மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்தில் வரும் 22ம் தேதி பட்டின பிரவேசம் எனும் பெயரில் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்கிச் செல்வது சாதிய அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என்று பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே மயிலாடுதுறை கோட்டாட்சியர் இந்தப் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
உடனே பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட மதவாத கட்சிகளை சார்ந்தோர் இதைக் கையிலெடுத்து அரசியல் செய்தனர்.
பட்டின பிரவேசம் என்பது மத விவகாரம் இதில் அரசு தலையிடக் கூடாது. அரசு தடை செய்தாலும் நாங்கள் நடத்தியே தீருவோம் என்று பேசினர்.
இவற்றை எல்லாம் தாண்டி இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டால் அமைச்சர்கள் வீதியில் நடமாட முடியாது என்று மன்னார்குடி ஜீயர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
தற்போது தமிழக அரசு இந்நிகழ்வுக்கு அனுமதி அளித்துள்ளது.
இது ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மத விவகாரம். இதில் நாம் கருத்து கூற எதுவுமில்லை.
ஆனாலும் மக்கள் சில விஷயத்தை கவனிக்க வேண்டும்.
மனிதனை சக மனிதன் தேவை நிமித்தமாக தூக்கிச் செல்வதை யாரும் குறை கூறவில்லை. ஆனால் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எனும் அடிப்படையில் சாதிய கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட நபரை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்வதை தான் பெரும்பாலான இந்து மக்கள் எதிர்த்தனர்.
அரசு இந்த நடைமுறைக்கு தடை விதிக்கும் போது மத விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்கின்றனர்.
இந்த அணுகுமுறையை முஸ்லிம்களின் விவகாரத்தில் கூறினார்களா?
ஹிஜாப் விவகாரமானாலும் முத்தலாக் நடைமுறையானாலும் அதிலெல்லாம் மத்திய மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் தலையிட்டு முஸ்லிம்களின் உரிமையைப் பறிக்கும் விதமாக செயல்பட்ட போது இது எங்கள் மத விவகாரம்; இதில் அரசு தலையிடக் கூடாது என்று முஸ்லிம்கள் கூறிய போது அது அநியாயம் என்றனர்.
அரசு மற்றும் நீதிமன்றம் உத்தரவிட்டால் அதற்கு கட்டுப்பட வேண்டியது தானே என்று எகத்தாளம் பேசினர். இப்போது மத விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்கின்றனர்.
இது தான் மதவாத பாஜகவின் இரட்டை வேடம்.
அடுத்து இன்னொரு விஷயத்தை கவனியுங்கள்.
அரசு மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் பேசினால் உடனே சட்டம் தன் கடமையை செய்ய விரைவாக புறப்பட்டு விடுகிறது.
ஆனால் மன்னார்குடி ஜீயர் பகிரங்கமாக ஆளும் கட்சியில் இருக்கிற அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
எங்களுக்கு எதிராக செயல்பட்டால் வீதியில் நடமாட முடியாது என்று கொக்கரிக்கின்றார்.
இதுவே சாமானிய மக்கள் இவ்வாறு பேசினால் சும்மா விடுவார்களா?
கழிவறையில் வழுக்கி விழுந்தார் என்று கையில் மாவுகட்டுடன் புகைப்படத்தை பதிவிடுவர். அல்லது கடும் வழக்குகளில் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவர்.
சாமானியர்களுக்கு ஒரு நீதி. ஜீயர்களுக்கு இன்னொரு நீதியா?
ஆளும் அமைச்சர்களுக்குப் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்து விட்டு வெளியில் சுதந்திரமாக சுற்றித்திரிய முடியும் என்றால் சட்டம் இங்கே சாமானியர்களுக்கு மட்டும் தானா?
சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்கின்ற போதுதான் அமைதி தழைக்கும்.
இல்லையேல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுவர் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.