யூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மக்களிடம் தங்கள் குற்றத்தை மறக்கடிக்க மார்க்க விஷயங்களில் விளையாடி வருகின்றனர். மார்க்க விஷயத்தில் தவறான கருத்துக்களை கூறினால் மக்கள் அதைப் பற்றி தேடத் துவங்கி, தனது குற்றத்தை மறந்துவிடுவார்கள் என்பதற்காக இதை ஓர் ஆயுதமாக எடுத்திருக்கிறார்கள்.
மேலும், தனது குற்றத்தை மறக்கடிப்பதற்காக நபிமார்கள், நபித்தோழர்கள் என அனைத்து நல்லோர்களையும் இழிவுப்படுத்தும் வகையில் பேசிவருகிறார்கள்.
அத்தகைய அவர்களது வழிகெட்ட சிந்தனைகளில் ஒன்று, நபி யூசுஃப்(அலை) அவர்கள் வரலாற்றில் அபாண்டத்தை சுமத்துவதாகும்.
பாலியல் குற்றமிழைத்தோரின் வாதம்
தங்களது பாலியல் குற்றம் எண்ணற்ற ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக நிரூபணமாகி விட்ட போதும் அவர்கள் மக்களை திசை திருப்ப மறுவிசாரணை வேண்டும் என சிறிது காலம் கழித்து வாதிடுகிறார்கள்.
அதை நியாயப்படுத்த யூசுப் நபியின் வரலாற்றை திரித்து, துணைக்கு அழைக்கின்றார்கள்.
அத்தகையோரின் வாதம் இதுதான்.
அமைச்சரின் மனைவி யூசுஃப்((அலை) அவர்களை தவறுக்கு அழைக்கும் போது யூசுஃப் நபியவர்கள் அதிலிருந்து விலகிக்கொள்கிறார்கள். பிறகு ஊரிலிருக்கும் சில பெண்களோடு சேர்ந்துக் கொண்டு அழைக்கிறாள். அப்போதும் விலகுகிறார்கள்.
ஆனாலும் அவர்கள் தவறு செய்ததாக அந்த பெண்கள் அனைவரும் சேர்ந்து பொய்யான ஆதாரங்களை தயாரிக்கிறார்கள். அந்த ஆதாரங்களை உண்மையென்று நம்பிதான் யூசுஃப்(அலை) அவர்களை பஞ்சாயத்து செய்தவர்கள் சிறையில் அடைக்கிறார்கள்.
பிறகு, சிறையிலிருந்து யூசுஃப்(அலை)) அவர்களை மன்னர் அழைக்கும் போது அந்து பெண்களின் புகார் குறித்து மறுவிசாரணை செய்யுமாறு யூசுஃப்(அலை) அவர்கள் மன்னரிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.
அந்த கோரிக்கையின்படி மறுவிசாரனை மூலம் விசாரிக்கப்பட்டுத்தான் யூசுஃப்(அலை) அவர்கள் நிரபராதி என்று நிருபிக்கப்பட்டார்கள்.
எனவே, எங்கள் விஷயத்திலும் மறுவிசாரணைக்கு வாருங்கள் என்று தங்கள் வாதங்களை வைக்கிறார்கள்.
இதில் தாங்கள் செய்த அசிங்கத்தை நியாயப்படுத்த யூசுஃப்(அலை) அவர்கள் வரலாற்றில் எவ்வாறெல்லாம் தவறான கருத்துக்களை விதைத்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்துடன் பார்ப்போம்.
தவறான வாதங்களுக்கு திருக்குர்ஆனின் பதில்
துவக்கமாக யூசுப் அலை தொடர்பான பின்வரும் சம்பவத்தை அறிந்து கொள்வோம். இது அடுத்தடுத்து சொல்லப்படும் தகவல்களை புரிந்து கொள்ள உதவும்.
{وَقَالَ الَّذِي اشْتَرَاهُ مِنْ مِصْرَ لِامْرَأَتِهِ أَكْرِمِي مَثْوَاهُ عَسَى أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (21) وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (22) }{وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ (23) وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَى بُرْهَانَ رَبِّهِ كَذَلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ (24) وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُ مِنْ دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ قَالَتْ مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَنْ يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ (25) قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ (26) وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ (27) فَلَمَّا رَأَى قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ (28) يُوسُفُ أَعْرِضْ عَنْ هَذَا وَاسْتَغْفِرِي لِذَنْبِكِ إِنَّكِ كُنْتِ مِنَ الْخَاطِئِينَ (29)} [يوسف:21 – 29]
- அவரை விலைக்கு வாங்கிய எகிப்தியர், தமது மனைவியிடம் “இவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்வாயாக! இவர் நமக்கு பயனளிக்கலாம். அல்லது இவரை நாம் மகனாக எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறே யூஸுஃபிற்கு அப்பூமியில் வசதியை ஏற்படுத்தினோம். கனவுகளின் விளக்கத்தை நாம் கற்றுக் கொடுப்பதற்காகவும் (இவ்வாறே செய்தோம்). அல்லாஹ் தனது காரியத்தில் மிகைப்பவன். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
- அவர் வாலிபப் பருவத்தை அடைந்ததும் அவருக்கு கல்வியையும், ஞானத்தையும் வழங்கினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு கூலிவழங்குகிறோம்.
