இஸ்லாத்தில் விவாகரத்து செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பதைப் போன்று பெண்களுக்கும் உண்டு.
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப்பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்’’ என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்து விடுகிறாயா?’’ என்று கேட்டார்கள். அவர், “ஆம் (தந்து விடுகிறேன்)’’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), “தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை விவாகரத்து செய்து விடுவீராக!’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (5273)
மேற்கண்ட செய்தியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம். ஒரு பெண்ணுக்குக் கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையை திரும்பக் கொடுக்குமாறும், அந்த மஹர் தொகையை கணவன் பெற்றுக் கொண்டு மனைவியை விட்டு விலகுமாறும் கணவனுக்குக் கட்டளையிட வேண்டும், திருமணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்து பெற்றதற்குப் பின்னால் பெண்களே அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. இதன் மூலம் சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
பிடிக்காத கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெண்னை கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூட பரீரா என்ற பெண்ணிடம், பிரிந்த கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பரிந்துரை செய்தார்களே தவிர நிர்பந்திக்கவில்லை.
பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?’ என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் “முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?’ என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா “அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?’’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்’’ என்றார்கள். அப்போது பரீரா, “(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை’’ என்று கூறி விட்டார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (5283)
குலாஃ சட்டங்கள்
1. ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.
2. அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ, அதைக் கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.
3. அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக் கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை ரத்து செய்ய வேண்டும்.
4. கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை.
5. கணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருப்பது போல் மனைவி குலாஃ செய்து பிரியும்போது அழைத்துக் கொள்ள முடியாது.
6. தலாக் விடப்படும்போது மூன்று மாதவிடாய் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் குலாஃ அடிப்படையில் பிரியும்போது ஒரே ஒரு மாதவிடாய்க் காலம் வரை மறுமணம் செய்யக் கூடாது. அதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்துகொள்ளலாம்.
நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். ‘‘எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும்?’’ என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீ ஒரு மாதவிடாய் காலத்தை அடையும்வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்பவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைப்பிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மண விலக்குப் பெற்றுக் கொண்டார்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி)
நூல்: நஸயீ (3441)