நூஹ் – இறைத் தூதர்களில் ஒருவர்

அத்தியாயம் : 71

வசனங்களின் எண்ணிக்கை: 28

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. “துன்புறுத்தும் வேதனை உமது சமுதாயத்திற்கு வருவதற்கு முன்னர் அவர்களை எச்சரிக்கை செய்வீராக!” என்று (கூறி) நூஹை அவரது சமுதாயத்திடம் தூதராக அனுப்பினோம்.590
2. “என் சமுதாயத்தினரே! உங்களுக்கு நான் பகிரங்கமாக எச்சரிப்பவன்” என்று அவர் கூறினார்.
3, 4. “நீங்கள் அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கே அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். உங்களுக்குக் குறிப்பிட்ட தவணைவரை அவகாசமளிப்பான். நீங்கள் அறிவோராக இருந்தால், அல்லாஹ்வின் தவணை வரும்போது அது பிற்படுத்தப்பட மாட்டாது” (என்றும் கூறினார்.)
5, 6. “என் இறைவனே! நான் இரவிலும் பகலிலும் எனது சமுதாயத்தை (நேர்வழிக்கு) அழைத்தேன். ஆனால் எனது அழைப்பு வெருண்டோடுவதையே அவர்களுக்கு அதிகரித்தது” என்று கூறினார்.
7. நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம் தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொண்டனர். தமது ஆடைகளால் மூடிக்கொண்டனர். அவர்கள் (வழிகேட்டில்) நிலைத்திருந்தனர். பெரும் கர்வம் கொண்டனர்.
8. பின்னர் நான் அவர்களைச் சப்தமிட்டு அழைத்தேன்.
9. பின்னர் அவர்களுக்குப் பகிரங்கமாகக் கூறினேன்; மிக இரகசியமாகவும் எடுத்துரைத்தேன்.
10. “உங்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்! அவன் மன்னிப்புமிக்கவனாக இருக்கிறான்” என்று கூறினேன்.
11. அவன் உங்கள்மீது தொடர்மழையைப் பொழியச் செய்வான்.
12. உங்களுக்குச் செல்வங்களையும், ஆண்மக்களையும் வழங்குவான். உங்களுக்குத் தோட்டங்களை ஏற்படுத்துவான். உங்களுக்காக ஆறுகளையும் உருவாக்குவான்.
13. அல்லாஹ்வின் மகத்துவத்தை நம்பாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
14. உங்களை அவன் பல கட்டங்களாகப் படைத்துள்ளான்.
15. எவ்வாறு ஏழு வானங்களை அடுக்கடுக்காக அல்லாஹ் படைத்துள்ளான் என்பதை நீங்கள் சிந்திக்கவில்லையா?
16. அவற்றில் சந்திரனை ஒளியாக ஆக்கினான்; சூரியனை விளக்காக ஆக்கினான்.
17. அல்லாஹ், பூமியிலிருந்தே உங்களைச் சிறந்த முறையில் உருவாக்கி வளரச் செய்தான்.591
18. பின்னர் உங்களை அதிலேயே மீண்டும் கொண்டு சேர்ப்பான். (அதிலிருந்தே) உங்களை உறுதியாக வெளிப்படுத்துவான்.
19, 20. பூமியிலுள்ள அகன்ற பாதைகளில் நீங்கள் செல்வதற்காக அல்லாஹ்வே அதை உங்களுக்கு விரிப்பாக ஆக்கினான்.
21. “என் இறைவனே! இவர்கள் எனக்கு மாறு செய்து விட்டனர். யாருக்கு அவனது செல்வமும், பிள்ளைகளும் நஷ்டத்தை அதிகரிக்குமோ அவனையே பின்பற்றுகின்றனர்” என்று நூஹ் கூறினார்.
22. அவர்கள் மிகப் பெரும் சூழ்ச்சியைச் செய்கின்றனர்.
23. “உங்கள் கடவுள்களை நீங்கள் விட்டுவிடாதீர்கள். மேலும் (சிலைகளான) வத்து, சுவாவு, யகூஸ், யஊக், நஸ்ர் ஆகியவற்றையும் விட்டு விடாதீர்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்.592
24. “அவர்கள் ஏராளமானோரை வழிகெடுத்துள்ளனர். இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர எதையும் அதிகப்படுத்தி விடாதே!” (என்றும் நூஹ் கூறினார்.)
25. அவர்களின் பாவங்களுக்காகவே அவர்கள் மூழ்கடிக்கப்பட்டு, நரகத்திற்கு அனுப்பப்பட்டனர். அல்லாஹ்வையன்றி தமக்கு உதவியாளர்கள் எவரையும் காணவில்லை.
26, 27. “என் இறைவனே! இறைமறுப்பாளர்களில் எந்த வீட்டாரையும் பூமியில் விட்டு விடாதே! அவர்களை நீ விட்டு வைத்தால் உனது அடியார்களை வழிகெடுத்து விடுவார்கள். மறுக்கும் பாவிகளையே அவர்கள் பெற்றெடுப்பார்கள்” என்று நூஹ் இறைஞ்சினார்.
28. “என் இறைவனே! என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளராக என் வீட்டிற்குள் நுழைந்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்தி விடாதே!” (என்றும் இறைஞ்சினார்.)