- அவர் எவளது வீட்டில் இருந்தாரோ அவள், தனது ஆசைக்கு இணங்குமாறு அவரிடம் வேண்டினாள். கதவுகளைத் தாழிட்டு அவரை ”வா!” என்று அழைத்தாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். அவனே எனது இறைவன். அவன் எனது தங்குமிடத்தை அழகாக்கினான். அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.” என்று கூறினார்.
- அவள் அவரை விரும்பினாள். அவரும் அவளை விரும்பிவிட்டார். அவர் தனது இறைவனின் சான்றைப் பார்த்திராவிட்டால் (உறுதி இழந்திருப்பார்.) இவ்வாறே தீமையையும் மானக்கேடானதையும் அவரை விட்டும் திருப்பினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவராவார்.
- இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரின் சட்டையை பின்புறமாக கிழித்துவிட்டாள். வாசலுக்கருகில் அவளது கணவனை இருவரும் கண்டனர். “உமது மனைவிக்கு தீங்கிழைக்க நாடியவருக்கு சிறையில் அடைப்பது அல்லது துன்புறுத்தும் வேதனையத் தவிர என்ன தண்டனை இருக்க முடியும்?” என்று அவள் கூறினாள்.
26,27. “அவள்தான் தனது ஆசைக்கு இணங்குமாறு என்னை அழைத்தாள்” என்று அவர் கூறினார். அவளது குடும்பத்தாரில் ஒருவர் “அவரது சட்டை முன்புறமாக கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள். அவர் பொய்யர்களில் உள்ளவர். அவரது சட்டை பின்பிறமாக கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய்யுரைக்கிறாள். அவர் உண்மையாளர்களில் உள்ளவர்“ என்று சாட்சி கூறினார்.
- அவரது சட்டையை அவ(ளின் கணவ)ர் கண்டபோது அது பின்புறமாக கிழிக்கப்பட்டிருந்தது. “இது உங்களின் சூழ்ச்சியே! பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப்பெரியது!” என்று கூறினார்.
- “யூஸுஃபே! இதைக் கண்டுகொள்ளாது விட்டுவிடுவீராக!, (என்று கூறிவிட்டு தனது மனைவியிடம்) நீ உனது பாவத்திற்கு மன்னிப்புக் கோருவாயாக. நீ தான் தவறிழைத்தோரில் ஆகிவிட்டாய்! (என்றும் கூறினார்.)
அல்குர்ஆன் 12: 21 – 29
இதுதான் அமைச்சரின் மனைவி சம்பந்தப்பட்ட முதல் சம்பவம்.
இதில் அவள் யூசுஃப்(அலை) அவர்களின் அழகைப் பார்த்து அவர்களை அடைய நினைக்கிறாள். யூசுஃப்(அலை) அவர்கள் இணங்க மறுத்து ஓடுகிறார்கள். அவள் அவர்களை விரட்டி வந்து சட்டையை கிழிக்கிறாள்.
யூசுஃப்(அலை) அவர்கள் அவள் அடைத்து வைத்த கதவை திறக்கிறார்கள். வாசலில் அமைச்சராகிய அவளது கணவர் நிற்கிறார். தன் கணவனை கண்டதும் அவள் யூசுஃப்(அலை) அவர்கள்தான் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டார் என்று அவர்கள் மீது பழி சொல்கிறாள்.
யூசுஃப்(அலை) அவர்கள் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுக்கிறார்கள்.
அப்போது அந்த பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்த நபர் ஒருவரே அவள்தான் குற்றவாளி என்பதற்கு ஆதாரமாக சட்டை பின்புறமாக கிழிக்கப்பட்டிருப்பதை குறிப்பிடுகிறார்.
அந்த இடத்திலேயே அவள்தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுகிறது. யூசுஃப்(அலை) அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதும் தெளிவாகிறது.
இது ஒரு சம்பவம்.
இதற்கு பிறகு அந்த பெண் யூசுஃப்(அலை) அவர்களிடம் தவறாக நடந்துக் கொண்டது பற்றி ஊரில் உள்ள பெண்களால் பரவலாக பேசப்படுகிறது. அவர்கள் அவளை வசைப்பாடுவதுப் பற்றி அவளுக்கு தெரிய வருகிறது. அதன் பின் நடந்த தகவல்கள் இதோ,
{ وَقَالَ نِسْوَةٌ فِي الْمَدِينَةِ امْرَأَتُ الْعَزِيزِ تُرَاوِدُ فَتَاهَا عَنْ نَفْسِهِ قَدْ شَغَفَهَا حُبًّا إِنَّا لَنَرَاهَا فِي ضَلَالٍ مُبِينٍ (30)} {فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُنَّ سِكِّينًا وَقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ (31) قَالَتْ فَذَلِكُنَّ الَّذِي لُمْتُنَّنِي فِيهِ وَلَقَدْ رَاوَدْتُهُ عَنْ نَفْسِهِ فَاسْتَعْصَمَ وَلَئِنْ لَمْ يَفْعَلْ مَا آمُرُهُ لَيُسْجَنَنَّ وَلَيَكُونًا مِنَ الصَّاغِرِينَ (32) قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ (33) فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (34) ثُمَّ بَدَا لَهُمْ مِنْ بَعْدِ مَا رَأَوُا الْآيَاتِ لَيَسْجُنُنَّهُ حَتَّى حِينٍ (35)} [يوسف: 30 – 35]
- “அமைச்சரின் மனைவி தனது அடிமையை அவளது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தாள். அவன் அவளை அன்பால் கவர்ந்துவிட்டான். அவளை பகிரங்கமான வழிகேட்டிலேயே நாம் காண்கிறோம்” என்று அந்நகரிலுள்ள பெண்கள் பேசிக்கொண்டனர்
- அப்பெண்களின் சூழ்ச்சியைப் பற்றி அவள் செவியுற்ற போது, அவர்களுக்காக ஒரு விருந்தினை ஏற்பாடு செய்து அதற்கு அவர்களை அழைத்தாள். அவர்கள் ஒவ்வொருத்திக்கும் ஒரு கத்தியையும் கொடுத்தாள். “(அப்போது யூஸுஃபே!) அப்பெண்களுக்கு முன்னிலையில் வெளிப்படுவீராக!” என்று கூறினாள். அப்பெண்கள் அவரைக் கண்டபோது (அவரழகில்) வியப்புற்று, தமது கைகளை வெட்டிக் கொண்டனர். “அல்லாஹ் தூயவன். இவர் மனிதரே அல்ல. இவர் கண்ணியமிக்க வானவரைத் தவிர வேறில்லை” என்று அவர்கள் கூறினர்.
