மவ்லிது, மீலாத் வழிகேடுகளை நியாயப்படுத்த திரித்துக் கூறப்படும் ஆதாரங்களும் முறையான விளக்கங்களும்

இஸ்லாம் என்பது இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். முழுமைப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் சொல்லித்தராத எந்த ஒன்றும் வணக்கமாக ஆகமுடியாது.  நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக 23 ஆண்டுகாலம் இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் இறைத்தூதராக வாழ்ந்த காலத்தில் எல்லா நல்லறங்களையும் நமக்கு எடுத்துரைத்துவிட்டார்கள். எல்லாத் தீய காரியங்களையும் நமக்குத் தடை செய்து விட்டார்கள். அவ்வாறே மார்க்கம் என்ற பெயரில் நபியவர்கள் காட்டித் தராதவற்றை உருவாக்கினால் அவை வழிகேடு என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்திச் சென்றுள்ளார்கள்.  ஆனால் நபியவர்களின் எச்சரிக்கையையும் மீறி, நபி (ஸல்) அவர்கள் மரணித்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமிய சமுதாயத்தில் மார்க்கம் என்ற பெயரில் நுழைந்த வழிகேடுகளில் உள்ளவைதான் இந்த மவ்லிது, மீலாத் என்ற வழிகேடுகளாகும். இதுகுறித்து இதே இதழில் பல்வேறு கட்டுரைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

இந்த மவ்லித், மீலாத் எனும் வழிகேடுகளை உருவாக்கியவர்களும், அவற்றை வயிற்றுப் பிழைப்பாக்கிக் கொண்டோரும் தமது வழிகேட்டை நியாயப்படுத்துவதற்காக சில திருமறை வசனங்களையும், நபிமொழிகளையும் திரித்துக் கூறியும், நபியவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை எடுத்துரைத்தும் தமது வழிகேட்டை நியாயப்படுத்துவதற்குரிய ஆதாரங்களாக முன்வைக்கின்றனர். அவர்கள் முன்வைக்கும் சில ஆதாரங்களையும், அவற்றுக்கான முறையான விளக்கங்களையும் இந்தக் கட்டுரையில் நாம் காணவிருக்கின்றோம்.

 

மவ்லிதை ஆதரிப்போரின் ஆதாரம் :

திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, “அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் “நான் நபியாக நியமிக்கப்பட்டேன்’ அல்லது “எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)

நூல் : முஸ்லிம் (2152)

நபியவர்கள் தமது பிறந்த நாளான திங்களன்று நோன்பு நோற்குமாறு கூறியுள்ளார்கள். எனவேதான் நாங்கள் வேறு வடிவத்திலும் அதைக் கொண்டாடுகிறோம். அதாவது உணவளித்தல், மவ்லிது பாடல்களைப் பாடி கொண்டாட்டங்களில் ஈடுபடுதல் இன்னும் இதுபோன்று பலகாரியங்களைச் செய்கிறோம் என மவ்லிதை ஆதரிப்போர் கூறுகின்றனர்.

முறையான விளக்கம் :

திங்கள் கிழமை நோன்பு நோற்பது பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது அன்றுதான் அவர்கள் பிறந்ததாகவும், அன்றுதான் அவர்கள் நபியாக நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்கள் என இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட விதத்தில், குறிப்பிட்ட அளவில் ஒரு செயலை நபிவர்கள் நமக்கு மார்க்கமாக  வழிகாட்டினால் அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறுதான் நாம் செய்ய வேண்டும். நபியவர்கள் செய்த விதம், செய்த அளவு, நிர்ணயித்த காலம், நிர்ணயித்த இடம், செய்ததற்கான நோக்கம் இவற்றில் எதையும் மாற்றம் செய்யும் அதிகாரம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தவிர வேறு யாருக்கும் கிடையாது. இது இஸ்லாத்தின் அடிப்படையாகும். பின்வரும் சான்றுகளை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் தமது அக்காரியத்தில் சுயமாக முடிவு செய்வது இறைநம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தகுதியானதல்ல. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ அவன் பகிரங்கமாக வழிகெட்டு விட்டான்.

(அல்குர்ஆன் 33 : 36)

(நபியாகிய) அவரது கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குச் சோதனை ஏற்படுவதையோ, அல்லது துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

(அல்குர்ஆன் 24 : 63)

தூதர் உங்களுக்குக் கொடுத்ததை எடுத்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.

