இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இதன் பொருள் மதமே கூடாது என்பதல்ல. ஒவ்வொரு தனிநபருக்கும் தமக்கு விருப்பமான மதத்தை பின்பற்றிக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் மக்களை நிர்வகிக்கின்ற அரசுக்கு மதம் கிடையாது என்பதே.
அரசை பொறுத்தவரை அதன் பார்வையில் எல்லா மதமும் சமமே. மதத்தின் அடிப்படையில் இந்திய மக்கள் பாகுபாடு பார்க்கப்பட மாட்டார்கள். அரசியல் சாசன சட்டத்தின் படி அவரவர்க்குரிய உரிமைகள் நிலைநாட்டப்படும். ஒரு மதத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் இன்னொரு மத மக்களின் மீது திணிக்கப்படாது. இது தான் மதச்சார்பற்ற நாடு என்பதன் பொருளாகும்.
ஆனால் மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டே குறிப்பிட்ட மத நம்பிக்கைகளை அனைத்து மக்கள் மீது திணிக்கும் செயலை தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிய, மாநில அரசுகள் செய்கின்றன.
மக்களும் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு சென்று விடுகின்றனர்.
குறிப்பிட்ட நாள்களில் இறைச்சி தடை என்பதும் அதிலொன்று தான்.
மஹாவீர் ஜெயந்தி, குருநானக் தினம் போன்று பல்வேறு நாள்களில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
புலால் உண்பதை மறுத்தார் என்றும் கொல்லாமையை போதித்தார் என்றும் கூறி அவர்கள் பிறந்த தினங்களின் போது மட்டும் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் வாழும் மக்களின் பண்டிகை தினங்களில் விடுமுறை அளிப்பது ஏற்கத்தக்கதே. ஆனால் அவர்களின் நம்பிக்கை அடிப்படையிலான ஒரு செயலை அனைத்து மக்களுக்கும் பொதுவாக்குவது எவ்விதத்தில் சரியாகும்?
இறைச்சி சாப்பிடக் கூடாது என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தால் அதை அவர்கள் பரிபூரணமாக கடைபிடிக்கலாம். ஆனால் அதை ஒட்டு மொத்த மக்களின் மீது திணிப்பது ஏற்புடையதல்ல.
இவ்வாறு ஒவ்வொரு மத நம்பிக்கைகளை அனைவர் மீது திணித்தால் என்னவாகும்?
முஸ்லிம்கள் பன்றிக்கறியை உண்ண மாட்டார்கள். அதனால் பன்றி இறைச்சிக்கு குறிப்பிட்ட நாள்களுக்கு தடை விதியுங்கள் என்றால் அது முறையாகுமா?
இறைச்சியில் தேங்கி நிற்கும் இரத்தம் தவிர இரத்தத்தை மட்டும் தனியே உண்ணக் கூடாது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.
முஸ்லிம்களின் பண்டிகை தினங்களில் இரத்தப் பொ£¤யலுக்கு தடை விதிக்க கூறினால் அனைவரும் ஏற்பார்களா?
இப்படியே போனால் ஒருவர் முட்டைக்கு தடை கேட்பார். இன்னொருவர் ஆம்லெட், ஆப்பாயிலுக்கு தடை கேட்பார்.
குறிப்பிட்ட சாராரின் நம்பிக்கையை அனைவர் மீதும் திணிக்க முற்பட்டால் இப்படித்தான் விளைவு ஏடாகூடமாகி போகும்.
அது மட்டுமின்றி குறிப்பிட்ட தினத்தில் மட்டும் இறைச்சிக்கு தடை என்பது ஒரு விதத்தில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும்.
மஹாவீர் கொல்லாமையை போதித்தார் என்றால் ஆடு, மாட்டை மட்டும் கொல்லக் கூடாது என்று போதிக்கவில்லை. எந்த உயிரையும் கொல்லுதல் கூடாது என்று போதித்துள்ளார்.
அப்படி என்றால் இறைச்சிக்கு மட்டும் தடை விதித்து கோழி, மீன் போன்றவற்றை அனுமதிப்பது அவரது போதனைக்கு மாற்றம் தானே?
மேலும் அவர் ஒருநாளில் மட்டும் இதை கடைபிடிக்குமாறு கூறவில்லை. வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்குமாறு கூறினார். மரியாதை எனும் பெயரில் ஒரு நாள் மட்டும் தடை விதிப்பதால் எந்த பயனும் இல்லை.
காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் போன்ற நாள்களில் மட்டும் மதுபானக் கடைகளை இழுத்து மூடுவதை போன்ற செயல்தான் இது.
தற்போது தீபாவளி தினமான 04.11.21 அன்றே மஹாவீர் ஜெயந்தி வருவதால் முதலில் வழக்கம் போல இறைச்சி தடை என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆனால் தீபாவளி பண்டிகை தினத்தில் பெருவாரியாக இந்து மக்கள் இறைச்சி உண்பார்கள் என்பதால் அம்மக்களிடம் இந்த அறிவிப்பு எதிர்ப்பை உண்டாக்கியது.
மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ ராஜா இதை எதிர்த்து பின்வருமாறு ட்வீட் செய்தார்.
4.11.21 அன்று #மன்னார்குடி யில் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு #தீபாவளி அன்று காலை கறி குழம்பு மதியம் விரால் மீன் வருவல் + குழம்பு இரவு ரத்தப் பொரியல் ஆட்டுக்கால் பாயா அனைத்தும் உண்டு
இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியதால் முந்தைய அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு அனைத்து பகுதியிலும் இறைச்சி கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இத்தகைய எதிர்ப்புகளை ஏனைய இறைச்சி தடை நாள்களிலும் செய்தால் இது போன்ற வாபஸ் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
உணவில் எதை உண்ண வேண்டும், உண்ணக் கூடாது என்பது அவரவர் உரிமை.
ஒருவர் இறைச்சியை உண்ண மாட்டேன் என்றால் அதை அவர் கடைபிடித்து விட்டு போகட்டும். தலைவர்களின் பிறந்த நாளின் பெயரால் அதை மற்றவர்கள் மீது திணிப்பது மனித உரிமை மீறலாகும். அதை அரசே முன்னின்று செயல்படுத்துவது தவறு.
நீண்ட நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றில்லை. தற்போதாவது அது போன்ற தடைகளை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.