அத்தியாயம் : 50
வசனங்களின் எண்ணிக்கை: 45
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. காஃப். கண்ணியமிக்க இக்குர்ஆன்மீது சத்தியமாக!495
2, 3. எனினும், அவர்களிலிருந்தே ஓர் எச்சரிக்கையாளர் அவர்களிடம் வந்திருப்பது பற்றி ஆச்சரியப்படுகின்றனர். “இது ஆச்சரியமான விஷயமே! நாம் இறந்து, மண்ணாக ஆகி விட்டாலுமா (உயிர்ப்பிக்கப்படுவோம்)? இது (சாத்தியமற்ற) தூரமான மீளுதல்” என இறைமறுப்பாளர்கள் கூறுகின்றனர்.
4. அவர்(களின் உடல்)களை இந்தப் பூமி எந்தளவு குறைத்துள்ளது என்பதை அறிந்துள்ளோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட பதிவேடுள்ளது.
5. எனினும், அவர்களிடம் உண்மை வந்தபோது அதைப் பொய்யெனக் கூறினர். அதனால் அவர்கள் தடுமாற்ற நிலையிலேயே உள்ளனர்.
6. அவர்களுக்கு மேலுள்ள வானத்தை நாம் எவ்வாறு கட்டமைத்து, அலங்கரித்துள்ளோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அதில் விரிசல்கள் எதுவும் இல்லை.
7. பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளை நாட்டினோம். அழகிய ஒவ்வொரு பயிர்வகையையும் அதில் முளைக்கச் செய்தோம்.
8. (நம்மை நோக்கித்) திரும்பும் ஒவ்வொரு அடியாருக்கும் (இது) படிப்பினையாகவும் நினைவூட்டலாகவும் உள்ளது.
9, 10, 11. நாம் வானிலிருந்து அருள்வளமிக்க தண்ணீரைப் பொழிவித்தோம். அதன் மூலம் அடியார்களுக்கு உணவளிப்பதற்காகத் தோட்டங்களையும், அறுவடைக்கு உகந்த தானியங்களையும், அடுக்கடுக்கான பாளைகளுடன் நெடிதுயர்ந்த பேரீச்சை மரங்களையும் முளைக்கச் செய்தோம். இறந்த பூமியை அதன்மூலம் உயிர்ப்பித்தோம். (இறந்தவர்கள் உயிர் பெற்று) வெளியேறுவதும் இவ்வாறுதான்.
12, 13, 14. இவர்களுக்கு முன் நூஹின் சமுதாயம், கிணற்றுவாசிகள், ஸமூது சமுதாயம், ஆது சமுதாயம், ஃபிர்அவ்ன், லூத்தின் சகோதரர்கள், தோப்புவாசிகள், துப்பஃ சமுதாயம் ஆகியோர் (என்னை) மறுத்தனர். அனைவரும் தூதர்களைப் பொய்யெனக் கூறினர். எனவே எனது எச்சரிக்கை நிறைவேறியது.
15. ஆரம்பத்தில் (இவர்களைப்) படைத்ததால் நாம் களைப்படைந்து விட்டோமா? இல்லை! (அவ்வாறிருந்தும்) புதிதாகப் படைப்பது பற்றி இவர்கள் ஐயத்தில் உள்ளனர்.
16. நாமே மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளம் என்ன நினைக்கிறது என்பதையும் அறிவோம். பிடரி நரம்பைவிட அவனுக்கு மிக நெருக்கமாக இருக்கிறோம்.496
17. இரண்டு பதிவாளர்கள் பதிவு செய்யும் வேளையில் வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்துள்ளனர்.497
18. (பதிவு செய்வதற்குத்) தயாராக உள்ள கண்காணிப்பாளர் அவனிடம் இருக்கும் நிலையிலேயே தவிர அவன் எச்சொல்லையும் பேசுவதில்லை.
19. “உண்மையாகவே மரணத்தின் வேதனை வந்து விட்டது. எதனை விட்டும் நீ வெருண்டோடிக் கொண்டிருந்தாயோ அது இதுதான்”
20, 21. “ஸூர் ஊதப்பட்டு விட்டது. இதுதான் வாக்களிக்கப்பட்ட நாள். அழைத்துச் செல்பவரும், சாட்சியாளரும் தம்முடன் இருக்கும் நிலையில் ஒவ்வொருவரும் வந்து விட்டனர்”
22, 23. “இதைப் பற்றி நீ அலட்சியத்தில் இருந்தாய். இப்போது உனது திரையை உன்னை விட்டும் நீக்கி விட்டோம். உனது பார்வை இன்று கூர்மையாக உள்ளது. இதோ! என்னிடம் இருப்பது (பதிவேடு) தயாராகவுள்ளது” என்று அவனுடன் இருக்கின்ற (வான)வர் கூறுவார்.
