மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிகழும் அரசியல் கூத்துக்களை கவனிக்காதோர் யாரும் இருந்திருக்க முடியாது.
மக்களுக்குச் சேவை செய்வதற்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட (எம்எல்ஏக்கள்) மக்கள் பிரதிநிதிகள் பலரும் கவுஹாத்தியில் உள்ள சொகுசு விடுதியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிவசேனாவின் பொதுப்பணித்துறை அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் ஐம்பது எம்.எல்.ஏக்கள் அங்கிருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் சிவசேனா கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளதால் அவர்களை அப்படியே தங்கள் கட்சிக்கு வளைத்துப் போட்டு கொள்ளைப்புற வழியாக ஆட்சியை பிடிக்க களத்தில் இறங்கி வேலை செய்கிறது மாநில பாஜக.
அதற்காகவே குஞ்சுகளைக் கோழி அடைகாப்பது போல சொகுசு விடுதியில் எம்எல்ஏக்களை அடைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.
அதிகார வெறி பிடித்த பாஜகவின் கடியிலிருந்து இம்முறை சிவேசனா தப்புவது கடினமே.
சமீப கால அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்கும் போது இந்திய அரசியலில் சொகுசு விடுதிகளுக்கென்று தவிர்க்க இயலாத தனித்த இடமிருப்பதை கவனிக்க முடியும்.
எங்கெல்லாம் குறிப்பிட்ட கட்சிக்கு தேர்தலில் தனித்த பெரும்பான்மை கிடைக்காமல் போகிறதோ, இரு கட்சிகளும் ஓரளவு சமமான இடத்தை கைப்பற்றுகிறார்களோ, மற்றும் தலைமைத்துவ சண்டை, உள்கட்சிப் பூசல் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் சொகுசு விடுதிகளுக்கு வேலை வந்து விடுகின்றது.
தங்களது எம்எல்ஏக்களை யாரும் விலைக்கு வாங்கி விடக்கூடாது என்பதற்காகவும் அல்லது விலைக்கு வாங்கப்பட்ட எம்எல்ஏக்கள் மீண்டும் மனம் மாறி திரும்பி விடக்கூடாது என்பதற்காகவும் சொகுசு விடுதிகளில் அடைத்து போதனை செய்யும் கேடு கெட்ட செயல் இந்திய அரசியலில் தலைதூக்கியுள்ளது.
இந்தாண்டின் மார்ச் மாதம் நடந்து முடிந்த கோவா மாநில சட்டசபை தேர்தலிலும் சொகுசு விடுதி இடம் பிடித்தது.
கடந்த 2017 கோவா மாநில தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 17 இடங்களை வென்ற போதும் கூட காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியவில்லை.
வெறும் 13 இடங்களை மட்டுமே வென்ற பாஜகதான் ஆட்சி அமைத்தது.
அதற்கு காரணம் உதிரிக் கட்சிகள், மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியதுதான்.
அது போன்று இம்முறை அமைந்து விடக்கூடாது என்பதற்காக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் தங்களது கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் கோவாவில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் வைத்து அடைகாத்தனர் காங்கிரஸ்.
அப்படியிருந்தும் சுயேட்சை ஆதரவுடன் பாஜகவே ஆட்சி அமைத்தது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்து நிலையில் 2020 மார்ச் மாதம் மானக்கேடான செயல் அரங்கேறியது.
காங்கிரஸ் கட்சியை சார்ந்த 10 எம்எல்ஏக்களை பாஜக கடத்தி டெல்லி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர் என்று புகார் எழுந்தது.
மக்களைக் காக்க வேண்டிய எம்எல்ஏக்களை சொகுசு விடுதியிலிருந்து காக்கும் நிலை காங்கிரசுக்கு ஏற்பட்டதை மக்கள் வேதனையுடன் கவனித்தனர்.
அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா தனக்கு முதல்வர் பதவி வழங்கப்படாத அதிருப்தியினால் திடீரென்று பாஜகவில் சேர அப்போது அவரது ஆதரவாளர்கள் சுமார் 22 எம்எல்ஏக்கள் பெங்களூரிலுள்ள சொகுதி விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்தே கொண்டு தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமாவை செய்தனர். இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.
இதே போல காங்கிரஸ் மறுமுறை முயன்று பார்த்து தோற்றுப் போனது தனிக்கதை. குதிரை பேரத்தில் பாஜகவுடன் ஒப்பிடும் போது காங்கிரஸுக்கு திறமை போதவில்லை.
2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 107 இடங்களை வென்றது. ஆனால் காங்கிரஸ் 78 மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 மொத்தம் 116 இடங்களை வென்ற இருகட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். ஆனால் மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லை என்று புகார் எழவே பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக எடியூரப்பாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அப்போதும் சொகுசு விடுதி அரசியல் கர்நாடாகாவில் களை கட்டியது.
ரிசார்ட் என்றாலே தமிழக மக்களுக்கு கூவத்தூர் தான் உடனே நினைவில் வரும். அந்தளவுக்கு கூவத்தூர் சொகுசு விடுதி அரசியல் உலக பிரபலமானது. அதுவரை தமிழக மக்களுக்கு அவ்வளவு பரிச்சயமில்லாதது அது.
2016 உத்தரகாண்டில் சொகுசு விடுதி அரசியலை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பாஜக கவிழ்த்தது.
இப்படி இந்தியா முழுக்க பல்வேறு மாநிலத்தில் எம்எல்ஏக்களுக்கு குதிரைப் பேரம் நடக்கும் சொகுசு விடுதி அரசியல் நடைபெறுவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் செயலில் ஏதோ பெருமைக்குரிய ஒன்றுபோல கட்சிகள் ஈடுபடுகிறார்கள். ஆனால் இது ஜனநாயகத்திற்கு பெரும் இழுக்காகும்.
மக்கள் குறிப்பிட்ட கட்சிக்காக, கருத்தியலுக்காக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் போது அவர்களை இன்னொரு கட்சி விலைக்கு வாங்கும் செயலில் ஈடுபடுகிறார்கள் அவர்களும் விலை போகிறார்கள் என்றால் மக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள் என்பதை தவிர இதற்கு வேறு அர்த்தமில்லை.