பெண்களுக்கான இஃதிகாஃப் சட்டங்கள்

இஃதிகாஃப் – விளக்கம்

இஃதிகாஃப் என்பதற்குத் தங்குதல் என்பது பொருள். இறையில்லத்தில் இறைவனை வணங்குவதற்காக மட்டும் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படுகிறது. இவ்வணக்கத்தைச் செய்பவர்கள் அவசியமான தேவைகளுக்குத் தவிர மற்ற விஷயங்களுக்குப் பள்ளியை விட்டும் வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இஃதிகாஃப் இருக்கக் கூடியவர் நோயாளியை நலம் விசாரிப்பதற்கு (வெளியில்) செல்லாமல் இருப்பதும், ஜனாஸாவில் கலந்து கொள்ளாமல் இருப்பதும், பெண்னைத் தொடாமல் இருப்பதும், அவளைக் கட்டியணைக்காமல் இருப்பதும், மிக அவசியமானவைகளுக்குத் தவிர மற்ற தேவைகளுக்கு வெளியில் செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும். நோன்புடனே தவிர (தனியாக) இஃதிகாஃப் கிடையாது. மக்கள் ஒன்று சேருகின்ற பள்ளியிலே தவிர (வேறு இடத்தில்) இஃதிகாஃப் கிடையாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவுத் (2115)

 

இஃதிகாஃபும், பெண்களும்

இஃதிகாஃப் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் பெண்கள் அனுமதி கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். எனவே பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாம்.

பொதுவாக பள்ளிவாசலில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும். பள்ளிவாசலுக்கு வந்து பெண்களும் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹு தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2041

ஆயிஷா (ரலி) இஃதிகாஃப் இருக்க அனுமதி கோரிய போது நபியவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். எனவே பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம். கணவன், மனைவி ஆகிய இருவரும் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

தமது மனைவியுடன் நபியவர்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 309

அந்நிய ஆணுடன் எந்தப் பெண்ணும் தனியாக இருக்கக் கூடாது என்பது பொதுவான சட்டம். ஆகவே, இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ அல்லது மஹ்ரமான ஆணோ இஃதிகாஃப் இருப்பது அவசியம்.

 

பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாமா?

இதற்குப் பதிலாக, பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடையாது. பள்ளியில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும். இதற்கு மாறாக வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் ஆகும்.

“பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்)’’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அலீ அல்அஸ்தீ

நூல்: பைஹகீ 8573

 

இஃதிகாஃப் இருக்கக் கூடாரம் அமைக்கலாமா?

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப் (ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்துக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பிய போது நான்கு கூடாரங்களைக் கண்டு, “இவை என்ன?’’ என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்வதற்கு நற்செயல் புரியும் எண்ணம் தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத் தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!’’ என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2041

பெண்கள் இஃதிகாஃப் இருந்ததை நபியவர்கள் வெறுக்கவில்லை. அதற்காகப் பள்ளியில் கூடாரங்களை அமைத்துக் கொண்டதைத் தான் கண்டித்தார்கள். அவற்றை அகற்றச் சொன்னார்கள். எனவே, இஃதிகாஃபின் போது கூடாரங்களை அமைப்பது கூடாது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான சட்டம்.

 

மாதவிடாய் பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

குளிப்புக் கடமையாக இருப்பவர் பள்ளிவாசலில் தங்குவது கூடாது. எனவே மாதவிடாய் பெண்கள் இஃதிகாஃப் இருக்க கூடாது.

சிலருக்கு வழக்கமான மாதவிடாய் நாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து உதிரப் போக்கு ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது ஒரு நோயாகும். இந்தப் பாதிப்புள்ளவர்கள் வழக்கமான மாதவிடாய் நாட்களுக்குப் பிறகு குளித்துவிட்டு இஃதிகாஃப் இருக்கலாம். இந்த நிலையில் இஃதிகாஃப் இருப்பது குற்றமில்லை.

நபி (ஸல்) அவர்களுடைய மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 309, 310