நபியிடம் துஆ கேட்க ஆதாரம் உண்டா?

சமாதி வழிபாட்டை ஆதரிப்பவர்களுக்கான மறுப்பு

nabi-avliyakaal-uthavi-thedubavargale-marumai-vetri-perum-islamiyargal

 

இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருக்க வேண்டும். அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் அழைத்து பிரார்த்திக்க கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

 


என்னை விட்டுவிட்டு, என் அடியார்களைப் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள இறைமறுப்பாளர்கள் எண்ணுகிறார்களா? இறை மறுப்பாளர்களுக்குத் தங்குமிடமாக நரகத்தைத் தயார்படுத்தியுள்ளோம்.”

(அல்குர்ஆன் 18:102)


நல்லடியார்களால் பரிந்து பேசமுடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-
“அல்லாஹ்வையன்றி வேறு பரிந்துரையாளர்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்களா? “அவர்கள் எதற்கும் அதிகாரம் பெறாதவர்களாகவும், (எதையும்) விளங்கிக் கொள்ளாதவர்களாகவும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக!”

(அல்குர்ஆன் 39:43)


திருக்குர்ஆனை மறுத்து மனோ இச்சையை மார்க்கமாக்கிட துடிக்கும் வழிகெட்ட கூட்டம் அல்லாஹ்வை விடுத்து அல்லாஹ்வின் படைப்பினங்களிடம் துஆ செய்யலாம் என்கின்றனர்.


அல்லாஹ்விடம் எவ்வாறு பிரார்த்தனை மூலம் உதவி கேட்போமோ அது போல மரணித்து விட்ட நபியிடமும் நல்லடியார்களிடமும் பிரார்த்தனை செய்யலாம் என்று வழிகெட்ட கருத்தை பரப்புகின்றனர்.
முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.


அல்லாஹ்வை விட்டு விட்டு மரணித்துவிட்ட அவனது அடியார்களிடம் உதவி கேட்கும் தேவை எந்த முஃமினுக்கும் இல்லை. அப்படிப்பட்ட நிலையையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மரணித்தவர்களுக்கு அந்த ஆற்றலையும் இறைவன் தரவில்லை.


ஏனெனில் அடியார்களிடம் அல்லாஹ் அளவற்ற அருளாளனாக இருக்கிறான்.
மன்னிப்பு கேட்டால் எல்லா பாவங்களையும் மன்னிக்க தயாராக உள்ளான்.
தேவைகளை நிறைவேற்றித்தர தயாராக உள்ளான்.


அடியார்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிப்பேன் என்கிறான்.
என்னை தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? என்கிறான்.
கோரிக்கைகளுக்கு பதிலளிப்பவர் யார் என்கிறான்.


இறந்தவர்கள் மக்களின் கோரிக்கையை செவிமடுக்க மாட்டார்கள். அவர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்க மாட்டார்கள் என்கிறான்.


இதன் அடிப்படையில் அல்லாஹ்வை தவிர ஒரு முஃமினுக்கு வேறு எந்த போக்கிடமும் இல்லை. அவனது பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு யாரும் பதிலளிக்கப்போவதில்லை.
இந்த நிலையில் அல்லாஹ்வை விட்டு அவனது அடியார்களிடம் உதவி தேடலாம் என்பது திருக்குர்ஆனுக்கு எதிரான வழிகெட்ட கருத்தாகும்.


எனினும் மனோஇச்சையை மார்க்கமாக்கும் வழிகெட்ட கூட்டம் திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை மேற்கோள் காட்டி அவற்றுக்கு தவறான விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் அளித்து அதன் மூலம் இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்கின்றனர்.


அண்மையில் கோவையில் ஒருகூட்டம் பிட்நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நபி ஸல் அவர்களிடமும் அவ்லியாக்களிடமும் உதவி தேடுபவர்களே மறுமையில் வெற்றிபெறும் உண்மை முஸ்லிம்கள் என்பது தான் நோட்டீசின் தலைப்பு.


நோட்டீசின் உள்ளே ஆதாரங்கள் எனும் பெயரில் அவர்கள் கூறியதையும் அதன் உண்மை நிலையையும் அறிந்து கொள்வோம்.


1. யார் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், இறைநம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்டார்களோ அத்தகைய அல்லாஹ்வின் படையினரே வெற்றியாளர்கள்.


5 56. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இறைநேசர்களையும் உதவியாளர்களாக ஆக்குகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.


