அத்தியாயம் : 19
வசனங்களின் எண்ணிக்கை: 98
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.
2. (இது) தன் அடியார் ஸக்கரிய்யாவுக்கு உமது இறைவன் செய்த அருளை நினைவுகூர்வதாகும்.
3, 4. அவர் தமது இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்துப் பிரார்த்தித்தபோது, “என் இறைவனே! எனது எலும்பு பலவீனமடைந்து விட்டது. என் தலைமுடி நரையால் மிளிர்கிறது. என் இறைவனே! நான் உன்னிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆனதில்லை” என்று கூறினார்.
5, 6. “எனக்குப் பின்னால் உறவினர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவி மலடியாக இருக்கிறாள். எனவே, எனக்கு உன்னிடமிருந்து ஒரு பொறுப்பாளரை அளிப்பாயாக! அவர் எனக்கு வாரிசாக இருப்பார். யஃகூபின் குடும்பத்திற்கும் வாரிசாக இருப்பார். என் இறைவனே! அவரைப் பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!” (என்றார்.)
7. “ஸகரிய்யாவே! ஓர் ஆண் குழந்தையை உமக்கு நற்செய்தியாகக் கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா ஆகும். இதற்கு முன் இப்பெயரை (எவருக்கும்) சூட்டப்பட்டதாக நாம் ஆக்கவில்லை” (என இறைவன் கூறினான்)
8. “என் இறைவனே! என் மனைவி மலடியாக இருக்கிறாள்; நானும் முதுமையின் எல்லையை அடைந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்?” என்று அவர் கேட்டார்.
9. “அவ்வாறு தான்! ‘இது எனக்கு மிக எளிது! இதற்கு முன் நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்தபோதே நான் உம்மைப் படைத்துள்ளேன்’ என உமது இறைவன் கூறுகிறான்” என்று (வானவர்) கூறினார்.
10. “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவாயாக!” என்று அவர் கேட்டார். “நீர் நலமுடன் இருக்கும் நிலையில் மூன்று இரவுகள் மக்களிடம் உம்மால் பேசமுடியாது என்பதே உமக்குரிய அடையாளம்” என்று அவன் கூறினான்.
11. அறையிலிருந்து தமது சமுதாயத்தினரிடம் வெளிப்பட்டு, “காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) போற்றுங்கள்!” என்று அவர்களை நோக்கி சைகையால் உணர்த்தினார்.
12, 13, 14. “யஹ்யாவே! வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்வீராக!” (என்று கூறினோம்.) குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு ஞானத்தையும், நம்மிடமிருந்து இரக்க குணத்தையும், தூய பண்பையும் வழங்கினோம். அவர் இறையச்சமுடையவராகவும், தமது பெற்றோருக்குப் பணிவிடை செய்பவராகவும் இருந்தார். ஆணவம் கொண்டவராகவோ, மாறுசெய்பவராகவோ அவர் இருக்கவில்லை.
15. அவர் பெற்றெடுக்கப்பட்ட நாளிலும், மரணிக்கும் நாளிலும், (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளிலும் அவர்மீது அமைதி நிலவும்.
16, 17. இவ்வேதத்தில் மர்யமையும் நினைவுகூர்வீராக! அவர் தமது குடும்பத்தாரை விட்டும் விலகி கிழக்குப் பகுதியிலுள்ள ஓரிடத்தில் தனித்திருந்தபோது, அவர்களை விட்டும் ஒரு திரையை ஏற்படுத்திக் கொண்டார். அப்போது அவரிடம் (ஜிப்ரீல் எனும்) நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழு மனிதராக அவருக்குக் காட்சியளித்தார்.
18. “உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னை நெருங்காதீர்!)” என்று (மர்யம்) கூறினார்.
19. “தூய்மையான ஒரு மகனை உமக்குப் பரிசளிப்பதற்காக (வந்துள்ள) நான், உமது இறைவனின் தூதர்தான்!” என்று அவர் கூறினார்.
