பிறை பார்த்து அறிவிப்பு செய்வதில் டவுன் ஹாஜியின் அறிவிப்புகள் திருப்தியாக உள்ளனவா?

இஸ்லாமியர்களின் பெருநாள், நோன்பு உள்ளிட்ட வணக்க வழிபாடுகள் பிறை பார்க்கப்படுவதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு தான் தீர்மானிக்க வேண்டுமென வழிகாட்டியுள்ளார்கள்.
தமிழக அரசு பிறை பார்ப்பதற்கென்றே டவுன் காஜி தலைமையிலான ஒரு குழுவை நியமித்துள்ளது.
டவுன் காஜியின் செயல்பாடுகள் திருப்தியாக உள்ளதா என்றால் இல்லை எனலாம்.
பிறை விஷயத்தில் டவுன் காஜி தானும் குழம்பி, பிறரையும் குழப்பும் வகையில் பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகின்றார்.
பிறை குறித்த தகவலை உறுதி செய்து தமிழக முஸ்லிம்களுக்கும் அரசுக்கும் அறிவிப்பது தான் டவுன் ஹாஜிக்கு அரசு வழங்கியிருக்கும் ஒரே பணி. இதைத் தாண்டி மார்க்க விஷயத்திற்காகவோ, சமுதாய நலனுக்காகவோ அவர்கள் குரல் எழுப்புவதுமில்லை. மக்கள் அதை எதிர் பார்ப்பதுமில்லை.
பிறை வழிகாட்டும் பணிக்காக அரசு தலைமை காஜி மட்டுமல்ல, மாவட்டந்தோறும் காஜிகளும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இவர்களைக் கொண்டு பிறை குறித்த தகவல் எங்கிருந்து வருகிறதோ சம்பந்தப்பட்ட மாவட்ட காஜியை அனுப்பி விசாரித்து உறுதி செய்து மக்களுக்கு தெளிவாக பிறை மற்றும் பெருநாள் அறிவிப்புகளைச் செய்ய முடியும்.
இது எதையுமே அவர்கள் செய்வதில்லை. எனவே செய்யாத வேலைக்காக இத்தனைப் பேரை நியமியத்திருப்பது ஓடாத ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமியா ? என்ற பழமொழியை நமக்கு நினைவு படுத்துகின்றது.
இந்த மாத முஹர்ரம் பிறை தமிழகத்தில் தெரிந்திருந்தும் கூட தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை என்று அறிவிப்பு செய்யபட்டுள்ளது.
அரசு டவுன் காஜியின் அளவுகோல் தான் என்ன?
பிறை விஷயத்தில் டவுன் காஜியின் நிலை தான் என்ன ? என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இடியாப்பச் சிக்கலை மிஞ்சும் சிக்கல்கள் நிறைந்தவை தான் டவுன் காஜியின் பிறை நிலைபாடுகள்.
அன்று முதல் இன்று வரை அவை தொடர் கதையாகி வருகின்றது.
எவ்வூர் பிறையை அவர் ஏற்பார்; எவ்வூர் பிறையை அவர் மறுப்பார் என்பதையெல்லாம் எவராலும் வரையறுத்து விட முடியாது.
எட்ட உள்ளதையும் ஏற்பார், கிட்ட உள்ளதையும் மறுப்பார்.
இவரது பிறை நிலைபாடுகள் பல வினோதங்கள் நிறைந்தவை. 2010 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதத்திற்கான பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை.
துல்கஃதாவை 30 ஆக பூர்த்தி செய்த அடிப்படையில் 18.11.2010 அன்று சத்தியவான்கள் பக்ரீத் பெருநாளைக் கொண்டாடினர்.
ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதாகச் சொல்லி 17.11.2010 அன்று பெருநாள் என மார்க்க விரோதமாக அறிவிப்பை வெளியிட்டார். இந்த மார்க்க முரணான அறிவிப்பிற்கு ஷரியத் முறை அறிவிப்பு என்று பெயர் வேறு.