- “எவர் விஷயத்தில் என்னைப் பழித்தீர்களோ அவர்தான் இவர்! அவரை எனது ஆசைக்கு இணங்குமாறு நான் தான் அழைத்தேன். ஆனால் அவர் தவறிலிருந்து விலகிக் கொண்டார். இனியும் நான் கட்டளையிடுவதை அவர் செய்யாவிட்டால் அவர் சிறையிலடைக்கப்பட்டு, சிறுமையடைந்தோரில் ஆகிவிடுவார்.” என்று கூறினாள்.
- “என் இறைவா! இப்பெண்கள் எதை நோக்கி என்னை அழைக்கிறார்களோ அதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானதாகும். இவர்களின் சூழ்ச்சியிலிருந்து என்னை நீ காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கி நான் சாய்ந்துவிடுவேன். அறிவீனர்களில் ஒருவனாகிவிடுவேன்.“ என்று (யூஸுஃப்) கூறினார்.
- அவரது இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன், நன்கறிந்தவன்.
35.(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) சான்றுகளைக் கண்ட பின்பும் சிறிது காலம் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
அல்குர்ஆன் 12: 30 – 35
இதில், அமைச்சரின் மனைவி தன் குற்றத்தைப் பற்றி ஊரில் சில பெண்கள் பேசிவருகிறார்கள் என்பதை கேள்விப்பட்டு, அந்த பெண்களை விருந்துக்கு அழைத்து ஒரு கத்தியையும் அவர்கள் ஒவ்வொருத்தியிடமும் வழங்குகிறாள்.
அப்போது, யூசுஃப்(அலை) அவர்களை அப்பெண்களுக்கு முன்னிலையில் செல்வீராக! என்று கட்டளை போடுகிறாள்.
யூசுஃப்(அலை) அவர்கள் தனது எஜமானியின் கட்டளையை ஏற்றுச் செல்கிறார்கள்.
அப்பெண்கள் யூசுஃப்(அலை) அவர்களை கண்டதும், அழகில் பிரமித்துப் போகிறார்கள். மலைத்துப் போனதால் உணர்வுகளற்று தங்கள் கைகளை தாங்களே வெட்டிக் கொள்கிறார்கள். அவர் மனிதர் அல்ல; கன்னியமான வானவர் என்று அந்த இடத்தில் யூசுஃப்(அலை) அவர்கள் பற்றி கூறுகிறார்கள்.
அப்போது, அமைச்சரின் மனைவி, ஏதோ என்னைப் பழித்தீர்கள். என்னை எவருடன் இணைத்து குறை கூறினீர்களோ அவர் இவர்தான். நான் தான் அவரை தவறுக்கு அழைத்தேன். அவர் விலகி கொண்டார் என்று சொல்லிவிட்டு, இப்போது நான் அழைக்கும் போது அவர் வராவிட்டால் அவரை சிறையில் அடைப்பேன் என்கிறாள்.
உடனே யூசுஃப்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம், இவர்கள் அழைக்கும் குற்றத்தை விட சிறையே மேலானது என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
அந்தப் பிராரத்தனையை இறைவன் ஏற்றுக் கொள்கிறான். அதனால்தான் அவர் குற்றமற்றவர் என்ற ஆதாரங்கள் இருந்தும் சிறையில் அவரை சிறிதுகாலம் அடைப்போம் என்று அவர்களுக்கு தோன்றுகிறது.
இதுதான் ஊரிலிருக்கும் மற்ற சில பெண்களுடன் சேர்ந்து யூசுஃப்(அலை) அவர்களை அவள் அடைய நினைத்த சம்பவமாகும். இந்த சம்பவத்திலிருந்துதான் தங்களது திரித்துக் கூறும் வேலையை பாலியல் குற்றமிழைத்தோர் ஆரம்பிக்கிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பான 12: 35 வது வசனத்தை பாருங்கள்.
