தொடரும் சனாதன சர்ச்சையில் முஸ்லிம்கள் விமர்சிக்கப்படுகிறார்களே?

உதயநிதி துவங்கி வைத்த சனாதன சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. சனாதனம் என்றால் என்ன? என்று துவங்கி, வர்ணாசிரமம் சனாதனத்தில் உள்ளதா? இல்லையா? எனப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பொதுவாகப் பிற மத விவகாரங்களில் நாம் கருத்துச் சொல்லும் அவசியம் கிடையாது. எனினும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சீண்டும் போது கருத்துச் சொல்லும் தேவை ஏற்பட்டு விடுகிறது.
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் இந்துக்கள் தானே தவிர முஸ்லிம்களோ கிறித்தவர்களோ அல்ல.
சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியவர்களும் இந்துக்களே!
பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் வேத நூல்களை எரிக்க வேண்டும் என்போரும் இந்துக்களே.
இதனடிப்படையில் இந்துக்கள் அவர்களுக்குள் விவாதித்துக் கொள்ள வேண்டிய விஷயமாக இது ஆகிவிடுகிறது.
ஆனால் அதைத் தாண்டி தினமலர் போன்ற பத்திரிகைகளும் ரங்கராஜ் பாண்டே போன்ற இந்துத்துவ சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்களும் இஸ்லாத்தை வம்புக்கு இழுக்கிறார்கள்.
இந்து மதத்தில் மட்டும் தான் பாகுபாடு உள்ளதா? இஸ்லாத்தில் இல்லையா? என்ற கோணத்தில் திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை என்றால் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் ஏன் குண்டு வெடிக்கிறது என ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
என ரங்கராஜ் பாண்டே எழுதுகிறார்
(தினமலர் செப் 5– , 2023)
இந்து மதத்தைப் பற்றி இவ்வாறு பேசுவதைப் போல இஸ்லாத்தைப் பேச முடியுமா? என்று வானதி சீனிவாசன் போன்றோர் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
இங்கே தான் முஸ்லிம்களையும் இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்லும் நிலைக்குத் தள்ளிவிடுகிறார்கள்.
இந்துக்கள் இந்து மதத்தை, அது கூறும் சாதியப் பாகுபாட்டைப் பற்றிப் பேசும் போது அதற்கு உரிய பதிலளிப்பதை விட்டு விட்டு இஸ்லாத்தை இது போன்று பேசுவீர்களா என்று கேட்பது மடமையாகும்.
முஸ்லிம்களில் உள்ள அறிவீனர்கள் இஸ்லாத்தை விமர்சிக்கும் போது அவற்றுக்கு உரிய பதிலளிக்காமல் இந்து மதத்தை இதே போன்று விமர்சிப்பீர்களா? என்று சொன்னால் பாண்டேக்களும் தினமலம்களும் ஏற்பார்களா?
எங்கள் மதத்தைக் கேள்வி எழுப்ப நீ யார் எனக் கேட்கமாட்டார்களா?
அதுவே இந்துக்கள் இந்து மதத்தைக் கேள்வி எழுப்பும் போது இஸ்லாத்தை இவ்வாறு கேட்பாயா என்கிறார்கள்.
இது முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் செயலன்றி வேறில்லை.
இந்து மதத்தில் பாகுபாடு இருப்பதைப் போன்று இஸ்லாத்திலும் பாகுபாடு இருக்கின்றது என்று கூறுவது இவர்களின் அடுத்த தில்லுமுல்லாகும்.
இந்துக்களில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு உள்ளது என்று நாம் சொல்லவில்லை. இந்துக்கள் சொல்கிறார்கள். இந்து மத வேத நூல்களே அவ்வாறு மனிதர்களை நான்கு வர்ணமாகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பிக்கின்றன என்று கூறுகிறார்கள்.
தீண்டாமையின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் வர்ணாசிரமத்தை இந்து மதமே வலியுறுத்துகிறது என்கிறார்கள் இந்துக்கள்.
இஸ்லாத்தில் இத்தகைய பாகுபாடு உள்ளதா? அறவே இல்லை.
பிறப்பால், மொழியால், இனத்தால், நிறத்தால் என எவ்விதத்திலும் உயர்வு தாழ்வு இல்லை எனப் பகிரங்கப்படுத்திய மார்க்கம் இஸ்லாம்.
