மனைவிகளின் கடமை
கணவனின் வீட்டைப் பாதுகாப்பதும், பிள்ளையை முறையாக வளர்ப்பதும் கணவனுக்குப் பிடித்தவாறு நடந்து கொள்வதும் மனைவியின் மீது கடமை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். ஒரு பெண், தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (5200)
கணவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் மனைவி அனுமதிக்கலாகாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5195)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5082)
அலங்கரித்துக் கொள்ளுதல்
கணவனுக்கு முன்னால் தன்னை அலங்கரித்துக் கொண்டு வர வேண்டும். கணவன் மனைவியைப் பார்க்கும்போது அவனுக்கு சந்தோஷமும் ஆசையும் ஏற்பட வேண்டும்.
(தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபி (ஸல்) அவர்கள், “நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்று விடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக் கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளும் வரை, தலை விரி கோலமாயிருக்கும் பெண் தலை வாரிக் கொள்ளும் வரை (பொறுமையாயிரு!)’’ என்று கூறிவிட்டு, “புத்திசாலித்தனமாக நடந்து கொள்; புத்திசாலித்தனமாக நடந்து கொள்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி (5245)
‘‘ஒரு ஆண் சேமித்து வைக்கும் சொத்தில் சிறந்தது நல்ல பெண்ணாகும். கணவன் அவளைக் காணும் போது அவனுக்கு அவள் சந்தோஷத்தை ஏற்படுத்துவாள். கட்டளையிடும் போது அவனுக்குக் கட்டுப்படுவாள். கணவன் இல்லாதபோது அவன் (சொத்தைப்) பாதுகாப்பாள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவுத் (1417)
உறவுக்கு அழைத்தால் மறுக்கக்கூடாது
ஒருவர் தம்முடைய மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5193)
கணவன் அனுமதியின்றி உபரியான நோன்புகள் வைக்கக்கூடாது
கணவனின் உடல் தேவையைப் பூர்த்தி செய்வது மனைவியின் கடமையாகும். மனைவி உபரியான நோன்பை வைத்திருக்கும் நிலையில், கணவனுக்கு உடல் தேவை ஏற்பட்டு, அதனால் கணவன் பாதிக்கப்படுவான் என்பதால் கணவனின் அனுமதி பெற்று உபரியான நோன்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
கணவர் உள்ளூரில் இருக்கும் நிலையில் ஒரு பெண் அவரது அனுமதி இல்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்கக் கூடாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5192)
கணவன், தன் தேவைக்காக மனைவியை அழைத்தால் அவள் அடுப்பில் (வேலை பார்த்துக் கொண்டு) இருந்தாலும் அவனிடத்தில் செல்லட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதி (1080)
அந்தரங்கங்களை வெளிப்படுத்தக்கூடாது
கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் அந்தரங்கமான நடப்புகளை மற்றவர்களிடம் பகிரக்கூடாது. ஆண்கள் தங்கள் நண்பர்களிடமோ, பெண்கள் தங்கள் தோழிகளிடமோ அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வது குற்றமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவன் ஆவான்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (2832)
அடுத்த பெண்களைப் பற்றி கணவனிடம் வர்ணிக்கக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் இன்னொரு பெண்ணைக் கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம், அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி (5240)
கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
மார்க்கத்திற்கு உட்பட்ட காரியங்களில் கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் “எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம் பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர்’’ என்று கூறினார்கள். அப்போது “இறைவனையா அவர்கள் நிராகரித்தார்கள்?’’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டு விட்டாளானால் “உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை, என்று பேசிவிடுவாள்’’ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (29)
ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். அவர் தேவையை முடித்துக் கொண்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் ‘‘உனக்குக் கணவன் இருக்கிறாரா?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்து கொள்கிறாய்?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘என்னால் இயலாமல் போனாலே தவிர, அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்க மாட்டேன்’’ என்று கூறினார். ‘‘நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்து கொள்கிறாய் என்பதை கவனித்துக் கொள். ஏனென்றால் அவர்தான் உனது சொர்க்கமாகும். உனது நரகமுமாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)
நூல்: அஹ்மத் (18233)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் இன்னொருவருக்குச் சிரம் பணியுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்திருந்தால் மனைவி தன் கணவனுக்குச் சிரம் பணியுமாறு கட்டளையிட்டிருப்பேன்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
நூல்: அஹ்மத் (20983)
மார்க்கத்திற்கு எதிராகக் கட்டுப்படுதல் இல்லை
கணவன் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்யுமாறு கட்டளையிட்டால் அதற்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. கட்டுப்படவும் கூடாது.
அன்சாரிகளில் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, “என் கணவர், எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுமாறு பணிக்கிறார்’’ என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்! (ஒட்டு முடி வைக்காதே!) ஒட்டு முடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்’’ என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (5205)
‘‘அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: புகாரி (7257)
கணவனின் உறவுகளைக் கவனித்தல்
கணவனின் நெருங்கிய உறவாக இருக்கும் அவரது தந்தை, தாய் போன்றவர்களைக் கவனிப்பது நல்ல பெண்மணியின் அடையாளமாகும். கணவனுக்கு மட்டுமே பணிவிடை செய்வேன் என்றில்லாமல் நம்மால் முடிந்தளவு அனைவருக்கும் உதவி செய்து வாழ வேண்டும்.
என்னிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!’’ என்று கேட்டார்கள். நான், “ஆம்’’ என்று கூறினேன். “கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா?’’ என்று கேட்டார்கள். நான், “அல்ல; கன்னி கழிந்த பெண்ணைத்தான்’’ என்று கூறினேன். “உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ்-ரலி அவர்கள்) ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை பராமரித்து வரும் ஒரு பெண்ணை (தேர்ந்தெடுத்தேன்)’’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ செய்தது சரிதான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி (4052)
அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் (தமது) மண விருந்தின் போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக அபூ உசைத் (ரலி) அவர்களுடைய துணைவியார் (மணப் பெண்) உம்மு உசைத் (ரலி) அவர்களே உணவு தயாரித்துப் பரிமாறவும் செய்தார்கள். உம்மு உசைத் (ரலி) அவர்கள் (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப் போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரலி) அவர்கள் அந்தப் பேரீச்சங்கனிகளைப் பிழிந்து அன்பளிப்பாக, பருகச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஃத் (ரலி)
நூல்: புகாரி (5182)
கணவன் அனுமதி பெற்று வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும்
பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கணவனிடம் அனுமதி கோர வேண்டும். இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (5238)
கணவனின் பொருளை அவன் அனுமதியின்றி எடுத்தல்
கணவன், குடும்பத் தேவைகளுக்குப் போதுமான தொகையைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தால் அவனுக்குத் தெரியாமல் தேவையான அளவு மட்டும் அவனது பணத்தில் மனைவி எடுத்துக் கொள்வது குற்றமில்லை.
முஆவியா (ரலி) அவர்களின் தாயார் ஹிந்த் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(என் கணவர்) அபூசுஃப்யான் கஞ்சராக இருக்கிறார். அவரது பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா?’’ எனக் கேட்டார்கள். அதற்கு, ‘‘உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் பிள்ளைகளும் எடுத்துக் கொள்ளுங்கள்!’’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (2211)
கணவனின் செல்வத்தில் நல்வழியில் செலவு செய்தல்
கணவன் சம்பாதித்த பொருட்களிலிருந்து மார்க்கம் வலியுறுத்திய, ஆர்வமூட்டிய காரியங்களுக்குச் செலவழிப்பதால் மனைவிக்கும் கணவனுக்கும் நன்மை கிடைக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை – வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (1425)