(அல்குர்ஆன் 59 : 7)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2697, முஸ்லிம் 3540

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (3541)

மேற்கண்ட இறைவசனங்கள் மற்றும் நபி மொழிகள் அனைத்தும் அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றை நமக்கு மார்க்கமாக வழிகாட்டிவிட்டால் அதை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும். அதில் கூடுதலாகவோ, குறைவாகவோ எந்த ஒரு மாற்றத்தையும் செய்யும் அதிகாரம் நமக்கு இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அவ்வாறு இருக்கையில் நபியவர்களிடம் திங்கள் அன்று நோன்பு நோற்பதைப் பற்றிக் கேட்கப்பட்ட போது அன்றுதான் நான் பிறந்தேன், அன்றுதான் நாம் நபியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறியிருப்பதால் ஒவ்வொரு திங்கள் அன்றும் நாம் நோன்பு நோற்கலாமே தவிர வேறு காரியங்களை மார்க்கம் என்ற பெயரில் உருவாக்குகின்ற அதிகாரம் யாருக்கும் கிடையாது. எனவே திங்கள் கிழமை நோன்பு நோற்பது தொடர்பான செய்தியில் மீலாது விழா கொண்டாடலாம் என்பதற்கோ, மவ்லித் ஓதலாம் என்பதற்கோ, வேறு காரியங்களைச் செய்யலாம் என்பதற்கோ கிஞ்சிற்றும் ஆதாரம் கிடையாது.

மேலும் திங்கள் கிழமை என்பது ஒவ்வொரு வாரமும் மீண்டும் மீண்டும் வரக்கூடிய நாளாகும். நபியவர்கள் ஒவ்வொரு திங்களும் நோன்பு நோற்றுள்ளார்களே தவிர, தமது பிறந்த நாள் என்று கூறி வருடத்தில் ஒரு நாளை மட்டும் மீலாது விழா என்ற பெயரில் அவர்கள் கொண்டாடவில்லை. இன்னும் சொல்லப் போனால் நபியவர்கள் எந்த நாளில் பிறந்தார்கள் என்பதற்குக் கூட உறுதியான எந்த ஒரு சான்றும் கிடையாது. ரபீவுல் அவ்வல் 12ல்தான் பிறந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல.  நபியவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று நோன்பு நோற்றிருக்கும் போது நாங்கள் வருடத்தில் ஒரு நாளைக் கொண்டாடுவோம் என்பது நபிகள் நாயகத்தை மட்டம் தட்டுகின்ற அதிகப் பிரசங்கித் தன்மையாகும். இதைத்தான் இந்த மீலாது விழா அனாச்சாரத்தை ஆதரிப்போர் நபியை நேசிக்கிறோம் என்ற பெயரில் செய்கின்றனர்.

இந்தச் செய்தி மீலாது விழா மற்றும் மவ்லித் போன்ற அனாச்சாரங்களை செய்வதற்குரிய ஆதாரமாக இருந்திருந்தால் நபியவர்களும் அருமை ஸஹாபாக்களும் அதைச் செய்து அவற்றை நற்காரியமாக வழிகாட்டியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்ததாக எந்த ஒரு ஆதாரமும் கிடையாது.  எனவே இந்தச் செய்தியிலிருந்து இவர்கள் புரிந்து கொள்ளும் விளக்கம் மாபெரும் வழிகேடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

“திங்கள் கிழமை நோன்பு பற்றி கேட்கப்பட்ட போது அன்றுதான் நான் பிறந்தேன் என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.”

இதன் பிரகாரம் ஒருவர் திங்கள் கிழமை நோன்பு நோற்கலாம் என்றுதான் விளங்கிக் கொள்ளலாம். ஆனால் மீலாது விழா மற்றும் மவ்லித் போன்ற அனாச்சாரங்களை ஆதாரங்களை ஆதரிப்போர் அன்று விதவிதமான உணவுகள், குடிபானங்கள், இனிப்புப் பலகார வகைகளை உண்டு ருசித்து சுகபோகத்தில் மூழ்கித் திளைக்கின்றனர். நோன்பு நோற்றல் என்பது இதற்கு நேர் எதிரான காரியமாகும். அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை எதையும் உண்ணாமல் பருகாமல் இருப்பதாகும்.  நபிவழிக்கு நேர் எதிரான காரியங்களைச் செய்வதற்கு நபிமொழியை ஆதாரம் காட்டுவதுதான வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது.

