முஹம்மத் – இறுதித் தூதரின் பெயர்

அத்தியாயம் : 47

வசனங்களின் எண்ணிக்கை: 38

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (அல்லாஹ்வை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பவர்களின் செயல்களை அவன் வீணாக்கி விட்டான்.
2. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தமது இறைவனிடமிருந்து வந்த உண்மையாக முஹம்மதுக்கு அருளப்பட்டதை நம்பியோரின் தீமைகளை, அவர்களிடமிருந்து அல்லாஹ் அழித்து விட்டான். அவர்களின் நிலையையும் சீர்படுத்தினான்.
3. இதற்குக் காரணம், இறைமறுப்பாளர்கள் பொய்யைப் பின்பற்றுகின்றனர் என்பதும், இறைநம்பிக்கையாளர்கள் தமது இறைவனிடமிருந்து வந்த உண்மையைப் பின்பற்றுகின்றனர் என்பதும் ஆகும். இவ்வாறே அல்லாஹ், மனிதர்களுக்குரிய எடுத்துக்காட்டுகளை அவர்களுக்குக் கூறுகிறான்.
4. இறைமறுப்பாளர்களை நீங்கள் (போரில்) சந்தித்தால் பிடரிகளை வெட்டுங்கள்! போர் (முடிவுக்கு வந்து) தனது ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை (போரிடுங்கள்!) முடிவில் நீங்கள் அவர்களை மிகைத்து விட்டால் (கைது செய்து) வலிமையாகக் கட்டுங்கள்! பின்னர் (அவர்கள்மீது) கருணை காட்டலாம்; அல்லது (விடுவிப்பதற்கு) ஈட்டுத் தொகை பெறலாம். இதுவே (அல்லாஹ்வின் ஆணை). அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களைத் தண்டித்திருப்பான். எனினும் அவன் உங்களில் ஒருவர் மூலம் மற்றவரைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்கிறான்). அல்லாஹ்வின் பாதையில் யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களின் செயல்களை வீணாக்கவே மாட்டான்.
5. அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; அவர்களின் நிலையைச் சீர்படுத்துவான்.473
6. அவர்களுக்கு அவன் (ஏற்கனவே) அறிவித்த சொர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வான்.
7. இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்வான். உங்கள் பாதங்களை உறுதியாக்கி வைப்பான்.
8. இறைமறுப்பாளர்களுக்கு அழிவுதான். அவர்களின் செயல்களை அவன் வீணாக்கி விட்டான்.
9. இதற்குக் காரணம், அல்லாஹ் அருளியதை அவர்கள் வெறுத்தனர் என்பதுதான். எனவே அவர்களின் செயல்களை அழித்து விட்டான்.
10. இவர்கள் பூமியில் பயணம் செய்து, தமக்கு முன்னிருந்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைப் பார்க்க வேண்டாமா? அவர்களை அல்லாஹ் அடியோடு அழித்து விட்டான். அது போன்றவை இந்த இறைமறுப்பாளர்களுக்கும் உண்டு.
11. இதற்குக் காரணம், அல்லாஹ்வே இறைநம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன் என்பதும், இறைமறுப்பாளர்களுக்கு எந்தப் பாதுகாவலனும் இல்லை என்பதும் ஆகும்.474
12. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை அல்லாஹ் சொர்க்கங்களில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். இறைமறுப்பாளர்கள் கால்நடைகள் உண்பதைப் போன்று உண்டு, சுகம் அனுபவிக்கின்றனர். நரகமே அவர்களுக்குரிய தங்குமிடம்.
13. (நபியே!) உம்மை வெளியேற்றிய உமது ஊராரைவிட அதிக பலமிக்க எத்தனையோ ஊராரை நாம் அழித்து விட்டோம். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லை.475
14. தம் இறைவனின் தெளிவான சான்றில் இருப்பவர், யாருக்குத் தமது தீய செயல் அழகாக்கப்பட்டுத் தமது சுய விருப்பங்களைப் பின்பற்றினார்களோ அவர்களைப் போன்று ஆவாரா?476
15. இறையச்சமுடையோருக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையானது, அங்கு மாசற்ற நீரைக் கொண்ட ஆறுகளும், சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்குச் சுவையூட்டும் மது ஆறுகளும், தூய தேனாறுகளும் உள்ளன. அவர்களுக்கு அனைத்துப் பழங்களும், தமது இறைவனின் மன்னிப்பும் அங்கு உண்டு. (இந்தச் சொர்க்கவாசிகள்) நரகத்தில் நிரந்தரமாக இருப்போரைப் போன்று ஆவாரா? (நரகவாசிகளான) இவர்களுக்குக் கொதிநீர் புகட்டப்பட்டு, அது அவர்களின் குடல்களைத் துண்டு துண்டாக்கிவிடும்.
16. (நபியே!) உம்மிடம் செவியுறு(வது போல் பாவனை செய்)வோரும் அவர்களில் உள்ளனர். இறுதியில் உம்மை விட்டு அவர்கள் வெளியேறியதும், “சிறிது நேரத்திற்கு முன் அவர் என்ன சொன்னார்?” என்று அறிவு வழங்கப்பட்டோரிடம் (கிண்டலாகக்) கேட்கின்றனர். இத்தகையோரின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்கள் தமது சுய விருப்பங்களையே பின்பற்றுகின்றனர்.
17. அவன், நேர்வழியில் செல்வோருக்கு (மேலும்) நேர்வழியை அதிகப்படுத்துகிறான். அவர்களுக்கு இறையச்சத்தையும் வழங்குகிறான்.
18. உலகம் அழியும் நேரம் திடீரெனத் தம்மிடம் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் வந்து விட்டன. அ(ந்த நேரமான)து அவர்களிடம் வரும்போது அவர்கள் எவ்வாறு படிப்பினை பெறுவார்கள்?
