மாதவிடாய் பெண்கள் விரட்டப்படும் அவலம் – இஸ்லாம் கூறும் தீர்வு

இந்து மதத்தைக் கடைப்பிடிக்கின்ற நேபாளத்தில் பெண்களுக்கு எதிராக ஒரு கொடுமை நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாதவிடாய் பெண்களை ஊருக்கு வெளியில் ஆதரவற்ற நிலையில் அநாதைகளாக, குடிசைகளில் தங்க வைத்து விடுவார்கள். மாதவிடாய் காலம் முடியும் வரை அவர்கள் அங்கு தான் தங்கியிருக்க வேண்டும்.
அந்தப் பழங்கால வழக்கக் கொடுமை, சாபக்கேடு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டு வட்டத்தில் அமைந்திருக்கும் இனாம் அகரம் எனும் ஊரிலும் காலம்காலமாக நடந்து வருகின்றது. இவ்வூரில் உள்ள சேரிகளில் 250 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூருக்கு வெளியே முட்டுக்காடு என்ற ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் அமைந்த கட்டடம் இருக்கின்றது. இந்த கட்டடத்தில் காற்றோட்டம் கிடையாது. தண்ணீர் வசதியில்லை. கழிப்பறை வசதி இல்லை. மொத்தத்தில் அடிப்படை வசதியே இல்லை.
பருவம் அடைந்த பதின்ம வயது இளம் பெண்கள் முதல் மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்கள் வரை கதவில்லாத இந்தப் பாழான கட்டடத்தில் தான் தங்க வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், குழந்தை பெற்ற தாய்மார்களும் சுகாதாரமற்ற, உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கின்ற ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் இந்த வீட்டில் குறைந்தது 12 நாட்கள் தங்க வேண்டும் என்பது தான்.
பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள் தங்களையும் தங்கள் பச்சிளம் குழந்தைகளையும் மிகக் கவனமாக சுகாதாரப் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு உலை வைக்கும் விதமாகவே இங்கு அவர்கள் தங்கும் நிலை அமைகின்றது. அதைவிடக் கொடுமை இந்தக் கட்டடத்தில் கழிப்பறைகள் இல்லாததால் திறந்தவெளியில்தான் இவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்ற வேண்டும். நாட்டின் பிரதமரோ தூய்மை இந்தியாவைப் பற்றி வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கின்றார். ஆனால் அவரது தூய்மை இந்தியா இந்தக் கிராமத்தில் பொதுவெளிகளில் நாறிக் கொண்டிருக்கின்றது.
“தண்ணீர் வசதியில்லாததால் என்னுடைய தாயார்தான் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வருகின்றார்” என்று ராணி என்ற 18 வயது இளம்பெண் கூறுகின்றார். ஆம்! பருவ வயதுப் பெண்களின் தாய்மார்கள் தலைவிதியை நொந்து கொண்டு வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தொலைக்கின்றனர். இந்தப் பழக்கத்தைக் கண்டு பயப்படுகின்ற சிலர் மாதவிடாய் காலத்தில் மற்ற ஊர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளில் தங்கி விடுகின்றனர். இத்தனைக்கும் காரணம் என்ன? இந்தப் பழக்கத்தைக் கைவிட்டால் அல்லது இந்த விதிகளுக்கு மாற்றமாக நடந்தால் உள்ளூரில் சாமி தங்களை தண்டித்து விடும். சாமியின் சாபத்திற்கு நாங்கள் பலியாக நேரிடும் என்ற மூட நம்பிக்கைதான்.

