கும்பல் வன்முறைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு குறித்து உங்கள் பார்வை என்ன?

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரை இந்தியாவில் கும்பல் கொலைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.
இந்தக் கும்பல் கொலைக்களங்களில் முஸ்லிம்களே அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர். முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக தலித்கள் உள்ளனர்.
மாட்டிறைச்சி வைத்திருந்ததாகவும் மாட்டிறைச்சி உண்டதாகவும் கூறி எண்ணற்ற முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜெய்ஸ்ரீ ராம் எனும் கோஷத்தைக் கூற வலியுறுத்தி முஸ்லிம் இளைஞர்களும் அப்பாவி முதியவர்களும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
சங்பரிவார கும்பல்களின் எல்லை மீறிய தாக்குதலால் இதுநாள் வரை கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பட்டியல் மிக நீண்டது. அது முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் கூட பீஹாரில் நான்கு குழந்தைகளின் தந்தை ஒருவர் அநியாயமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசு இப்படுகொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை, தீர்வை ஏற்படுத்த மறுக்கிறது.
முத்தலாக் தடைச் சட்டம் எனும் பெயரில் முட்டாள் தனமான ஒரு சட்டத்தை அவசரச் சட்டமாக கொண்டு வந்தது ஒன்றிய அரசு.
முத்தலாக் முறையினால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்து முஸ்லிம் பெண்களின் கவலை போக்கவே முத்தலாக் தடைச் சட்டம் என்றது.
அந்தக் கவலை உண்மை என்றால் முத்தலாக் செல்லாது என்று சட்டம் பிறப்பித்திருக்க வேண்டும். முத்தலாக் கூறிய கணவனையும் அவனது மனைவியையும் ஒன்றாக சேர்ந்து வாழ வழிவகை செய்திருக்க வேண்டும். அதை விடுத்து முத்தலாக் கூறியவனை சில ஆண்டுகள் சிறையிலடைக்க வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
முத்தலாக்கினால் வாழ்வாதாரம் பாதிப்பு என்று வந்த பெண்களின் கவலையை கவனத்தில் கொள்ளாமல் அவனது கணவனை சிறையில் தள்ளினால் அவள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வாள்? இப்படியொரு சட்டத்தை முட்டாள்தனமான சட்டம் என்று எப்படி கூறாமலிருக்க முடியும்?
எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் முஸ்லிம்களை சிறையில் தள்ளினால் போதும் என்ற ஒன்றிய அரசினுடைய வெறித்தனத்தின் வெளிப்பாடே முத்தலாக் தடை சட்டம்.
இத்தனைக்கும் இந்த முத்தலாக் நடைமுறை முஸ்லிம்களிடத்தில் மிக அரிதாகவே உள்ள ஒன்றாகும்.
இதனால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொங்கி எழுந்து அவசரச் சட்டம் பிறப்பித்த ஒன்றிய அரசு கும்பல் படுகொலைகளால் முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்களே இதன் மூலம் பெண்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?
மாட்டிறைச்சியின் பெயராலும் ஜெய் ஸ்ரீ ராம் எனும் கோஷத்தின் பெயராலும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் மனைவி, சகோதரி, தாய் உள்ளிட்ட பெண்கள் அழமாட்டார்களா?
இதற்கல்லவா அவசரச் சட்டத்தை பிறப்பித்திருக் வேண்டும்.
இந்தப் படுகொலைகளை தடுக்க ஒன்றிய அரசு முயலவில்லையே ஏன்?
மன் கி பாத் எனும் வானொலி நேரலையில் வாராம் வாரம் எதை பற்றி எல்லாமோ பேசி வரும் பிரதமர் அவர்கள் இப்படுகொலைகளைக் குறித்து வாய் திறந்தாரா?
கும்பல் கொலையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் எச்சரிக்கையை பதிவு செய்தாரா?
முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு திரைமறைவில் ஆதரவளிப்பதாகவே இந்த மௌனம் உணர்த்துகின்றது.