எனவே நபியிடமும் மகான்களிடமும் உதவி தேடுமாறு அல்லாஹ்வே கூறிவிட்டான் என்று இவ்வசனத்தின் மூலம் கூறுகிறார்கள்.


வழிகெட்ட தங்களது கொள்கையை பரப்ப திருக்குர்ஆனில் எத்தகைய தில்லுமுல்லு வேலைகளையும் பார்ப்பார்கள் என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றகும்.


இவர்கள் குறிப்பிட்ட வசனம் இறந்தவர்களிடம் உதவி தேடுவதை பற்றி பேசவில்லை. மாறாக உலகில் வாழும் போது முஃமின்கள் யாரை தமது பொறுப்பாளர்களாக, உற்ற நண்பர்களாக, ஆட்சியாளர்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி எடுத்துக் கூறும் வசனமாகும்.


இவ்வசனத்திற்கு முந்தைய – பிந்தைய வசனங்களை படித்து பார்த்தாலே இக்கருத்து தெளிவாக புரியலாம்.


அல்லாஹ்வும், அவனது தூதரும், இறைநம்பிக்கை கொண்டோருமே உங்களது பொறுப்பாளர்கள். (இறைநம்பிக்கை கொண்ட) அவர்கள் பணிந்தவர்களாகத் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவார்கள்.


அல்குர்ஆன் 5 55


இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரில் உங்கள் மார்க்கத்தை ஏளனமாகவும் விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரையும், இறைமறுப்பாளர்களையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!


அல்குர்ஆன் ‌5 57


முஸ்லிம் அல்லாதவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். முஸ்லிம்களை அழிக்க வேண்டும் எனக்கருதும் கெட்டவர்களும் இருப்பார்கள். மார்க்கத்தை இழிவுபடுத்தி முஸ்லிம்களை அழிக்க நினைக்கும் கெட்டவர்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது தான் இவ்வசனங்களின் கருத்தாகும்.


இதே கருத்து திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில் தெளிவுபட எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் 3 118, 119, 120.


உலகில் வாழும் போது யாரை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறும் வசனங்களை இறந்தவர்களிடம் உதவி தேட ஆதாரமாக காட்டுவதிலிருந்தே இவர்களுக்கு குர்ஆனை பற்றி எந்த புரிதலும் இல்லை என்பதை அறியலாம்.


ஒரு வாதத்திற்கு இவ்வசனத்தை அவர்கள் வாதிடும் கருத்தில் தான் புரிய வேண்டும் என்றால் எல்லா முஃமின்களிடமும் உதவி தேடலாம் என்றுதான் வரும். ஏனெனில் வசனத்தில் முஃமின்கள் என்று தான் உள்ளது. இவர்கள் அடைப்புக்குறியில் இறைநேசர்கள் என்று தங்களது கைச்சரக்கை சேர்க்கிறார்கள்.
முஃமின்கள் என்றால் அல்லாஹ், ரசூலை நம்பும் அனைவரையும் குறிக்கும் சொல்லாகும். இதன்படி எல்லா முஃமின்களிடமும் உதவி தேடலாம் என்பார்களா?


இவர்களது வழிகெட்ட கருத்திலிருந்து அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
இப்போது அவர்களின் அடுத்த ஆதாரத்தை பார்ப்போம்.

2நபி ஸல் அவர்கள் நவின்றார்கள்.
என்னுடைய மரணத்திற்கு பிறகு என்னுடைய கப்ருக்கு அருகில் வந்து என்னை அழைத்தால் நான் பதில் தருவேன்.
முஸ்னது அபீயஃலா 6449 தாரீக் இப்னு அஸாகிர் பாகம் 8 பக்கம் 211
நபியிடமும் இறைநேசர்களிடமும் துஆ செய்யலாம் என்பதற்கு மேற்கண்ட செய்தியை ஆதாரமாக குறிப்பிடுகிறார்கள்.


சமாதியை வழிபடுவோரை பொறுத்தவரை மார்க்கத்தை தங்களது விருப்பத்திற்கு தகுந்தாற்போல வளைப்பதில் வல்லவர்கள்.


ஒரு செய்தி ஆதாரப்பூர்வமானதா? அந்த செய்தியின் உண்மையான கருத்து என்ன இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.


இவர்கள் குறிப்பிடும் செய்தி ஆதாரப்பூர்வமானதா? என்பதை பார்க்கும் முன் இவர்கள் கூறும் கருத்து இச்செய்தியில் உள்ளதா என்பதை முதலில் பார்த்து விடுவோம்.


அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள செய்தி முழுமையாக பின்வருமாறு அமைந்துள்ளது.

 

عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفس أبي القاسم بيده لينزلن عيسى بن مريم إماماً مقسطاً وحكماً عدلاً فليكسرن الصليب ويقتلن الخنزير وليصلحن ذات البين وليذهبن الشحناء وليعرض المال فلا يقبله أحدث ثم لئن قام على قبري فقال يا محمد لاجبته


அபூஹுரைரா (ரளி) அறிவிக்கிறார்கள்:
அபுல் காஸிமின் உயிர் எவனது கையில் இருக்கிறதோ அவனின் மீதாணையாக, ‘ஈஸா (அலை) அவர்கள் (வானத்திலிருந்து) நீதமான நேர்மையான இமாமாக இறங்கி வந்து, சிலுவைகளை உடைப்பார்கள், பன்றிகளை கொல்லுவார்கள், மக்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்வார்கள், விரோதம் போக்குவார்கள் செல்வம் எடுத்துக்காட்டப்படும். (செல்வச் செழிப்பினால்) அதை யாரும் பெற மாட்டார்கள். அவர் என் கப்ரிற்கு வந்து, முஹம்மதே! என்று என்னை அழைத்தால், அவரது அழைப்பிற்கு நான் பதில் கூறுவேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(மஜ்மவுஜ் ஜவாயிது-13813, அபூயஃலா-6584)


இந்த செய்தி மறுமை நாளின் நெருக்கத்தில் நடைபெறும் நிகழ்வை பற்றி பேசுகிறது.
இறுதி நாளின் நெருக்கத்தில் ஈஸா அலை இறங்குவார்கள். பன்றிகளை கொல்வார்கள். சிலுவைகளை உடைப்பார்கள் என ஈஸா அலை அவர்கள் செய்யும் செயல்களை பட்டியலிடுகிறது.


அப்போது அவர் என் கப்ரிற்கு வந்து என்னை அழைத்தால் நான் பதிலளிப்பேன் என்று உள்ளது.
மறுமை நாளின் நெருக்கத்தில் நடக்கும் நிகழ்வாக குறிப்பிடப்படுவதை வைத்துக் கொண்டு இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பது எப்படி சரியாகும்?


மறுமை நாளின் நெருக்கத்தில் நடைபெறும் யுத்தத்தில் எதிரிகளை வெல்வதில் பல்வேறு மரங்கள் முஸ்லிமுக்கு உதவும் என்று செய்தி உள்ளது.
புகாரி 2925


இந்த செய்தியின் அடிப்படையில் மரங்களிடம் உதவி தேடலாம் என்று சட்டம் எடுத்தால் அது அறிவுடமையாகுமா?
இது எப்படி முட்டாள்தனமோ அது போலத்தான் ஈஸா அலை அவர்கள் இறங்குவார்கள் தொடர்பான செய்தியை ஆதாரமாக கொண்டு இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதும் அறிவீனமான வாதமாகும்.
மேலும் ஈஸா அலை செய்தியில் ஈஸா நபி உதவி கேட்பார்கள் என்றோ நபி ஸல் அவர்கள் உதவுவார்கள் என்றோ இல்லை.


அவர் அழைத்தால் பதிலளிப்பேன் என்று மட்டுமே உள்ளது.


இதன் பொருள் என்ன என்பதை ஹாகிமின் 4093 அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. அவர் என் கப்ரிற்கு வந்து ஸலாம் கூறுவார். நான் பதிலுரைப்பேன் என்று ஹாகிமின் செய்தி தெளிவுபடுத்துகிறது.
அதாவது ஈஸா அலை நபி ஸல் அவர்களின் கப்ரிற்கு வந்து சலாம் சொல்வார்கள். நபி ஸல் அவர்கள் அந்த சலாமுக்கு பதிலுரைப்பார்கள்.


இது தான் இந்த செய்தியின் கருத்தாகும்.


நபி ஸல் அவர்கள் ஸலாமுக்கு பதில் சொல்வதென்பது ஈஸா அலை அவர்களுக்கு மட்டும் உரியதல்ல. நபியின் உம்மத் அனைவருக்கும் உரியதுதான்.


