முஸ்லிம்களுக்கு வழங்கபட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் உயர்த்தி தரப்படுமா? இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பெறுவதும் பெற்ற ஒதுக்கீட்டை அதிகப் படுத்துவதும் நீண்ட, நெடிய போராட்டங்களின் வழியாகவே சாத்தியமாகும். அப்படித்தான் தற்போது நாம் அனுபவித்து வரும் 3.5 இடஒதுக்கீடு சாத்தியமானது. தமிழக முஸ்லிம்களின் பல்லாண்டு கால உழைப்பின் அறுவடையே 3.5 இடஒதுக்கீடு.
தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு இது போதுமானதல்ல. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் எள்முனையளவும் மாற்றுக்கருத்தில்லை.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பதே அவர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதாக அமையும் என்று முஸ்லிம்களின் வாழ்வாதார நிலையை ஆய்வு செய்ய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்கள் தெளிவாக கூறின.
எனவே அந்த ஆணையங்களின் பரிந்துரைப்படி கல்வி வேலைவாய்ப்பில் இந்திய அளவில் 10 சதவிகித ஒதுக்கீட்டையும் தமிழக அளவில் நடைமுறையில் உள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாகவும் உயர்த்தி தர வலியுறுத்திக் கேட்கிறோம்.
கடந்த 2014 க்கு முந்தைய தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்குவேன் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
அந்த வாக்குறுதியை நம்பி முஸ்லிம்கள் அதிமுக விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்த ஜெயலலிதா இட ஒதுக்கீட்டை மட்டும் அதிகரித்து தரவே இல்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மாநில அரசை வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினோம். இறுதிவரை இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவேன் என்று தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியவராகவே ஜெயலலிதா இறந்து போனார்.
அதன் பின் எடப்பாடி அரசு பாஜகவின் அடிமை அரசாகிப் போனதால் தமிழகத்தில் முஸ்லிம்களின் ஒட ஒதுக்கீடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது.
இது தமிழகத்தின் நிலை.
மத்தியில் எடுத்துக் கொண்டால் கடந்த 2014 லிருந்து தான் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அதற்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சி தான்.
முஸ்லிம்களின் அவல நிலையை அம்பலப்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பில் இந்திய அளவில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு கமிஷன்கள் பரிந்துரை செய்தபடி காங்கிரஸ் ஆட்சியிலேயே நமக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கபட்ட அநீதிகளில் இதுவும் ஒன்று.
2014 க்கு பிறகிலிருந்து தற்போது வரை பாஜக ஆட்சி.
புதிது புதிதாக சட்டமியற்றி முஸ்லிம்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்மாக பறித்துக் கொண்டு வருவதற்கே பாஜகவிற்கு நேரம் போதவில்லை. இதில் இட ஒதுக்கீடு கோரிக்கையை எப்படி கவனத்தில் கொள்ளும்?
சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்களின் பரிந்துரை கிடப்பில் கிடக்க உயர்சாதி வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கி அகமகிழ்ந்து கொண்டது. இது தான் பாஜக.
இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக என்று இரண்டு கட்சிகளுமே முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.
எனினும் நம் சமுதாயத்தின் அவல நிலையை மாற்றியமைக்க தொடர்ந்து நாம் போராடியே ஆக வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை போராடாமல் எதையும் பெற முடியாது.

இழந்த உரிமையை மீட்பதானாலும் இருக்கும் உரிமையை காப்பதானாலும் இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு முன்னுள்ள ஒரே வழி போராடுவது ஒன்றே.
இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும் விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடலாமே என்ற கருத்து சில முஸ்லிம்களிடம் உள்ளது. ஆனால் இதில் நீதிமன்றத்தை நாடுவது பயனற்ற ஒன்றாகவே ஆகும். ஏனெனில் இவ்விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் உட்பட்டதாக இல்லை.
இட ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவொன்றை (2020) இது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இல்லை என்று சொல்லியே தள்ளுபடி செய்து விட்டது, எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்ற படியேறுவது நமது கோரிக்கையை நிறைவேற்ற உதவாது.
போராட்டங்களின் வழி ஆட்சியாளர்களை வலியுறுத்துவதன் மூலமே இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இயலும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 3.5 சதவிகித இட ஒதுக்கீடு மு.கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது என்பதால், அதை அதிகரித்து தமிழக முஸ்லிம்களின் நெடுநாள் கோரிக்கையை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நிறைவேற்றும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் உள்ளது.
அதற்காகவே முஸ்லிம்கள் கடந்த முறையை காட்டிலும் அதிகமான அளவில் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.
எனவே திமுக ஆட்சிக்கு முஸ்லிம்கள் இது தொடர்பாக போதிய அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்து ஓரிரு மாதங்களே ஆகின்றன. அதுவும் கொரோனா பேரிடர் எனும் அலையில் தமிழகம் சிக்கியிருந்த நிலையில் புதிய அரசு அமையப் பெற்றிருக்கின்றது.
எனவே முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தர வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கைகளாக முன்வைப்போம்.
முஸ்லிம்களின் கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை எனில் முழு இயல்பு நிலை திரும்பியதும் போராட்டங்களின் மூலம் நமது கோரிக்கையை வெல்வோம்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தின் போது ஏமாந்தது போன்று இம்முறை ஏமாற நாம் தயாராக இல்லை.
இட ஒதுக்கீடு கோரிக்கையை வென்றே தீருவோம் இன்ஷா அல்லாஹ்.