பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி நான் உயிருடன் திரும்பியதற்கு நன்றி என்று சொல்கிறாரே?

 

பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி நான் உயிருடன் திரும்பியதற்கு நன்றி என்று சொல்கிறாரே?
வழக்கம் போல மலிவான அரசியல் செய்கிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் பாஜக சார்பில் நடக்கும் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றார்.
ஹெலிகாப்டர் மூலம் பஞ்சாபின் குறிப்பிட்ட விமான நிலையத்திற்கு வந்து விட்ட பிரதமர் மோடி அவர்கள், வானிலை மோசமாக இருந்ததால் மேற்கொண்டு விமானத்தில் பயணிக்க இயலவில்லை. எனவே சாலை மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தார்.
அப்போது மாநில விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் மேம்பாலத்தின் வழியே பிரதமரின் வாகனக்குழு வந்தபோது பயணம் தடைபட்டது.
சுமார் 20 நிமிடம் மேம்பாலத்திலேயே காத்திருந்து அதன் பிறகு தனது பயணங்களை ரத்து செய்து விட்டு அங்கிருந்து நேராக டெல்லி திரும்பி சென்று விட்டார்.
விமானத்தில் ஏறும் முன் மாநிலப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நான் உயிருடன் திரும்பிவிட்டேன். முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட விவாசாயிகள் மூலம் தனது உயிருக்கு மிகப்பரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது போலவும் அதிலிருந்து எப்படியோ நான் தப்பித்து விட்டேன் என்பதாகப் பிரதமரின் வாசகம் உள்ளது.
இதை மலிவான அரசியல் என்று சொல்லாமல் வேறு எப்படி அழைக்க முடியும்?
பாஜக அரசின் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுக்கவே நாள்தோறும் மக்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
விவாசாயிகளின் உரிமையைப் பறித்து தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக மோடி கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் நாட்டிலுள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்த்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கடும் குளிரிலும் பனியிலும் உறக்கமின்றி போராடினர். ஜனநாயக ரீதியிலான இப்போராட்டத்தில் மொத்தமாக 700 விவசாயிகளை அவர்கள் இழந்துள்ளனர்.
அதன்பிறகே பாஜக அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. இருப்பினும் விவசாயிகளின் மனதில் வலிகளும் காயங்களும் நீங்காமல் உள்ளன.
அந்த வலிகளை வெளிப்படுத்தும் விதமாகவே மோடி அவர்கள் பஞ்சாபிற்கு வருகை தருகிறார் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்ட போதே பிரதமருக்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் தயாராகி விட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தர்ணா போராட்டம், ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடி ஏந்திய பலகைகள் என்று விவசாயிகள் ஆங்காங்கே போராடினர்.
அப்படித்தான் இந்தச் சாலையிலும் அமர்ந்து அமைதியாக போராடி உள்ளனர்.
இத்தனைக்கும் பிரதமர் இந்தச் சாலை வழியாக வருகிறார் என்று எங்களுக்கு தெரியாது. மோடி அவர்களை தடுப்பதோ சிறைப்படுத்துவதோ எங்கள் நோக்கமல்ல என்று தெளிவாகவே விவாசாயிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மோடி அவர்கள் நான் உயிருடன் திரும்பி விட்டேன் என்று குறிப்பிடும் அளவு பாரதூரமாக என்ன நடந்து விட்டது.
விவசாயிகள் பிரதமரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடத்தினார்களா? கையில் துப்பாக்கி ஏந்தியவர்களாக காத்திருந்தார்களா?
டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது பாஜகவை சார்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களே அது போல மோடியின் வாகனங்களை நோக்கி சுட்டார்களா?
ஹரித்துவாரில் முஸ்லிம்களை கருவறுக்க வேண்டும் என்று சங்பரிவார சாமிகள் முழக்கமிட்டதை போன்று மோடியை கொல்லாமல் விடமாட்டோம் என்று விவசாயிகள் முழக்கமிட்டார்களா?
போராடிய விவசாயிகளிடமிருந்து எந்தவொரு சிறுவன்முறையும் நடந்திராமல் அமைதி வழியில் போராடிய விவசாயிகளை கொலையாளிகளாக, வன்முறையாளர்களாக மோடி அவர்கள் சித்தரிக்க வேண்டிய அவசியம் என்ன?
கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் அமைதி வழியில் போராடினார்களே? அதில் எந்த வன்முறையும் ஏற்பட இல்லையே.
உ.பி லக்கிம்பூரில் பாஜகவைச் சார்ந்தவர்கள் தானே காரை ஏற்றி 20 அப்பாவி விவசாயிகளை கொலை செய்தார்கள்?
அமைதியாக போராடியதை தவிர வேறு என்ன குற்றத்தை செய்து விட்டார்கள் பஞ்சாப் விவசாயிகள்?
பல உயிர்களை பலி கொடுத்தும் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் அவர்களையே கொலையாளிகளாக சித்தரிக்கிறார் என்றால் இது மோடியின் கைதேர்ந்த அரசியல் நாடகம் என்றே மக்கள் கருதுவார்கள்.
இதில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியை பொறுத்தவரை பயண விதிகளை சரியாக பேணுபவராக அவர் இருந்ததில்லை. தனது பாதுகாப்பிற்காக விதிக்கப்படும் பாகாப்பு விதிகளை அவரே மீறுபவராக இருந்துள்ளார்.
கடந்த 2017 இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்லும் போது சாலை வழியிலான பயணத்திற்கு பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்தது. உடனே விமான வழி பயணத்தை தேர்வு செய்து பயணத்தை தொடர்ந்தார்.
உச்சகட்ட பாதுகாப்பை பெறுபவர்கள் குறிப்பிட்ட விமானத்தில் தான் பயணிக்க வேண்டும் என்றிருக்கும் போது அந்த விதிகளை பேணாமல் ஒரே இன்ஜின் உள்ள விமானத்தில் பயணித்தார்.
இது அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இப்படி தனது பாதுகாப்பு விதிகளை தானே மீறக்கூடிய நபராகவே மோடி இருந்திருக்கிறார். இந்த பஞ்சாப் பயணத்திலும் அப்படியான கோளாறு நடந்திருப்பதாக தெரிகிறது.
இந்தப் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடி அனைத்தையும் ஒட்டு மொத்தமாக மாநில அரசின் மீது போட்டு அரசியல் ஆதாயம் தேடுவதில் அர்த்தம் இல்லை.
மத்திய உளவுத்துறை என்னவானது? பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய எஸ்.பி.ஜி எனும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரின் செயல்பாடு என்னவானது?
தனது தோல்விகளை மறைக்கவும் வாக்கு வங்கியை அதிகரிக்கவும் எதையாவது அரசியலாக்குவது பிரதமரின் வழமை.
இப்போதும் அப்படியொரு நாடகம் அரங்கேறியுள்ளதாகவே மக்கள் கருதுகிறார்கள்.
பிரதமர் மோடி என்றில்லை. எவரது உயிரையும் ஜனநாயகத்திற்கு விரோதமாக அச்சுறுத்துவதை ஏற்க முடியாது. அதே நேரம் ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களை உயிருக்கே அச்சுறுத்தல் விடுத்ததாக புலம்புவதை மலிவான அரசியல் நாடகம் என்று தான் கடந்து செல்ல முடியும்.