இஸ்லாத்தின் புனித பொருட்களின் கண்காட்சி என்ற பெயரில் போலிக் கண்காட்சி
ஆக்கம்: ஹஃபீஸ் M.I.Sc
சென்னையில் அம்பத்தூர் மண்டபத்தில் காட்சி படுத்தப்பட்ட நபிகளாரின் அவரது தோழர்கள் பயன்படுத்திய1400 வருடங்கள் பழமையான பொருட்கள் குறித்த விடியோக்கான பதில்:
பொதுவாகவே இப்படி பல பொய்கள் நமக்கு மத்தியில் அவ்வப்போது பரவி வருகின்றதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றவர்கள் இப்படியான பல பொய்களை அவிழ்த்து விடதான் செய்கின்றனர்.
இவர்கள் தான் இறந்தவர்களை வழிபட பல்வேறு கட்டுகதைகளை சொல்லி மக்களை ஏமாற்றி வந்தனர்.
அவ்லியாக்களின் அற்புதங்கள் என்று சொல்லி திரிந்த கபர் முச்சுவிட்டதாக கராமத் என்று சொல்லி வந்த இவரகள் இப்போது தற்போது நபியின் பெயரால் நபித்தோழர்கள் பெயரால் இட்டுக்கட்ட தொடங்கியுள்ளாரகள்.
நபியவர்கள் முடி என்று சொல்லி இப்படி கேரளா மற்றும் வட மாநிங்களில் பல இடங்களில் பொய் சொல்லி வந்த நிலையில்…தற்போது இங்கும் ஆரம்பித்துள்ளார்கள்.
இதை வருடம் வருடம் மீலாதுநபி விழா என்ற பெயரில் மக்களின் பார்வைக்கு சில ஊர்களில் வைப்பார்கள்!
இதில் காட்சி படுத்தப்பட்டவைகள் நபி (ஸல்) முடி , நபி (ஸல்) ஈச்சம் பாயின் சிறு பகுதி- நபி (ஸல்) வீட்டின் மரத்தின் பகுதி- ஆடை -நபி (ஸல்) பத்ரு ஜூப்பாவின் பகுதி – காலணி நபி (ஸல்) நாளே முபாரக் (செருப்பு என்பது கண்ணிய குறைவாம்- ஆதையே அரபியில் சொல்லிகொண்டால் கண்ணியமாம்!) ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவல்லாமல் நபித்தோழர்கள் மற்றும் வலிமார்கள் பொருட்கள் என்ற பெயரில்…
அபூபக்கர் (ரலி) முடி, உமர் (ரலி) தாடி முடி, உஸ்மான் (ரலி) முடி, அலி (ரலி) முடி..
அலி (ரலி) ஜூப்பாவின் பகுதி- நபி அவர்கள் பேரன் ஹுசைன் (ரலி) ஜூப்பாவின் பகுதி- கதிஜா (ரலி) ஆடையின் பகுதி- காஜா பந்தனவஸ் 700 ஆண்டு ஜூப்பாவின் பகுதி..
அலி கைபர் போரில் உள்ள செருப்பு- நபி பேரர் கவசுனா பீரானா பீர் செருப்பு 900 ஆண்டு- ரவ்லா போர்தபட்ட துணி- காபா கருப்பு துணி- உள் துணி.
கவ்ஸ் நாயகம் நினைவு பொருட்கள்- பெரும் வலிமார்கள் நினைவு பொருட்கள்-50 மேற்பட்ட பொருட்கள் காட்சிபபடுத்தப்பட்டுள்ளன.
இது பொய் என்பதற்கு அவர்களின் தடுமாற்றமே ஒரு சான்று. முதலில் நபி (ஸல்) அவர்கள் ரவ்ளா சரீஃபில் போர்த்திய துணி என்று காட்சி படுத்தப்பட்ட துணியில் 2005 என்று எழுதி விட்டு அப்படி சொன்னால் யாரும் நம்ப மறுக்கலாம் டிசைன் புதிதாக உள்ளது என்று அதை அடித்துவிட்டுவிட்டு 2018 என்று பக்கத்தில் போட்டுள்ளனர்!?.