துருப்பிடித்த பழக்கத்தை தூக்கிப் பிடிக்கும் பெண்!
“நாங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறோம். மாதவிடாய் காலத்தில் வீட்டில் தங்கி விதிகளை மீறுபவர்களை நம் கடவுள் தண்டிப்பார் என்பது எங்கள் நம்பிக்கை. எங்களின் பழமையான வழக்கத்தைக் கைவிட நாங்கள் திட்டமிடவில்லை. நாங்கள் கேட்பதெல்லாம், இந்த நோக்கத்திற்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய முறையான கட்டிடம்தான்” என்று கிராமத்தில் வசிக்கும் 46 வயதான எஸ்.பரமேஸ்வரி தங்கள் துருப்பிடித்த அறியாமை வழக்கத்தைத் தூக்கிப் பிடிக்கின்றார்.
இவர்களிடத்தில் மாற்றம், முன்னேற்றம் ஏதேனும் ஏற்பட்டிருக்கின்றதா? என்றால் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு கூரைக் கட்டடமாக இருந்த கட்டடம் தற்போது காங்கிரீட் கட்டடமாக மாறியிருக்கின்றது. அந்த மாற்றத்தை தவிர அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் மாறவில்லை. மாறத் தயாராகவும் இல்லை. அதிகாரிகளின் அறிவுரைகளை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
“இத்தகைய சமூகக் கலாச்சாரக் கட்டுப்பாடுகள், வளர் இளைய தலைமுறைப் பெண்களை அறிவியல் உண்மைகளையும் மற்றும் சுகாதாரமான நடைமுறைகளையும் அறவே தெரியாத அளவிற்கு தடுத்து நிறுத்திவிடுகின்றன. இது சில நேரங்களில் மோசமான உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்” என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் எஸ்.சித்ரா கூறுகையில், “இதுபோன்ற தடைகள் பெண்களுக்குப் பிறப்புப் பாதையில் தொற்று உட்பட இனப்பெருக்கப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை வரவழைப்பதாக அமைந்து விடும். இத்தகைய நோய்களை உருவாக்குவதுடன் மட்டுமல்லாது, மாதவிடாய் காலத்தில் இளம் பெண்களை தனிமைப்படுத்துவது அவர்களின் மன மற்றும் உணர்வுச் சார்ந்த நலனில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று கூறுகிறார்.
“இந்த நடைமுறை அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இதுபோன்ற செயல்களுக்கு எதிராக நாங்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம், ஆனால் அவர்கள் கவனிக்கவில்லை” என்று கிராம சுகாதார செவிலியர் ஆர்.சுகந்தி கூறினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் ஆய்வுத் துறைத் தலைவர் என்.மணிமேகலை கூறும்போது, ​​“இதுபோன்ற நடைமுறைகள் இன்று மறைந்து விட்டாலும், தொலைதூரக் கிராமங்களில் உள்ள பெண்கள் இன்னும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏதேனும், துரதிருஷ்டவசமாக நடந்து விட்டால் அவர்கள் அதைக் கடவுளிடமிருந்து வந்திருக்கும் கோபத்தின் அடையாளம் என்று சொல்லி விடுகின்றார்கள். இது மக்களிடையே நிலவும் பொதுவான மனத் தடையாகும்” என்றார்.
“இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் இவ்வூர் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும்” என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியா இந்த வழக்கத்தை வெளிக்கொண்டு வந்த இந்து ஆங்கில நாளேட்டுக்கு தெரிவித்தார்.

யூத மத வழக்கமும் இந்து மத வழக்கமும்
இனாம் அகரத்தில் பெண்களுக்கு நடக்கும் இந்தக் கொடுமை, மனித உரிமை மீறல் அவ்வூர் மக்களின் அறியாமையை வெளிப்படுத்துகின்றது. கன்னிப் பெண்களையும் திருமணம் முடித்த பெண்களையும் கபளீகரம் செய்து கற்பழிக்கத் தேடும் காமப் பருந்துகள் இரவு பகல் பாராமல் வட்டமிட்டு அலைந்து கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் இதுபோன்ற தனிமை அந்தப் பருந்துகளுக்கு வலியச் சென்று விருந்து படைப்பதாகி விடும். அத்துடன், வலியச் சென்று சில நோய்களை விலைக்கு வாங்குவதாகவும் ஆகி விடும் என்பதை இவ்வூர் மக்கள் புரியவில்லை.
இவ்வூர் மக்களின் இந்த மூடப்பழக்கத்தை ஒழிப்பதற்கு வழி என்ன? வகை என்ன? இதற்குத் தீர்வு என்ன? மாதவிடாய் பெண்களை இதுபோன்று வீட்டை விட்டு ஒதுக்கி வைப்பதும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதும் வரலாற்றில் புது நிகழ்வல்ல! யூதர்களிடம் அந்தக் கொடிய வழக்கம் இருந்து வருகின்றது. இந்து மதமும் யூதமதமும் பல விஷயங்களில் ஒத்துப் போகும். மாதவிடாய் பெண்களை ஒதுக்கி வைப்பதில் இரண்டு மதங்களும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன. இந்தக் கொடுமையை, இந்த அறியாமையை இஸ்லாம்தான் அடித்து நொறுக்கி தகர்ந்தெறிந்தது. இதோ மாதவிடாய் பற்றி திருக்குர்ஆன் கூறுகின்ற அறிவியல், அறவியல் கருத்தைக் கேளுங்கள்.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஒரு தொந்தரவு. மாதவிடாய் நேரத்தில் பெண்களை (உடலுறவு கொள்வதை) விட்டும் விலகிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்துவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள். பாவமன்னிப்புக் கேட்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். தூய்மையாளர்களையும் நேசிக்கிறான்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 2:222
மாதவிடாய் பெண்களிடமிருந்து விலகி இருக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது தாம்பத்தியம் மட்டும்தான் என்று திருக்குர்ஆன் தெளிவாக விளக்கி விடுகின்றது.
இதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடுக்கும் விளக்கத்தையும் கேளுங்கள்.
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, “மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ‘அது ஒரு தொந்தரவு. மாதவிடாய் நேரத்தில் பெண்களை (உடலுறவு கொள்வதை) விட்டும் விலகிக் கொள்ளுங்கள்…” என்று தொடங்கும் (2:222வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, “நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்” என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?” என்று கேட்டனர்.
(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர்மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 507
இந்த ஹதீஸ் யூதர்களிடத்திலிருந்த பெண்களுக்கு எதிரான கொடுமையை விளக்குகின்றது. முஸ்லிம்கள் தங்கள் பெண்களிடம் இத்தகைய கொடுமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என்றும் இது தெளிவுப்படுத்துகின்றது. அதனால் முஸ்லிம்களிடம் இதுபோன்ற கொடுமை எதுவும் நிகழ்வதில்லை. ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது என்றால் அவள் உடல் முழுவதும் அசுத்தமாகி விடமாட்டாள். இதோ பின்வரும் ஹதீஸ் இதை விவரிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, “(அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு” என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் “எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!” என்றேன். அப்போது அவர்கள் “மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 502

