புதிதாக முஸ்லிமானவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையா?

டி.என்.பி.எஸ்.ஸி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விண்ணப்ப படிவத்தில் முஸ்லிம்களுக்கு பிறப்பு முஸ்லிமா? அல்லது மதம் மாறியவரா? என்ற துணைக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
மதம் எனும் வகையில் வேறு எந்த மதத்திற்கும் இந்தத் துணைக் கேள்வி கேட்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு மட்டுமே கேட்கப்பட்டுள்ள இக்கேள்வியில் மதம் மாறியவர் எனும் பிரிவை (அதாவது புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் எனும் பிரிவை) தேர்வு செய்தால் முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இடஒதுக்கீடு, இப்பிரிவில் உள்ளோருக்கு பொருந்தாது எனும் பொருளில் பாப் அப் மெசேஜ் ஒன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இது முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மதம் எனும் வகையில் பிறப்பு முஸ்லிமா அல்லது மதம் மாறியவரா என்ற கேள்வி எப்போது இப்படிவத்தில் இணைக்கப்பட்டது. இதற்கான அவசியம் என்ன? அது ஏன் வேறு எந்த மதப்பிரிவுகளுக்கும் இல்லாமல் முஸ்லிம்களுக்கு மட்டும் இருக்கிறது?
முதலில் இது கவனிக்க வேண்டிய அம்சமாகும். இதன் மூலம் தீய நோக்கத்துடனே இப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது.
அடுத்து முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீடு புதிதாக இஸ்லாத்தை ஏற்றோருக்கு இல்லை என்பது அரசின் உத்தரவா? அந்த உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது?
முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகித இடஒதுக்கீடு அரசு ஒதுக்கியுள்ளது. இதை நடைமுறைப்படுத்தி சமத்துவத்தை, சமூக நீதியை அரசு நிலைநாட்ட வேண்டும். அதை விடுத்து அந்த முஸ்லிம்கள் எப்போது முஸ்லிம்களானார்கள் என்று பார்ப்பது அரசின் வேலையா?
ஏதோ மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக பிற மக்கள் எல்லாம் இஸ்லாத்திற்கு படையெடுத்து வருவது போலவும் எனவே அதை தடுத்து நிறுத்த வேண்டுமானால் புதிதாக முஸ்லிமானவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று செயல்படுவது போல தோற்றமளிக்கின்றது.
உண்மையில் இட ஒதுக்கீடுக்காக இஸ்லாம் மார்க்கத்திற்கு யாரும் வருவதில்லை.
சாதிய – தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து தங்களை காக்கவும் இஸ்லாத்தின் இன்ன பிற அம்சங்களால் ஈர்க்கப்பட்டும் தான் ஒருவர் இஸ்லாத்திற்கு வருகிறாரே தவிர இட ஒதுக்கீட்டை கவனத்தில் கொண்டு யாரும் வருவதில்லை.
ஏற்கனவே இட ஒதுக்கீடு உள்ள சமூகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வருகிறார்கள். இத்தனைக்கும் அவர்களது முந்தைய பிரிவை கவனத்தில் கொண்டால் அவர்களுக்கு 3.5 சதவிகிதத்தை விட கூடுதலாகவே இட ஒதுக்கீடு உள்ளது. அத்தகைய பிரிவில் உள்ளவர்களும் கூட இஸ்லாத்திற்கு வருகிறார்கள்.
மூன்றரை சதவிகிதத்தை விட கூடுதலாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இட ஒதுக்கீடு இருக்கும் போதே இஸ்லாத்திற்கு வருகிறார்களே?
எனவே புதிதாக இஸ்லாத்தை ஏற்போரை கொச்சைப்படுத்தும் இந்த போக்கை அரசு கைவிட வேண்டும்.
இது குறித்து பி.டிஆர் பேட்டியளிக்கும் போது முதல்வர் துபையிலிருந்து வந்த தும் இந்தப் பிரச்சனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறியுள்ளார்.
பிற மதங்களுக்கு எப்படி கன்வெர்டட் சம்பந்தமாக துணைக் கேள்வி இல்லையோ அது போலவே முஸ்லிம் எனும் பிரிவிலும் அந்தப் பகுதியை நீக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசு இதில் மெத்தனமின்றி புதிதாக இஸ்லாத்தை ஏற்றோராக இருந்தாலும் அவர்களும் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டு நடைமுறையில் பயன்பெறுமாறு துரித நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு இப்பிரச்சனையை சரிசெய்யும் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.