் போது அதிமுக அமைச்சர்கள் மீது பாமக ஊழல் புகார் அளித்தது. 200 பக்க அளவில் புத்தக வடிவில் புகார் மனுவெழுதி அதை தமிழக ஆளுநரிடம் வழங்கி விசாரணை நடத்திட கோரிக்கை வைத்தது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பாமக தொடுத்த ஊழல் வழக்கு கடந்த ஜூலை 21 – (2021) அன்று கூட நீதிமன்றத்தில் வந்த போது உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
அப்படி என்றால் பாமக கொடுத்த புகாரின் அடிப்படையிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை, ரெய்டு, நடவடிக்கை போன்றவை பாய உள்ளது என்றாகிறது.
இந்த பாமகவை கண்டித்து அதிமுக அறிக்கை வெளியிடுமா?
தங்கள் கட்சித் தலைவர்கள் மீது ஆளுநரிடமே ஊழல் புகாரளித்த பாமகவுடன் தான் கூட்டுச் சேர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது அதிமுக.
ஊழல் பெருச்சாளிகள் என்று யார் யாரை விமர்சனம் செய்ததோ அவர்களை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் அந்தக் கட்சியுடனே கூட்டணி வைத்த கட்சிதான் பாமக.
இது தான் அரசியல் கட்சிகளின் கேடுகெட்ட அரசியல்.
அரசியல் கட்சிகள் தெளிவாகவே உள்ளன. மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதில். மக்கள் தான் தெளிவடைய வேண்டும்.