ثُمَّ بَدَا لَهُمْ مِنْ بَعْدِ مَا رَأَوُا الْآيَاتِ لَيَسْجُنُنَّهُ حَتَّى حِينٍ (35)}
(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) சான்றுகளைக் கண்ட பின்பும் சிறிது காலம் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
இந்த வசனத்திற்கு யூசுஃப்(அலை) அவர்கள் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை கண்டுதான் அவர்களை சிறையில் அடைத்தார்கள். அத்தகைய போலி ஆதாரங்களை அந்தப் பெண்கள் தயாரித்தார்கள் என்று தங்கள் வாதங்களை அவர்கள் சொல்கிறார்கள்.
ஆயாத் என்பதன் விளக்கம்
இந்த வசனத்தில் ஆதாரங்கள் என்பதற்கு ஆயாத் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
இந்த ஆயாத் என்பது அந்த பெண்கள் உருவாக்கிய யூசுஃப்(அலை) அவர்கள் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை குறிக்கிறது என்பதுதான் பாலியல் குற்றமிழைத்தோரின் வாதம்.
ஆனால், ஆயாத் என்பது நாமறிந்தவரை அவ்வாறான போலி ஆதாரங்கள் என்ற அர்த்தத்தில் ஒரு போதும் பயன்படுத்தப்படாது.
ஆயாத் என்பது ஆயத் என்ற வார்த்தையின் பன்மை பதமாகும்.
இது உண்மை ஆதாரத்திற்காக மட்டும்தான் பயன்படுத்தப்படும். இவர்கள் சொல்வதைப் போல் போலி ஆதாரத்திற்கு பயன்படுத்தப்படாது.
குர்ஆனில் ஆயத் என்ற ஒருமையும், ஆயாத் என்ற பன்மையும் நூற்றுக்கணக்கான இடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் உண்மை சான்றுகள் என்ற அர்த்தத்தில்தான் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, 2:39, 41, 61, 73, 99, 118, 129, 151, 164, 187, 219, 221, 231, 242, 252, 266.
சூரத்துல் பகராவில் மட்டும் உள்ளவை இது. இதுவல்லாமல் குர்ஆன் முழுவதும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்திலும் உண்மை சான்றுகள் என்ற அர்த்தத்தில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஆயாத் என்ற வார்த்தைக்கு அல்லாஹ்விடம் உண்மை சான்றுகள் என்பதற்குத்தான் பயன்படுத்தப்படும் என்று தெளிவாகிறது.
இதை எப்படி போலி சான்றுகள் என்று கூற முடியும்? அதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது?
பெண்களின் பார்வையில் அவற்றை போலி சான்றுகள் என்று கூறியிருக்கலாம் அல்லவா என்று கேட்கலாம். அதுவும் தவறான வாதமேயாகும்.
இந்த வசனத்தையோ அல்லது அதில் இடம்பெறும் ஆயாத் என்ற வார்த்தையையோ அந்த பெண்களின் பார்வையில் நின்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை. அவர்களின் வார்த்தையாகவும் அல்லாஹ் எடுத்துச் சொல்லவில்லை. தனது கருத்தாகத்தான் அல்லாஹ் பயன்படுத்துகிறான் என்பது வசனத்தின் போங்கிலேயே நமக்கு தெளிவாகிறது.
فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (34) ثُمَّ بَدَا لَهُمْ مِنْ بَعْدِ مَا رَأَوُا الْآيَاتِ لَيَسْجُنُنَّهُ حَتَّى حِينٍ (35)}
- அவரது இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன், நன்கறிந்தவன்.
35.(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) சான்றுகளைக் கண்ட பின்பும் சிறிது காலம் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
அல்குர்ஆன் 12: 34, 35
அல்லாஹ் யூசுஃப்(அலை) அவர்களின் பிராரத்தனைக்கு பதிலளித்ததாக கூறிவிட்டு அந்த பிரார்த்தனை ஏற்றுக் கொண்டதின் விளைவாக என்ன நடந்தது என்று தன் வார்த்தையாகத்தான் பின்வரும் வசனத்தையும் அல்லாஹ் பேசுகிறான்.
பெண்கள் சொல்வதை எடுத்துச் சொல்லாமல் அல்லாஹ் தன் வார்த்தையாக அவனது அர்த்தத்தில் இந்த வசனம் பயன்படுத்தப்பட்டிருக்கும்போது ஆயாத் என்பதற்கு அல்லாஹ்விடம் என்ன அர்த்தமோ அந்த அர்த்தத்தைத்தான் வழங்கவேண்டுமே தவிர வீண் வியாக்கியானங்கள் வழங்க கூடாது.
அந்த உண்மைச் சான்றுகள் என்ன?
யூசுஃப்(அலை) அவர்கள் குற்றமற்றவர் என்பதற்கு என்ன சான்றுகளைக் கண்டார்கள் என்று அல்லாஹ் நேரடியாக இந்த சம்பவத்தில் குறிப்பிடவில்லை.
என்றாலும், மேலே பார்த்ததை போல ஆயாத் என்பது குற்றமற்றவர் என்பதற்கான உண்மைச் சான்றுகள்தான் என்று தெளிவாக தெரிவதினால் முதலாவது சம்பவத்தையும், இரண்டாவது சம்பவத்தையும் இணைத்து ஒரு விளக்கம் காணலாம்.
முதலாவது சம்பவத்தில் அமைச்சரின் மனைவி யூசுஃப்(அலை) அவர்களை தவறுக்கு அழைத்து பிடிப்பட்டதும் குற்றத்தை யூசுஃப்(அலை) அவர்கள் மீது திருப்பினாள்.