20. “எனக்கு எப்படி குழந்தை உண்டாக முடியும்? எந்த ஆணும் என்னைத் தீண்டியதில்லை; நான் நடத்தை கெட்டவளாகவும் இல்லை” என்று (மர்யம்) கூறினார்.
21. “அவ்வாறு தான்! ‘இது எனக்கு மிக எளிது. மக்களுக்கு ஒரு சான்றாகவும், நமது அருளாகவும் அவரை ஆக்குவதற்காகவே! இது தீர்மானிக்கப்பட்ட காரியமாக உள்ளது’ என உமது இறைவன் கூறுகிறான்” என்று (ஜிப்ரீல்) கூறினார்.
22. அவர் ஈஸாவைக் கருவுற்று, அதனுடன் தூரமான ஓரிடத்தில் ஒதுங்கினார்.
23. பிரசவ வேதனை, ஒரு பேரீச்சை மரத்தின் அடியில் அவரைக் கொண்டு வந்து சேர்த்தது. “இதற்கு முன்பே நான் மரணித்து, முற்றிலும் மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்கக் கூடாதா?” என்று (மர்யம்) கூறினார்.
24. அதன் அடிப்புறத்திலிருந்து அவரை (வானவர்) அழைத்து, “கவலைப்படாதீர்! உமது கீழ்ப்புறத்தில் ஒரு நீரோடையை உம் இறைவன் ஏற்படுத்தியுள்ளான்” என்றார்.
25. “பேரீச்சை மரத்தண்டை உம்மை நோக்கி அசைப்பீராக! அது கனிந்த பழங்களை உம்மீது உதிர்க்கும்”
26. “உண்டு, பருகி, கண்குளிர்ச்சி அடைவீராக! நீர் எந்த மனிதரையேனும் பார்த்தால் ‘நான் அளவிலா அருளாளனுக்காக நோன்பு நோற்க நேர்ச்சை செய்துள்ளேன். இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்’ என்று கூறி விடுவீராக!” (என்றும் அவர் கூறினார்.)
27, 28. அவரைச் சுமந்து கொண்டு தமது சமுதாயத்தாரிடம் வந்தார். “மர்யமே! மோசமான காரியத்தைச் செய்து விட்டாய்! ஹாரூனின் சகோதரியே! உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உமது தாயாரும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லையே!” என்று அவர்கள் கூறினர்.310
29. (குழந்தையான) அவரை நோக்கிச் சுட்டிக் காட்டினார். “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசமுடியும்?” என அவர்கள் கேட்டனர்.
30, 31, 32, 33. “நான் அல்லாஹ்வின் அடியார். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியம் பெற்றவனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஸகாத்தையும் (நிறைவேற்றுமாறு) எனக்கு ஆணையிட்டுள்ளான். என் தாயாருக்குப் பணிவிடை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்.) அவன் என்னை ஆணவம் கொண்டவனாகவோ, பாக்கியமிழந்தவனாகவோ ஆக்கவில்லை. நான் பெற்றெடுக்கப்பட்ட நாளிலும், மரணிக்கும் நாளிலும், (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளிலும் என்மீது அமைதி நிலவும்” என்று அவர் கூறினார்.
34. இவரே மர்யமின் மகன் ஈஸா! எதில் அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றிய உண்மையான கூற்று இதுவே!
35. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கும்போது அதற்கு ‘ஆகு’ என்றுதான் கூறுவான். உடனே அது ஆகிவிடும்.
36. “என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்தான்! எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழி!” (என்று நபியே கூறுவீராக!)
37. அவர்களுக்கிடையேயுள்ள பல கூட்டத்தாரும் கருத்து வேறுபாடு கொண்டனர். மகத்தான நாளைக் காணும்போது இறைமறுப்பாளர்களுக்குக் கேடுதான்.