நபியவர்கள் ஒவ்வொரு  திங்கள் கிழமையும் பகலில்தான் நோன்பு வைத்துள்ளார்கள். ஆனால் இந்த மீலாது, மவ்லிதுக் காவலர்களோ பகலில் உண்டு ருசித்து, இரவு நேரங்களிலும் சுகபோகத்தில் திளைக்கின்றனர். மார்க்கம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் இந்த அனாச்சாரங்களுக்கு இந்த நபிமொழி எப்படி ஆதாரமாக அமையும்? என்பதை அறிவுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபியவர்கள் நோன்பு நோற்குமாறு கூறிய நபிமொழியை பண்டிகையாகக் கொண்டுவதற்குரிய ஆதாரமாக, குறைந்தபட்ச அறிவுள்ளவர் கூட முன்வைக்கமாட்டார். நோன்பு நோற்பதை பண்டிகைக் கொண்டாட்டமாக நபியவர்கள் கருதியிருந்தால் முஸ்லிம்களுக்கு நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் இரண்டு நாட்கள் மட்டும்தான் பெருநாள் என்று கூறியிருப்பார்களா? பெருநாட்களில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருப்பார்களா? இதிலிருந்தே நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதிலிருந்தே பண்டிகையாகக் கொண்டாடுவதற்குரிய ஆதாரமாக இந்த நபிமொழியை முன்வைப்பது மாபெரும் அறியாமையாகும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

 

மவ்லிதை ஆதரிப்போரின் ஆதாரம் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் முன்சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூற்கள் : திர்மிதி (940), அபூ தாவூத் (4254)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும். ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப் பரிகாரமாகும்.

அறிவிப்பவர் : முஆத் (ரலி)

நூல் : அல்ஜாமிவுஸ் ஸகீர்.

நபிமார்கள் நல்லடியடியார்களின் சரித்திர வாழ்க்கை வரலாறுகள். அவர்களின் பிறப்பு சிறப்புக்களை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது நபிவழி என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. எனவே நாங்கள் மவ்லித் ஓதுகிறோம், மீலாத் கொண்டாடுகிறோம் என மவ்லிதை ஆதரிப்போர் கூறுகின்றனர்.

முறையான விளக்கம் :

முதலில் இவர்கள் எடுத்து வைக்கும் இந்தச் சான்றுகள் சரியானவைதானா? என்பதைப் பார்த்து விட்டு அதில் மவ்லித், மீலாத் கொண்டாடுவதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்பதைக் காண்போம்.

“உங்களில் முன்சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்” என்று ஒரு செய்தியை முதலில் குறிப்பிட்டுள்ளனர்.

 حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عَنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ الْمَكِّيِّ عَنْ عَطَاءٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ وَكُفُّوا عَنْ مَسَاوِيهِمْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ قَالَ سَمِعْت مُحَمَّدًا يَقُولُ عِمْرَانُ بْنُ أَنَسٍ الْمَكِّيُّ مُنْكَرُ الْحَدِيثِ  (روا الترمذي)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் மரணித்து விட்டவர்களின் நல்லவைகளை நினைவு கூறுங்கள்.  அவர்களின் தீமைகளை (நினைவு கூர்வதை) தவிர்ந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூற்கள்: திர்மிதி 930

இச்செய்தியைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதி அவர்களே இச்செய்தியில் இடம் பெற்றுள்ள “இம்ரான் இப்னு அனஸ் அல்மக்கீ” என்பார் “முன்கருல் ஹதீஸ்” (ஹதீஸ்களில் நிராகரிக்கப்படக்கூடியவர்) என்று இமாம் புகாரி அவர்கள் விமர்சித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இது தவிர இன்னும் பல அறிஞர்களும் இவரை விமர்சித்துள்ளனர். எனவே இது ஆதாரத்திற்குத் தகுதியற்ற பலவீனமான செய்தியாகும்.

ஒரு வாதத்திற்கு இதைச் சரி என்று வைத்துக் கொண்டாலும் இதிலிருந்து மவ்லித் ஓதுவதற்கோ, அலலது மீலாது விழா கொண்டாடுவதற்கோ எவ்வாறு ஆதாரம் எடுக்க முடியும்?

