இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை
முஸ்லிமாக இருப்பவர் சரியான இறை நம்பிக்கை கொண்டிருப்பதுடன் அதைப் பிரதிபலிக்கும் வகையில் தமது செயல்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள செயல் சார்ந்த கடமைகளில் நோன்பு முக்கியமான ஒன்றாகும்.
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 8
நபி (ஸல்) அவர்களிடம், இஸ்லாம் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் போது, அதற்கு அவர்கள் அளித்த பதில் மூலம் நோன்பின் முக்கியத்துவத்தை அறியலாம்.
‘முஹம்மதே! இஸ்லாம் என்றால் என்ன?’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்), ‘அல்லாஹ்வை எதையும் இணைவைக்காமல் அவனை மட்டும் வணங்குவதும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஜகாத் கொடுப்பதும் கஅபாவில் ஹஜ் செய்வதும் ரமளானில் நோன்பு வைப்பதும்’ என்று பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ 4991
‘நஜ்த் என்ற ஊரைச் சார்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள்’ என்றார்கள். உடனே அவர் ‘அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை’ என்றார்கள்.
அடுத்து ‘ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும்‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் ‘அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமையுண்டா?’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை’ என்றார்கள்.
அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் கூறினார்கள். அதற்கவர் ‘அதைத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை’ என்றார்கள். உடனே அம்மனிதர் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்’ என்று கூறியவாறு திரும்பிச் சென்றார்.
அப்போது ‘இவர் கூறியதற்கேற்ப நடந்தால் வெற்றியடைந்துவிட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: தல்ஹா (ரலி)
நூல்: புகாரி 2678
மேற்கண்ட செய்திகள் மூலம், ரமளானில் நோன்பு வைப்பது முஸ்லிம்களுக்குரிய கட்டாயக் கடமை என்பது தெளிவாகிறது.
முந்தைய சமூகத்திற்கும் நோன்பு கடமை
இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றும் மக்களுக்கு மட்டுமல்ல! முந்தைய நபிமார்களின் சமூகத்திற்கும் நோன்பு கடமையாக இருந்தது. இதனால் நோன்பின் சிறப்பை அறிய முடிகிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 2:184
நோன்பு ஏன் கடமை?
அல்லாஹ்வுக்குப் பயந்து வாழும் போதுதான் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் சரியாக இருக்க முடியும். இத்தகைய இறையச்சத்தை ஏற்படுத்தவே நோன்பு கடமையாக ஆக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 2:184
இறைச்சம் பெறுவதே நோன்பின் நோக்கம் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது. நோன்பு மட்டுமல்ல! இஸ்லாம் கூறியுள்ள அனைத்து வணக்க வழிபாடுகளின் அடிப்படை நோக்கமே இறையச்சத்தை உருவாக்குவதுதான்.
குர்பானி வணக்கத்தின் நோக்கமும் இறையச்சம் பெறுவதுதான்.
அவற்றின் மாமிசங்களோ அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக, உங்களிடம் உள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.
அல்குர்ஆன் 22:37
ஹஜ் செய்வதன் நோக்கமும் இறையச்சம்தான்
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!
அல்குர்ஆன் 2:197
நோன்பு மட்டுமல்லாது தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற அனைத்துக் கடமைகளையும் முறைப்படிச் செய்யும் போது இறையச்சம் அதிகரிக்கும். இதை மேலுள்ள வசனங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நோன்பு மூலம் ஏற்படும் மாற்றம்
நோன்பின் நோக்கம் இறையச்சமே! அந்த இறையச்சத்தின் வெளிப்பாடு பற்றி நபி (ஸல்) அவர்கள் விளக்கி இருக்கிறார்கள். இறையச்சம் பெற்று, தீமைகளை விட்டும் விலகி வாழ்வதற்கு நோன்பு துணை புரியும்.
‘‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் அறியாமையையும் கைவிடாதவர் (நோன்பின் போது) தம் உணவையும் பானத்தையும் (வெறுமனே) கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை’’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6057
பாவங்கள், தீமைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்வதோடு, சக மனிதர்களிடம் வீண்பேச்சுக்கள், சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இணக்கத்தோடு வாழவும் நோன்பு கற்றுத் தருகிறது.
‘‘உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!’ என்று அவர் சொல்லட்டும்!’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1904
மற்றொரு அறிவிப்பில் (புகாரி 1894) ‘‘நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம்; முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ரமளான் நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது?
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு வந்த பிறகு அல்லாஹ் ரமளான் நோன்பைக் கடமையாக்கினான்.
அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.
ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2002
ஹிஜ்ரி 2ஆம் ஆண்டு ரமளான் மாதம் பத்ருப் போர் நடைபெற்றது. அந்தப் போரில் நபித்தோழர்கள் ரமளான் நோன்பு நோற்றவர்களாகக் கலந்து கொண்டார்கள்.
நாங்கள் ரமளான் மாதம் பதினாறாவது நாள் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து போர் புரிந்தோம். அப்போது எங்களில் சிலர் நோன்பு நோற்றிருந்தனர். வேறு சிலர் நோன்பு நோற்காமல் இருந்தனர். அப்போது நோன்பு நோற்றிருந்தவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை சொல்லவில்லை.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 2048
வரலாற்றுத் தகவல்களின்படி, முதன் முதலில் நபியுடன் சேர்ந்து நபித்தோழர்கள் ரமளான் நோன்பு நோற்றவர்களாகப் போரில் கலந்து கொண்டது பத்ரு போரில் தான். அந்தப் போருக்கு முன்பு, நபியவர்கள் ரமளான் நோன்பு நோற்றதாக ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.
மேலும், நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் மொத்தம் ஒன்பது ஆண்டுகள் ரமளான் நோன்பு வைத்துள்ளார்கள். ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரமளான் மாதத்தை அடைவதற்கு முன்பு ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் இறந்து விட்டார்கள்.
இந்த வகையில் பார்த்தாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் முறையாக ரமளான் நோன்பை ஹிஜ்ரி 2ல் தான் வைத்தார்கள் என்று தெரிய வருகிறது.
ஒருவேளை எந்த ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் கூட அதனால் நோன்பு பற்றிய சட்டங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரமளானில் நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?
மற்ற மாதங்களை விட்டு விட்டு ரமளானில் கடமையான நோன்பு வைப்பதற்குரிய காரணம், அந்த மாதத்தில் தான் திருக்குர்ஆனின் வசனங்கள் முதன் முதலில் அருளப்பட்டன.
ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய, நேர்வழியையும் (உண்மை பொய்யை) பிரித்தறிவிப்பதையும் தெளிவுபடுத்தும் சான்றுகளைக் கொண்ட இந்தக் குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளட்டும்.
அல்குர்ஆன் 2:185
குர்ஆன் இறங்கிய இரவின் சிறப்பு
ரமளான் மாதத்திலுள்ள ஓர் இரவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டது. அந்த இரவுக்கு பாக்கியம் நிறைந்த இரவு – லைலத்துல் கத்ர் என்று இஸ்லாத்தில் கூறப்படுகிறது.
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.
அல்குர்ஆன் 44:2, 3
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் 97:1-5