38. அவர்கள் நம்மிடம் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்கவும், பார்க்கவும் செய்வார்கள்! எனினும் அநியாயக்காரர்கள் இன்று (இவ்வுலகில்) பகிரங்கமான வழிகேட்டில் உள்ளனர்.
39. காரியம் முடிக்கப்படும்போது கவலைப்படும் நாள் குறித்து அவர்களை எச்சரிப்பீராக! அவர்களோ கவனமின்றியும், இறைநம்பிக்கை கொள்ளாமலும் உள்ளனர்.311
40. பூமிக்கும், அதில் உள்ளவர்களுக்கும் நாமே உரிமையாளராவோம். நம்மிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
41. இப்ராஹீமையும் இவ்வேதத்தில் நினைவுகூர்வீராக! அவர் சிறந்த உண்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
42. அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் சிறிதும் பயனளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று கூறியதை நினைவூட்டுவீராக!
43. “என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்”
44. “என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! அளவற்ற அருளாளனுக்கு ஷைத்தான் மாறு செய்பவனாக இருக்கிறான்”
45. “என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்குத் தண்டனை ஏற்படுவதையும், நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.)
46. “இப்ராஹீமே! என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்வேன். காலமெல்லாம் என்னை விட்டுப் பிரிந்து விடு!” என்று அவர் கூறினார்.
47, 48. “உம்மீது ஸலாம் உண்டாகட்டும்! என் இறைவனிடம் உமக்காகப் பாவ மன்னிப்புக் கோருவேன். அவன் என்னிடம் இரக்கமுள்ளவனாக இருக்கிறான். உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன். என் இறைவனிடமே பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
49. அவர்களை விட்டும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருப்பவற்றை விட்டும் அவர் விலகியபோது, இஸ்ஹாக்கையும், யஃகூப்பையும் அவருக்குப் பரிசாக அளித்து, ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
50. அவர்களுக்கு நமது அருளை வழங்கினோம். (பின்வருவோரிடம்) அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரையும் ஏற்படுத்தினோம்.
51. மூஸாவையும் இவ்வேதத்தில் நினைவுகூர்வீராக! அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார்; தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
52. தூர் மலையின் வலப்புறத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். இரகசியமாக உரையாடுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம்.312
53. அவரது சகோதரர் ஹாரூனையும் நமது அருளால் நபியாக அவருக்குக் கொடையளித்தோம்.
54. இஸ்மாயீலையும் இவ்வேதத்தில் நினைவுகூர்வீராக! அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
55. அவர், தமது குடும்பத்தாருக்குத் தொழுகை மற்றும் ஸகாத்தை (நிறைவேற்றுமாறு) ஏவக்கூடியவராக இருந்தார்; தமது இறைவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
56. இத்ரீஸையும் இவ்வேதத்தில் நினைவுகூர்வீராக! அவர் சிறந்த உண்மையாளராகவும் நபியாகவும் இருந்தார்.313
57. அவரை உயர்ந்த நிலைக்கு உயர்த்தினோம்.
58. யாருக்கு அல்லாஹ் அருள்புரிந்தானோ அத்தகையோர் இவர்கள்தான். அவர்கள் ஆதமின் வழித்தோன்றலிலுள்ள நபிமார்களிலும், நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றிச் சென்றவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித்தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்தவர்களிலும் உள்ளவர்கள். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் எடுத்துரைக்கப்பட்டால் அழுதவர்களாக ஸஜ்தாவில் விழுவார்கள்.
59. அவர்களுக்குப் பின் மற்றொரு தலைமுறையினர் அவர்களின் இடத்திற்கு வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர்; சுய விருப்பங்களைப் பின்பற்றினர். எனவே அவர்கள் அழிவைச் சந்திப்பார்கள்.