அருகில் படுத்துக் கொள்ளுதல்
எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது கீழாடை கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (ஆடை கட்டிக்கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 492

ஒரே பாத்திரத்தில் ஒன்றாய் குளித்தல்
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குஞ்சம் வைத்த ஒரு போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் (போர்வைக்குள்ளிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய் துணியை எடுத்து (அணிந்து)கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். (ஆயினும்) அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். பெருந்துடக்குடன் இருந்த நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் நீராடுவோம்.
அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 409
இந்த ஹதீஸ்கள் மாதவிடாய் பெண்களிடம் மாநபி (ஸல்) அவர்கள் குர்ஆன் காட்டிய வழிமுறைப்படி நடந்த கொண்ட விதமாகும். மாதவிடாய் நேரத்தில் ஒரு பெண் அசுத்தமாகி விடமாட்டார் என்பதை நபி (ஸல்) அவர்களின் செயல்முறைகள் நமக்கு விளக்குகின்றன. இது தான் முஸ்லிம் குடும்பங்கள் தங்கள் பெண்களிடம் கடைப்பிடிக்கும் நடைமுறையாகும்.
இந்த நடைமுறை முஸ்லிம்களுக்கு எளிதானதற்கு காரணம் அவர்கள் கொண்டிருக்கும் ஓரிறைக் கொள்கையாகும். ஒரு மனிதனை எந்த ஒரு துன்பம் அண்டுவதாக இருந்தாலும் அணுகுவதாக இருந்தாலும் படைத்த அந்த ஓரிறைவனின் நாட்டத்தின்படிதான் என்று அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் மற்றொரு காரணமாகும்.
இனாம் அகரம் மக்களிடத்தில் ஊறிப் போய் இருப்பது மாதவிடாயுடன் ஒரு பெண் ஊருக்குள் இருந்து விட்டால் அதன் மூலம் ஏதேனும் கேடும் கெடுதியும் அங்கு வந்து விடும் என்ற மூட நம்பிக்கைதான். இந்த மூட நம்பிக்கையை வெறும் சட்டங்கள் மூலமாக உடைத்து விட முடியாது. கடவுள் பற்றிய சரியான ஒரு புரிதல் அடிப்படையில் தான் முடியும். மனிதன் கையால் படைத்த கற்களுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்ற பகுத்தறிவு சிந்தனைதான் இது மாதிரியான கண் மூடித்தனமான நம்பிக்கையை விட்டும் காப்பாற்றும். முஸ்லிம்கள் இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் காக்கப்பட்டிருக்கின்றார்.
அத்துடன், இந்த இறைநம்பிக்கைதான் முஸ்லிம்களிடம் வெட்க உணர்வை ஊட்டியிருக்கின்றது. அதன் காரணமாக முஸ்லிம் ஆண், பெண்கள் திறந்தவெளியில் மலம், ஜலம் கழிப்பதில்லை. அந்த இறைநம்பிக்கைதான் அவர்களை தூய்மையையும் கடைப்பிடிக்கச் செய்கின்றது.
இந்தியாவில் ஸ்வச் பாரத் என்ற பெயரில் தூய்மை இந்தியாவை மோடி கொண்டு வருவதற்கு முன்பாகவே முஸ்லிம்கள் தூய்மையைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் இனாம் அகரத்தில் மட்டுமல்ல! இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி இஸ்லாம் மட்டும்தான்.