அப்போது, பின்புறமாக சட்டைக் கிழிக்கப்பட்டிருப்பது அமைச்சரின் மனைவி குற்றவாளி என்பதற்கான ஆதாரமாகவும், யூசுஃப்(அலை) அவர்கள் நிரபராதி என்பதற்கான ஆதாரமாகவும் ஆனது.
அதேபோல, ஊர் பெண்களை அழைத்து விருந்து வைத்த சம்பவத்திலும் அமைச்சரின் மனைவி “அவரைஎனதுஆசைக்குஇணங்குமாறுநான்தான்அழைத்தேன்.ஆனால்அவர்தவறிலிருந்துவிலகிக்கொண்டார்.”என்று கூறி தான் தவறு செய்தவள் என்பதையும் யூசுஃப் நிரபராதி என்பதற்கும் பெண்கள் மத்தியில் ஒப்புதல் வாக்குமூலம் ஒப்புதல் வாக்குமூலம் தருவதுடன் அப்பெண்களும் தங்கள் கைகளை அறுத்துக் கொண்டு நிற்பது அந்த ஆதாரங்களாக இருக்கலாம். அல்லாஹ் சொல்லாததை நாம் தீர்க்கமாக கூற முடியாது.
யூசுஃப்(அலை) அவர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும்?
யூசுஃப்(அலை) குற்றமற்றவர் என்பதற்கான உண்மைச் சான்றுகள் இருந்த போதும் ஏன் அவர்கள் சிறையில் அடைக்ப்பட்டார்கள் என்பதை யூசுஃப்(அலை) அவர்களின் பிரார்த்தனையிலிருந்து விளங்கலாம்.
قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ (33) فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ (34) ثُمَّ بَدَا لَهُمْ مِنْ بَعْدِ مَا رَأَوُا الْآيَاتِ لَيَسْجُنُنَّهُ حَتَّى حِينٍ (35)}
- “என் இறைவா! இப்பெண்கள் எதை நோக்கி என்னை அழைக்கிறார்களோ அதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானதாகும். இவர்களின் சூழ்ச்சியிலிருந்து என்னை நீ காப்பாற்றாவிட்டால் இவர்களை நோக்கி நான் சாய்ந்துவிடுவேன். அறிவீனர்களில் ஒருவனாகிவிடுவேன்.“ என்று (யூஸுஃப்) கூறினார்.
- அவரது இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன், நன்கறிந்தவன்.
35.(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) சான்றுகளைக் கண்ட பின்பும் சிறிது காலம் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
அல்குர்ஆன் 12: 33 – 35
இந்த பிரார்த்தனையின் சாரம்சம், இறைவா! பெண்கள் என்னை குற்றம்புரிய அழைக்கிறார்கள். தவறில் விழாமல் என்னை காப்பாற்று. அந்த குற்றத்தை விட சிறையே எனக்கு மேலானது என்பதாகும்.
அந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அவர்கள் சூழ்ச்சிப் புரிந்து குற்றம் புரிய அழைப்பதிலிருந்து காப்பாற்றியதாகவும் அடுத்தடுத்த வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
முதலில் அமைச்சரின் மனைவி, அடுத்து அவளோடு சேர்ந்து மேலும் சில பெண்கள் என்று தவறுக்கு அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதை வெறுத்துத்தான் சிறையே எனக்கு மேலானது என்று கூறுகிறாரக்ள்.
அவர்களது பிராரத்தனையை ஏற்றுக்கொண்டு இந்த குற்றத்திலிருந்து காப்பாற்றியதாக அல்லாஹ் கூறுகிறான் எனில் அவர் விரும்பிய சிறை வாழ்க்கையை அல்லாஹ் வழங்குகிறான் என்பது தெரிகிறது.
அதனால்தான் அல்லாஹ் அந்த சம்பவத்தைப் பற்றி 35வது வசனத்தில் கூறும் போது ஆயாத் என்ற உண்மை ஆதாரங்களை கண்கூடாகப் பார்த்தப் பிறகும் அவரை சிறிது காலம் சிறையில் அடைப்போம் என்று அவர்களுக்கு தோன்றியது என்று கூறுகிறான்.
உண்மைச் சான்றைப் பார்த்தாலும் சிறிது காலம் சிறையில் வைப்போம் என்ற எண்ணத்தை அல்லாஹ் போட்டிருக்கிறான் என்பது அந்த வசனத்தில் இடம்பெற்றிருக்கும் பதா லஹும் – அவர்களுக்கு தோன்றியது என்ற வார்த்தையிலிருந்தும் அவ்வாறு எண்ணத்தைப் போட்டது யூசுஃப்(அலை) அவர்களின் பிரார்த்தனையின் விளைவாகத்தான் என்றும் தெரிகிறது.
இந்த வசனங்களின் கருத்துக்களுக்கு மாற்றமாக குற்றமற்றவர் என்ற ஆதாரம் வெளிப்பட்ட யூசுஃப்(அலை) அவர்களையும், குற்றவாளிதான் என்று ஆதாரத்தோடு நிருபிக்கப்பட்ட தங்களையும் பாலியல் குற்றமிழைத்த சிலர் இணைக்கிறார்கள். அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
வசனம் உணர்த்தும் மற்றொரு ஆதாரம்
மேலும், யூசுஃப்(அலை) அவர்கள் விஷயத்தில் வைக்கப்பட்ட ஆதாரங்கள் அவர்கள் குற்றமற்றவர் என்பதற்கான உண்மைச் சான்றுகள்தானே தவிர குற்றவாளி என்பதற்கான போலி சான்றுகள் அல்ல என்பதை வரலாற்றின் அடுத்தப் பகுதியும் தெளிவுப்படுத்துகிறது.