60. எனினும், யார் பாவ மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
61. அளவற்ற அருளாளன் தன் அடியார்களுக்கு, மறைவாக இருக்கும் அந்த நிலையான சொர்க்கங்களை வாக்களித்துள்ளான். அவனது வாக்குறுதி நிறைவேற்றப்படக் கூடியதாகும்.
62. அங்கு அவர்கள் வீணானதைச் செவியுற மாட்டார்கள். மாறாக, ஸலாம் என்பதையே (செவியுறுவார்கள்.) அங்கு அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுக்கான உணவு உள்ளது.
63. அந்தச் சொர்க்கத்திற்கு நமது அடியார்களில் இறையச்சமுடையவர்களாக இருப்போரை வாரிசாக்குவோம்.
64. “(நபியே!) உமது இறைவனின் ஆணையின்றி நாங்கள் இறங்க மாட்டோம்.314 எங்களுக்கு முன்னுள்ளவையும், பின்னுள்ளவையும், அவற்றுக்கு இடைப்பட்டவையும் அவனுக்கே சொந்தம். உமது இறைவன் எதையும் மறப்பவன் அல்ல!” (என ஜிப்ரீல் கூறினார்.)315
65. (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவனாவான். எனவே அவனையே வணங்குவீராக! அவனை வணங்குவதில் (ஏற்படும் கஷ்டங்களைப்) பொறுத்துக் கொள்வீராக! அவனுக்கு நிகரான யாரையும் அறிவீரா?
66. “நான் மரணித்துவிட்டால், உயிருடன் எழுப்பப்படுவேனா?” என மனிதன் கேட்கிறான்.
67. அவன் எப்பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் இதற்கு முன் அவனை நாமே படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
68. உமது இறைவன்மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான் களையும் நாம் ஒன்றுசேர்ப்போம். பின்னர் அவர்களை நரகத்தைச் சுற்றிலும் முழங்காலிட்டவர்களாக முன்னிலைப்படுத்துவோம்.
69. பின்னர், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்வதில் ஒவ்வொரு கூட்டத்திலும் யார் மிகக் கடுமையாக இருந்தார்களோ அவர்களைத் தனியாகப் பிரித்தெடுப்போம்.
70. (அதன்) பின்னர், நரகத்தில் நுழைவதற்கு அவர்களில் மிகத் தகுதியானவர்கள் யார் என்பதை நாமே நன்கறிந்தவர்கள்.
71. உங்களில் யாரும் அதைக் கடந்து செல்லாமல் இருக்க முடியாது. இது உமது இறைவனால் தீர்மானிக்கப்பட்ட முடிவாகும்.316
72. பிறகு இறையச்சமுடையோரைக் காப்பாற்றுவோம். அநியாயக் காரர்களை முழங்காலிட்டவர்களாக அதில் விட்டுவிடுவோம்.
73. அவர்களிடம் நமது வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால் “(நம்) இரு சாராரில் நல்ல வசிப்பிடத்தையும், சிறந்த சபையையும் கொண்டிருப்போர் யார்?” என்று இறைநம்பிக்கை கொண்டோரிடம் இறைமறுப்பாளர்கள் கேட்கின்றனர்.
74. இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறைகளை அழித்துள்ளோம். அவர்கள் வாழ்க்கைச் சாதனத்திலும் தோற்றத்திலும் (இவர்களைவிட) மிகச் சிறந்த நிலையில் இருந்தனர்.
75. “யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்களுக்கு அளவிலா அருளாளன் கால அவகாசத்தை நீட்டிக்கிறான். முடிவில், தமக்கு வாக்களிக்கப்பட்டவற்றில் தண்டனையையோ அல்லது உலகம் அழியும் நேரத்தையோ அவர்கள் காணும்போது, கெட்ட வசிப்பிடத்தையும், பலவீனமான படையையும் கொண்டவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) கூறுவீராக!
76. நேர்வழி நடப்போருக்கு, அல்லாஹ் நேர்வழியை அதிகப் படுத்துகிறான். நிலைத்து நிற்கும் நற்செயல்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், திரும்புமிடத்தில் சிறந்ததுமாகும்.