நம்மில் யார் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மீது சலாம் – சலவாத் சொன்னாலும் அது வானவர்களால் நபிகள் நாயகத்திற்கு எத்திவைக்கப்படும் என்று ஹதீஸ் உள்ளது.
நஸாயீ(1282), அஹமத்(4320)


எனவே அனைவருக்கும் உள்ள அடிப்படையில் ஈஸா அலை அவர்களின் சலாமுக்கு நபிகள் நாயகம் பதிலுரைப்பார்கள் என்றுதான் உள்ளதே தவிர இதில் இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்கோ நபியின் கப்ரில் சென்று உதவி தேடலாம் என்பதற்கோ எந்தவித ஆதாரமும் அறவே இல்லை.
மேலும் இவர்கள் ஆதாரமாக காட்டும் முஸ்னது அபீயஃலாவில் இடம்பெற்றுள்ள செய்தியில் அறிவிப்பு ரீதியாக பிரச்சனை உள்ளது.


என் கப்ரிற்கு வந்து யா முஹம்மத் என்று அழைத்தால் நான் பதிலளிப்பேன் என்ற வாசகம் ஏனைய ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் இடம்பெறவில்லை.


அபூஹூரைரா ரலி அறிவிக்கும் இச்செய்தி பல நூல்களில் இடம் பெற்றுள்ளது. அபூஹூரைரா ரலி யிடமிருந்து பல்வேறு மாணவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களில் ஒரே ஒருவரை தவிர வேறு யாரும் இந்த வாசகத்தை அறிவிக்கவில்லை.


ஈஸா அலை அவர்கள் வானிலிருந்து இறங்கி இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள் என்று புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட நூல்களில் வந்துள்ளது.
புகாரி 2109


இந்த அறிவிப்புகளில் மேற்படி வாசகம் இடம்பெறவில்லை.


இன்னும் பல அறிவிப்புகளில் அந்த வாசகம் இடம்பெறவில்லை. அபூஹூரைராவின் மாணவர்களில் சயீதுல் மக்புரி மட்டுமே இந்த வாசகத்தை அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது.


சயீதுல் மக்புரியிடமிருந்து அறிவிப்பவர் அபூசக்ர் என்பவர் ஆவார்.


இவரை நஸாயீ, இப்னு மயீன், உகைலீ போன்றோர் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
இதே ஸயீதுல் மக்புரி என்பவரிடமிருந்து அபூஸக்ர் அல்லாத மற்றவர்கள் இந்த வாசகத்தை கூறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.


ஸயீதுல் மக்புரியின் மாணவர்களில் உறுதியானவர்கள் இப்னு அபீ திஃப் மற்றும் லைஸ் இப்னு ஸஅத் ஆகியோராவர் என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

مقدمة فتح البارى (2/ 297)
سعيد بن أبي سعيد المقبري أبو سعيد المدني صاحب أبي هريرة مجمع على ثقته لكن كان شعبة يقول حدثنا سعيد المقبري بعد أن كبر وزعم الواقدي أنه اختلط قبل موته بأربع سنين وتبعه بن سعد ويعقوب بن شيبة وابن حبان وأنكر ذلك غيرهم وقال الساجي عن يحيى بن معين أثبت الناس فيه بن أبي ذئب وقال بن خراش أثبت الناس فيه الليث بن سعد
பார்க்க பத்ஹூல் பாரி முன்னுரை பாகம் 2 பக்கம் 297

லைஸின் அறிவிப்பு முஸ்லிமில் 243 வது செய்தியாக உள்ளது. அதிலும் அந்த வாசகம் இல்லை.
நஸாயீ, இப்னு மயீன், உகைலீ போன்ற அறிஞர்களால் பலவீனமானவர் என விமர்சிக்கப்பட்ட அபூ ஸக்ர் மட்டுமே அந்த வாசகத்தை அறிவிக்கின்றார்.


ஆகவே தான் இப்னு அஸாகிர் அவர்கள் லைஸின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டு அபூ ஸக்ர் அறிவிப்பை ஷாத் என பட்டியலிடுகிறார்.


تاريخ دمشق (47/ 493)
حدثنا قتيبة بن سعيد حدثنا الليث عن سعيد بن أبي سعيد عن عطاء بن مينا عن أبي هريرة قال قال رسول الله ( صلى الله عليه وسلم ) لينزلن ابن مريم حكما عادلا فليكسرن الصليب وليقتلن الخنزير وليضعن الجزية ولتركن القلاص فلا يسعى عليها ولتذهبن الشحناء والتباغض والتحاسد وليدعون إلى المال فلا يقبله أحد وهذا هو المحفوظ


பார்க்க தாரீகு திமிஷ்க் பாகம் 47 பக்கம் 493

 

ஒரு வாதத்திற்கு இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது என்று சொன்னாலும் அப்போதும் இவர்கள் கூறும் கருத்து ஒருபோதும் அதில் வராது என்பதை முன்னர் விளக்கி விட்டோம்.


