இந்திய அளவில் மூன்றாவது மெகா கூட்டணியை உருவாக்க ஓவைஸி முயற்சி செய்கிறாரே இதை எப்படி பார்ப்பது ?

பித்தம் தலைக்கு ஏறி விட்டது என்று சொன்னால் ஒன்றும் புரியாது எதை தின்றால் பித்தம் தெழியும் என்பதற்காக யார் எதைச் சொன்னாலும் அதைச் சாப்பிடுவதற்குப் பித்தம் பிடித்தவர் தயாராகி விடுவார்…
அதுபோலத்தான் இன்றைக்கு பிஜேபி இருக்கிறது இந்தியா என்கின்ற மெகா கூட்டணி மோடியையும் அமித்ஷாவையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது.
எப்படியாவது இந்தியா கூட்டணியில் இருந்து சில கட்சிகளைக் கழட்டி விட வேண்டும் என்பதற்காக எந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு பிஜேபி தயாராகிவிட்டது.
சனாதனத்தை பற்றித் தெரிந்தோ தெரியாமலோ உதயநிதி ஸ்டாலின் பேச மாதங்கள் கடந்தும் அதை வைத்து நாடு முழுவதும் சனாதன கொள்கையை அனல் குறையாமல் கதகதக்க வைத்துக் ஆதாயம் தேடும் முயற்சியைச் செய்து கொண்டிருக்கிறது பிஜேபி
சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது எனப் பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதிலிருந்தே எந்தளவுக்கு அச்சம் அடைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. சனாதனத்தை பற்றி காங்கிரஸும் மம்தா பானர்ஜியும் கெஜ்ரிவாலும் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும் என அழுத்தம் கொடுத்துப் பார்த்தார்கள் அப்படியாவது கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தி விடலாம் என்கின்ற சிறு நப்பாசை பிஜேபி இடம் இருந்தது.
கெஜ்ரிவாலும், மம்தாவும், காங்கிரசும் சனாதனத்தை பற்றிப் பட்டும் படாமல் பதில் சொல்லி கூட்டணியில் சலசலப்பு வராமல் பார்த்துக் கொண்டார்கள்.
இந்நிலையில் தான் இந்தியா கூட்டணி பிஜேபி கூட்டணி இல்லாத மூன்றாவது ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவதன் மூலம் வடமாநிலங்களில் உள்ள குறிப்பிட்ட சில நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என பிஜேபி தேசிய ஜனநாயகக் கூட்டணி நினைக்கிறது.
அதற்கான கீ மேன் தான் ஓவைசி… காங்கிரசும் பாஜகவும் நம்மை ஆட்சி செய்து விட்டது. நாட்டு மக்களுக்குப் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை மூன்றாவது அணி உருவாவது காலத்தின் கட்டாயம் என்கிறார் ஓவைசி..
50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது 18 ஆண்டுகளுக்கு மேலாக பிஜேபி இந்தியாவை ஆண்டு இருக்கிறது இவர்கள் அல்லாத ஒரு அரசை இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள் இந்த இரண்டு கட்சியும் எதிர்க்கக்கூடிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து மூன்றாவது கூட்டணி உருவாக்கப்படும் அதற்கான முஸ்திபுகள் நடந்து கொண்டிருக்கிறதாகக் கூறுகிறார் ஓவைசி.
மூன்றாவதாக மெகா கூட்டணியை உருவாக்கக் கூடிய அளவிற்கு ஓவைசி பலம் மிக்கவரா என்கின்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு சில மாநில சட்டமன்றத் தேர்தலிலும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் பிஜேபி வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் ஒவைசி எனச் சில புள்ளி விவரங்களை எடுத்துக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
பாஜக அல்லாத வாக்குகள் ஒரே இடத்தில் குவிந்துவிடாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற திட்டவட்டமான நோக்கத்துடன் உபி அரசியலில் ஏஐஎம்ஐஎம் களமிறங்கியதை நமக்கு நினைவு படுத்துகிறார்கள்
உ.பி.யில் 200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 இடங்களையும், 500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 இடங்களையும், 1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49 இடங்களையும், 2000 வாக்குகள் வித்தியாசத்தில் 86 இடங்களையும் பாஜக கைப்பற்றியது. இந்த எல்லா இடங்களிலும் ஓவைசி தாராளமாக…எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு உதவினார்.
பாஜக அல்லாத வாக்குகள் ஒரே இடத்தில் குவிந்துவிடாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற திட்டவட்டமான நோக்கத்துடன் உ.பி அரசியலில் ஏஐஎம்ஐஎம் களமிறங்கியதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
இதன் தொடர்ச்சியாக 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் இது ஒரு அளவிற்குப் பயனைத் தரும் என பிஜேபி தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பார்க்கிறது..
தெலுங்கானா சந்திரசேகர் ராவ் தலைமையில் மூன்றாவது அணி உருவாக்க முடியும் என நம்புகிறது. மாயாவதி, பிஜு ஜனதா தளம் ஒய் ஆர் காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகளோடு இணைந்து மூன்றாவது ஒரு மெகா கூட்டணியை சந்திரசேகர் ராவ் முன்னெடுப்பார் எனத் தான் நம்புவதாகவும் ஒவைசி கூறியிருப்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
இந்தியா கூட்டணி சார்பாக பொது வேட்பாளர் நிறுத்தப்படும் பொழுது கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மிகப்பெரிய அளவிற்கு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்ற உளவுத்துறை தகவல் பிஜேபி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் உதறலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓவைசி முன்னெடுக்கும் மூன்றாவது கூட்டணி எந்த விதத்திலும் நீர்த்துப் போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அமித்ஷா இந்தியக் கூட்டணியில் இருந்து சில கட்சிகளை உருவ முயற்சிகளை மெல்ல மெல்லச் செய்யத் தொடங்கி இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியக் கூட்டணியில் தனக்கு அழைப்பு கொடுக்கப்படாததை பற்றி நான் கவலைப்படவில்லை இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது அதை நோக்கிப் பயணிப்பது தான் எனது இலக்கு என ஓவைசி கூறியிருக்கிறார்.
2024 ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக் கொண்டிருக்கும் இந்தியக் கூட்டணிக்கு ஒவைசியின் மூன்றாவது கூட்டணி முயற்சி குடைச்சலைக் கொடுக்க தொடங்கியிருக்கிறது. இந்திய அளவில் மூன்றாவது கூட்டணி உருவாகாமல் தடுக்க அடுத்த கட்ட முயற்சி என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்தியக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்தும் வருகிறார்கள்.
பாஜக வின் கீ மேனாக தான் ஓவைஸியின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.