77. நமது வசனங்களை மறுத்து, “எனக்குப் பொருளாதாரமும் பிள்ளைச் செல்வமும் கொடுக்கப்படும்” என்று கூறியவனை நீர் பார்த்தீரா? 317
78. அவன் மறைவானதைத் தெரிந்து கொண்டானா? அல்லது அளவிலா அருளாளனிடம் வாக்குறுதி எதையும் பெற்று விட்டானா?
79. அவ்வாறல்ல! அவன் கூறுவதை எழுதி வைப்போம். அவனுக்கு வேதனையை மென்மேலும் நீடிக்கச் செய்வோம்.
80. அவன் கூறியவற்றுக்கு நாமே உரிமையாளராவோம். அவன் நம்மிடம் (பொருளோ, பிள்ளைகளோ இன்றி) தனியாகவே வருவான்.
81. தமக்குப் பக்கபலமாக இருப்பார்கள் என்பதற்காக, அல்லாஹ்வை யன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
82. எனினும், அவர்களோ தம்மை இவர்கள் வணங்கியதை மறுத்து, இவர்களுக்கு எதிரியாகவும் ஆகிவிடுவர்.
83. இறைமறுப்பாளர்களை(ப் பாவம் செய்ய)த் தூண்டிக் கொண்டே இருப்பதற்காக அவர்களிடம் ஷைத்தான்களை அனுப்பியுள்ளோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
84. எனவே அவர்கள் விஷயத்தில் அவசரப்படாதீர்! அவர்களுக்கு நாம் கணக்கிடுவதெல்லாம் (குறிப்பிட்ட) தவணையைத் தான்.
85, 86. அந்நாளில் அளவிலா அருளாளனை நோக்கி இறையச்சம் உடையோரை அணியாக ஒன்றுதிரட்டுவோம். குற்றவாளிகளைத் தாகமுடையோராக நரகத்தை நோக்கி ஓட்டிச் செல்வோம்.
87. அளவிலா அருளாளனிடம் உறுதிமொழி எடுத்தவர்களைத் தவிர, எவரும் (எவருக்கும்) பரிந்துரை செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள்.
88. அவர்கள், “அளவிலா அருளாளன், பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர்.
89. மிக மோசமான விஷயத்தையே நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
90, 91. அவர்கள், அளவிலா அருளாளனுடன் பிள்ளையைத் தொடர்புபடுத்துவதன் காரணமாக வானங்கள் வெடிப்பதற்கும் பூமி பிளப்பதற்கும் மலைகள் நொறுங்குவதற்கும் முனைகின்றன.
92. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்வது அளவிலா அருளாளனுக்குத் தகுதியானதல்ல!318
93. அளவிலா அருளாளனிடம் வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் அடிமையாகவே வருவார்கள்.
94. அவன் அவர்களைச் சூழ்ந்தறிந்துள்ளான். மேலும் அவர்களைத் துல்லியமாகக் கணக்கிட்டுள்ளான்.
95. அவனிடம் அவர்கள் ஒவ்வொருவரும் மறுமை நாளில் தனித்தே வருவார்கள்.
96. இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோருக்கு, அளவிலா அருளாளன் அன்பை உண்டாக்குவான்.319
97. (நபியே!) நாம் இ(வ்வேதத்)தை உமது மொழியில் எளிதாக்கி இருப்பதெல்லாம், இதன் மூலம் இறையச்சமுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவதற்காகவும், விதண்டா வாதம் செய்யும் கூட்டத்தினரை நீர் எச்சரிப்பதற்காகவும் தான்.
98. இவர்களுக்கு முன்பு நாம் எத்தனையோ தலைமுறைகளை அழித்திருக்கிறோம். அவர்களில் யாரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களின் சிறு சப்தத்தையேனும் கேட்கிறீரா?