இதே கட்டுரையில் முன்னர் கேட்ட கேள்விகளைத்தான் இதிலும் நாம் கேட்க வேண்டியுள்ளது. இந்தச் செய்தியிலிருந்து மீலாது கொண்டாடலாம் என்றால் இன்றைக்கு இவர்கள் செய்வது போல் நபியவர்கள் காலத்தில் செய்வதற்கு அவர்களைத் தடுத்தது எது? நபியவர்கள் காலத்தில் ஏன் ரபீவுல் அவ்வல் 12 நாட்கள் சுப்ஹான மவ்லித் ஓதவில்லை? ஏன் மீலாது ஊரவலங்கள் நடத்தவில்லை? வீடுகள் தோறும் மேக்கட்டுகள் கட்டி ஹஜ்ரத்மார்களை அழைத்து பலவகையான உணவுகள், ருசியான பலகாரங்கள் வைத்து மவ்லிது பாட்டு பாடி நபியவர்களோ, ஸஹாபாக்களோ உண்டு ருசித்துள்ளார்களா? சுகபோகங்களில் திளைத்துள்ளார்களா? இந்த வழிகேடர்கள் அதற்கு ஏதேனும் ஓர் நேரடியான ஆதாரத்தை முன்வைக்க முடியுமா?

இந்த வழிகேடர்கள் எல்லா வழிகேடுகளையும் செய்து விட்டு அந்த வழிகேடுகளுக்கு “நபிமார்கள் நல்லடியடியார்களின் சரித்திர வாழ்க்கை வரலாறுகள். அவர்களின் பிறப்பு சிறப்புக்களை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது” என்று பெயர் சூட்டி, தமக்குத் தாமே அகமகிழ்ந்து கொள்கின்றனர்.

மதுவிற்கு வேறு பெயர் சூட்டி அழைப்பதினால் அது எவ்வாறு அனுமதிக்கப்பட்டதாக ஆகாதோ, அது போன்று இவர்கள் செய்யும் வழிகெட்ட காரியங்களுக்கெல்லாம் “சரித்திரத்தை எடுத்துரைப்பது” “சிறப்புக்களை எடுத்துரைப்பது” என்று கூறிக் கொள்வதால் அது நபிவழியாக ஆகிவிடாது.

மேற்கண்ட செய்தி பலவீனமானதாகும். ஒரு வாதத்திற்கு அது சரி என்று வைத்துக் கொண்டாலும் அதன் கருத்து “முஸ்லிம்களில் யாரேனும் ஒருவர் மரணித்து விட்டால் அவரது மரணத்திற்குப் பிறகு அவர் செய்த தீயவைகளைப் பற்றிப் பேசாமல் அவர் செய்த நல்ல விசயங்களை பேசிக் கொள்ள வேண்டும்” என்பதுதான். அதை விட்டுவிட்டு இணைவைப்புக் கவிதைகளை எழுதி வைத்துக் கொண்டு அதை குறிப்பிட்ட காலங்களில் வீடுவீடாகவும், பள்ளிவாசல்களிலும் ஓதுவதையோ, அல்லது மீலாது விழா என்ற பெயரில் பண்டிகையாகக் கொண்டாடுவதையோ இது குறிக்காது.

அடுத்ததாக “அல்ஜாமிவுஸ் ஸகீர்” என்ற நூலில் இடம் பெற்றிருப்பதாக அவர்கள் குறிப்பிடும் ஆதாரத்தினுடைய தரத்தினைக் காண்போம்.

الجامع الصغير من حديث البشير النذير (1/ 412(

4331   ذكر الأنبياء من العبادة، وذكر الصالحين كفارة، وذكر الموت صدقة، وذكر القبر يقربكم من الجنة  ( فر ) عن معاذ -(ض)

நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும். நல்லோர்களை நினைவு கூர்வது பாவப்பரிகாரமாகும். மரணத்தை நினைவு கூர்வது தர்மமாகும். கப்ரை நினைவு கூர்வது உங்களை சொர்க்கத்தின் பக்கம் நெருக்கமாக்கி வைப்பதாகும்.

(இமாம் சுயூத்தி அவர்களுக்குரிய அல்ஜாமிவுஸ் ஸகீர் பாகம் 1 பக்கம் 412)

இந்தச் செய்தி முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும்.

