கேள்வி :
தற்கொலைத் தாக்குதல் கூடுமா?
ஏ.எல். ஹாஸிம், ராசல் கைமா, யூ.ஏ.இ.
பதில் :
தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
صحيح البخاري
1364 – وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ رَضِيَ اللَّهُ عَنْهُ – فِي هَذَا المَسْجِدِ فَمَا نَسِينَا وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: ” كَانَ بِرَجُلٍ جِرَاحٌ، فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ اللَّهُ: بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ “
ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் தனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுன்துப் (ரலி)
நூல் : புகாரி 1364
صحيح البخاري
1365 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الَّذِي يَخْنُقُ نَفْسَهُ يَخْنُقُهَا فِي النَّارِ، وَالَّذِي يَطْعُنُهَا يَطْعُنُهَا فِي النَّارِ»
யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1365
தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இது போரின் வழிமுறைகளில் ஒன்று தான் என்றும் கூறுகின்றனர். எனவே இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஒரு காரியம் நிரந்தர நரகம் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!
போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர்; இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.
போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.
போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.
தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர். ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப்பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.
எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு இவர்கள் கூறும் தவறான வியாக்கியானத்தின் மூலம் இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.
எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப்படுத்த முடியாது.
போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் வீரியமாகப் போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.
விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா?
அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம்; திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.
தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப்பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள். உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
ஆனால் ஒரு முஸ்லிம் எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.
இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.
உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப்படுகின்றன என்று பார்த்தால், அதில் பலியாவோர் பொதுமக்களாக இருப்பதைக் காண முடியும்.
பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமான நிலையங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்காக உள்ளன.
போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.
புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும், குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் மாற்றப்பட்டு விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் பெண்களும், சிறுவர்களும் கொல்லப்படுவதை முதலில் அனுமதித்தனர். பின்னர் இதைத் தடை செய்து விட்டனர் என்ற செய்தி அபூதாவூதில் 2298வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஒரு செயல் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டால் தடையைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே போர்க்களத்தில் கூட பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதற்கு அனுமதியில்லை என்பது தான் அல்லாஹ்வின் தூதருடைய தெளிவான தீர்ப்பாகும்.
முன்னர் அனுமதிக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் யஸீத் பின் அபீசுஃப்யான் தலைமையில் படை அனுப்பியபோது பிறப்பித்த பத்து கட்டளைகளில் பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் கொல்லாதீர்கள் என்ற கட்டளையையும் சேர்த்துப் பிறப்பிக்கின்றார்கள். இந்தச் செய்தி முஅத்தாவில் 858வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்களையும் சிறுவர்களையும் போரில் கொல்லக் கூடாது என்ற தடை தான் இறுதியானது என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள்.
ஆனால் இதற்கு மாற்றமாக சிறுவர்கள், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.
அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் தமது குடும்பமோ, சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.
மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.