யூசுஃப்(அலை) அவர்கள் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்கள் வைக்கப்பட்டும் அவர்களை சிறையில் அடைப்போம் என்று பஞ்சாயத்து செய்பவர்கள் நினைக்கிறார்கள்.
அதன் பின் யூசுஃப்(அலை) அவர்கள் சிறைக்கு செல்கிறார்கள். அவர்களுடன் இரண்டு இளைஞர்களும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களின் கணவுகளுக்கான விளக்கத்தை யூசுஃப்(அலை) அவர்கள் வழங்குகிறார்கள். அவர்களுக்கு தஃவா செய்கிறார்கள்.
பிறகு, அவ்விருவரில் யார் விடுதலையாவார் என்று யூசுஃப்(அலை) அவர்கள் எண்ணினார்களோ அவரிடம் பின்வருமாறு கூறி அனுப்புகிறார்கள்.
{ وَقَالَ لِلَّذِي ظَنَّ أَنَّهُ نَاجٍ مِنْهُمَا اذْكُرْنِي عِنْدَ رَبِّكَ فَأَنْسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ (42)} [يوسف: 42]
- அவ்விருவரில் யார் விடுதலை செய்யப்படுவார் என்று எண்ணினாரோ அவரிடம் “உனது எஜமானனிடம் என்னைப் பற்றிக் எடுத்துரைப்பாயாக!” என்று (யூஸுஃப்) கூறினார். ஆனால் தனது எஜமானனிடம் கூறுவதை விட்டும் அவரை ஷைத்தான் மறக்கடித்துவிட்டான். எனவே பல ஆண்டுகள் அவர் சிறையிலேயே தங்கியிருந்தார்.
அல்குர்ஆன் 12: 42
விடுதலையாகுபவரிடம் தன்னைப் பற்றி எடுத்துச் சொல்ல யூசுஃப்(அலை) அவர்கள் சொல்லியனுப்புகிறார்கள் என்றால், யூசுஃப்(அலை) அவர்கள் குற்றவாளி என்று ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டால் இவ்வாறு சொல்ல இயலுமா?
போலி ஆதாரமாகவே இருந்தாலும் அதை உண்மை என்று நம்பிதான் அவர்கள் மீது சிறை நடவடிக்கை எடுத்தார்கள் என்று பாலியல் குற்றமிழைத்தோர் கூறுவதைப் போன்றிருந்தால் என்னைப் பற்றி நினைவுப்படுத்துங்கள் என்று கூற முடியுமா?
நிச்சயம் முடியாது.
யூசுஃப்(அலை) அவர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு அவர்கள் மீது நல்லெண்ணம் ஏற்பட்ட பின்பும் இவர் சிறையில் சிறிது காலம் இருக்கட்டும் என்று சொல்லியிருந்தால் மாத்திரம் தான் சிறிது காலம் ஆகியவுடன் காலம் கடந்துவிட்டது அவர்களுக்கு நினைவுப்படுத்துங்கள் என்று கூற முடியும்.
மேற்படி வசனம் உணர்த்தும் உண்மையை உணராமல் ”ஆதாரம் இருந்ததால் தான் சிறையில் அடைக்கப்பட்டார்கள்” என்று யூசுஃப்(அலை) அவர்கள் மீது அபாண்டம் சுமத்துவது எவ்வளவு அநீதியானது.
அடுத்து குர்ஆன் கூறுவதை பாருங்கள்.
இதன் பின் விடுதலையானவர் நினைவுப்படுத்த மறந்துவிடுகிறார். காலங்கள் கரைந்தோடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு மன்னர் ஒரு கனவுக் கண்டு அதற்கான விளக்கத்தை கூறுவோர் யார் எனும் போதுதான் விடுதலையாகி வந்தவருக்கு யூசுஃப்(அலை) அவர்களின் நினைவு வருகிறது.
{وَقَالَ الَّذِي نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ أُمَّةٍ أَنَا أُنَبِّئُكُمْ بِتَأْوِيلِهِ فَأَرْسِلُونِ (45) يُوسُفُ أَيُّهَا الصِّدِّيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46)} [يوسف: 45، 46]
- அவ்விருவரில் விடுதலை பெற்றவர், நீண்ட காலத்திற்குப் பின்னர் (யூஸுஃபை) நினைவு கூர்ந்து, “அதன் விளக்கத்தை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன். என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்!” என்று கூறினார்.
- “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த மாடுகளை, ஏழு மெலிந்த மாடுகள் உண்பது பற்றியும், ஏழு பசுமையான கதிர்கள், வேறு (ஏழு) காய்ந்த கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் கூறுவீராக! மக்களிடம் (உமது விளக்கத்துடன்) நான் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்கள் (அதனை) அறிந்து கொள்வார்கள்” (என்று கூறினார்.)