அதற்கு முந்தைய ரமலானில் தான் கேராளாவில் தென்பட்ட பிறைத் தகவலை ஏற்க மறுத்து தமிழகத்தில் இருந்து வந்தால் தான் ஏற்பேன் என்று கூறியிருந்தார். ஒரு மூன்று மாதத்திற்குள் ஜிம்னாஸ்டிக் வீரர்களே தோற்கும் அளவிற்கு அபாரமான ஒரு அந்தர் பல்டி அடித்தார்.
பின்பு ஒரு முறை கர்நாடக மாநிலம் குல்பர்க்காவில் பிறை தென்பட்டது என அறிவிப்புச் செய்தார்.
தற்போது தமிழகத்தில் பார்க்கும் பிறைத் தகவலையே மறுத்து வருகின்றார்.
மாநபியின் வழிமுறையை மணமுரண்டாய் மறுப்பதா?
பிறை பார்த்து நோன்பு நோற்க வேண்டும்; பிறை பார்த்து நோன்பை விட வேண்டும் என்பதைத் தான் மாநபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
இதன் பொருள் ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும் என்பதுதான். தத்தமது பகுதி எது என்ற எல்லை நிர்ணயத்தை மக்களின் முடிவிற்கே நபியவர்கள் விட்டு விட்டார்கள்.
தமிழகத்தில் உள்ள அதிகமான மக்கள் தமிழக எல்லைக்குள் எங்கு பிறை தெரிந்தாலும் ஏற்க வேண்டும் என்பதைத்தான் பெரும்பான்மையாக விரும்புகின்றனர்.
நபியவர்கள் கூறியதில் இரண்டு விஷயங்கள் உள்ளது. ஒன்று பிறையை பார்க்க வேண்டும். இரண்டாவதாக பிறை பார்த்ததாக ஒருவர் கூறும் தகவலை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்வதற்கு கூடுதலாக பிறை பார்த்தவர்களிடம் விசாரிப்பது தவறல்ல.
ஆனால் டவுன் ஹாஜிகளும், அவரது வகையறாக்களும் சரியான முறையில் பிறை பார்ப்பதே கிடையாது.
பிறை பார்க்க வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளை மக்களுக்கு அறிவித்து பிறைபார்க்க ஆர்வமூட்டுவது கிடையாது.
பிறைத் தகவல் வருவதற்காக காத்திருப்பது கிடையாது.
யாரேனும் பிறை பார்த்துவிட்டு வந்து தகவல் சொன்னால் கூட அதை ஏற்பது கிடையாது.
அவசர கதியில் டிவி சேனல்களுக்கு செய்தி கொடுத்து பிறை தென்படவில்லை எனவே மறுநாள் பெருநாள் என்று அறிவிப்பு போட்டு விடுகின்றனர்.
இப்படி அறிவிப்பு போட்டு விட்டால் அந்த அறிவிப்பு தவறாக இருந்தாலும் கூட அதன் பிறகு எத்தனை பேர் வந்து பிறை கண்டதாய்ச் சொன்னாலும், இன்னும் சிலர் அதற்கு சாட்சியாய் நின்றாலும் அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதே இல்லை.
பெரும்பாலான நேரங்களில் காலண்டரில் எந்த தேதியில் நோன்பு அல்லது பெருநாள் என்று போடப்பட்டுள்ளதோ அதைத்தான் மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர்.
இவ்வாறு அறிவிப்பு செய்வதற்கு டவுன்காஜி என்பவரை நியமிக்க வேண்டிய அவசியமே இல்லை. காலண்டர் அடிப்படையிலேயே இவர்கள் அறிவித்து விட்டுப் போகலாம்.
போரூர் பிறையும் இராயப் பேட்டை பிறையும்
2020 ஆண்டு ரமலான் மாத முடிவில் போரூரில் பிறை தென்பட்டது. இத்தகவல் நமக்கு வந்தது. உடனடியாக விசாரித்து மறுநாள் பெருநாள் என்று அறிவித்தோம்.
இத்தகவலை போரூர் சகோதரர்கள் டவுன் காஜிக்கு எடுத்துச் சொன்ன போதும் அதை ஏற்க மறுத்து விடுகின்றார்.
2021 ஆம் ஆண்டு ரமலான் முடிவில் ராயப் பேட்டையில் சிலர் பிறை பார்த்தனர். அதையும் ஏற்க அவர் மறுத்து விடுகின்றார்.
