மேயர் தேர்வில் ஒரு முஸ்லிம் கூட இல்லையே?

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சி களையும் திமுக கைப்பற்றியது. ஒவ்வொரு மாநகராட்சிக்கான மேயர்களை அறிவித்ததில் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது.
சென்னை மேயர் பொறுப்பை அலங்கரிக்கும் ப்ரியா பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்.
இப்படி ஆதிதிராவிடர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், மீனவர் என பல்வேறு சமூகத்தை சார்ந்தோருக்கும் மாநகராட்சி மேயர் தேர்வில் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
ஆனால் இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஒருவர் கூட மேயராகவோ துணை மேயராகவோ தேர்வு செய்யப்படவில்லை. உள்ளபடியே இது முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டிலும் முஸ்லிம்கள் மொத்தமாக திமுகவிற்கே வாக்களித்துள்ளனர்.
சிந்தாமல் சிதறாமல் சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக பெற்றதின் காரணத்தினாலேயே இவ்வளவு பெரிய வெற்றியை திமுகவால் பதிவு செய்ய முடிந்தது.
தங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து ஆட்சியை பிடிக்க உதவிய சிறுபான்மை சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை மேயர் தேர்வில் திமுக அரசு வழங்கியிருக்க வேண்டும்.
21 மேயர் 21 துணை மேயர் என மொத்தம் 42 இடங்களில் அப்படியொன்றும் பெரிதாக முஸ்லிம்கள் எதிர்பார்த்துவிடவில்லை.
ஓரிரு இடங்களை வழங்கியிருந்தாலே முஸ்லிம் சமூகம் திருப்தி அடைந்திருக்கும். ஆனால் அதைக்கூட திமுக அரசு வழங்கவில்லை என்பது கவலையளிப்பதாகவே உள்ளது.
கூட்டணிக் கட்சிகளை சார்ந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இவ்விரு பொறுப்புகளில் இடம் கொடுக்க விருப்பமில்லை என்றால் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கேனும் இடம் கொடுத்திருக்கலாம். அதையும் திமுக தவிர்த்திருப்பது நெருடலையே ஏற்படுத்துகின்றது.
அண்மைக்காலமாகவே இஸ்லாமிய சமூகத்தின் குரல்களை திமுக அரசு கவனிப்பதில்லையோ என்று சந்தேகம் ஏற்படும் படியே திமுக அரசு செயல்படுகின்றது.
வார்டு மறுசீரமைப்பு எனும் பெயரில் அதிமுக காலத்தில் பெரிய குளறுபடி நடைபெற்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களது பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் அச்சீரமைப்பு அமைந்திருந்தது.
முஸ்லிம்கள் நிறைந்திருந்த வார்டில் முஸ்லிம் அல்லாதவர்களை உள்நுழைப்பது, பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் வார்டுகளின் எண்ணிக்கையை குறைப்பது இப்படியான சில குறைபாடுகள் அதில் இருந்தன.
ஆனாலும் சட்டமன்ற தேர்தல் வந்த காரணத்தால் அதிமுக அரசு அதை அப்படியே கிடப்பில் போட்டது.
அதன் பின் திமுக ஆட்சியில் தானாகவே இக்குறைகள் சரி செய்யப்படும் என்று முஸ்லிம்கள் எண்ணியிருந்த நேரத்தில் அதிமுக வடிவமைத்த வார்டு சீரமைப்புகளை அப்படியே திமுக செயல்படுத்தியது.
இது முஸ்லிம்களின் பிரதி நிதித்துவத்தை குறைக்கும் செயல் என ஆங்காங்கே பல குரல்கள் எழுந்த போதும் திமுக அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. வார்டு சீரமைப்பில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளவில்லை.
அடுத்து சிறைவாசிகள் விஷயம்.
தலைவர்களின் பிறந்த நாளை சொல்லி பலரையும் விடுவிப்பதை தமிழக அரசு வழக்கமாக கொண்டுள்ளது.
எனவே 20 வருடத்திற்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களை தலைவர்களின் பிறந்த நாளின் போது முன்விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் சமூகம் நீண்ட காலமாக எழுப்பி வருகிறது.
தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பலருக்கும் விடுதலை கிடைத்து விடுகின்றது. ஆனால் முஸ்லிம் கைதிகளுக்கு அச்சலுகை கிடைப்பதில்லை. திமுக அதிமுக இருபெரும் கட்சிகளின் ஆட்சியிலும் இந்தப் பாரபட்சம் தொடரவே செய்தது.
இறுதியாக மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக ஆட்சியில் நீதிபதி ஆதிநாதன் தலைமையில் கமிஷன் ஒன்றை நியமித்தார்கள்.
நீண்ட காலம் சிறையில் தண்டனை பெறும் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இந்த கமிஷன் தனது பரிந்துரையை அறிக்கையாக சமர்ப்பிக்கும் என்று கூறினார்கள்.
ஆனால் கமிஷன் எப்போது அறிக்கையை வெளியிடும்? அதன் ஆயுள்காலம் என்ன? உள்ளிட்ட எந்த விவரமும் இல்லை. இதுவரை அந்தக் கமிஷன் ஆய்வுக்கூட்டம் ஏதும் கூட்டினார்களா? முதற்கட்ட தகவலை ஏதும் தெரிவித்தார்களா? எதுவும் தெரியவில்லை.
எப்போது தான் தனது பரிந்துரையை தரப்போகிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
தலைவர்களின் பிறந்த நாளின் போது இரு கட்சிகளை சார்ந்த குற்றவாளிகளை முன்விடுதலை செய்வதில் எல்லாம் இப்படி பிரச்சனைகள், குளறுபடிகள், இழுத்தடிப்புகள் எதுவும் நடப்பதில்லை.
ஆனால் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த கைதிகளை முன்விடுதலை செய்தல் எனும் போது எல்லா பிரச்சனைகளும் ஒன்று சேர்ந்து கொள்கிறது.
சமீபத்தில் கூட முஸ்லிம் கைதிகளில் சிலர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்ட போது திமுக அரசு அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று மறுப்பு தெரிவித்தது.
இதுவும் முஸ்லிம்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
ஆதிநாதன் கமிஷன் தனது அறிக்கையை விரைந்து தர வேண்டும் என்று முஸ்லிம்கள் குரல் எழுப்புகின்றனர். அதையும் திமுக கண்டு கொள்வதாக தெரியவில்லை.
இத்தனைக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்வதாக திமுக வாக்குறுதி அளித்தது.
ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முன் எதை வாக்களித்ததோ அதைத்தான் திமுக அரசிடம் முஸ்லிம்கள் கேட்கிறார்கள்.
இத்தனை மாதங்களாகியும் ஆதிநாதன் கமிஷன் பற்றி எதுவும் அப்டேட் சொல்லாமல் இருப்பதும் முஸ்லிம்களின் கோரிக்கையை திமுக அலட்சியம் செய்வதாக மக்கள் புரிந்து கொள்கின்றனர்.
இப்போது அந்த பட்டியலில் மேயர் துணை மேயர் தேர்வும் சேர்ந்து கொண்டுள்ளது.
இப்படி தொடர்ந்து அலட்சியம் செய்யப்படுகிறோம் என்று முஸ்லிம்கள் உணர்ந்தால் அது திமுகவிற்கு பாதகமாகவே அமைந்து விடும். திமுகவை நோக்கி குவிந்துள்ள முஸ்லிம் வாக்குகள் சிதறி விடும் நிலை ஏற்படும் என்பதை திமுக உணர வேண்டும்.