ஹிஜாப் போராட்டத்தில் பேசிய TNTJ பேச்சாளர்கள் கைது குறித்த நிலைப்பாடு என்ன?

சமீபத்தில் ஹிஜாப் தடை என்கிற கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஓரிரு இடங்களில் சிலர் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார்கள் எனக்கூறி காவல்துறையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இக்கருத்தை ஆதரிக்கிறது என சிலர் தவறாக சித்தரிக்க முற்படுகிறார்கள்.
எனவே அதற்கான தெளிவை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
வன்முறையிலோ, வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களிலோ இந்த ஜமாஅத்திற்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை.
உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுகளை யார் பேசினாலும் அதில் நமக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது என்பதை நாம் ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருகின்றோம்.
வன்முறை, தீவிரவாதம் போன்ற மனிதகுல விரோத செயல்களுக்கு எதிராக வீரியமிக்க செயல்திட்டங்களையும் மாதக்கணக்கில் பிரச்சாரமாகவே கடந்த காலங்களில் நாம் மேற்கொண்டுள்ளோம்.
இதுவே எங்கள் வழிமுறை.
ஆனால் சமீபத்திய ஹிஜாப் விவகாரம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஓரிருவர் பேசியதை வைத்து இந்த அமைப்பே அக்கருத்தை ஆதரிப்பது போன்ற பொய்ச் சித்திரம் வரையப்படுகிறது. இதில் எள்முனையளவும் உண்மையில்லை.
கடந்த காலங்களில் ஜமாஅத்தின் விதிகளை மீறி வரம்பு கடந்து பேசுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளையும் நாம் எடுக்கத் தயங்கியதில்லை .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு இந்திய ஜனநாயக நெறிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஒரு அமைப்பாகும்.
இந்திய இறையாண்மைக்கு எதிரான எந்தப் போக்கும் இவ்வமைப்பின் செயல்பாடுகளில் இல்லை. எங்களின் எல்லாவிதமான செயல்பாடுகளையும் வெளிப்படையாகத்தான் நாம் மேற்கொண்டு வருகிறோம். இதை தமிழக அரசும் , காவல்துறையும், அரசு இயந்திரங்களும் நன்கறியும்.
மனிதநேயப் பணிகளில் முன்னோடியாகத் திகழும் இந்த ஜமாஅத் மதமாச்சரியங்களின்றி எல்லா சமுதாய மக்களுக்கும் தொண்டாற்றி வருகின்றது.
தொடர்ச்சியாக பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இரத்த தானத்தில் இந்த அமைப்பு தான் முதலிடம் பெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல் சுனாமி வெள்ளம், புயல் , போன்ற பேரிடர்களின் போதும் களத்தில் இறங்கி அனைவருக்கும் தொண்டாற்றி வருகின்ற ஒரு அமைப்பாகும். இதற்கு தமிழக மக்களே சாட்சி.
சமீபத்தில் கூட கொரோனா களப்பணிகளை மேற்கொள்ளுவதற்காக தமிழக அரசின் சார்பில் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அதில் கலந்து கொண்டு பின் கொரோனாவில் மரணித்த உடல்களை அடக்கம் செய்ததுடன் ஆம்புலன்ஸ் சேவைகளையும் நிவாரணப் பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு தமிழக அரசின் பாராட்டையும் பெற்றுள்ளோம்.
இவற்றோடு மட்டுமல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தில் மக்களின் உரிமைக்காகவும் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றையும் அறவழியில் நடத்தி வந்துள்ளோம்.
நாம் நடத்தும் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எவ்வித வன்முறையோ சிறிய அளவிலான சலசலப்புகளோ கூட நிகழ்வது கிடையாது, இது காவல்துறை , உளவுத் துறை வட்டாரங்களுக்கு நன்கு தெரியும். இது கட்டுக் கோப்பான அமைப்பு என பல தருணங்களில் அரசு, மற்றும் அதிகாரிகளின் பாராட்டுகளையும் இவ்வமைப்பு பெற்றுள்ளதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரச்சினைக்குரிய விதத்தில் பேசியவர்களும் கூட தாங்கள் பல ஆண்டுகளாக பயணித்து வந்த ஜனநாயக வழிமுறைக்கு மாற்றமாகச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேசியதாகத் தெரியவில்லை.
இருப்பினும் அவர்களிடம் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.