மறுமையின் நெருக்கத்தில் ஈஸா அலை நபியின் கப்ருக்கு சென்று ஸலாம் சொல்வதை பற்றித்தான் இச்செய்தி பேசுகிறதே தவிர எல்லோரும் நபியின் கப்ருக்கு சென்று பாவ மன்னிப்பு கேட்பதையோ உதவி வேண்டுவதையோ அது குறிக்கவில்லை.


தான் உயிரோடிருந்த போதே எதுவாக இருந்தாலும் அல்லாஹ்விடம் கேள் என்று வழிகாட்டிய இறைத்தூதர் இறப்பிற்கு பிறகு தன் சமாதிக்கு சென்று கேள் என்று கூறவே மாட்டார்கள். அவ்வாறு கூறினார்கள் என்று வாதிடுவது குர்ஆனுக்கு எதிரான வாதமாகும்.

 

3நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் துஆ கேட்கலாம் என்பதற்கு பின்வரும் செய்தியை குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல் அவர்கள் நவின்றார்கள்.


ஆதமின் சந்ததிகள் அனைவருக்கும் நானே தலைவர்
முஸ்லிம் 4223, புகாரி 5007, திர்மிதி 3073.


இவர்கள் மார்க்கம் சொல்வதில் நேர்மையற்றவர்கள் என்பதற்கு இச்செய்தியை ஆதாரமாக குறிப்பிடுவதே ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.


தங்களுக்கு எதிரான கருத்து வருபவற்றை வெட்டி சிதைத்து மற்றவற்றை ஒட்டித்திருத்தி, மனோஇச்சையை உள்ளே புகுத்தி அதனையே ஆதாரம் என்பது தான் வழிகேடர்களின் வழமையாகும்.


வழிகேடர்களின் வழமையை அச்சரம் பிசகாமல் அப்படியே பின்பற்றுகிறார்கள் அவர்களின் சீடர்கள்.
நபியிடமும் அவ்லியாக்களிடமும் உதவி தேடலாம் என்பதற்கு அவர்கள் குறிப்பிடும் செய்தி இதுதான்.


மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே என்று நபி(ஸல்)) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் 4223


மறுமையில் ஆதமின் சந்ததிகள் அனைவருக்கும் நானே தலைவர் என்று நபி சொன்னது தான் நபியிடம் உதவி தேடலாம் என்பதற்கு ஆதாரமாம்.


இதில் அவர்கள் வெளியிட்ட பிரசுரத்தில், மறுமை நாளில் என்ற வாசகத்தை லாவகமாக விட்டுவிட்டார்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் பல்வேறு உயர்வுகளை வழங்கியுள்ளான்.


மறுமையில் ஆதமுடைய சந்ததிகள் அனைவருக்கும் நபியே தலைவராக இருப்பார்கள் என்பது தான் இச்செய்தி தரும் கருத்து.


நபியவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் கொடுக்கவிருக்கின்ற பல சிறப்புகளில் இதுவும் ஒன்று.
கவ்ஸர் எனும் தடாகத்தை அளிக்கின்றான்.


சொர்க்கத்தில் முதலாவது நுழையும் அந்தஸ்தையும் நபிக்கே அல்லாஹ் வழங்குகின்றான்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே மறுமை நாளில் இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் 331


மறுமையில் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டியிருக்கும் நாளில் இறைவனிடம் பரிந்து பேச ஆதம் நபி துவங்கி பல இறைத்தூதர்களிடத்தில் மக்கள் சென்று கேட்கும் போது அனைவரும் மறுத்து விடுவார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தா ன் இறைவனிடத்தில் பரிந்து பேச முன்வருவார்கள். அல்லாஹ்வும் நபியின் பரிந்துரையை ஏற்பதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது.


இந்த வகையில் எல்லோருக்கும் தலைவராக நபிகள் நாயகம் பரிணமிக்கின்றார்கள்.
இவையாவும் அல்லாஹ் மறுமையில் நபிகளாருக்கு வழங்கும் சிறப்புகளாகும்.