அரபி மொழி பேசாதவர்களை விட அரபி மொழி பேசுபவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை. அரபி மொழி பேசுபவர்களைவிட அரபி மொழி பேசாதவர்களுக்கு எந்தவொரு சிறப்பும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 23489)
யாராக இருந்தாலும், இறைவனை அஞ்சி நடந்து கொள்பவர் யாரோ அவரே இறைவனிடத்தில் சிறந்தவர் என்று குர்ஆன் கூறுகிறது.
மனிதர்களே! ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே உங்களைப் படைத்துள்ளோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவே உங்களைக் கிளைகளாகவும், குலங்களாவும் ஆக்கினோம். உங்களில் இறையச்சம் மிக்கவரே அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் ஆவார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்; எல்லாம் தெரிந்தவன். (அல்குர்ஆன் 49:13)
அவரவர் செய்யும் நற்செயல்களைக் கொண்டு தான் இறைவனிடத்தில் உயர்வு பெற முடியுமே தவிர, பிறப்பின் அடிப்படையிலோ நிறத்தின் அடிப்படையிலோ அல்ல என்று இஸ்லாம் திட்டவட்டமாகக் கூறுகிறது.
பள்ளிவாசலுக்குள் நுழைய யாருக்கும் இஸ்லாத்தில் தடை இல்லை.
மாதவிடாய்க் காலத்தில் பெண்களைத் தொட்டால் தீட்டு என இஸ்லாம் கூறவில்லை.
கருப்பரோ சிவப்பரோ குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தால் போதும் அவர் ஒட்டு மொத்த மக்களுக்கும் தலைமை தாங்கித் தொழுவிக்கும் இமாமாக இருப்பதைத் தடுக்கவில்லை.
மனிதர்கள் எல்லோரும் ஒரே தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள். அதனடிப்படையில் அனைவரும் சமம் என்று கூறும் இஸ்லாத்தில் பாகுபாடு இருப்பதாகக் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.
இஸ்லாம் மனிதர்களை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கின்றது என எந்தவொரு சான்றையும் அவர்களால் எடுத்துக் காட்ட முடியாது.
ஆகவே தான் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் ஏன் சண்டையிடுகின்றன? என அதி புத்திசாலித்தனமான கேள்வி எழுப்பி இஸ்லாத்திலும் பாகுபாடு இருப்பதாக நிறுவ முயற்சிக்கின்றனர்.
இரண்டு முஸ்லிம் நாடுகள் சண்டையிட்டுக் கொள்வதாலேயே இஸ்லாத்தில் பாகுபாடு இருப்பதாகி விடுமா?
இந்துத்துவம் பேசும் பாஜகவும் சிவசேனாவும் மஹாராஷ்டிராவில் சண்டையிடுகின்றனவே ஏன்?
பாஜகவில் உள்ள இந்துக்கள் உயர்ந்தவர்களா? சிவசேனாவில் உள்ள இந்துக்கள் உயர்ந்தவர்களா? என்றா அவர்கள் சண்டையிடுகிறார்கள்?
தமிழக அரசியல் களத்தில் மோதிக் கொள்ளும் திமுக, அதிமுக அனைவரும் இந்துக்கள் தானே? பிறகு ஏன் மோதிக் கொள்கிறார்கள்.
அத்தனை மோதல்களும் அதிகாரத்தைக் கைப்பற்றத்தான் என்பதைக்கூடப் புரிந்து கொள்ள முடியாத பச்சிளங்குழந்தையா, பாண்டே? எனக் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.
இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை என்றால் முஸ்லிம்களில் பல பிரிவுகள் ஏன்?
ஷாபி, ஹனபி, மாலிக்கி, ஹம்பலி என்கிறார்களே? இது பிரிவுகள் தானே?
லெப்பை, மரைக்காயர், ராவுத்தர் என்பது என்ன? இவைகள் எல்லாம் பிரிவுகள் இல்லையா? என்று கேட்கலாம்.
இந்தப் பிரிவுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை.
எந்த முஸ்லிமையும் நீ ஷாபி, நீ ஹனபி, நீ லெப்பை நீ ராவுத்தர் என்று இஸ்லாம் முஸ்லிம்களைப் பிரிக்கவில்லை.
இந்த வார்த்தைகள் எதையும் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக இருக்கும் திருக்குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் அறிவுரையிலோ அறவே காண முடியாது.
