இந்நாட்டில் இந்திய மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் யாவும் முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.
சட்டம் வழங்குகிற சலுகைகளும் உரிமைகளும் மதத்தை அடிப்படையாக கொண்டதா? எனும் சந்தேகம் வலுவாக முஸ்லிம்களின் உள்ளங்களில் நிலைத்து விடுமளவு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
அதன் ஒரு அடையாளம் தான் இந்த ஜாமீன் மறுப்பு.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்டு மனு செய்த வழக்கில் அவர்களின் ஜாமீன் மனுக்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறியுள்ளனர்.
அதற்கு சில காரணங்களை அடுக்கியுள்ளனர்.
சிறையில் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
சிறை செயல்பாடு திருப்தியில்லை
ஜாமீன் வழங்கினால் மீண்டும் பொது அமைதியை பாதிக்கும் செயலில் ஈடுபடுவார்கள்.
இது தான் அரசு தரப்பில் சிபிசிஐடி கூறியுள்ள காரணங்கள்.
இப்படியான காரணங்களை கூறி ஜாமீன் மறுக்கப்படுவது முஸ்லிம்களை தவிர வேறு எவருக்கும் நிகழ்வதில்லை.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரிய போது பொது அமைதிக்கு பாதிப்பு என்று கூறி அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படவில்லை. (அதன் பிறகு அவர்கள் முன்விடுதலை ஆனது தனிக்கதை)
மதுரை லீலாவதி வழக்கில் கைதானவர்களை திமுக அரசு முன்விடுதலை செய்த போது அரசியல் கொலைகள் அதிகரிக்க இது வழிவகுக்கும் என்று சொல்லி முன்விடுதலை மறுக்கப்படவில்லை.
ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளின் ஜாமீனை மறுக்க மட்டும் அரசுக்கு எப்படியோ பல்வேறு காரணங்கள் கிடைத்து விடுகின்றன.
இந்திய அளவில் பல்வேறு கடும் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு கூட ஜாமீன் எளிதில் கிடைத்து விடுகிறது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சஞ்சய் தத்திற்கு ஜாமீன் கிடைத்தது.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூருக்கு ஜாமீன் கிடைத்தது மட்டுமின்றி தற்போது போபால் மக்களவை தொகுதியின் பாஜக எம்.பியாக இருக்கிறார்.
இவர்களுக்கு எல்லாம் எவ்வித காரணமும் சொல்லப்படாத போது முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் பல்வேறு காரணங்களைக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பது அரசின் பாரபட்சமான நடவடிக்கையாகும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மாதக்கணக்கில் பரோல் நீட்டிக்கப்படுகிறது. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பரோல் நீட்டிப்போ ஜாமீனோ கிடையாது.
அப்படி என்றால் ஜாமீன் உள்ளிட்ட கைதிகளுக்கு அரசு வழங்கும் உரிமையை பெற முஸ்லிமாக இருக்க கூடாது என்று தமிழக அரசு கருதுகிறதா?
சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுகிறதா? அல்லது மதத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுகிறதா? என்று கேட்கத் தோன்றுகிறது.
ஜாமீன் வழங்க கூடாதென்பதற்கு சிபிசிஐடி சொன்ன காரணங்களை கவனியுங்கள்.
சிறையில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். அதனால் ஜாமீன் கிடையாதாம்.
சிறைக்குள்ளே செல்போன் எப்படி சென்றது? இறக்கை முளைத்து அதுவாகவே பறந்து சென்றதா? அல்லது 1998 ல் சிறைக்கு சென்றபோது சிறைவாசிகள் கையுடனே செல்போனை? எடுத்து சென்றனரா?
சிறைத்துறை காவலர்கள் உதவியில்லாமல் அங்கே செல்போன் வர சாத்தியமே இல்லை என்பது உலகறிந்த உண்மை.
அது ஏன் செல்போன் காரணம் வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. சிறைக்காவலர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே கருணை காட்டுகிறார்கள் போலும்.
ஜாமீன் மறுக்கப்பட இதுவொரு காரணம்.
பல்வேறு வழக்குகளில் 20 வருடத்திற்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம்கள் சிறையில் உள்ளனர்.
அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஜாமீன் கேட்டால் கூட ஜாமீன் மறுக்கப்படுகிறது.
அனைவருக்கும் கிடைக்கும் பரோல் கூட அவ்வளவு எளிதில் இவர்களுக்கு கிடைப்பதில்லை.
தலைவர்களின் பிறந்த நாளின் போது வழங்கப்படும் கருணை அடிப்படையிலான மன்னிப்பு இவர்களுக்கு கிடைப்பதில்லை.
நோய் முற்றிப் போய் ஓரிருவர் சிறையிலேயே மரணித்துள்ளனர்.
அபூதாஹிர் என்பவர் பல்லாண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
பிற கைதிகளிடம் காட்டப்படும் மனிதாபிமான உணர்வு கூட முஸ்லிம் சிறைக்கைதிகள் விஷயத்தில் காட்டப்படுவதில்லை.
அவர்கள் ஜாமீன் கேட்கும் போதெல்லாம் இது போன்று ஏதாவது காரணங்களை சொல்லி ஜாமீன் மறுக்கப்படுவதே வழமையாகி விட்டது.
அப்படித்தான் இப்போதும் நடந்துள்ளது.
முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் பாரபட்சமாக நடப்பதை இனியாவது தமிழக அரசு திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
அண்ணா பிறந்த நாளையொட்டி பல்லாண்டுகளாக சிறையில் இருந்தவர்களை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அது குறித்த பரிந்துரையை தருவதற்கு நீதிபதி ஆதிநாதன் தலைமையில் கமிஷன் ஒன்றையும் நியமித்துள்ளார்கள்.
அதிலாவது முஸ்லிம்கள் பாரபட்சமின்றி அணுகப்படுகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிலும் அநீதி தொடருமேயானால் திமுக ஆட்சியை எதிர்த்து வீதியில் களமிறங்க முஸ்லிம்கள் தயாராகி கொள்ள வேண்டும்.