கேள்வி :
சோப்புக்கு ஷாம்பு இலவசம், கிரைப் வாட்டருக்கு தம்ளர் இலவசம் என்று பலவித பொருட்களுக்கு இலவசம் என்று போட்டு விற்பனைக்கு வருகின்றன. இது போன்ற இலவசங்களை சில்லரைக் கடைக் காரர்கள் நுகர்வோருக்கு வழங்காமல் வைத்துக் கொள்வது பாவமான செயலா? இலவசம் என்று போட்டு வரும் பொருட்களில் சில்லரைக் கடைக்காரர்களுக்குக் கிடைக்க வேண்டிய இலாபத் தொகையைக் குறைத்து விடுகின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
பதில் :
பொதுவாக இலவசம் என்று எதுவுமே கிடையாது. சோப்புக்கு ஷாம்பு இலவசம் என்றால், சோப்புக்கும் ஷாம்புக்கும் சேர்த்துத் தான் விலையை நிர்ணயிப்பார்கள். எனவே அவ்வாறு இலவசம் என்று போட்டு வரும் பொருட்கள் கண்டிப்பாக நுகர்வோருக்கு உரியது தான். எனவே அதைக் கொடுக்காமல் வைத்துக் கொள்வதற்கு கடைக்காரருக்கு உரிமை இல்லை.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவு படுத்தி இருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப் படும். குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல்: புகாரி 2079, 2082, 2110, 2114
வியாபாரத்தில் பொய் பேசக் கூடாது, குறைகளை மறைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கின்றது.
ஒரு பொருளுக்கு இலவசம் தருகின்றார்கள் என்றால் வாங்குபவரிடம் சொல்லாமல் மறைத்துத் தான் எடுத்துக் கொள்கிறார். வாங்குபவரிடம் சொன்னால் இலவசத்தை வாங்காமல் செல்ல மாட்டார்.
உண்மையை மறைத்து வியாபாரம் செய்யக் கூடாது என்ற மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில், இன்ன பொருளுக்கு இலவசம் இருக்கின்றது என்று நுகர்வோரிடம் சொல்லி அவர் வேண்டாம் என்று சொன்னால் மட்டுமே அதைக் கடைக்காரர் வைத்துக் கொள்ள முடியும்.
இலாபத்தைக் குறைத்துக் கொடுக்கின்றார்கள் என்பதைக் காரணம் காட்டி இலவசத்தை எடுத்துக் கொள்வதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. போதுமான இலாபம் தரும் வரை அந்தப் பொருளை விற்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்வது தான் இதற்குத் தீர்வாகுமே தவிர அதற்காக அடுத்தவருக்குச் சொந்தமான பொருளை எடுத்துக் கொள்வது ஏற்புடையதல்ல!