அல்குர்ஆன் 12: 45, 46
இவ்வாறு நீண்ட காலத்திற்கு பிறகு யூசுஃப்(அலை) அவர்கள் பற்றி நினைவு வந்து மன்னரின் கனவுக் குறித்து விளக்கம் கேட்கிறார். விளக்கத்தை யூசுஃப்(அலை) அவர்கள் அவருக்கு சொல்லியனுப்புகிறார்கள்.
யூசுஃப்(அலை) அவர்கள் கூறிய விளக்கத்தை மன்னரிடம் தெரிவித்ததும் அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று மன்னர் கட்டளையிடுகிறார்.
இப்போதுதான் யூசுஃப்(அலை) அவர்களின் வரலாற்றில் மன்னரின் அறிமுகமே வருகிறது.
{وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عَلِيمٌ (50
- “அவரை (யூஸுஃபை) என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று மன்னர் கூறினார். (மன்னரின்) தூதுவர் அவரிடம் (யூசுஃப்(அலை) அவர்களிடம்) வந்த போது “உமது எஜமானரிடம் திரும்பிச் சென்று, தமது கைகளை வெட்டிக் கொண்டார்களே அப்பெண்களின் நிலை என்ன? என்று அவரிடம் கேள்! அப்பெண்களின் சூழ்ச்சியை எனது இறைவன் நன்கறிந்தவன்!” என்று கூறினார்.
அல்குர்ஆன் 12: 50
மன்னர் யூசுஃப்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லும் போது, கைகளை அறுத்துக் கொண்ட அந்த பெண்களின் நிலையைப் பற்றி என்னவென்று முதலில் உனது எஜமானரிடம் கேள் என்று கேட்கச் சொல்கிறார்கள்.
ஏனெனில் பாலியல் குற்றமிழைத்தோர் சொல்வது போல் யூசுஃப்(அலை) அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் வைக்கப்பட்டு அதை ஒப்புக் கொண்டு யூசுப் அலை அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை.
மாறாக, வைக்கப்பட்ட ஆதாரங்களும் யூசுஃப்(அலை) அவர்கள் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்கள்தான். அந்த பெண்கள் சுமத்தும் வீண் பழி அங்கு எடுப்படவில்லை. என்றாலும் இவர் சிறிது காலம் சிறையில் இருக்கட்டும் என்ற எண்ணத்தை அல்லாஹ் அவர்களுக்கு தோன்றச் செய்கிறான்.
இவ்வாறுதான் சிறையில் அடைக்கப்பட்டார்களே தவிர ஆதாரங்களை வைத்து சிறையில் அடைக்கவில்லை. எனவே யூசுப் நபி பெண்களின் நிலையை பற்றி கேட்பது மறுவிசாரணை என்றாகாது.
அப்படி என்றால் அது எதற்காக என்ற கேள்வி இங்கு எழலாம்.
முதலாவது சம்பவத்தில் அமைச்சரின் மனைவி தான் குற்றவாளி என்பதும் யூசுஃப்(அலை) அவர்கள் குற்றமற்றவர் என்பதும் அவரின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு நிருபிக்கப்பட்டது. இந்த இடத்தில் மன்னருக்கு எந்த சம்பந்தமுமில்லை.
அடுத்த சம்பவத்தில் உண்மை ஆதாரங்களை வைத்து யூசுஃப்(அலை) குற்றமற்றவர் என்று நிருபிக்கப்பட்டதிலும் மன்னருக்கு எந்த சம்பந்தமுமில்லை.
கனவின் விளக்கத்திற்குப் பிறகு தான் மன்னரின் அறிமுகமே வருகிறது.
பெண்கள் கைகளை அறுத்துக் கொண்ட நிகழ்வில் மற்றவர்கள் உண்மையை அறிந்துக் கொண்டதைப் போன்று மன்னரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு கூறுகிறார்கள்.
மேலும், அந்த பெண்கள்தான் குற்றவாளிகள் என்றும் யூசுஃப்(அலை) அவர்கள் நிரபராதி என்றும் ஆதாரங்கள்தான் தெளிவுப்படுத்தியதே தவிர அந்த பெண்கள் இதுவரை தங்கள் நாவுகளால் யூசுஃப்(அலை) அவர்கள் குறித்து நற்சான்று ஏதும் வழங்கவில்லை. அதனால் அவர்களும் தங்கள் நாவுகளால் நற்சான்று வழங்க வேண்டும் என்பதற்காகவும்தான் யூசுஃப்(அலை) அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.
பின்வரும் வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.
) قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَاوَدْتُنَّ يُوسُفَ عَنْ نَفْسِهِ قُلْنَ حَاشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِنْ سُوءٍ قَالَتِ امْرَأَتُ الْعَزِيزِ الْآنَ حَصْحَصَ الْحَقُّ أَنَا رَاوَدْتُهُ عَنْ نَفْسِهِ وَإِنَّهُ لَمِنَ الصَّادِقِينَ (51)
- “யூஸுஃபை ஆசைக்கு இணங்கவைக்க முயன்றபோது உங்களின் நிலை என்ன?“ என்று மன்னர் கேட்டார். அதற்கு அப்பெண்கள் “அல்லாஹ் தூயவன்! அவரிடம் எந்தத் தீமையையும் நாங்கள் அறியவில்லை” என்று கூறினர். “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். அவர் உண்மையாளர்களில் உள்ளவர்தான்” என்று அமைச்சரின் மனைவி கூறினாள்.