தற்போது முஹர்ரம் மாதத்திற்கான பிறை நாகை மாவட்டம் கீழ்வேளூரில் தென் பட்டது. அதையும் ஏற்க மறுத்து துல்ஹஜ் மாதம் முப்பதாக பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கின்றார்.
இவ்வாறாக பிறை விஷயத்தில் மார்க்கத்தில் விளையாடி, இலட்சக் கணக்கான மக்களின் வணக்க வழிபாடுகளில் விளையாடி வருகின்றார்.
இதையெல்லாம் நாம் சுட்டிக் காட்டினால் எகிப்தில் படித்தவரை ஏளனம் செய்வதா? என்று சிலர் கேட்கின்றனர். அவர் எந்த நாட்டிலும் படித்திருக்கட்டும். அது நமக்கு பிரச்சனை இல்லை. அவர் பிறை விஷயத்தில் ஏன் குழப்பம் செய்கிறார் என்பது தான் நமது நியாயமான கேள்வி.
சிலோனின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் சலாஹூதீனின் பிடியிலிருந்து விடுபடுவார்களா?
அன்றைய தமிழகம் சிலோன் வானொலியின் சிறைக் கைதியாக இருந்தது. விடுதலைப் புலிகள் தலைதூக்கிய காரணத்தால் அவ்வானொலி வாயிழந்து போனது.
அது வரையில் சிலோன் வானொலியில் தக்பீர் சத்தம் கேட்டால் அதைக் கொண்டு தமிழக இஸ்லாமியர்களும் பெருநாள் கொண்டாடி வந்தார்கள்.
ஆனால் தற்போது சன்மார்க்கத்திற்கு முரணாக டவுன் காஜி சலாஹூத்தீனின் பிறை அறிவிப்பிற்கு பலியாகி இஸ்லாமியர்களில் சிலர் அறியாமையின் காரணத்தினால் பெருநாள் நோன்பு போன்ற மார்க்க விஷயங்களைப் பாழாக்கி வருகின்றனர்.
ஆறுதலான செய்தி என்னவென்றால் தமிழக முஸ்லிம்களில் பலரும் தற்போது டவுன் காஜியின் மார்க்க விரோதப் போக்கை உணரத் துவங்கியிருப்பதுதான்.
ஆலிம்கள் எங்கே?
டவுன் காஜியின் தள்ளாடிப் போன இப்போக்கு தமிழக ஆலிம்கள் பலருக்கும் தெரியாமல் இல்லை,.ஜமாஅத்துல் உலமா சபை, இமாம் கவுன்சில் இன்னும் பல பெயர்களில் இயங்கும் ஆலிம்களும் மற்றும் சமுதாயத் தலைவர்களும் இதைக் கண்டிக்க வேண்டாமா?
மாநபி வழியில் பிறை பார்க்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
பிறைத் தேடல் என்பது ரமலான் மற்றும் துல்ஹஜ் மாதங்களுக்கு மட்டும் உரியதல்ல.
ஒவ்வொரு மாதத்தின் 29 ஆம் நாள் வரும் போதும் பிறை தேட வேண்டும். பிறை தென்பட்டால் அடுத்த மாதக் கணக்கைத் துவக்க வேண்டும். பிறை தென்படாவிட்டால் 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.
இது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முறையாக அறிவிப்பு செய்து பிறை பார்க்க மக்களை ஆர்வமூட்டுகிறது.
பிறைபார்த்த தகவலை தெரிவிப்பதற்காக தொடர்பு எண்களையும் வழங்கி அந்த நேரத்தில் பிறைத் தகவல் ஏதும் வருகின்றனவா என்பதை எதிர்பார்த்து நாம் காத்திருக்கிறோம்.
பின்பு அது குறித்த அறிவிப்பை முறையாக நாம் வெளியிட்டு மக்களுக்கு சரியாக வழிகாட்டுகின்றோம்.
பிறை விஷயத்தில் மக்கள் தூய இஸ்லாத்தின் வழியில் பயணிக்க வேண்டுமென்பதே நம் ஒற்றை நோக்கமாகும்.
பிறை குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்டு சன்மார்க்க வழியில் நடப்பதற்கு இறைவன் கிருபை செய்வானாக.