கேள்வி :
வலீமா விருந்து எப்போது கொடுக்க வேண்டும்? திருமணம் முடிந்த தினமே வலீமா விருந்தைக் கொடுக்கலாமா? அல்லது மணப் பெண்ணைச் சந்தித்த பிறகு தான் வலீமா விருந்து கொடுக்க வேண்டுமா?
ரியாஸ் இர்ஃபான், சென்னை.
பதில் :
திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிக்கவில்லை.
صحيح البخاري
2048 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمَّا قَدِمْنَا المَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ، فَقَالَ سَعْدُ بْنُ الرَّبِيعِ: إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالًا، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَيَّ زَوْجَتَيَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ، تَزَوَّجْتَهَا، قَالَ: فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ: لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ؟ قَالَ: سُوقُ قَيْنُقَاعٍ، قَالَ: فَغَدَا إِلَيْهِ عَبْدُ الرَّحْمَنِ، فَأَتَى بِأَقِطٍ وَسَمْنٍ، قَالَ: ثُمَّ تَابَعَ الغُدُوَّ، فَمَا لَبِثَ أَنْ جَاءَ عَبْدُ الرَّحْمَنِ عَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَزَوَّجْتَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: «وَمَنْ؟»، قَالَ: امْرَأَةً مِنَ الأَنْصَارِ، قَالَ: «كَمْ سُقْتَ؟»، قَالَ: زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ – أَوْ نَوَاةً مِنْ ذَهَبٍ -، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»
முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னையும், ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். நான் அன்சாரிகளில் அதிகச் செல்வமுள்ளவன். எனவே என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகின்றேன். எனது இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகின்றீர் என்று பாரும். அவரை உமக்காக விவாகரத்துச் செய்கின்றேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்குத் திருமணம் முடித்துத் தருகின்றேன் என்று அப்போது ஸஅது (ரலி) கூறினார். அப்போது நான், இது என்க்குத் தேவையில்லை. வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் இருக்கின்றதா? என்று கேட்டேன். அவர், கைனுகா எனும் கடைவீதி இருக்கின்றது என்றார். நான் அங்கு சென்று பாலாடைக் கட்டியையும், நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ மணம் முடித்து விட்டாயோ? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். யாரை? என்று கேட்டார்கள். ஓர் அன்சாரிப் பெண்ணை என்று நான் கூறினேன். எவ்வளவு மஹர் கொடுத்தாய்? என்று கேட்டார்கள். ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம் என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஓர் ஆட்டையேனும் மண விருந்தாக அளிப்பாயாக என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) நூல் : புகாரி 2048
இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பார்த்து, திருமணம் முடித்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, வலீமா விருந்து கொடுக்கச் சொல்கின்றார்கள். இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்து கொடுக்க வேண்டும் என்றிருந்தால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ இல்லறத்தில் ஈடுபட்டு விட்டாயா? என்று கேட்டிருப்பார்கள். யாரை மணம் முடித்தாய்? எவ்வளவு மஹர் கொடுத்தாய்? என்று விசாரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லறத்தில் ஈடுபட்டு விட்டாயா என்று கேட்காமலே வலீமா கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள்.
வலீமா விருந்தளிப்பதற்கு, இல்லறத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது. திருமண ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே சில இடங்களில் விருந்தளிக்கப்படுகின்றது. இது வலீமா விருந்தாக ஆகாது. திருமண ஒப்பந்தம் முடிந்த பின்னர் அளிப்பது தான் வலீமா விருந்தாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களின் மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். திருமணம் ஆன நாளில் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டால் உடலுறவுக்கு ஒரு வாரம் அல்லது அதிக நாட்கள் ஆகலாம். இதையும் கவனத்தில் கொண்டால் திருமண விருந்துக்கு உடலுறவு கொண்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனை அல்ல என்பதை அறியலாம்.