19. (நபியே!) அல்லாஹ்வைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை என்பதை அறிந்து கொள்வீராக!477 உமது பாவத்திற்காகவும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லாஹ், உங்கள் நடவடிக்கைகளையும், தங்குமிடத்தையும் அறிகிறான்.478
20. “(போர் குறித்து) ஓர் அத்தியாயம் அருளப்பட்டிருக்க வேண்டாமா?” என இறைநம்பிக்கை கொண்டோர் கேட்கின்றனர். தெளிவான கருத்துக்களுடன் ஓர் அத்தியாயம் அருளப்பட்டு அதில் போர் பற்றிக் கூறப்பட்டால் தமது உள்ளங்களில் நோயுள்ளவர்கள், மரண பயத்தால் மதிமயங்கியவன் பார்ப்பதைப் போன்று உம்மைப் பார்ப்பதைக் காண்பீர். அவர்களுக்கு (அழிவு) நெருங்கி விட்டது.
21. கட்டுப்படுவதும் நல்ல பேச்சுமே (சிறந்தது). எனவே, (போர் குறித்த) செயல் திட்டம் உறுதியானதும் அவர்கள் அல்லாஹ்வுக்கு உண்மையாக நடந்து கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாகும்.
22. நீங்கள் புறக்கணித்து விடுவீர்களாயின், பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கும், உங்களின் இரத்த உறவுகளை முறிப்பதற்கும் (தவிர வேறெதற்கும்) முற்படுவீர்களா? 479
23. இத்தகையோரையே அல்லாஹ் சபித்து விட்டான். அவர்களைச் செவிடாக்கியும், பார்வைகளைக் குருடாக்கியும் விட்டான்.
24. இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லது (அவர்களின்) உள்ளங்களில் அதற்குரிய பூட்டுகள் உள்ளனவா?
25. தமக்கு நேர்வழி தெளிவான பின்னரும் யார் புறமுதுகு காட்டித் திரும்பிச் சென்றார்களோ அவர்களுக்கு ஷைத்தான் (தீய எண்ணங்களை) அலங்கரித்துக் காட்டி நீட்டித்து விட்டான்.
26. இதற்குக் காரணம், அல்லாஹ் அருளியதை வெறுத்தோரிடம் “நாங்கள் சில செயல்களில் உங்களுக்குக் கட்டுப்படுவோம்” என்று அவர்கள் கூறியதுதான். அவர்களின் இரகசியப் பேச்சுகளை அல்லாஹ் நன்கறிவான்.
27. வானவர்கள், அவர்களின் முகங்களிலும், முதுகுகளிலும் அடித்து, அவர்களைக் கைப்பற்றும்போது எப்படி இருக்கும்?
28. அவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுபவற்றைப் பின்பற்றியதும், அவனது பொருத்தத்தை வெறுத்ததுமே இதற்குக் காரணம். அவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான்.
29. உள்ளங்களில் நோய் உள்ளவர்கள், ‘தமது குரோதங்களை அல்லாஹ் வெளிப்படுத்தவே மாட்டான்’ என எண்ணிக் கொண்டார்களா?
30. (நபியே!) நாம் நாடினால் அவர்களை உமக்குக் காட்டியிருப்போம். அப்போது, அவர்களின் அடையாளத்தின் மூலம் அவர்களை அறிந்திருப்பீர். (அவர்கள்) பேசுகின்ற தொனியிலிருந்தும் அவர்களைத் தெளிவாக அறிந்து கொள்வீர். உங்கள் செயல்களை அல்லாஹ் அறிகிறான்.
31. உங்களில் போரிடுவோரையும், பொறுமையாளர்களையும் நாம் அறிவிக்கும் வரையிலும், உங்களைப் பற்றிய செய்திகளை நாம் வெளிப்படுத்தும் வரையிலும் உங்களைச் சோதிப்போம்.
32. (அல்லாஹ்வை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துத் தமக்கு நேர்வழி தெளிவான பின்னரும் தூதருக்கு மாறுசெய்வோர், அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களின் செயல்களை அவன் அழித்து விடுவான்.
33. இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்களின் செயல்களை வீணாக்கி விடாதீர்கள்.
34. (அல்லாஹ்வை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்து, பிறகு இறைமறுப்பாளர்களாகவே மரணித்து விட்டோரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
35. நீங்கள் (போரில்) தைரியமிழந்து விடாதீர்கள்! சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்களே மேலோங்குபவர்கள். அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். உங்கள் செயல்களை உங்களுக்கு அவன் குறைத்துவிட மாட்டான்.
36. இவ்வுலக வாழ்வு விளையாட்டும், வீணுமே ஆகும். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு, இறையச்சத்துடன் இருந்தால் உங்களுக்குரிய கூலிகளை உங்களுக்கு வழங்குவான். உங்கள் பொருள் வளங்களை உங்களிடம் அவன் கேட்க மாட்டான்.
37. அவன் உங்களிடம் அதைக் கேட்டு வற்புறுத்தினால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். அது உங்கள் குரோதங்களை வெளிப்படுத்தி விடும்.
38. அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்காக அழைக்கப்படுகிறீர்கள். உங்களில் சிலர் கஞ்சத்தனம் செய்கின்றனர். (அவ்வாறு) கஞ்சத்தனம் செய்பவர் தனக்கு எதிராகவே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவைகளற்றவன். நீங்களோ தேவையுடைவர்கள். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறொரு சமுதாயத்தை அவன் மாற்றாகக் கொண்டு வருவான். அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள்.