கண்காட்சிகளில் காட்டப்படுவது நபியவர்களின் பொருட்களா?
முதலில் நபி (ஸல்) அவர்களை தொடர்புபடுத்தி சொல்லப்படும் செய்திகளின் உண்மைதன்மை குறித்து மார்க்க ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்.
உண்மையில் அது நபி(ஸல்) அவர்களின் பொருட்கள் தானா? அதற்கு என்ன ஆதாரம்??
நபி (ஸல்) இடமிருந்து ஒரு செய்தி பெறுவதற்கு முறையான அறிவிப்பாளர் தொடர் வேண்டும்.
சங்கிலித்தொடர்ப்போடு முறையாக ஒருவருக்கொருவர் சந்தித்திருக்க வேண்டும்.
அதுவும் நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு பொருளை காட்டி இது நபியின் பொருள் என்று சொல்வதாக இருந்தால், இதை வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டுமா? இல்லையா?
நபியின் பொருளை முதலில் வைத்திருந்தவர் யார், அவருக்கு பின் அதை யார் பாதுகாத்து வந்தார்கள்? நபியின் காலத்திற்கு பிறகு வந்த நான்கு கலிபாக்கள் காலத்தில் இது பற்றிய குறிப்புகள் ஏதும் உண்டா? நான்கு கலிபாக்கள் காலத்திற்கு பிறகு, இந்த பொருட்கள் யாருடைய பொறுப்பில் தந்து விட்டு சென்றார்கள்?
இன்றைய காலத்தில் யார், யாரிடமிருந்து பெற்றுள்ளார்கள்?
இதையெல்லாம் வரலாற்று சான்றுகளுடன் இவர்கள் நிரூபிக்க தயாரா? அறவே இயலாது.
إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ، مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்.
அறிவிப்பவர் : முஃகீரா (ரலி) நூல் : புகாரி-1291
ஆயிரத்தி நானூறு ஆண்டுகளாக ஒரு பொருளை பாதுகாப்பது என்பது சாதாரண காரியமல்ல, அதனுடைய நம்பகதன்மைகளை ஆதாரங்களுடன் நிரூபிக்காதவரை, இதை எவராலும் நம்ப இயலாது.
எந்த சலூனில் எடுத்தது என்று தெரியவில்லை யாருடைய முடி என்று தெரியவில்லை. இதை நபியவர்களோடு தொடர்புபடுத்துகிரார்கள்.
இப்படி ஒருவரின் பொருட்களை வைத்து அதை புனிதம் என்று கருதுவது இஸ்லாமிய கலாச்சாரமா? இது பிற மத கலாச்சாரமாக இல்லையா?
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்‘ என்று அதற்குச் சொல்லப்படும்.
நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள்.
(அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்‘ என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்‘ என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலி)
நூல்: திர்மிதீ-2180 (2106), அஹ்மத் (20892)
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ»، قُلْنَا يَا رَسُولَ اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قَالَ: «فَمَنْ»
“உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற் கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “அல்லாஹ் வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடிய வர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர் களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456
இதை சொல்லவா நபி வந்தார்கள்?இத்தகைய கலாச்சாரத்தை ஒழிக்க வந்தார்கள்.
இஸ்லாம் அறிவார்ந்த பல கொள்கைகளை கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.
இது போன்ற பொய்களால் அல்ல.
தற்போது வளர்ந்துள்ள அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு பொருள் எந்த காலத்தைச் சார்ந்தது என்பதை கார்பன் டெஸ்ட் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
இதை கார்பன் டெஸ்ட் செய்ய தயாரா? இவர்கள் அதற்கு வர மாட்டார்கள்.
இந்த வீடியோவில் ஒருவர் சொல்கிறார்:”
இந்த பொருட்கள் நபி அவர்கள் காலத்தில் உள்ளதா என்று சந்தேகம் வரலாம்”
நாமும் சந்தேகத்தை தெளிவுபடுத்த போகிறார். இதை உண்மை என்று நிரூபிக்க போகிறார் என்று நினைத்தால்.
“நபியவர்கள் பொருள் என்றால் சந்தேகம் இருக்க கூடாது” என்று சொல்லி முடித்துவிட்டார்!?