இமாம் சுயூத்தி அவர்களே தமது “ஜாமிவுல் அஹாதீஸ்” என்ற நூலில் இச்செய்தியைப் பதிவு செய்த பிறகு இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

جامع الأحاديث (13/ 40)

12503 – ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة الذنوب وذكر الموت صدقة وذكر النار من الجهاد وذكر القبر يقربكم من الجنة وذكر القيامة يباعدكم من النار وأفضل العبادة ترك الحيل ورأس مال العالم ترك التكبر وثمن الجنة ترك الحسد والندامة من الذنوب التوبة الصادقة (الديلمى عن معاذ)

قال المناوى (3/564) : فيه محمد بن محمد بن الأشعث قال الذهبى اتهمه ابن عدى أى بالوضع وكذبه الدارقطنى ، والوليد بن مسلم ثقة مدلس ومحمد بن راشد قال النسائى ليس بالقوى . والحديث موضوع كما قال الغمارى فى المغير

முனாவீ கூறுகிறார் “இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக “முஹம்மத் இப்னு முஹம்மத் இப்னுல் அஷ்அஸ்” என்பார் இடம் பெற்றுள்ளார். “அவர் இட்டுக் கட்டக் கூடியவர்” என இப்னு அதீ கருதுவதாக இமாம் தஹபீ கூறியுள்ளார். “இவர் பொய்யர்” என இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்.

மேலும் இதன் மற்றொரு அறிவிப்பாளரான “அல்வலீத் இப்னு முஸ்லிம்” என்பார் நம்பகமானவர் என்றாலும் “முதல்லிஸ்” இருட்டடிப்பு செய்யக் கூடியவர் ஆவார். மேலும் “முஹம்மத் இப்னு ராஸித்” என்பாரும் இடம் பெறுகிறார். அவர் பலமானவர் கிடையாது.  குமாரிய்யு அவர்கள் தமது அல்முகீர் என்ற நூலில் கூறுவதைப் போன்று இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

நூல்: ஜாமிவுல் அஹாதீஸ்

பாகம் 13. பக்கம் 40

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இது ஆதாரத்திற்குத் தகுதியானதல்ல. ஒரு பேச்சுக்காக இதைச் சரி என்று வைத்துக் கொண்டாலும் இதில் மவ்லித் மீலாத் அனாச்சாரங்களை நியாயப்படுத்துவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. மேலே நாம் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கேள்விகளும் இதற்கும் பொருத்தமானதே.

 

மவ்லிதை ஆதரிப்போரின் ஆதாரம் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதர்களே! ஸலாமைப் பரப்புங்கள்! (மகிழ்ச்சியை காட்டும் முகமாக) உணவு வழங்குங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி)

நூற்கள்: திர்மிதி, இப்னுமாஜா, தாரமீ, அஹமது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உணவளிப்பது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல், நபிவழி என்ற கருத்தை மேற்கூறிய ஹதீஸ் நமக்குத் தெளிவு படுத்துகிறது. எனவே மீலாது, மவ்லிது பண்டிகையின் போது பலவிதமான உணவுப் பதார்த்தங்களை ருசிபார்க்கலாம், விளம்பலாம் என மவ்லிதுக் காவலர்கள் கூறுகின்றனர்.

முறையான விளக்கம் :

மேற்கண்ட நபிமொழியில் மீலாது விழா, மவ்லித் அனாச்சாரங்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. “மனிதர்களே ஸலாத்தைப் பரப்புங்கள், உணவளியுங்கள்” என்பதுதான் நபியவர்கள் கூறிய வார்த்தையாகும். “மகிழ்ச்சியை காட்டும் முகமாக” என்பது இந்த வழிகேடர்கள் தமது வழிகேட்டிற்குத் தோதுவாகவும், இந்த நபிமொழியைத் திரித்து விளக்கம் கூறுவதற்காகவும் சேர்த்துக் கொண்ட வாசகமாகும்.

நபியவர்கள் காலத்தில் மீலாது விழா என்றோ, மவ்லித் என்றோ எதுவுமே இல்லாத போது அதற்கு உணவளியுங்கள் என்று நபியவர்கள் எப்படிக் கூறியிருக்க முடியும்? என்பதைக் கூட இந்த வழிகேடர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர். மவ்லித் என்ற பெயரில் இவர்கள் எப்படியெல்லாம் உண்டு ருசிக்கிறார்களோ அது போன்று நபியவர்கள் காலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றதாக ஓர் ஆதாரத்தையேனும் இவர்கள் காட்ட இயலுமா? இதிலிருந்தே இவர்கள் தமது வழிகேட்டை நியாயப்படுத்துவற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் என்பது தெளிவாகிறது.