அல்லாஹ் மறுமையில் தனது அடியார்களுக்கு சிறப்பு வழங்குவதற்கும் இவர்கள் அல்லாஹ்வை மறந்து சமாதியில் போய் தஞ்சமடைவதற்கும் என்ன சம்பந்தம்?


ஆதமின் சந்ததிகளுக்கு நபிகள் நாயகம் தலைவராக இருப்பார்கள் என்பதால் நபியின் சமாதியிடம் போய் துஆ கேட்கலாம் என்று அறிவுடைய யாரும் கூற மாட்டார்கள்.


நபிகள் நாயகம் தாம் வாழும் காலத்தில் மக்களுக்கு இச்செய்தியை அறிவித்தார்கள். இவர்கள் புரிந்து கொண்டதை போன்று எந்த நபித்தோழரும் புரிந்து கொண்டு நபியிடம் துஆ கேட்கவில்லையே?


அனைவருக்கும் தலைவர் என்பதால் அவரிடத்தில் துஆ செய்யலாம் என்று இவர்கள் புரிந்து கொண்டதை போல அன்றைக்கு நபித்தோழர்களில் எவரும் புரியவில்லை. நபி உயிரோடிருந்த போதும் அவர்களிடம் துஆ

கேட்கவில்லை. நபியின் மரணத்திற்கு பிறகு அவர்களின் சமாதிக்கு சென்றும் துஆ கேட்கவில்லை. அல்லாஹ்விடமே துஆ கேட்டார்கள்.


துளிக்கூட சம்பந்தமில்லாத இச்செய்தியை ஆதாரம் என்பது அறிவற்ற வாதமாகும்.
இவர்களின் அடுத்த ஆதாரத்தை காண்போம்.


4 நபித்தோழர்கள் கூட நபிகளாரின் மரணத்திற்கு பிறகு அவர்களிடம் துஆ செய்துள்ளார்கள் என்பதற்கு பின்வருபவற்றை சான்றாக குறிப்பிடுகிறார்கள்.


அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் கால்நடக்க முடியாத நிலை ஏற்பட்ட போது நபி ஸல் அவர்களை யா முஹம்மத் என அழைத்து (நபி ஸல் அவர்களின் மரணத்திற்கு பின்) உதவி தேடி குணம் பெற்றார்கள்.
புகாரி அவர்களின் அதபுல் முஃப்ரத் பக்கம் 141


இறைவனின் கட்டுப்பாடுகளை மீறவைப்பதற்காக ஷைத்தான் தீமைகளை அழகுபடுத்திக் காட்டுவதாக குர்ஆன் கூறுகிறது.


“அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்பவர்களாக அவளையும், அவளது சமுதாயத்தினரையும் கண்டேன். அவர்களின் செயலை, அவர்களுக்கு ஷைத்தான் அலங்கரித்துக் காட்டி, அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விட்டான். எனவே அவர்கள் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வதற்கான நேர்வழியைப் பெற மாட்டார்கள். அவனோ வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துபவன்; நீங்கள் மறைப்பதையும் பகிரங்கப்படுத்துவதையும் அறிபவன்”


அல்குர்ஆன் 27: 24, 25


இவ்வசனத்திற்கேற்பவே சமாதியை வணங்குவோரின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.
அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டுகிறான். ஆகவேதான் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல எதையாவது ஆதாரமாக காட்டி இணைவைப்பை நியாயப்படுத்திட துடிக்கின்றார்கள். அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.


இப்னு உமர் ரலி நபியிடம் துஆ செய்தார்கள் என்று அவர்கள் குறிப்பிடும் செய்தி பின்வருமாறு அமைந்துள்ளது.


حدثنا أبو نُعَيم، قال: حدثنا سفيان، عن أبي إسحاق، عن عبد الرحمن بن سعد قال: خَدِرَت رِجلُ ابن عمر، فقال له رَجُل: اذكر أحبَّ الناس إليك، فقال: محمد.


இப்னு உமர் ரலி அவர்களின் கால் மரத்துப் போனது. அச்சபையில் ஒருவர் உங்களுக்கு விருப்பமானவரை நினைத்துக் கொள்ளுங்கள் என்றார். அப்போது (தமக்கு விருப்பமானவர்) முஹம்மதே! என்று இப்னு உமர் ரலி குறிப்பிட்டார்கள்.
அதபுல் முஃப்ரத் 994


ஆனால் அவர்களின் மொழிப்பெயர்த்திருப்பதை பாருங்கள்,


அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் கால்நடக்க முடியாத நிலை ஏற்பட்ட போது நபி ஸல் அவர்களை யா முஹம்மத் என அழைத்து (நபி ஸல் அவர்களின் மரணத்திற்கு பின்) உதவி தேடி குணம் பெற்றார்கள்.


