பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தியுள்ளனர். பன்றியை ஹராம் எனக்கூறும் இஸ்லாம் இதை அனுமதிக்குமா?

 

அமெரிக்க மருத்துவ குழுவால் டேவிட் பென்னட் என்பவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.
பன்றியின் இதயம் உள்ளிட்ட இதர உறுப்புகள் மனிதனுக்கு பொருத்த இயலும் என்று ஆய்வு ரீதியாக சொல்லப்பட்டு வந்தாலும் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தியது உலகிலேயே இது முதல்முறையாகும்.
அதை வெற்றிகரமாக செலுத்தி சாதனை செய்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள். பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட டேவிட் பென்னட் தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்விற்கு பிறகு ஒரு சிலர் உங்களை போலவே ஒரு கேள்வியை முன்வைக்கின்றனர்.
பன்றியை ஹராம் எனக் கூறும் இஸ்லாம் அதன் இதயத்தை மனிதருக்கு பொருத்த அனுமதி வழங்குகின்றதா?
இது தான் அந்த கேள்வி.
இஸ்லாம் இதை எந்த விதத்திலும் தடை செய்யவில்லை. அனுமதி வழங்குகின்றது என்பது தான் அதற்கான விடை.
பன்றியை உண்ணக் கூடாது என்று இஸ்லாம் தடை செய்திருப்பது உண்மை தான்.
அதேவேளை நிர்ப்பந்தம் என்றால் அப்போது அதை உண்பது குற்றமில்லை என்று விலக்களித்துள்ளது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 2:173
பன்றி இறைச்சி என்றில்லை. இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட அனைத்தும் நிர்ப்பந்தமான சூழலில் அனுமதியாகி விடும்.
இது குறித்து குர்ஆன் தெளிவாக விளக்கியுள்ளது.
திருக்குர்ஆன் வசனம் 2:173ல் ஹராம் என்று இஸ்லாம் சொல்வதன் பொருள் அவற்றை சாதாரண நேரத்தில் உண்ணக் கூடாது என்பது தான்.
அதுவே தடை செய்யப்பட்டவற்றை தவிர வேறு எந்த உணவும் கிடைக்கவில்லை என்றால் அந்த நிர்ப்பந்தமான சூழலில் அதை உண்பது தவறாகாது. இஸ்லாம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இவ்வளவு ஏன்?
இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கை தான்.
அல்லாஹ் ஒருவனை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்பதே ஓரிறைக் கொள்கை.
பெற்ற தாய் தந்தையாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும். ஆனால் வணங்க கூடாது என்பது இஸ்லாத்தின் போதனை. வணக்கம், வழிபடுதல் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே.
ஆனால் நிர்ப்பந்தமான சூழலில் ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான சொல்லைக் கூறுவது குற்றமில்லை என்று குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப்பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.
திருக்குர்ஆன் 16:106
இதிலிருந்து நிர்ப்பந்தம் என்று வந்து விட்டால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமான சொல்லைக் கூறுவதற்கு கூட மார்க்கத்தில் அனுமதி உண்டு என்பதை விளங்கலாம்.
பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்துவது சாதாரண ஒன்றல்ல. மிகவும் நிர்ப்பந்தமான சூழலிலேயே அவ்வாறு அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.
உண்ண வேறு உணவு இல்லை எனும் சூழலிலேயே பன்றியின் இறைச்சியை உண்ணலாம் என்றால் தமது இதயம் செயலிழந்து பன்றியின் இதயத்தை வைத்தால் தான் பிழைக்க முடியும் எனும் சூழலில் தாராளமாக பொருத்தலாம். இதற்கு எந்த விதத்திலும் இஸ்லாம் தடையாக இருக்கவில்லை.