24, 25, 26. “பிடிவாதம் கொண்ட ஒவ்வொரு இறைமறுப்பாளனையும் நீங்கள் இருவரும் நரகத்தில் போட்டு விடுங்கள்! அவன் நல்லதைத் தடுத்தவன்; வரம்பு மீறியவன்; ஐயத்தில் இருந்தவன். அவன் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை ஏற்படுத்தினான். எனவே நீங்கள் இருவரும் அவனைக் கடும் வேதனையில் போட்டு விடுங்கள்” (என்று வானவர்களிடம் கூறப்படும்.)498
27. “எங்கள் இறைவனே! நான் அவனை வரம்புமீறச் செய்யவில்லை. மாறாக, அவன்தான் தூரமான வழிகேட்டில் இருந்தான்” என அவனது தோழன் (ஷைத்தான்) கூறுவான்.
28, 29. “என் முன்னிலையில் தர்க்கம் செய்யாதீர்கள். ஏற்கனவே உங்களிடம் எச்சரிக்கை செய்திருந்தேன். என்னிடம் வாக்கு மாற்றப்பட மாட்டாது. நான் அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவனல்ல” என்று (இறைவன்) கூறுவான்.
30. அந்நாளில் நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா?” என்று கேட்போம். “இன்னும் அதிகமாக இருக்கிறதா?” என்று அது கேட்கும்.499
31. இறையச்சமுடையோருக்காக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும். (அது) தூரமாக இருக்காது.
32. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது இதுவே! பேணி நடந்து, பாவ மன்னிப்புக் கோரும் ஒவ்வொருவருக்கும் (இது) உரியது.
33. அத்தகையோர் மறைவான நிலையில் அளவிலா அருளாளனுக்கு அஞ்சி, (இறைவனை நோக்கி) மீளும் மனதுடன் வருபவர்கள்.
34. “இதில் அமைதியுடன் நுழையுங்கள்! இது நிரந்தரமாக இருப்பதற்குரிய நாள்” (என்று அவர்களிடம் கூறப்படும்.)
35. அங்கு அவர்கள் விரும்பியவையெல்லாம் அவர்களுக்கு உண்டு. (அதைவிட) அதிகமாகவும் நம்மிடம் உள்ளது.
36. இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்துள்ளோம். அவர்கள் இவர்களைவிட வலிமை வாய்ந்தவர்கள். அவர்கள் பல ஊர்களிலும் சுற்றித் திரிந்தனர். ஏதேனும் புகலிடம் இருந்ததா?
37. சிந்தனையுடையோருக்கு, அல்லது கவன ஈர்ப்புடன் செவியுறுவோருக்கு இதில் படிப்பினை உள்ளது.
38. நாமே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எவ்விதக் களைப்பும் ஏற்படவில்லை.
39. (நபியே!) அவர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக! சூரியன் உதிக்கும் முன்னரும், மறையும் முன்னரும் உமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவீராக!500
40. இரவிலும், தொழுகைக்குப் பிறகும் அவனைப் போற்றுவீராக!
41. (நபியே!) செவிமடுப்பீராக! அந்நாளில் அருகிலுள்ள இடத்திலிருந்து அழைப்பாளர் அழைப்பார்.
42. அந்நாளில் மெய்யாகவே பெரும் சப்தத்தைச் செவியேற்பார்கள். அதுவே (இறந்தோர் உயிர்ப்பிக்கப்பட்டு) வெளியேறும் நாளாகும்.
43. நாமே உயிர்பிக்கிறோம்; மரணிக்கச் செய்கிறோம். (அவர்களின்) மீளுதல் நம்மிடமே உள்ளது.
44. பூமி அவர்களை விட்டும் பிளந்து விடும் நாளில் (அதிலிருந்து) விரைந்து வருவார்கள். இது நமக்கு எளிதான ஒன்றுதிரட்டுதலாகும்.
45. (நபியே!) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை அடக்கியாள்பவர் அல்ல. எனவே எனது எச்சரிக்கைக்கு அஞ்சுவோருக்கு இந்தக் குர்ஆன் மூலம் அறிவுறுத்துவீராக!