இது தான் இவர்களின் அதிகபட்ச ஆதாரம்!
கண்காட்சிகளில் காட்டப்படுவது நபித்தோழர்கள் பயன்படுத்தியவைகளா?:
இரண்டாவதாக நபித்தோழர்கள, வலிமார்கள் சம்பந்தபடுத்தி இதில் பல பொய்களை சொல்வதை பற்றி பார்ப்போம்.
அபூபக்கர் (ரலி) முடி, உமர் (ரலி) தாடி முடி, உஸ்மான் (ரலி) முடி, அலி (ரலி) முடி.
அலி (ரலி) ஜூப்பாவின் பகுதி- நபி பேரன் ஹுசைன் (ரலி) ஜூப்பாவின் பகுதி- கதிஜா (ரலி) ஆடையின் பகுதி- காஜா பந்தனவஸ் 700 ஆண்டு ஜூப்பாவின் பகுதி-
அலி (ரலி) கைபர் போரில் உள்ள செருப்பு- நபி பேரர் கவசுனா பீரானா பீர் செருப்பு 900 ஆண்டு- ரவலா போர்தபட்ட துணி- காபா கருப்பு துணி- உள் துணி.
கவ்ஸ் நாயகம் நினைவு பொருட்கள்- பெரும் வலிமார்கள் நினைவு பொருட்கள்-50 மேற்பட்ட பொருட்கள் என்று கதை சொல்லிக் கொண்டே செல்கின்றனர்.
நபிதோழர்கள் முடி என்று காட்சி படுத்த என்ன இருக்கிறது?
இவர்கள் அவ்லியாக்கள் என்று யாரை எல்லாம் அடையாளப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியாதா?
பொய் கூறுவோருக்கு இஸ்லாம் கூறும் கடுமையான தண்டனை:
وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
அவர்கள் பொய்யுரைப்போராக இருந்ததன் காரணமாக அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உள்ளது
(அல்குர்ஆன்: 2:10)
قُلْتُ: طَوَّفْتُمَانِي اللَّيْلَةَ، فَأَخْبِرَانِي عَمَّا رَأَيْتُ، قَالاَ: نَعَمْ، أَمَّا الَّذِي رَأَيْتَهُ يُشَقُّ شِدْقُهُ، فَكَذَّابٌ يُحَدِّثُ بِالكَذْبَةِ، فَتُحْمَلُ عَنْهُ حَتَّى تَبْلُغَ الآفَاقَ، فَيُصْنَعُ بِهِ إِلَى يَوْمِ القِيَامَةِ
நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி “இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?’ என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், “அல்லாஹ் நாடியது நடக்கும்’ எனக் கூறுவார்கள்.
இவ்வாறே ஒரு நாள், “உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?” என்று கேட்டதும் நாங்கள் “இல்லை’ என்றோம். அவர்கள், “”நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுகொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் “இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “நடங்கள்’ என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே “இவர் யார்?’ என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “”நடங்கள்’ என்றனர். எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூட்டின் அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் “இவர்கள் யார்?’ எனக் கேட்டேன். அதற்கும் அவர்கள் “நடங்கள்’ எனக் கூறிவிடவே மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றுகொண்ருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றுகொண்டிருந்தார். அந்த மனிதர் ஆற்றை விட்டு வெளியேற முயலும்போது இவர் அவரது வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார். அப்போது நான் “என்ன இது?’ எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “நடங்கள்’ எனக் கூறிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு முதியவரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகில் ஒருவர் இருந்தார். அவருக்கு முன்னால் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. அதை அவர் மூட்டிக்கொண்டிருந்தார். பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இதுவரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் “”இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு இருவரும் “ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத் தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத் தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த முதியவர் இப்ராஹீம் (அலை) அவர்கள். அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் (முஸ்லிம்) மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தவர் நரகத்தின் காவலாளியான மாலிக் (அலை). நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயர்த்தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்’என்று கூறிவிட்டு, “இப்போது உமது தலையை உயர்த்தும்!’என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம்போல் இருந்தது. அப்போது இருவரும் “இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம்’ என்றதும் நான் “எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்’ என்றேன். அதற்கு இருவரும் “உமது வாழ்நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்திசெய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர்’ என்றனர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி) நூல்: புகாரி-1386
கண்காட்சியில் காட்டப்படும் பொருட்களின் நிலை:
இதெல்லாம் எப்படி இவர்களுக்கு கிடைத்தது ? எங்கிருந்து வந்தது என்று இவர்கள் சொல்லும் போது, சில பொருட்கள் கம்பத்தில் இருந்தும், அம்பா நாயகம் இவர் சகாபியாம் இவரது வம்சாவளி 45 தலைமுறை கம்பத்தில் உள்ளனராம்.
