பெண்களை இழிவு படுத்தும் வண்ணமும், அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் வண்ணமும் உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்ற பெயரில் பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் ” பெண்களுக்கு ஸலாம் சொல்வது கூடாது” என்பதாகும். இன்றைக்கும் கூட பெரும்பாலான ஊர்களில் பெண்கள் ஸலாம் கூறும் பழக்கம் இல்லாமல் இருப்பதை காணமுடிகிறது. இவற்றை ஊக்குவிக்கும் வண்ணம் சில செய்திகள் நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி சொல்லப்பட்டுள்ளது.
” பெண்களுக்கு ஸலாம் சொல்லுதல் என்பதும் இல்லை. பெண்கள் மீதும் ஸலாம் சொல்வது கடமையில்லை.”
அறிவிப்பவர் : அதாவுல் ஹுராஸானி நூல் : ஹுல்யதுல் அவ்லியா பாகம் : 8 பக்கம் : 58
இந்த செய்தி மிகவும் பலவீனமானதாகும். ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகும். ஏனெனில் இதில் பலவிதமான குறைபாடுகள் உள்ளன.
முதலாவது குறை : இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிவுடையதாகும். முதல் அறிவிப்பாளரிடமிருந்து நபிகளார் வரை தொடர்ந்து இணைந்த வரவில்லை. இந்த செய்தியை நபியவர்களிடமிருந்து கேட்டவர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. இதனை அறிவிக்கக்கூடிய அதாவுல் ஹுýராஸானி என்பவர் நபித்தோழர் கிடையாது.
இரண்டாவது குறை : இந்த செய்தியை அறிவிக்கும் அதா பின் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் அல்குராஸானீ என்பவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ” இவர் மனன சக்தியில் மோசமானவர், தவறிழைக்கக் கூடியவர் , இவரை ஆதாரமாகக் கொள்வது தவறானதாகும்” என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள். ” இவர் விடப்படுவதற்கு தகுதியானவர் ” என்று இமாம் அஹ்மது அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இவருடைய பெரும்பாலான ஹதீஸ்கள் குளறுபடியானவையாகும் என்றும் கூறியுள்ளார்கள் ( அல் முஃனீ ஃபில் லுஅஃபா பாகம் : 2 பக்கம் : 434 )
மேலும் இவர் ஹதீஸ்களில் ”தத்லீஸ்” இருட்டடிப்பு செய்யக் கூடியவர் என்பது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபுத் தஹ்தீப் (பாகம் : 1 பக்கம் : 392) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மூன்றாவது குறை : இந்தச் செய்தியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ” ஸஹ்ல் பின் ஹிஷாம் ” என்பவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.
நான்காவது குறை : இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ள இமாம் அபூ நுஐம் அவர்கள் தனக்கு அறிவித்தவர் யாரென்பதைக் கூறவில்லை. இவ்வாறு பலவிதமான குறைபாடுகள் நிறைந்து காணப்படுதால் இந்த செய்தி ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.
மேலும் இது நபியவர்களின் நடைமுறைக்கும், பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் மாற்றமானதாகும். ஸலாம் சொல்லுதல் என்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு கட்டளையாகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான கட்டளையாகும். இது பெண்களுக்கு மட்டும் பொருந்தாது எனக் கூறினால் அதற்கு தகுந்த ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை (முழுமையான) ஈமான் உள்ளவர்களாக ஆகமுடியாது. ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (93)
நபியவர்கள் ஸலாம் கூறுவதை இறைநம்பிக்கையையும், நேசத்தையும் வளர்க்கக் கூடிய நல்லறமாக சொல்லிக்காட்டுகின்றார்கள். இறைநம்பிக்கை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசியமான ஒன்றாகும். எனவே ஸலாம் கூறுதல் என்பது பெண்களுக்கும் மிக அவசியமான ஒன்றாகும்.
ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுதல்
நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரை விட அதிக வயது குறைந்தவர்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வரும்போது சலாம் கூறி நுழையும் பழக்கம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி கயவர்கள் அவதூறுகளைப் பரப்பியதால் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொண்ட நேரத்திலும் சலாம் சொல்வதை கைவிடவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து சலாம் கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி (2661)
நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று வீட்டாலே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் (தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரகல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்) என்று (மண வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தங்களின் துணைவியர் அனைவரின் இல்லங்களையும் தேடிச் சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொன்னது போன்றே (முகமன்) சொல்ல அவர்களும் ஆயிஷா (ரலி)அவர்கள் சொன்னது போன்று (பிரதிமுகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (4793
நபியவர்கள் பெண்களாகிய தன்னுடைய மனைவிமார்களுக்கு ஸலாம் கூறியுள்ளார்கள். இதிலிருந்து ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுவது அவசியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நபியவர்கள் காலத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியில் பெண்களுக்கு முறையான முறையில் ஸலாம் சொல்லக் கூடிய வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாகத் திகழ்கிறது.
ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : எங்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் தமது விளைநிலத்தின் வாய்க்கால் ஓரத்தில் ஒரு வகை கீரைச் செடியைப் பயிரிடுவார். வெள்ளிக் கிழமை வந்து விட்டால் வேருடன் அந்தச் செடியைப் பிடுங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் போடுவார். பிறகு அதன்மீது கோதுமையின் ஒரு கைப்பிடி அளவு போட்டு அரைப்பார். அந்தக் கீரைச் செடியின் தண்டுப்பகுதிதான் அந்த உணவுக்கே மாமிசம் போல் அமையும். நாங்கள் ஜும்ஆ தொழுதுவிட்டு திரும்பி வந்து அவருக்கு ஸலாம் கூறுவோம். அவர் எங்களுக்கு உணவு படைப்பார். அதை நாங்கள் விழுங்குவோம். அவரது இந்த உணவுக்காக நாங்கள் ஜும்ஆ நாளை விரும்புவோம்.
நூல் : புகாரி (938)
மேற்கண்ட செய்தியில் ஸஹாபாக்கள் ஒரு பெண்ணுக்கு ஸலாம் கூறியுள்ளதை நாம் காண்கிறோம். மேலும் பின்வரக்கூடிய செய்தியும் இதனை உறுதிப்படுத்துகிறது.
அம்ரு பின் மைமூன் அவர்கள் அறிவிக்கிறார்கள் ” நான் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன் தம் மகனை நோக்கி அவர் ” அப்துல்லாஹ்வே மூமின்களின் தாயார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் கூறியதாகச் சொல்லிவிட்டு எனது தோழர்களான நபி (ஸல்), அபூ பக்கர் (ரலி) ஆகிய இருவருடனும் நானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள் எனக் கூறினார்கள். (நூல் : புகாரி 1392)
உமர் (ரலி) அவர்கள் தனது மகனை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று ஸலாம் கூறியபின் அனுமதி கேட்குமாறு கூறுகிறார்கள். இதிலிருந்தும் ஆண்கள் பெண்களுக்கு முறையான அடிப்படையில் ஸலாம் கூறுவது கூடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவது:
உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு நான் நபி அவர்களிடம் சென்றிருந்தேன்.அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார்கள்.நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது அவர்கள் யாரது ? என்றார்கள். நான் ”அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி என்றேன். (நூல் : புகாரி 357)
உம்மு ஹானி (ரலி) அவர்கள் நபியவர்களுக்கு ஸலாம் கூறியிருப்பதிலிருந்து பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் சொல்வதும் மார்க்கத்தில் உள்ளதே என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுவது தொடர்பாகவும், பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவது தொடர்பாகவும் முறையான உறுதியான ஆதாரங்களை நாம் பார்த்தோம். இதிலிருந்தே பெண்களுக்கு ஸலாம் கூறுவது கூடாது என்று வரக்கூடிய ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட ஒன்றுதான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒழுக்கத்தைப் பேணுதல்
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப்படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல் : திர்மிதி (2700)
(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது ”கஸ்அம்” கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (1513)
… (இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் ” அல்லாஹ்வின் தூதரே எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள் என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ” ஒரு இளைஞனையும், இளம்பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதீ (811)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் மத்தியில் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
எனவே பெண்களுக்கு ஸலாம் சொல்லுகின்ற விஷயத்தில் தவறான கண்ணோட்டங்கள், சந்தேகப் படும்படியான இடங்கள், தனிமையான நிலைகள் ஆகிய இடங்களில் கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும். இதுவே ஈமானுக்கும் சமுதாய கட்டுப்பாட்டிற்கும் மிகச் சிறந்ததாகும்.