லுக்மான் – ஒரு நல்லடியார்

அத்தியாயம் : 31

வசனங்களின் எண்ணிக்கை: 34

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. அலிஃப், லாம், மீம்.
2. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
3. நன்மை செய்வோருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
4. அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். ஸகாத்தைக் கொடுப்பார்கள். அவர்களே மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.
5. அவர்கள் தம் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.
6. அல்லாஹ்வின் பாதையை விட்டும் அறிவின்றி (மக்களை) வழிகெடுத்து, அதைக் கேலியாக எடுத்துக் கொள்வதற்காக வீணான விஷயங்களை விலைக்கு வாங்கும் மனிதர்களும் இருக்கின்றனர். இத்தகையோருக்கே இழிவு தரும் வேதனை உண்டு.
7. நமது வசனங்கள் அவனுக்கு எடுத்துரைக்கப்பட்டால் தனது காதுகளில் செவிட்டுத்தன்மை உள்ளவனைப் போன்றும், அதைக் கேட்காதவனைப் போன்றும் கர்வம் கொண்டு திரும்பிச் செல்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக!
8, 9. யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு இன்பம் மிகுந்த சொர்க்கங்கள் உள்ளன. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
10. அவனே நீங்கள் பார்க்கும் வகையிலான தூண்களின்றி வானங்களைப் படைத்தான். பூமி உங்களுடன் அசையாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான். மேலும், அதில் அனைத்து உயிரினங்களையும் பரவச் செய்தான். நாமே வானிலிருந்து மழையைப் பொழிவித்து, அதில் சிறப்பான (பயிரினங்களில்) ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.
11. இது அல்லாஹ்வின் படைப்பாகும். அவனையன்றி மற்றவர்கள் எதைப் படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள்! மாறாக, இந்த அநியாயக்காரர்கள் பகிரங்க வழிகேட்டில் உள்ளனர்.
12. லுக்மானுக்கு நாம் ஞானத்தை வழங்கினோம். “அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் தனக்காகவே நன்றி செலுத்துகிறார். யாரேனும் நன்றி மறந்தால் அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்” (என்று அவருக்குக் கூறினோம்.)389
13. லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!390
14. மனிதனுக்கு அவனது பெற்றோர் குறித்தும் அறிவுறுத்தினோம். அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டு அவனைச் சுமந்தாள். அவனது பால்குடி மறக்கும் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். எனவே, எனக்கும், உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே மீளுதல் இருக்கிறது.391
15. எதைப் பற்றி உனக்கு எந்த அறிவும் இல்லையோ அதை எனக்கு இணையாக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் நல்ல முறையில் நட்புறவு கொள்! என் பக்கம் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பிறகு நீங்கள் என்னிடமே திரும்பி வரவேண்டியுள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அப்போது உங்களுக்கு அறிவிப்பேன்.
16. என் அருமை மகனே! ஒரு பொருள் கடுகின் விதையளவே இருந்து, அது பாறையிலோ அல்லது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வந்து விடுவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
17. என் அருமை மகனே! நீ தொழுகையை நிலைநிறுத்து! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்! இதுவே உறுதியான காரியங்களில் உள்ளதாகும்.
18. மக்களை விட்டும் உன் முகத்தை அகந்தையுடன் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! அகந்தையும், கர்வமும் கொண்ட எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
19. “உனது நடையில் நடுத்தரத்தைக் கடைப்பிடிப்பாயாக! உனது சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வாயாக! சப்தங்களில் மிகவும் வெறுக்கத்தக்கது கழுதையின் சப்தமாகும்” (என்றும் போதித்தார்.)392
20. வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்காக அல்லாஹ் வசப்படுத்தியுள்ளான் என்பதையும், அவன் தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உங்கள்மீது முழுமைப்படுத்தியுள்ளான் என்பதையும் நீங்கள் சிந்திக்கவில்லையா? மனிதர்களில் சிலர் அறிவோ, நேர்வழியோ, பிரகாசிக்கும் வேதமோ இன்றி அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கின்றனர்.
21. “அல்லாஹ் அருளியதை நீங்கள் பின்பற்றுங்கள்!” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “அவ்வாறல்ல! எங்கள் முன்னோரை எதன்மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். கொழுந்து விட்டெரியும் வேதனையின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைத்துக் கொண்டிருந்தாலுமா (அவ்வாறு பின்பற்றுவார்கள்?)
22. நன்மை செய்பவராக யார் தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்கிறாரோ அவர் உறுதியான கயிற்றினைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே இருக்கிறது.
23. யார் (நம்மை) மறுக்கிறாரோ அவர்களின் இறைமறுப்பு (நபியே!) உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் நம்மிடமே மீண்டு வர வேண்டியுள்ளது. அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
24. அவர்களுக்குச் சிறிது காலம் வசதி வாய்ப்புகளை வழங்குவோம். பிறகு அவர்களைக் கடும் வேதனையின்பால் (செல்லுமாறு) கட்டாயப்படுத்துவோம்.
25. “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் கேட்பீராயின், ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!” என்று கூறுவீராக! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ள மாட்டார்கள்.
26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
27. பூமியிலுள்ள மரங்கள் பேனாக்களாகி, கடலும் அதன்பின் ஏழு கடல்களும் (மையாகி) உதவினாலும் அல்லாஹ்வின் வார்த்தைகள் (எழுதித்) தீர்ந்து போகாது. அல்லாஹ் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
28. உங்களைப் படைப்பதும், உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒரே ஒருவரைப் (படைத்து, உயிர்ப்பிப்பதைப்) போன்றே தவிர வேறில்லை. அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.
29. அல்லாஹ்வே இரவைப் பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான் என்பதையும், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான் என்பதையும் நீர் சிந்திக்கவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
30. ‘அல்லாஹ்வே உண்மையானவன்; அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; மிகப் பெரியவன்’ என்பதே இதற்குக் காரணம்.
31. அல்லாஹ்வின் அருளால் கடலில் கப்பல்கள் செல்வதை நீர் காணவில்லையா? அவன், தனது சான்றுகளை உங்களுக்குக் காட்ட வேண்டும் என்பதே இதற்குக் காரணம். நன்றி செலுத்தும் ஒவ்வொரு பொறுமையாளருக்கும் இதில் சான்றுகள் உள்ளன.
32. (கடலில்) மலைகளைப் போல் பேரலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்போது அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். அவன், அவர்களைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தால் அவர்களில் சரியான முறையில் நடப்பவர்களும் உண்டு. நன்றிகெட்ட, பெரும் மோசடிக்காரர்களைத் தவிர வேறெவரும் நமது சான்றுகளை மறுப்பதில்லை.
33. மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள்! தந்தை, தன் பிள்ளைக்குப் பயனளிக்க முடியாத, அத்தந்தைக்குப் பிள்ளை பயனளிப்பவனாக இல்லாத ஒருநாளை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எனவே இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்.
34. அல்லாஹ்விடமே உலகம் அழியும் நேரத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது. அவனே மழையைப் பொழிவிக்கிறான். அவனே கருவறைகளில் உள்ளவற்றை அறிகிறான். நாளை எதைச் சம்பாதிக்கப் போகிறோம் என்பதை எவரும் அறிய மாட்டார். எந்த இடத்தில் மரணிப்போம் என்பதையும் எவரும் அறிய மாட்டார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்; நுட்பமாக அறிபவன்.393