அவர்களிடம் இருந்து இதை பெற்றுள்ளர்களாம்.
இதை மட்டும் சொன்னால் சந்தேகம் எழும் என்பதால், டெல்லி ஜாமிஆ பள்ளிவாசல் மற்றும் துருக்கி அருங்காட்சியகத்தில் இருந்தும் சில பொருட்கள் கொண்டு வரபட்டதாக சேர்த்து சொல்கின்றனர்.
கம்பத்தில் இருப்பவர் யார்? அவங்களுடைய வரலாறு என்ன? என்று சொல்ல முடியுமா?
நான் தான் ஜெயலிதாவுக்கு மகள் என்று இன்று பலர் சொல்லி கொண்டு திரிவதை போல, இந்த காலத்திலும் பலர் இப்படி கிளம்பியுள்ளனர்.
அடுத்து துருக்கி மியூசத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பொருட்களை இந்த குரூப்பிடம் தந்தாகவும் கூறுவது சரியா!?
இந்த பொருட்களை இவர்கள் கையாளும் விதத்தை பார்த்தாலே இவர்கள் சொல்வது பொய் என்பதை புரிந்து கொள்ளலாம்.
1400 ஆண்டுகள் பழமையான பொருட்களை கண்ணாடி பெட்டகத்தில் பாதுகாத்து வைத்துள்ளதை பார்த்திருப்போம்.
இவர்கள் பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ,எதோ Amazon sale discount ல வாங்குன மாதிரி Plastics bag la போட்டு வைத்து கையில் எடுத்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்து இவர்கள் காட்டும் செருப்பில் ஒன்று இங்கு இருக்கிறது. மற்றொரு செருப்பு எங்கே ? ஆடைகள் அனைத்திலும் சிறிய துண்டு மட்டுமே இருக்கிறது. முழுமையான ஆடை எங்கே இருக்கிறது?
நபிகளாரும் அவர்களின் தோழர்களும் பயன்படுத்திய பொருட்கள் அரபு நாட்டிலுள்ள மக்கா, மற்றும் மதீனாவிலிருந்து சென்னைக்கு வந்தது எப்பது? எப்போது வந்தது? 1400 ஆண்டுகளாக இப்பொருட்களை யார் பாதுகாத்தது?
என்று இப்படி ஏரளாமான கேள்விகளைக் கேட்கலாம்.
எந்த உண்மைத் தகவலும் இல்லாமல் பாமர மக்களை முட்டாள்களாக்கவும், மூடர்களாகக்கவும் இந்த வழிகேடர்கள் முயற்சிக்கிறார்கள்.
நபிகள் நாயகத்தின் “முடி” அவர் பிறந்த ஊரான மக்காவிலும் அவர்கள் வாழ்ந்த ஊரான மதினாவிலும் கூட காட்சி படுத்தபடுவதில்லை.
அவர்களுக்கே கிடைக்காத “முடி” நம்மூர் மக்களுக்கு கிடைத்தது தான் ஆச்சரியம்.
இப்பொருட்களை பார்ப்பதால் நேர்வழி கிடைக்குமா?:
அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு இவர்கள் காரணம் சொல்லும் போது இவைகளை பார்த்தால் ஹிதாயத் கிடைக்கும்(?) என்கின்றனர்.
