தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்துப் பணியை பெருமைப்படுத்தும் விதமாக மெரினா கடலுக்கு நடுவில் பேனா வடிவிலான சிலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
134 அடி உயரத்தில் நிறுவப்படவுள்ள இச்சிலைக்காக சுமார் 100 கோடிக்கும் நெருக்கமான தொகை செலவிடப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இவையாவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தாம். இது குறித்து அரசுத் தரப்பில் இன்னும் அதிகாரப்பர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அதே வேளை ஆளும் திமுக அரசின் சில அமைச்சர்கள் இது சம்பந்தமாக பேசுவதிலிருந்து அரசுக்கு இப்படி ஒரு திட்டம் உள்ளது என்பதை அறிய முடிகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக கருணாநிதி இச்சமூகத்திற்கு ஆற்றிய பணிகளை எடுத்துச் சொல்ல திமுகவிற்கு உரிமை உள்ளது. ஆனால் அதை நினைவுச் சின்னம் அமைத்து தான் சொல்ல வேண்டும் என்பதில்லை.
ஏற்கனவே மக்கள் வரிப்பணத்தை வீணாக்கி நிறுவப்படும் தலைவர்களின் சிலைகளால் தமிழகமே திணறிக் கொண்டிருக்கின்றது.
ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காத தலைவர்களின் சிலைகளின் தலையை, கைப்பகுதியை துண்டிப்பதால் சமூக மோதலுக்கு வழிவகுக்கின்றது.
அறிவுத்தளத்தில் அசுர பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் சமூகம் இவையெல்லாம் தேவை தானா? என்பதை சிந்திக்க வேண்டும்.
தலைவர்களுக்கு சிலை நிறுவும் கலாச்சாரமே வேண்டாம் என்று தற்போது மக்கள் கருதி வரும் நிலையில் தலைவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமா? இதனால் யாருக்கு என்ன லாபம்?
இது போன்று ஒவ்வொரு தலைவரின் தொண்டர்களும் அவரது கட்சியை சார்ந்தவர்களும் செய்து வந்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்.
கருணாநிதிக்கு பேனா என்றால் எம்.ஜி.ஆருக்கு தொப்பி, கண்ணாடி வடிவிலான சிலை நிறுவ வேண்டும் என்பார்கள்.
ஜெயலலிதாவிற்கு கர்சிப், வாட்ச் வடிவத்திலான சிலை வைக்க வேண்டும் என்பார்கள்.
காமராஜருக்கு கதர் ஆடை வடிவில் நினைவுச் சின்னம் வைக்கலாம் என்பார்கள்.
இப்படியே போனால் நினைவுச்சின்னங்களால் தமிழகம் திணறும் நிலை ஏற்படும். அறிவார்ந்த மக்களுக்கு இது அழகல்ல.
இது போன்று சிலைகள் அமைப்பதற்கும் நினைவுச்சின்னங்கள் நிறுவுவதற்கும் செலவாகும் பல கோடி ரூபாய் வரிப்பணத்தை பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளுக்கு செலவிடலாம்.
சிதிலமடைந்த பள்ளிக்கட்டிடங்களை சீர் செய்யலாம்.
உயிர் காக்கும் சிகிச்சைக்கு பொருளின்றி சிரமப்படுவோருக்கு உதவலாம்.
சரியான வீடு இல்லாமல் தனியான கழிப்பறை இன்றி கஷ்டப்படுவோர் ஏராளம் இங்கே உள்ளனர். அம்மக்களின் துயர் துடைக்க வழங்கலாம்.
இது போன்ற மக்கள் சிரமத்தை குறைக்க வரிப்பணத்தை செலவிடாமல் மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத நினைவுச் சின்னங்கள் அமைக்க செலவிடுவது ஒரு போதும் ஏற்க முடியாது.
அடுத்து நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்படும் இடத்தை பாருங்கள். மெரினா கடற்கரை. மக்களின் சுற்றுலா தளமாக உள்ள மெரினாவை தலைவர்கள் அடக்கப்படும் இடமாக ஆக்கி வைத்துள்ளார்கள்.
அண்ணா துவங்கி எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கருணாநிதி என்று நாடறிந்த தலைவர்களின் சமாதிகளால் நிரம்பி வழிகிறது மெரினா.
இப்போது அதே பகுதியை மையமிட்டு கடலுக்கு நடுவில் பேனா வடிவ சிலை?
அதிகாரம் கையில் இருந்தால் தமக்கு வேண்டியவர்களின் சமாதிகளை மெரினா அருகில் அடக்கம் செய்ய முடிகிறது. கடலின் நடுப்பகுதிவரை கூட சென்று நினைவுச் சின்னம் அமைக்க முடிகிறது.
ஆனால் அதிகாரமற்ற சாமானியர்களாக இருந்தால் மெரினா கடற்கரைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் கூட செய்ய முடிவதில்லை.
கடலுக்கு நடுவே விவேகானந்தர் நினைவிடம், நீண்ட உயரத்தில் திருவள்ளுவர் சிலை என்று ஒவ்வொன்றையும் மக்கள் சகித்துக் கொள்ளும் போது புதிதாக இன்னொன்று முளைக்கின்றது.
அதிகாரத்தை நோக்கி ஆக்கப்பூர்வ கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது சர்வாதிகாரமாக பரிணமிக்கத் துவங்கிவிடும்.