எட்டு சிறுத்தைகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளாரே பிரதமர் மோடி?

பிரதமர் மோடி அவர்கள் தனது 72 வது பிறந்த நாளை முன்னிட்டு நமீபியா நாட்டிலிருந்து எட்டு சிறுத்தைகளை விலைக்கு வாங்கியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பூங்கா ஒன்றில் பாதுகாக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வனப்பகுதிக்கு அவை திறந்து விடப்படுகின்றன.
இதுவரை நாட்டின் வளங்கள் எல்லாவற்றையும் தனியாருக்கு விற்று வந்த பிரதமர் மோடி அவர்கள் முதல் முறையாக விலைக்கு வாங்கி உள்ளார்.
நாட்டு மக்களுக்கு பலன் தரும் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்று விட்டு மக்களுக்கு எந்தப் பலனையும் தராத சிறுத்தைகளை விலைக்கு வாங்கி அர்ப்பணிப்பதாக கூறுவதெல்லாம் மோடி அவர்களின் தனித்துவம்.
நடிகர் பிரகாஷ்ராஜ் மோடி அவர்களின் இந்தச் செயலை விமர்சிக்கும் விதமாக சீட்டாவை (சிறுத்தைகளை) கொண்டு வருவது இருக்கட்டும். சீட்டர்களை (மோசடியாளர்களை) எப்போது கொண்டு வருவீர்கள் என்று கேட்டுள்ளார்.
பிரகாஷ்ராஜ் கேட்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.
மோடி அவர்கள் கொண்டு வர வேண்டியது சிறுத்தைகளை அல்ல.
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் ஏராளமான கருப்பு பணத்தை வைத்திருக்கிறார்கள். அதை மீட்டு கொண்டு வரப்போகிறேன். ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் தரப்போகிறேன் என்று மோடி வாக்குறுதி கொடுத்தார் அல்லவா?
அவர் சொன்னபடியே அந்தக் கருப்பு பணத்தை மீட்டெடுத்து அதனை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கட்டும்.
மக்களின் வரிப்பணத்தில் ஏராளமான சலுகைகளைப் பெற்று நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி பல்லாயிரம் கோடிகளை விழுங்கிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட மோசடி மன்னர்களை நாடு கடத்தி அவர்களிடமிருந்து ஏமாற்றிய அத்தொகையை வசூலித்து அதனை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கட்டும்.
நாட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, ரயில்வே என பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்கும் போக்கை கைவிட்டு அவற்றை மீண்டும் நாட்டு மக்களுக்கே அர்ப்பணிக்கட்டும்.
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அதை நாட்டு இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கட்டும்.
இதையெல்லாம் விட்டு விட்டு எங்கோ உள்ள சிறுத்தைகளை விலைக்கு வாங்கி அர்ப்பணிப்பதால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
மயில்கள், சிறுத்தைகள் பக்கம் காட்டும் கவனத்தையும் கரிசனத்தையும் நாட்டு மக்களின் பரிதாப நிலையின் பக்கம் பிரதமர் காட்டுவது எப்போது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.