நபி அவர்கள் காலத்தில் மற்ற மக்களுக்கு ஹிதாயத்(நேர்வழி) கிடைக்க முடியோ பொருளையோ கொடுத்தார்களா? மற்ற நாடுகளுக்கு கடிதம் மூலம் இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்த இறைத்தூதர் அவர்கள் இதுபோன்ற பொருட்களை அனுப்பி வைத்தார்களா? இல்லையே!
நபிகள் நாயகம் இரும்பு கவசத்தை ஒரு யூதனிடம் அடகு வைத்தார்கள் அதையே அவர்கள் மீட்டகாமலே மரணித்திவிட்டர்கள்.
அவர்கள் பொருட்களை வைத்திருந்த யூதன் சிறந்தவனா?
இவைகளை பார்த்தால் ஹிதாயத் கிடைக்கும் என்றிருந்தால் அதனை தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த யூதன் ஏன் நேர்வழி பெறவில்லை?
«تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ، بِثَلاَثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ» عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
தமது போர்க் கவசம் முப்பது ஸாவுகள் வாற்கோதுமைக்குப் பகரமாக ஒரு யூதரிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல் : புகாரி 2916
நேரடியாக பார்த்த அபூ ஜஹல் நேர்வழி பெறவில்லை.
அபூதாலிபுக்கு நேர்வழி கிடைக்கவில்லை.
لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَالِبٍ : ” يَا عَمِّ، قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ؛ كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ “. فَقَالَ أَبُو جَهْلٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ : يَا أَبَا طَالِبٍ، أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ ؟ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْرِضُهَا عَلَيْهِ، وَيَعُودَانِ بِتِلْكَ الْمَقَالَةِ، حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ : هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ. وَأَبَى أَنْ يَقُولَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَمَا وَاللَّهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ “. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهِ : { مَا كَانَ لِلنَّبِيِّ } . الْآيَةَ
(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “”எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்” எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், “” அபூதாலிபே’ அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?” எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)” ’ என்று கூறியதோடு “லாஇலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று கூறினார்கள். அப்போது “இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று” எனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
அறிவிப்பவர் : முசய்யப் (ரலி) நூல் : புகாரி 1360
இது போன்ற கண்காட்சிகளை காசு சம்பாதிக்க ஒரு புது வழியாக பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.
நபி “முடி” என்று சொன்னதும் மக்கள் யோசிக்காமல் ஓடி வருவார்கள் அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை தவிர வேறு ஒன்றும் இதில் இல்லை.
நாளை இப்படியும் சொல்வார்கள்.
நாளை மூஸா நபியின் – கைதடி- ஆதம் நபி கடவாய்ப் பல்லு என்றாலும் ஆச்சரியம் இல்லை
சரி ஒருவேளை நபிகளாரின் நபித்தோழர்கள் பொருட்களாகவே இருக்கட்டும் அதன் மூலம் என்ன நன்மை? கடுகளவும் நன்மை இல்லை.
நபியவர்கள் இவைகளை பாதுகாத்து காட்சி படுத்த சொன்னார்களா? இதன் மூலம் நேர்வழி அடையலாம் என்று சொன்னார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தைகளையும் நடைமுறைபடுத்ததான் இறைவன் நபியவர்களை அனுப்பினான்.
لَقَدۡ كَانَ لَكُمۡ فِىۡ رَسُوۡلِ اللّٰهِ اُسۡوَةٌ حَسَنَةٌ لِّمَنۡ كَانَ يَرۡجُوا اللّٰهَ وَالۡيَوۡمَ الۡاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيۡرًا ؕ
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை நன்கு நினைவுகூரும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன்: 33:21
நபிவழிப் படி நடப்பது தான் இறைநேசம் மற்றும் நேர்வழி அடையும் வழிமுறையாகும்.
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்” என (நபியே) கூறுவீராக!
அல்குர்ஆன் 3:31,32
இறை வசனங்களை கூட சிந்தித்து செயல்பட வேண்டும் என்று இறைவன் சொல்லும் போது, இவர்கள் சொல்லும் பொய்களை நாம் அடையாளம் காண வேண்டும்.
இதுபோன்ற மோசடிகளின் பக்கம் செல்லாமல் இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை கடைபிடிக்கும் மக்களாக நாம் மாற வேண்டும்.