அல்குர்ஆன் 12: 51
ஏனெனில், யூசுஃப்(அலை) அவர்கள் கனவுக்கு விளக்கம் சொன்னவுடன் மன்னர் அவர்களை விடுதலைச் செய்து தனக்கு நெருக்கமாக்கிக் கொள்ள விரும்புகிறார். அப்படியிருக்க, சிறையிலிருந்து தன்னை அழைத்ததும் ஏதோ தான் குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன் என்று மன்னர் விளங்ககூடாது என்பதற்காக அவர் அழைக்கும் போது நான் குற்றமற்றவனாக இருந்தும்தான் சிறைவாசத்தை அனுபவித்தேன் என்று மற்றவர்கள் அறிந்துக் கொண்டதைப் போன்று மன்னரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அமைச்சரின் மனைவி மற்றும் அந்த பெண்கள் தங்கள் நாவுகளால் நற்சான்று வழங்குவதற்காகவும்தான் இவ்வாறு கேட்கச் சொல்கிறார்களேத் தவிர இதில் மறுவிசாரனை என்பதற்கெல்லாம் எந்த இடம்பாடும் இல்லை.
மற்ற பெண்கள் ஒத்துக் கொண்டதுமே அமைச்சரின் மனைவியும் ஒத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டது என்பதற்காகத்தான் இந்த வார்த்தையை கூறுகிறாளே தவிர மறுவிசாரணை நடத்தித்தான் அவர் குற்றமற்றவர் என்று நிரூபணமானது என்ற கருத்தில் அல்ல.
அடுத்து இந்த வசனத்தின் தொடர்ச்சி,
ذَلِكَ لِيَعْلَمَ أَنِّي لَمْ أَخُنْهُ بِالْغَيْبِ وَأَنَّ اللَّهَ لَا يَهْدِي كَيْدَ الْخَائِنِينَ (52) }{وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ (53) وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ أَسْتَخْلِصْهُ لِنَفْسِي فَلَمَّا كَلَّمَهُ قَالَ إِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِينٌ أَمِينٌ (54)} [يوسف:51 – 54]
- (என் எஜமானர்) மறைவாக இருந்த போது நான் அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதையும், துரோகிகளின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழிகாட்டமாட்டான் என்பதையும் அவர் (மன்னர்) அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் காரணமாகும்.
- “ ‘எனது உள்ளம் (தவறுகளிலிருந்து) தூய்மையானது’ என்று நான் கூறவில்லை. உள்ளம் என்பதே அதிகம் தீமையைத் தூண்டக் கூடியதுதான். எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர. எனது இறைவன் மிக்க மன்னிப்பவன், நிகரில்லா அன்பாளன்” (என்று யூஸுஃப் கூறினார்.)
- “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! அவரை எனக்கான பிரத்யோகமானவராக நியமித்துக் கொள்கிறேன்” என்று மன்னர் கூறினார். அவர் யூஸுஃபிடம் பேசிய போது “இன்றை தினம் நீர் நம்மிடம் பெரும் மதிப்பு மிக்கவராகவும், நம்பிக்கைக்குரியவராகவம் இருக்கிறீர்” என்று கூறினார்.
அல்குர்ஆன் 12: 51
இவ்வாறு பெண்களிடம் என்னைப் பற்றி கேளுங்கள் என்று யூசுஃப்(அலை) அவர்கள் சொன்னதற்கு காரணம் தான் குற்றமற்றவன் மன்னர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்று மேலே கூறியிருந்தோம். அதை இநத 53வது வசனம் எடுத்துரைக்கிறது.
அமைச்சரின் மனைவி உட்பட மற்ற அனைத்து பெண்களும் நற்சான்று கூறுவதிலிருந்து இவர் அமைச்சருக்கு துரோகம் செய்யவில்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது.
இந்த வசனத்தில் லியஃலம என்ற அரபிசொல்தான் அவர் அறிவதற்காக என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைக்கு இதுநாள் வரை அமைச்சர் அறிந்துக் கொள்வதற்காக என்று அர்த்தம் செய்திருந்தோம். ஆனால் அது சரியான அர்த்தம் அல்ல என்று முழு வரலாறையும் படிக்கும் போது தெரிகிறது.
மேலே நாம் சொன்னது போல் அமைச்சர் ஒவ்வொரு சம்பவத்திலும் யூசுஃப்(அலை) அவர்கள் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களை அறிந்துதான் இருந்தார்.
அறியாதவர் யார் என்றால் மன்னர் தான். அதனால், ஏற்கனவே அறிந்தவர் அறிய வேண்டும் என்பதற்காக என்று சொல்வது பொருத்தமானதாக இல்லை.
அறியாத மன்னர் அறிய வேண்டும் என்று சொல்வதுதான் பொருத்தமாக தெரிகிறது.
எனவே, யூசுஃப்(அலை) அவர்கள் வரலாற்றை பாலியல் குற்றமிழைத்தோர் தங்களுக்கு ஏற்றாற் போல் தங்கள் குற்றத்தை மறைப்பதற்காகத்தான் திரித்துக் கூறுகிறார்களே தவிர அந்த வரலாற்றில் எந்த ஆதாரமும் அவர்களுக்கு இல்லை என்பதை இந்த ஆக்கத்தின் வாயிலாக தெளிவுப்படுத்திக் கொள்கிறோம்.