குடும்பக் கட்டுப்பாடும், செயற்கைக் கருத்தரித்தலும்

குடும்பக் கட்டுப்பாடு செய்யலாமா?

கருவில் குழந்தை உருவாவதைத் தடுப்பதற்கு நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. இல்லற வாழ்வின்போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும்போது தன் விந்தை மனைவியின் கர்ப்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டு விடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் ‘அஸ்ல்’ செய்து கொண்டிருந்தோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி (5209)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘(அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்… அவள் எங்களுக்குப் பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கர்ப்பமாகி விடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன்’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘நீ விரும்பினால் ‘அஸ்ல்’ செய்து கொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (2606)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (2610)

மேலுள்ள செய்திகளைக் கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.எனினும் அஸ்ல் செய்தால் கட்டாயம் குழந்தை உருவாவதைத் தடுத்து விடலாம் என்று நினைத்து விடக் கூடாது. அல்லாஹ் நாடினால் ஒருவன் அஸ்ல் செய்யும் போதே அவனையும் மீறி சிறு துளி கருவறைக்குள் சென்று விடலாம். குழந்தை உருவாகியே தீரும் என்று அல்லாஹ் எழுதி இருந்தால் அதை யாராலும் வெல்ல முடியாது என்பதை மறந்து விடக் கூடாது.

நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் ‘‘அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்’’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (2542)

குழந்தை உருவாவதை தற்காலிகமாகத் தடுத்துக் கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பதாகும். ஆனால் நிரந்தரமாகக் குழந்தை உருவாகாதவாறு குடும்பக் கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும்.

தற்காலிகக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை, காப்பர் டி போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி தற்காலிகமாகக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு மட்டுமே அனுமதியுள்ளது.

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளைப் பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். பெற்றெடுத்த குழந்தைகள், நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்த பின் விபத்தில் சிக்கி இறந்து விட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படிப் பெற முடியும்? இதைச் சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்ய மாட்டார்கள்.

மேலும் இறைவனின் படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள் (என ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். 

(அல்குர்ஆன் 4:119)

எனவே பெரும் பாக்கியமான குழந்தை பாக்கியத்தை நிரந்தரமாக நீக்கி, இறைவனின் படைப்பில் மாற்றம் செய்வது கூடாது.

செயற்கை கருத்தரிப்பு கூடுமா?

நவீன கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்களில் செயற்கை முறை கருத்தரித்தல் என்பது ஒன்றாகும். இது இரண்டு முறையில் செய்யப்படுகிறது. கணவனின் விந்தை மனைவியின் கர்ப்ப அறைக்குள் கருவிகள் மூலம் செலுத்தி கருத்தரிக்கச் செய்தல். இவ்வாறு செய்வதில் தவறில்லை. ஏனென்றால் மனைவி என்பவள் கணவனின் விளை நிலம் என்று அல்லாஹ் கூறுகிறான். தன்னுடைய நிலத்தில் தன் விதையை விதைப்பதற்கு, கணவனுக்கு முழு அனுமதியுள்ளது.

உங்கள் மனைவியர் உங்களது விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

அல்குர்ஆன் (2:223)

ஆனால் கணவன் அல்லாத யாரோ ஒருவரது விந்தணுவைப் பெண்ணின் கருவறைக்குள் செலுத்தி கருத்தரிக்கச் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனென்றால் தனக்கு உரிமையில்லாத நிலத்தில் விதையைத் தூவி பயிரிடுவதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதுபோல் தனக்கு உரிமையில்லாதவளிடம் தன் விந்தைச் செலுத்தி, குழந்தையை உருவாக்குவதை இஸ்லாம் ஒத்துக் கொள்ளவில்லை.

குழந்தைகளைப் பெற்றெடுப்பதால் சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது என்பதாலும் அழகு குறைந்து விடுகிறது என்பதாலும் சில பெண்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு வாடகைப் பெண்களை அமர்த்துகிறார்கள். தங்கள் கணவனின் விந்தணுவை இப்பெண்களின் கருவறைக்குள் செலுத்தி, கருத்தரிக்கச் செய்கிறார்கள். இதுவும் செய்யக் கூடாத, மானங்கெட்ட செயலாகும். குழந்தையைப் பெற்றெடுத்தவள் தான் குழந்தைக்குத் தாயாக முடியும் என்ற சாதாரண அறிவு இருந்தால் இதுபோன்ற இழி செயலைச் செய்ய மாட்டார்கள்.

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறலாமா?

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

  1. கணவனின் உயிரணுவை எடுத்து, மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும்.
  2. கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து, அதனுடன் ஒரு பெண்ணின் கரு முட்டையைச் சேர்த்து குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும்.
  3. கணவன் அல்லாத இன்னொரு ஆணின் உயிரணுவை இன்னொரு பெண்ணின் சினை முட்டையுடன் சேர்த்து குழாயில் வளர்த்து ஒரு பெண்ணின் கருவறையில் செலுத்துவது.

இவற்றில் முதலாவது வழிமுறைக்கு மட்டுமே மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!

அல்குர்ஆன் 2:223

‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்’ என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து, செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும், கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.

பால்குடித் தாய் முறை என்பது மார்க்கம் அனுமதித்த ஒன்றாகும். கருவறையில் அடுத்த ஆணின் கருவைச் சுமப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கவில்லை. எனவே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து மார்க்கச் சட்டத்தைத் தீர்மானிக்கக் கூடாது.