மாடுகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி அவற்றை தேசிய விலங்காக அறிவிக்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

அலகாபாத் உயர்நீதிமன்றம் தான் இத்தகைய வினோத கருத்தை தெரிவித்துள்ளது.
உ.பி அரசின் பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜாவித், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை விண்ணப்பித்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் ஜாவீதுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன் மாடுகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதோடு அவற்றை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மாட்டிறைச்சி உண்பது அடிப்படை உரிமையாகாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் எல்லாம் சட்டம் படித்து நீதிபதிகளானார்களா? அல்லது சங்கி களின் கூடாரத்திலிருந்து நேரடியாக நீதிபதியானார்களா? அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இக்கருத்து வியப்பளிக்கின்றது.
உ.பி மாநிலத்தை பொருத்தவரை மனிதர்களின் அடிப்படை உரிமைகளே கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா காலத்தில் மனைவி, மக்களை இழந்தவர்கள் அவர்களை புதைக்க இடமின்றி தவித்துக் கொண்டிருந்த பேரவலம் உ.பியில் நிகழ்ந்தது.
கொரோனாவில் இறந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களே கங்கை நதியில் தூக்கி வீசியதால் சடலங்கள் மிதக்கும் நதியாக கங்கை காட்சியளித்தது. பிற்படுத்தப்பட்ட மக்கள் இறந்து விட்டால் அவர்களது உடல்களை கொண்டு வர ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பதில்லை. சரியான மருத்துவ கட்டமைப்பு இல்லை. நோயாளிகள் அரசின் உதவியை நாடினால் செத்து போ என்று அலட்சியமாக பதிலளிப்பது.
இவ்வாறு எண்ணற்ற அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கே மறுக்கப்படும் ஒரு மாநிலத்தில் மாடுகளுக்கு உரிமை வழங்க வேண்டும் என்று குரலெழுப்பும் உயர்நீதிமன்றத்தின் கருத்து விசித்திர மில்லையா?
மாட்டிறைச்சியின் பெயரால் ஒரு நபர் கைது செய்யப்படுவதும் அதற்காக கொலைக்குற்றம் என்பது போல ஜாமீன் மறுக்கப்படுவதும் அடிப்படை உரிமை மறுப்புகளே.
கண்முன்னே மனிதர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் மாடுகளின் உரிமை பற்றி பேச முடிகிறது என்றால் மனித மூளைக்கு பதில் மாட்டு மூளை உள்ளவர்களாக இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தினந்தோறும் டன் கணக்கில் பாஜக ஒன்றிய அரசு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இப்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது? ஒன்றிய அரசுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய வேண்டாம் என உத்தரவிடுமா?
தனிநபர்கள் உணவிற்காக மாட்டிறைச்சியை வைத்திருந்தால் குற்றம்.
அதுவே ஒன்றிய, மாநில அரசுகள் மட்டும் தங்கள் வருவாய்க்காக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யலாம்.
பெருமுதலாளிகள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து காசு பணம் சம்பாதிக்கலாம். சாமானியன் அதை விற்க கூடாது. சாமானியன் மட்டுமே சட்டத்தினால் ஏமாளியாக்கப்படுகிறான்.
அதென்ன மாடுகளுக்கு மட்டும் உரிமைகளை வழங்குவதை பற்றி பேசுவது? அப்படியே கொசுக்களின் உரிமையை பற்றி பேசி கொசு பத்தி விற்பனையை தடை செய்ய வேண்டியது தானே? இது தான் சட்டத்தை நிலைநாட்டும் நீதிமன்றத்தின் வேலையா?
அலகாபாத் உயர்நீதிமன்றம் இக்கருத்தின் மூலம் அரசியல் சாசனக்குரலை எழுப்பவில்லை. ஆர்.எஸ்.எஸ்.இன் குரலை எழுப்பியுள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
ஒவ்வொருவரும் தாம் விரும்பிய உணவை உட்கொள்ள அரசியல் சாசனம் அனுமதிக்கின்றது. உணவு தனிமனித உரிமை எனும் கருத்தை வலியுறுத்தி உச்சநீதிமன்ற தீர்ப்புகள உள்ளன. அவற்றை எல்லாம் அலகாபாத் உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.
அரசியல் சாசனங்களின் படியே இந்திய நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். இதிகாசங்களின் படியோ புராணங்களின்படியோ அல்ல.