“உணவளியுங்கள்” என்று நபியவர்கள் குறிப்பிடுவது குடும்பத்தினர், ஏழைகள், உறவினர்கள், விருந்தினர்கள் மற்றும் அது போன்றவர்களைத்தான் குறிக்கும் என்பதை ஏராளமான இறைவசனங்களும், நபிமொழிகளும் தெளிவுபடுத்தியுள்ளன. மாறாக நபியர்கள் காட்டித்தராத ஒரு பித்அத்தான காரியத்தை மார்க்கம் என்ற பெயரில் உருவாக்கி அதில் ஓர் அம்சமாக உணவளிக்க வேண்டும் என்று நபியவர்கள் குறிப்பிடவில்லை. எனவே இவர்கள் செய்யும் அனாச்சாரங்களுக்கும், இந்த நபிமொழிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

 

மவ்லிதை ஆதரிப்போரின் ஆதாரம் :

அபூ லஹப் மீலாது கொண்டாடினானா?

قَالَ عُرْوَةُ وثُوَيْبَةُ مَوْلَاةٌ لِأَبِي لَهَبٍ كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ قَالَ لَهُ مَاذَا لَقِيتَ قَالَ أَبُو لَهَبٍ لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ  (رواه البخاري)

உர்வா அவர்கள் கூறுகின்றார்கள்: ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப் பட்டார். அபூலஹபிடம், (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன? என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.

நூல்: புகாரி 5101

அபூலஹப் நபியவர்கள் பிறந்த செய்தியைக் கூறிய மகிழ்ச்சியில் ஸுவைபாவை விடுதலை செய்தான். எனவே அபூலஹப் மீலாது விழா கொண்டாடியதால் நரகிலும் அவனுக்கு விரல்களினூடே நீர் புகட்டப்படுகிறது என்றால் ஈமான் உடையவர்களாகிய நாம் கொண்டாடினால் நமக்கும் எவ்வளவு பெரிய பாக்கியம் கிடைக்கும் என மவ்லிதுக் காவலர்கள் கூறுகின்றனர்.

முறையான விளக்கம் :

உர்வா அவர்களின் இக்கருத்து, புகாரி 5101வது ஹதீஸின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில்  இது நபியவர்கள் கூறிய கருத்து அல்ல.

மேலும் புகாரியில் கூறப்பட்டிருக்கும் கருத்தை நன்றாக மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். “நபியவர்கள் பிறந்த செய்தியைக் கூறியதற்காக அபூலஹப் ஸுவைபாவை விடுதலை செய்தான்” என்று அச்செய்தியில் இடம் பெற்றுள்ளதா? என்பதைக் கவனியுங்கள்.

“ஸுவைபா அபூலஹபின் அடிமைப் பெண்” என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

“அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார்” என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. “ஸுவைபா நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார்” என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

“ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது“ என்று அபூலஹபின் குடும்பத்தார் கண்ட கனவில் அவன் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பகரமாகத்தான் அவனுக்கு நீர் புகட்டப்படுகிறது என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர நபியவர்கள் பிறந்த செய்தியை ஸுவைபா அறிவித்ததால் அபூ லஹப் ஸுவைபாவை விடுதலை செய்தான் என்றோ, அவன் மீலாது விழா கொண்டாடியதற்காகத்தான் விரல்கள் வழியாக நீர் புகட்டப்படுகிறது என்றோ குறிப்பிடப்படவில்லை.

இவ்விடத்தில் இன்னொன்றையும் நாம் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். ஒரு வாதத்திற்கு நபியவர்களின் பிறப்புச் செய்தியை ஸுவைபா அறிவித்த காரணத்தினால் அந்த மகிழ்ச்சியில் ஸுவைபா அவர்களை அவன் விடுதலை செய்தான் என்று வைத்துக் கொண்டாலும் அபூ லஹப் தன் சகோதரரின் மகன் என்பதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினானா? அல்லது இறைத்தூதர் பிறந்து விட்டார் என்பதற்காக அதைக் கொண்டாடுவது இபாதத் என்ற அடிப்படையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினானா?

தான் இறைத்தூதர் என்று நபியவர்கள் அறிவித்த மாத்திரத்திலேயே தனது இரு கைகளால் இறைத்தூதர் மீது மண்ணை வாரித் தூற்றிய அபூ லஹப், இறைத்தூதர் பிறந்துவிட்டார் என்பதற்காக மகிழ்ச்சியை ஒருபோதும் வெளிப்படுத்தியிருக்க மாட்டான். அதற்காக வெளிப்படுத்தியிருந்தால் அவன் நபியவர்களை எதிர்த்திருக்கவும் மாட்டான்.