அப்படியெனில் இந்தப் பிரிவுகள் எப்படித் தோன்றின?
ஷாபி, ஹனபி, மாலிக்கி, ஹம்பலி என்பதெல்லாம் கொள்கைசார் பிரிவுகளாகும்.
திமுக, அதிமுக – பாஜக – நாதக போன்ற ஒவ்வொரு கட்சியும் ஒரு கொள்கையை வரித்துக் கொண்டு ஒரு பெயரைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்வதைப் போல ஷாபி – ஹனபி என்பது ஒவ்வொரு கொள்கை முறையைக் குறிப்பதாகும்.
இஸ்லாத்தை அவரவர் புரிந்து கொண்டதற்குத் தக்க ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அதைப் பின்பற்றும் செயல்முறையாகும்.
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஷாபியாக இருப்பவர் எப்போது வேண்டுமானாலும் ஹனபியாக மாறிவிடுவார். ஹனபியாக இருப்பவர் ஷாபியின் கொள்கை முறையை சரி கண்டால் அவர் உடனே ஷாபியாக மாற முடியும்.
ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுவதைப் போல ஒரு கொள்கையிலிருந்து இன்னொரு கொள்கைக்கு மாறிக் கொள்வார்.
இவை எதுவும் உயர்வு தாழ்வைக் குறிப்பவை அல்ல. ஒவ்வொன்றும் ஒரு கொள்கை முறை. இதில் எந்தக் கொள்கை சரி என்பது விவாதத்திற்குரியது. அது தனி விஷயமாகும். ஷாபி உயர்ந்தவர் ஹனபி தாழ்ந்தவர் என்பது கிடையாது.
அடுத்து லெப்பை, மரைக்காயர், ராவுத்தர் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.
இந்தப் பிரிவுகளையும் இறைவனோ, இறைத்தூதரோ ஏற்படுத்தவில்லை.
மாறாகத் தமிழக அரசு முஸ்லிம்களில் முன்னோர்கள் செய்த தொழில் ரீதியாக இவ்வாறு முஸ்லிம்களை வகைப்படுத்தியுள்ளது.
இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதுடன் இதுவும் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் பிரிவுகள் அல்ல.
லெப்பை உயர்ந்தவர் மரைக்காயர் தாழ்ந்தவர் என்றெல்லாம் யாரும் வாதிடுவது கிடையாது.
ஆனால் இந்து மதத்தில் இருப்பதாக இந்துக்கள் குற்றஞ்சாட்டுவது வேறு.
பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர் என்ற வகைப்படுத்தலை இந்து மதமே முன்வைக்கின்றது.
இந்த நான்கு வர்ண அமைப்பு முறையில் ஒருவர் இன்னொரு வர்ணத்திற்கு மாற முடியாது.
இவர்களில் பிராமணர் பிறப்பால் உயர்ந்தவர் சூத்திரர் பிறப்பால் தாழ்ந்தவர் என்று இந்து மத வேத நூல்களே வகைப்படுத்துகின்றன. இது தான் இந்துக்களின் குற்றச்சாட்டாகும்.
காஞ்சி சங்கராச்சாரியாரிடம் சுப்ரமணிய சுவாமி சரிக்குச் சமமாக அமர்ந்து பேசுவதைப் போலத் தமிழிசையால் பேச முடியாமல் போனதற்குக் காரணம் இந்தத் தீண்டாமை தான்.
நாட்டின் குடியரசுத் தலைவராகவே ஆனாலும் ராம்நாத் கோவிந்த் மற்றும் திரௌபதி முர்மு ஆகியோரால் கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாததற்குக் காரணமும் இதே தீண்டாமை தான்.
இந்தத் தீண்டாமையை இந்து மதமே போதிக்கின்றது என்பது தான் சனாதனத்தை எதிர்க்கும் இந்துக்களின் குற்றச்சாட்டாகும்.
பாண்டேக்களுக்கும் தினமலம்களுக்கும் முடிந்தால் அவர்களின் குற்றச்சாட்டுக்கு உரிய பதிலை அளிக்கட்டும். இல்லையேல் அமைதியாகக் கடந்து செல்லட்டும். அதைவிடுத்து இஸ்லாத்தில் பாகுபாடு இருப்பதாக அவதூறு கூறும் வேலையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.