வலி ஏற்பட்டிருக்கும் ஒருவரது கவனத்தை வேறு பேச்சின் மூலம் திருப்பும் போது மருத்துவம் பார்க்கவும் வலியை மறக்கடிக்கவும் முடியும். அது இன்றைய மருத்துவர்களும் கடைபிடிக்கும் ஒரு முறை. அறுவை சிகிச்சை அறைகளில் மயக்கம் மருந்து கொடுக்கும் போது அச்சத்தில் இருக்கும் நோயாளியிடம் அவரது பள்ளி பருவத்தை பற்றியும் வேறு விஷயங்கள் குறித்தும் பேச வைப்பார். அதன் மூலம் அவரது அச்சத்தை போக்க வைப்பதற்காக இவ்வாறு செய்யப்படும். இது போன்ற செயலாக சொல்லப்பட்ட செய்தியில் தங்களின் வழிகேட்டை நிலைநாட்டும் விதமாக கருத்தை திரித்து எவ்வாறு கூறியுள்ளார்கள் என்பதை அவர்களின் மொழிப்பெயர்ப்பையும் அந்த செய்தியின் மூலத்தையும் பார்த்தால் அனைவரும் அறிந்துக் கொள்ளலாம்.
மேலும், இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.


இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர் ரஹ்மான் பின் சஅத் அல்குரைஷீ என்பவர் இடம் பெறுகிறார். இவரது நம்பகத்தன்மை அறிஞர்களால் நிரூபிக்கப்படவில்லை.


வேறு அறிவிப்புகளில் முஹம்மத் பின் முஸ்அப், கயாஸ் பின் இப்றாஹீம் ஆகிய மிக பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.


இது தவிர இச்செய்தியில் இடம்பெறும் அபூஇஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் ஆவார். (அறிவிப்பாளரை விட்டு விட்டு அறிவிக்கும் வழக்கமுடையவர்).


த்த்லீஸ் செய்பவரை பொறுத்தவரை அவர் நேரடியாக கேட்டதை உறுதிப்படுத்தும் வாசகத்தை சொல்லாமல் அவரது அறிவிப்பு ஏற்கப்படாது என்பது ஹதீஸ்கலை விதி.


மேற்படி அறிவிப்பில் அபூஇஸ்ஹாக் என்பவர் அப்துர் ரஹ்மான் பின் சஅத் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். ஆனால் நேரடியாக கேட்டதை உறுதிப்படுத்தும் வாசகத்தை கூறவில்லை. எனவே இந்த வகையிலும் இந்த செய்தி பலவீனமடைகிறது.


இத்தகைய பலவீனமான செய்தியை கொண்டு தான் தமது கருத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். இந்த பலவீனங்களை தாண்டி இந்த செய்தி சரியானது என்றே வைத்துக் கொண்டாலும் இதற்கு நபியின் அங்கீகாரம் இல்லை என்பதே இந்த செய்தியை மறுக்க போதுமானதாகும்.

5மக்கா இணைவைப்பாளர்கள் தங்களின் மூதாதையர்களின் கொள்கையை துறக்க மனமின்றி எவ்வாறு அசத்தியத்திலே வீழ்ந்தார்களோ அதுபோல சமாதி வழிபாட்டை சரிகாண்பவர்கள் அதை விட்டொழிக்க மனமின்றி எப்படியேனும் மார்க்கச் சாயம் பூசிவிடலாம் என்று எண்ணுகின்றனர்.


அதனடிப்படையில் நபியிடமும் நல்லோர்களிடமும் துஆ செய்யலாம் என்பதற்கு பின்வரும் வசனத்தையும் சான்றாக குறிப்பிடுகின்றனர்.


நிச்சயமாக அல்லாஹ்வும் ஜிப்ரீலும் ஸாலிஹான முஃமின்களும் தான் உதவியாளர்கள்
தஹ்ரீம் 4


இவர்கள் குறிப்பிடுவது 66வது அத்தியாயத்தின் 4வது வசனமாகும்.
அந்த அத்தியாயத்தின் முதல் வசனத்திலிருந்து 4வது வசனம் வரையிலுள்ள மொழிபெயர்ப்பை அப்படியே தருகிறோம். இறந்தவர்களிடம் உதவி தேடுவதற்கும் இவர்கள் ஆதாரமாக காட்டுவதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக அறியலாம்.


அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

  1. நபியே! அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.
  2. உங்களின் சத்தியங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் பாதுகாவலன். அவன் நன்கறிந்தவன்; நுண்ணறிவாளன்.
  3. நபி, தமது மனைவியருள் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறியதை நினைத்துப் பாருங்கள்! அச்செய்தியை அம்மனைவி (நபியின் மற்றொரு மனைவியிடம்) கூறியதும், அதை இந்நபிக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியபோது, அதில் ஒரு பகுதியை (அம்மனைவிக்கு) அவர் அறிவித்துவிட்டு, மற்றொரு பகுதியை தவிர்த்து விட்டார். நபி, அதை (தமது) மனைவியிடம் அறிவித்தபோது “உமக்கு இதை அறிவித்தது யார்?” என அம்மனைவி கேட்டார். “நன்கறிந்தவனும், நன்கு தெரிந்தவனுமே அதை எனக்கு அறிவித்தான்” என அவர் பதிலளித்தார்.
  4. (நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்குச் சிறந்தது.) ஏனெனில் உங்கள் உள்ளங்கள் புரண்டு விட்டன. நீங்களிருவரும் அவருக்கு எதிராக ஒருவருக்கொருவர் உதவினால் அவருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்கிறான். அதன்பிறகு ஜிப்ரீலும், இறைநம்பிக்கை கொண்ட நல்லடியார்களும், வானவர்களும் (இந்நபிக்கு) உதவி செய்பவர்கள்.
    குறித்த நிகழ்வில் நபியின் மனைவியருக்கு பாவமன்னிப்பு கோருமாறு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான். இதற்கு மேல் நபிக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால் அல்லாஹ் நபிக்கு உதவுவான். ஜிப்ரீலும் நபிக்கு உதவியாக இருப்பார்கள். மேலும் நல்ல முஃமின்களும் நபிக்கு உதவியாக இருப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றது.
    இதை அப்படியே திரித்து, உண்மையை மறைத்து நம் எல்லோரையும் நபியிடம் துஆ கேட்கலாம். நல்லடியார்களிடம் துஆ கேட்கலாம் என்கிறார்கள்.
    இவர்களின் வழிகெட்ட சிந்தனை அவ்வாறு இவர்களை தூண்டுகிறது.
    வேத்த்தில் புரட்டு செய்வது யூதர்களின் நாசவேலையாகும். அது இறைவனின் சாபத்தை பெற்றுத்தரும் இழிசெயலாகும்.
  5. சில யூதர்கள், வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். தம் நாவுகளைச் சுழற்றியும், இம்மார்க்கத்தைக் குறை கூறியும், “செவியுற்றோம்; மாறு செய்தோம்” எனவும், “எங்களுக்குச் செவிசாய்ப்பீராக! ஆனால் உமக்கு நாங்கள் செவிசாய்க்க மாட்டோம்” எனவும் (தவறான பொருளைத் தரும்) “ராஇனா” எனவும் கூறுகின்றனர். மாறாக அவர்கள், “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்றும், ‘செவியேற்பீராக!’ என்றும், “உன்ளுர்னா (எங்களைக் கவனிப்பீராக!)” என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும் அவர்களின் இறைமறுப்பின் காரணமாக அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான். எனவே குறைவானோரைத் தவிர இறைநம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
    அல்குர்ஆன் 4: 46
    அல்லாஹ்வையன்றி மற்றவர்களை அழைத்து பிரார்த்திப்பதற்கு மறுமை நாள் வந்தாலும் ஆதாரம் காட்ட இயலாது.
  6. அல்லாஹ்வுடன் இணைத்து வேறு கடவுளை யார் பிரார்த்திக்கிறாரோ, அவரிடம் அதுபற்றி எந்த ஆதாரமும் இல்லை. அவரைப் பற்றிய விசாரணை அவரது இறைவனிடமே உள்ளது. இறைமறுப்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
    அல்குர்ஆன் 23: 117
    சமாதியை வழிபடுவோர் ஆதாரம் எனும் பெயரில் வேத த்தை மறைத்து திரிக்கும் வேலையை கைவிட்டு, அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சி தங்களை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.