அப்படியெனில் அபூ லஹப் தனது சகோதரர் மகன் என்பதற்காக வெளிப்படுத்திய இயல்பான மகிழ்ச்சி எப்படி இறைத்தூதர் பிறந்தார் என்பதைக் கொண்டாடுவதற்கான மார்க்க ஆதாரமாக இருக்க முடியும்? மீலாதுப் பிரியர்கள் சிந்திப்பார்களா?

தாங்கள் மார்க்கமாகக் கருதும் ஒன்றுக்கு மாபெரும் இறைமறுப்பாளனான அபூ லஹபின் செயல்தான் இந்த மவ்லிதுக் காவலர்களுக்கு ஆதாரமாகி விட்டதா? அப்படியெனில் இவர்கள் நபியைப் பின்பற்றுகிறார்களா? அல்லது அபூ லஹபைப் பின்பற்றுகிறார்களா?

அது மட்டுமன்றி இந்தச் செய்தி பல விதங்களில் பொய்யான செய்தியாகும்.

முதலில் இது உர்வா அவர்களின் சுய கருத்துதான். உர்வா என்பவர் தாபியீ ஆவார். அவர் அபூ லஹபின் காலத்தையோ, நபியவர்களையோ சந்தித்தவர் அல்ல.

அடுத்து  அபூ லஹபின் மரணத்திற்குப் பிறகு அவனது குடும்பத்தாரில் ஒருவர் அபூ லஹபைக் கனவில் கண்டதாகப் புகாரியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தார் யார்? அவர் முஸ்லிமா? அவர் கண்ட கனவு உண்மைதானா? அது உண்மை என்பதை யார் உறுதிப்படுத்தியது? அவர் தான் கண்ட கனவை யாரிடம் கூறினார்? அந்த கனவுச் செய்தியை உர்வாவுக்கு அறிவித்தவர் யார்? என்ற எந்த கேள்விக்கும் இச்செய்தியில் எந்த விடையும் கிடையாது.

அது மட்டுமின்றி ஸுவைபா அவர்கள் விடுதலை செய்யப்பட்டது நபியவர்கள் பிறந்து மிக நீண்ட காலத்திற்குப் பிறகுதான். அதாவது நபியவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு முந்தைய காலகட்டத்தில்தான் அபூ லஹப ஸுவைபாவை விடுதலை செய்தான் என்பதே அதிகமான வரலாற்று ஆசிரயர்களின் கருத்தாகும்.

மேலும் அபூ லஹப் தொடர்பான இந்தக் கட்டுக்கதை திருக்குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றது. இதோ திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

அபூலஹபின் இரு கைகளும் நாசமாகி விட்டன. அவனும் நாசமாகி விட்டான். அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை. அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் நுழைவார்கள்.

(அல்குர்ஆன் 111 : 1-4)

அபூ லஹபின் இருகைகளும் நாசமாகிவிட்டன, அவனும் நாசமாகிவிட்டான் என்று திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.  இருகைகளும் நாசமாகி விட்டன என்று குறிப்பிடும் போது அது கைகளிலுள்ள பத்து விரல்களையும் சேர்த்துதான் எடுத்துக் கொள்ளும். அவ்வாறு இருக்கையில் எந்தக் கைகள் நாசமாகிவிட்டன என்று அல்லாஹ் குறிப்பிடுகிறானோ அந்தக் கைகளிலுள்ள இரு விரல்கள் வழியாக அல்லாஹ் அவனுக்கு நீர் புகட்டுகிறான் என்பது நேர் முரணான கருத்தாகும். எனவே அபூ லஹபிற்கு இருவிரல்கள் வழியாக நீர் புகட்டப்படுகிறது என்ற கருத்து திருக்குர்ஆனுக்கு எதிரான பொய்யான கருத்து என்பது சந்தேகம் இல்லாமல் உறுதியாகிவிட்டது.

அது மட்டுமின்றி “அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை”  என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதாவது அபூ லஹப் உண்மையிலேயே நன்மையைச் சம்பாதித்திருந்தாலும் அது அவனுக்குப் பயனளிக்கவில்லை என்பதுதான் இவ்வசனத்தின் தெளிவான கருத்தாகும். அவ்வாறு இருக்கையில் அவன் ஸுவைபாவை விடுதலை செய்தது நற்காரியமாகவே இருந்தாலும் அது எவ்வாறு அவனுக்குப் பயனளிக்கும்?

