பித்அத்களை உடைக்க வந்த இறைத்தூதர்கள்

இறைவனால் அனுப்பட்ட இறைத்தூதர்களின் நோக்கத்தை ஒருவர் சிந்தித்தால், திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆதாரம் இல்லாமல் மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் அனைத்து அமல்களும் வீணானவை என்பதையும், அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும் இலகுவாகப் புரிந்து கொள்வார்.

இறைவன் சொல்லாத வணக்க வழிபாடுகளைச் செய்து ஷைத்தானின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வந்த மக்களைத் திருத்துவதற்காகவே நபிமார்கள் இவ்வுலகத்திற்கு அனுப்பட்டார்கள்.

{وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ}

“அல்லாஹ்வை வணங்குங்கள்! ஷைத்தான்க(ளின் வழிக)ளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்!” என்று ஒவ்வாரு சமுதாயத்திற்கும் தூதரை அனுப்பினோம்.
அல்குர்ஆன் 16:36

ஷைத்தான் காட்டிய வழிகளை விட்டுவிட்டு இறைத்தூதர் காட்டும் அல்லாஹ்வின் வழிகளைப் பின்பற்றவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்.

ஆதாரமில்லாமல் மக்கள் பின்பற்றும் வழிகளை ஏற்கக்கூடாது

{وَأَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا }

(நபியே!) உண்மையுடன் இவ்வேதத்தை உமக்கு அருளியுள்ளோம். இது தனக்கு முன்னிருந்த வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் உள்ளது. அல்லாஹ் அருளியதைக் கொண்டு அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் உண்மை வந்த பிறகு அதை விடுத்து, அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் மார்க்கச் சட்டத்தையும் வழிமுறையையும் ஏற்படுத்தியுள்ளோம்.
அல்குர்ஆன் 5:48

நாம் பின்பற்றுவதற்கென அல்லாஹ் மார்க்கச் சட்டங்களையும் வழிமுறைகளையும் ஏற்பாடு செய்துள்ளான். அந்த வழிமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர ஊர் பழக்கங்கள், ஆதாரமில்லாமல் சொல்லும் ஆலிம்களின் வழிகாட்டுதல்கள், முன்னோர்களின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றைப் பின்பற்றக் கூடாது.

இறைவழியே நேர்வழி
உலகத்தில் எவரின் வழிகாட்டுதலும் நேர்வழியாக இருக்க முடியாது. படைத்தவன் காட்டும் வழியே நேர்வழியாகும். அவன் காட்டிய வழியின் அடிப்படையில் நடப்பவர் மட்டுமே மறுமையில் வெற்றி பெறுவார்.

{وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ (120)}

நீர் அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றும் வரை யூதர்களும், கிறித்தவர்களும் உம்மைப் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே நேர்வழி” என்று கூறுவீராக! உமக்கு ஞானம் வந்த பிறகு அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பவனோ, உதவி செய்பவனோ இல்லை.
அல்குர்ஆன் 2:120

மனிதர்களின் விருப்பங்களுக்காக அல்லாஹ் காட்டித் தராத அமல்களைச் செய்வது அல்லாஹ்விடம் பெரும் குற்றமாக அமையும். இது விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
யூதர்கள் இறைவிருப்பத்தை விட்டுவிட்டுத் தமது சுய விருப்பங்களைப் பின்பற்றியதால்தான் வழிதவறிப் போனார்கள்.

பலவழிகளைப் பின்பற்றக் கூடாது
படைத்தவன் காட்டிய ஒரு வழியே நேர்வழியாகும். ஷாஃபி, ஹனஃபி என்ற பெயர்களில் மார்க்கத்தைப் பல பிரிவுகளாக ஆக்கி அனைத்தும் சரியான வழிதான் என்பது திருக்குர்ஆன் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும்.

{ وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ }

இதுவே எனது நேரான வழியாகும். எனவே இதனைப் பின்பற்றுங்கள்! (வேறு) வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அது அவனது வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையோர் ஆவதற்காக அவன் இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்.
அல்குர்ஆன் 6:103

பல வழிகளைப் பின்பற்றத் தொடங்கினால் அல்லாஹ்வின் நேர்வழியை விட்டும் நாம் விலகிச் சென்றுவிடுவோம்.

மனித விருப்பங்கள் மார்க்கமாகாது

{ ثُمَّ جَعَلْنَاكَ عَلَى شَرِيعَةٍ مِنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ }

(நபியே!) பின்னர் ஒரு மார்க்க வழிமுறையில் உம்மை ஆக்கியுள்ளோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்!
அல்குர்ஆன் 45:18

மனிதன், தான் விரும்பியவாறெல்லாம் வாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ், இறைத்தூதர்களுக்கு தனித்தனியான வழிகாட்டும் முறைகளை ஏற்படுத்தியுள்ளான். அதை நாம் பின்பற்ற வேண்டுமெனவும் கட்டளையிட்டுள்ளான்.

யூகத்தையே பின்பற்றுகிறார்கள்

{وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ (116)}

பூமியில் இருப்பவர்களில் பெரும்பான்மை யினருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடுவார்கள்.
அல்குர்ஆன் 6:116

திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் ஆதாரமில்லாத எல்லாவிதமான அமல்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவை. இதற்கு ஆதாரங்கள் மனிதர்களின் யூகங்களாத்தான் இருக்கும். பெரும்பான்மை மக்கள் இதையே ஆதாரமாக எடுத்து நடைமுறைப்படுத்துகிறார்கள். பெரும்பான்மை என்ற அடிப்படையை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஒரு செயலைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை எடுத்தால் நாம் வழிகேட்டில் செல்ல நேரிடும் என இந்த வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

பித்அத் செய்வோர் இறைவனுக்கே பாடம் எடுப்பவர்கள்!

{قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (16)}

“வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்க, நீங்கள் அவனுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறீர்களா?” என்று கேட்பீராக! ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 49:16

{فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِاٰیٰتِہٖ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الۡمُجۡرِمُوۡنَ }

அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கூறுபவனைவிட அநியாயக்காரன் யார்? குற்றவாளிகள் வெற்றியடைய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 10:17

உலகத்தின் அனைத்து விஷயங்களையும் அறிந்திருக்கும் அல்லாஹ் சொல்லாத ஒன்று மார்க்கத்தின் சட்டமாகுமா?
அல்லாஹ் சொல்லாத ஒரு அமலை மார்க்கம் என்று சொன்னால் அல்லாஹ்விற்கு அந்த அமல், மார்க்கக் கடமை என்று தெரியாமல் போய்விட்டதா? அல்லது அல்லாஹ் அதைச் சொல்ல மறந்துவிட்டானா?
இறைவனுக்கே நாம் பாடம் நடத்துகிறோமா?
அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
திருக்குர்ஆன், நபிமொழிகளில் ஆதாரம் இல்லாத பித்அத்களை நடைமுறைப்படுத்துவது அல்லாஹ்வின் சட்டங்களையே கேலி செய்வதைப் போன்றதாகும்.

அறியாமைக் கால சட்டங்களை நேசிக்கிறீர்களா?

{أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ (50) }

அறியாமைக் கால தீர்ப்பைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா? உறுதியாக நம்பும் சமுதாயத்திற்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவன் யார்?
அல்குர்ஆன் 5:50

இறைவன் அழகான மார்க்கச் சட்டங்களைத் தந்திருக்கும் போது ஏன் மார்க்கத்தில் இல்லாத புதுமையான அமல்களை உருவாக்க வேண்டும்?
இந்தப் புதுமையான அமல்கள் அல்லாஹ் காட்டித் தந்திருக்கும் அமல்களைவிடச் சிறந்ததா?
சிந்திப்போம்! பித்அத்துகளை ஒழிப்போம்!