பயனளிக்காது எனும் போது அக்காரியத்திற்காக அல்லாஹ் அவனுக்கு நீர் புகட்டுகிறான் என்று குறைந்த பட்ச அறிவுடைய யாராவது வாதிப்பாரா?

அபூ லஹப் காஃபிராகத்தான் மரணிப்பான் என்று அவன் உயிருடன் இருக்கும் போதே திருக்குர்ஆன் முன்னறிவிப்புச் செய்தது. அதுபோன்றே அவன் காஃபிராகத்தான் மரணித்தான். ஒருவன் காஃபிராக மரணித்து விட்டான் என்றால் அவனது எந்த நல்லறமும் மறுமையில் பயணளிக்காது என்று திருமறைக் குர்ஆனில் ஏராளமான இறைவசனங்கள் குறிப்பிடுகின்றன. அது தொடர்பாக ஒரு சில ஆதாரங்களைக் காண்போம்.

நாம் அவர்கள் செய்த செயல்களில் கவனம் செலுத்தி, அவற்றைப் பரத்தப்பட்டப் புழுதியாக ஆக்கி விடுவோம். (அல்குர்ஆன் 25: 23)

அவர்கள்தான், தம் இறைவனின் வசனங்களையும், அவனைச் சந்திப்பதையும் மறுத்தவர்கள். அதனால் அவர்களின் செயல்கள் அழிந்து விட்டன. எனவே மறுமை நாளில் அவர்களுக்காக எந்த எடையையும் நிறுவ மாட்டோம். (அல்குர்ஆன் 18 : 105)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவருக்குப் பயனளிக்காது; அவர் ஒரு நாள்கூட ‘இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!’ என்று கேட்டதேயில்லை’’ என்று பதிலளித்தார்கள்

நூல் : முஸ்லிம் (365)

காஃபிர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகி விடும், அழிந்து விடும், அவற்றுக்கு எந்த நற்கூலியும் மறுமையில் கிடையாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் குறிப்பிட்ட பிறகு அபூ லஹப் என்ற காஃபிரின் செயலுக்கு மட்டும் அல்லாஹ் எவ்வாறு கூலி வழங்கியிருப்பான் என்பதை இந்த மவ்லிதுக் காவலர்கள் சிந்திக்க வேண்டாமா?

இப்படி முழுக்க முழுக்க திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ள இந்தக் கட்டுக்கதையைத்தான் தமது வழிகேட்டுக்கு ஆதாரவாக மவ்லித், மீலாதுப் பாதுகாவலர்கள் முன்வைக்கின்றனர்.

அது மட்டுமல்ல ஒன்றை மார்க்கச் சட்டம் என்று நிரூபிப்பதற்குக் குர்ஆன், சுன்னா எனும் இறைச் செய்திகள் ஆதாரமா? அல்லது யாரென்றே தெரியாத ஒருவன், தான் கனவில் கண்டதாகக் கூறிய கட்டுக் கதை ஆதாராமா? மவ்லிதுப் பிரியர்கள் இதைச் சிந்திக்க வேண்டாமா?

இந்தக் கனவைக் கண்டவர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் என்று மற்றொரு பொய்யான அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்கள் இந்தக் கனவைக் கண்டதாகக் கூறியிருந்தால் அக்ககாலகட்டத்தில் அவர் காஃபிராக இருந்தார். ஒருவர் முஃமினாக இருந்தாலும் அவர் கண்ட கனவு மார்க்க ஆதாரமாகாது எனும் போது அப்பாஸ் அவர்கள் காஃபிராக இருக்கும் போது கண்ட கனவு எப்படி ஒரு மார்க்கச் சட்டத்திற்கு ஆதாரமாக ஆகும்?

இவ்வாறுதான் இந்த மீலாது, மவ்லித் வழிகேடுகளை நியாயப்படுத்துவதற்காக எடுத்து வைக்கப்படும் எந்த ஒரு ஆதாரமும் அதன் சரியான கருத்திலிருந்து திரிக்கப்பட்ட ஆதாரமாக இருக்கும். அல்லது பொய்யான செய்திகளாக இருக்கும். இந்த வழிகேடுகளுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்பது மட்டுமே உண்மை. இந்த வழிகெட்ட அனாச்சாரங்களிலிருந்து அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாப்பானாக!